Language Selection

புதிய கலாச்சாரம் 2009
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

 

அடுத்த கணம் இந்தியா முழுவதும் ஊடகங்கள், குறிப்பாக ஆங்கிலச் செய்தி ஊடகங்கள், ஒரே குரலில் "ஜெய் ஹோ#' (வெற்றி உண்டாகட்டும்!) என ஆரவாரிக்க தொடங்கினர். ஒரு வாரத்திற்கும் மேலாக ஆரவாரம் அடங்கவில்லை. ஆஸ்கர் மேடையில் தமிழில் பேசினார், எனவே இது தமிழுக்கு, தமிழனுக்கு கிடைத்த வெற்றி என ஒரு பக்கம் கொண்டாட்டம். மற்றொரு புறம், ஒட்டுமொத்த இந்தியாவிற்கே இது ஒரு மாபெரும் அங்கீகாரம், யாரும் சாதிக்காத சாதனை என ஆரவாரம்.

 

ஒட்டு மொத்தமாக இவ்வாண்டு ஆஸ்கர் விழாவை இத்திரைப்படம் ஆக்கிரமித்துக் கொண்டு விட்டதாக மேலைநாட்டுப் பத்திரிக்கைகள் எழுதின. இத்திரைப்படத்தின் இணை இயக்குனராகப் பணியாற்றிய லவ்லீன் டாண்டன், ""ஏ.ஆர்.ரகுமான் போல இன்னும் பல திறமை மிக்கவர்கள் நம்மிடம் எப்போதுமே உள்ளனர். ஆனால் உலகம் இப் பொழுதுதான் விழித்துக் கொண்டுள்ளது'' எனக் குறிப்பிடுகிறார். அமெரிக்காவிற்கான முன்னாள் இந்தியத் தூதர் லலித் மான் சிங், ""இந்தியாவின் சக்தியை உலகம் அங்கீகரிக்கத் துவங்கி விட்டதன் வெளிப்பாடாகவே இத்திரைப்படத்திற்கு ஆஸ்கர் விருது கிடைத்ததை எடுத்துக் கொள்ள வேண்டும்'' எனக் கூறுகிறார்.

 

உலகத்தின் அங்கீகாரம் இருக்கட்டும். எந்த இந்தியாவைக் கதைக் களமாகக் கொண்டு எடுக்கப்பட்டதோ, அந்த இந்திய மக்கள் இத்திரைப்படத்தை அங்கீகரித்தார்களா? ரகுமானுக்கு விருது கிடைக்கும் வரை பெரும்பாலோனோருக்கு இத்திரைப்படம் குறித்து ஏதும் தெரியாது. ஜனவரி இறுதியில் இந்தியாவில் வெளியிடப்பட்ட இத்திரைப்படம் எந்தச் சலனத்தையும் ஏற்படுத்தவில்லை. ரகுமானுக்கு விருது கிடைத்த செய்திக்குப் பிறகு சற்றே முன்னேற்றம் இருந்தாலும், அமெரிக்காவில் ஏற்பட்ட அலை இங்கே அடிக்கவில்லை. ஏன் இந்த முரண்பாடு?

 

புனைவுகளும், புனைசுருட்டுகளும்!

 

ஒவ்வொரு கேள்விக்கும் ஆயிரங்களில் தொடங்கி கோடிகள் வரை பரிசளிக்கப்படும் "கோடீசுவரனாக விரும்புவது யார்?' வினாடி வினா நிகழ்ச்சியை (கோன் பனேகா கரோர்பதி) தொலைக்காட்சியில் பார்த்திருப்போம். சேரியில் பிறந்த, ஒரு கால் சென்டரில் தேநீர் வழங்கும் பணியாளனாகப் பணியாற்றும் ஜமால் மாலிக் எனும் இளைஞன் அந்நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறான். பத்து மில்லியன் வரை ஜெயித்து இருபது மில்லியனுக்கான கேள்விக்காகக் காத்திருக்கிறான். அவன் ஏதேனும் மோசடி செய்திருக்க வேண்டும் எனக் கருதும் நிகழ்ச்சியின் தொகுப்பாளன் அவனை போலீசில் ஒப்படைக்கிறான். போலீசு அவனை அடித்து, துன்புறுத்தி, மின்சாரம் பாய்ச்சி விசாரிக்கிறது. நிகழ்ச்சியில் கேட்கப்பட்ட கேள்விகள் அனைத்தும் தனது வாழ்வில் எதிர்கொண்ட சம்பவங்களோடு தொடர்புடையதால் தான் அப்பதில்களை அறிந்திருப்பதாக அவன் கூறுகிறான். நிகழ்ச்சியில் கேட்கப்பட்ட ஒவ்வொரு கேள்வியும், ஜமாலின் கடந்தகால வாழ்க்கையில் அதனோடு தொடர்புடைய சம்பவங்களும் மாறி மாறி எழுகின்றன.

