முதலாளித்துவப் போதையில்
மூழ்கிக் கிடக்கும் மக்களை
அந்தப் பாதையிலேயே போய்தான்
அப்படியே புடிக்கணும்!
தோழர்... மக்கள் இன்னும் தயாராக இல்லை
அப்புறம் பாருங்க... நேரா புரட்சிதான்!
அது வரைக்கும்?
போயசு தோட்டம்தான்!
கேட்டவர் அதிர்ச்சியடைய
"டோட்டலாய்' விளக்கினார் தோழர்:
யாருடைய காலில் விழுந்தாலும் சி.பி.எம்.
தன் கொள்கையை மட்டும் இழக்காது.
மக்கள் விரோதிகள் எவரும் இனி
மார்க்சிஸ்டுகளை விலக்கி விட்டு
அரசியல் நடத்த முடியாது!
அந்தப் புரட்சித் தலைவியே தடுத்தாலும்
"அம்மா' சபதம் முடிக்காமல் "பொலிட் பீரோ' அடங்காது.
அப்புறம் எப்போது புரட்சி?
அது இருக்கட்டும் தோழரே,
சி.பி.எம். வரலாற்று ஸ்டேட்டஜியே வேற:
அன்று நேருவை அடையாளம் கண்டோம்
அவரிடம் சோசலிச வாடையை வளர்த்தோம்.
காங்கிரசுக்கு உள்ளே இருந்தே
முற்போக்கு சக்திகளை மோப்பம் பிடித்தோம்.
அப்படியே படிப்படியாக தனிக்கடையை விரிச்சோம்.
அப்புறமா... கேரளா, திரிபுரா, மேற்கு வங்கம்னு
ஆட்சியைப் பிடிச்சோம்.
அடுத்தது புரட்சி?
பின்னே ஆயுதம், வன்முறை இல்லாமல்
அனைவருமே சமமாகி சோசலிசம் படைக்க
நம்ம நம்பூதிரிபாடு ஆட்சியிலதான்
நாட்டிலேயே முதன்முதலா லாட்டரி சீட்டு அடிச்சோம்!
அல்லாவை வென்றெடுத்து
மத நல்லிணக்கம் நிலைநாட்ட
முசுலீம் லீக் கூட்டணி முடிச்சோம்
இந்துக்களிடமும் வர்க்கத் தீயை மூட்டிவிட
சபரிமலையில் மகரஜோதி பிடிச்சோம்!
காசு சேர்த்து நிலத்தை வாங்கி
பண்ணையார்கள் ஆதிக்கம் ஒழிச்சோம்
போர்க்குணத்துடன் போலீசை பயிற்றுவித்து
போய்... நக்சல்பாரிகளைக் கடிச்சோம்...
இப்படி... கச்சிதமாக கம்யூனிசத்தை முடிச்சோம்!
சரி புரட்சி எப்போது?
அட! டாடாவையே வென்றெடுத்தோம்
நந்திகிராமத்தில் நம்ம கட்டுப்பாட்டில் நுழைச்சோம்!
பாட்டாளிவர்க்க ஒற்றுமையைக் காக்க
விவசாயிகள் மண்டையை உடைச்சோம்.
பெண்களென்னும் பேதம் பார்க்காமல்
புடவையைப் பிடித்து கிழிச்சோம்.
வர்க்கப் பகைமையை ஒழிக்கத்தான்
சிங்கூர் நந்திகிராமில்
விவசாயி, தொழிலாளி வர்க்கத்தையே ஒழிச்சோம்!
இதுவா புரட்சி!
இது மட்டுமா! சாதி ஆதிக்கத்தை ஒழிக்க
உத்தபுரம் சுவரை நாங்கதான் இடிச்சோம்.
சிறுதாவூர் தலித் நில பிரச்சனைக்கும்
நாங்கதான் கொடி பிடிச்சோம்
இப்ப, செயல்தந்திர அரசியல்படி
அம்மா தோட்டத்திலேயே அந்தப் பிரச்சனையைப்
புதைச்சோம்.
நாங்க சே குவேராவைச் சொன்னாலும், ஜெயலலிதா பின்னால் நின்னாலும்,
இலக்கு ஒண்ணுதான் தோழர். முதலாளித்துவப் போதையில் மூழ்கிக் கிடக்கும் மக்களை அந்தப்
பாதையிலேயே போய்தான் அப்படியே புடிக்கணும்!
போர் என்றால் நாலுபேர்
சாகத்தான் செய்வார்கள் என்று
இழவெடுத்த புரட்சித்தலைவி இப்போது
போர்நிறுத்தம் வேண்டுமென்று
உண்ணாவிரதம் இருந்தது கண்டு
உண்டியலுக்கு வெளியே காணிக்கையாய் கிடந்தோம்!
""ஊரை அடித்து உலையில் போட்ட பானையோ!
இன்னும்
யாரை மிதிக்கக் காத்திருக்கும் யானையோ'' என்று
அம்பிகையைப் பார்த்தவுடன் அந்தக்கால நினைவு
வந்தபோதும்,
பாதம் பணிந்த ஓ. பன்னீரும், பஜனை குழுவோரும்
பசியெடுத்த அம்மாவின் பக்கத்தில் நில்லாமல்
ஒரு காதம் விலகி வேண்டி நின்ற போதும்.
ஈழத்தமிழருக்காக ஈரம் கசிந்து
ஓதம் காத்த அந்தச் சுவரோரம்
அஞ்சாமல் ஒதுங்கிய எங்கள் போர்த்தந்திரம் சும்மாவா?
இதிலென்ன புரட்சி?
சமரச சுத்த சன்மார்க்க சபை கலைந்து எங்கள்
சமரச சித்தாந்த சன்னிதியின் தீக்கதிரில் நாக்குழறி
எச்சு ஊறி எங்கள் எச்சூரி பின்னால் திரளுகையில்
என்ன ஒரு கேள்வி இது!
எத்தனை முறைதான் ஓதுவது!
சவுக்கடியும், சாணிப்பாலும் கொடுத்து
கீழத்தஞ்சையில் கம்யூனிஸ்டு கட்சியை
ஒழிக்கப் பார்த்தான் காங்கிரசு! கடைசியில் என்னாச்சு?
நம்ம துணையில்லாமல்
அவனால் நாடாள முடிந்ததா?
நள்ளிரவில் எழுப்பி விட்டு
நம் அரசு ஊழியர் வர்க்கத்தை
சிறையில் தள்ளினாளே ஜெயலலிதா
இப்போது என்ன ஆச்சு?
வலது, இடதாக தா. பாண்டியனையும், வரதராசனையும்
ஜெயலலிதா வளைத்துப் பிடிப்பதைப் பார்த்து
தோட்டத்து சசிகலாவே வாட்டத்தில் பொருமுகிறாள்.
நாம இல்லாமல்
யாராவது இனி அரசியல் நடத்த முடியுமா?
போதும்... எப்போதுதான் புரட்சி?
வந்தது கோபம் தோழருக்கு
அட! என்னங்க
இவ்வளவு தூரம் விவரம் சொல்கிறேன்
இன்னும் விளங்காமல்
எங்களிடம் வந்து புரட்சி, புரட்சின்னா...?
சுத்த... புரியாத ஆளா நீங்கள்!?
— துரை. சண்முகம்