 

ஆசியாவிலேயே மிகப்பெரிய சேரிப்பகுதியான மும்பையின் தாராவியில் ஜமாலும், அவனது அண்ணன் சலீமும் வளருகிறார்கள். காவியுடையணிந்த மத வெறியர்களின் தாக்குதலில் அவர்களது தாய் கொல்லப்படுகிறாள். ஏன், எதற்கு என்று பார்வையாளர்கள் விளங்கிக்கொள்ள வழியில்லை. அனாதைகளான சிறுவர்கள் தங்களைப் போலவே நிர்க்கதியாக நிற்கும் லத்திகா என்ற சிறுமியைத் தங்களோடு இணைத்துக் கொள்கிறார்கள். தெருவோரச் சிறார்களை ஊனமாக்கி பிச்சையெடுக்க வைக்கும் கும்பலிடம் சிக்கி, பின்னர் அதிலிருந்து இருவரும் தப்புகிறார்கள். லத்திகா மட்டும் சிக்கிக் கொள்கிறாள். கதியிழந்த சிறார்களாக ரயிலில் பயணிக்கும் இருவரும் டூரிஸ்ட் கைடுகளாகிறார்கள்; திருடுகிறார்கள். லத்திகாவை மறக்காத ஜமால் அவளைத் தேடிச் செல்கிறான். ஜமாலுடன் செல்லும் சலீம், லத்திகாவை விபச்சாரத்தில் ஈடுபடுத்த முயற்சிக்கும் கும்பலின் தலைவன் மம்மோனை சுட்டுக் கொல்கிறான். ஆனால் மறுகணமே லத்திகாவை தனக்கு உரிமையாக்கிக் கொண்டு துப்பாக்கி முனையில் ஜமாலை விரட்டியடிக்கிறான்.

 

கால் சென்டரில் தேநீர் வழங்கும் ஜமால், சுறுசுறுப்பும், சமயோசிதமும் உடையவனாக விளங்குகிறான். சலீமை மீண்டும் கண்டுபிடிக்கிறான். ஒரு நிழல் உலக தாதாவிடம் தற்பொழுது வேலை செய்வதாக கூறும் சலீம் தன்னை மன்னிக்கக் கோருகிறான். அந்த தாதாவின் வைப்பாட்டியாக லத்திகா இருப்பதையும் ஜமால் கண்டுபிடிக்கிறான். ஜமாலோடு சேர்ந்து தப்பிக்க முயலும் லத்திகாவின் முயற்சி தாதாவின் அடியாட்களால் முறியடிக்கப்படுகிறது. மீண்டும் லத்திகாவை தேடிக் கண்டறிய முடியாத ஜமால், "கோடீசுவரனாக விரும்புவது யார்?' நிகழ்ச்சியின் மூலம் லத்திகா தன்னைப் பார்க்கக் கூடும் என அந்நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறான். இறுதியில் சலீம் தாதாவைக் கொன்று தியாகம் செய்ய, ஜமாலும், லத்திகாவும் இணைகிறார்கள். "ஜெய் ஹோ' (வெற்றி உண்டாகட்டும்) என ரகுமான் பாடத் துவங்குகிறார். நாயகனும், நாயகியும் கைகோர்த்து நடக்கிறார்கள். சுபம்.

 

ஒரு பாட்டிலேயே நமது ஏழை தமிழ்ப்பட ஹீரோக்களெல்லாம் கோடீசுவரர்களாகும் பொழுது இது எம்மாத்திரம் என்கிறீர்களா? ஆஸ்கர் விருதுக்கு பொழிப்புரை வழங்கும் அறிவுஜீவிகளோ, இப்படத்தை வழக்கமான மசாலா எனச் சொல்ல முடியாது என்கிறார்கள். இந்தத் திரைப்படம் சேரி வாழ்க்கையைக் காட்டுகிறது. மதக் கலவரத்தைக் காட்டுகிறது. மும்பையின் தாதாக்களைக் காட்டுகிறது. சிவப்பு விளக்கு விபச்சாரிகளைக் காட்டுகிறது. எனவே இந்தியாவின் யதார்த்தத்தை, வறுமையின் அழகியலோடு காட்டும் திரைப்படம், இது ஒரு சிறுவர் கதை போன்ற புனைவு என வாதிடுகிறார்கள்.

 

இல்லை, இந்தியா முன்னேறிக் கொண்டிருக்கிறது... நமது சாதனைகளைப் பற்றி இல்லாமல், நமது சேரிகளைப் பற்றி திரைப்படம் எடுப்பதன் மூலம் நமது வறுமையைக் காசாக்குகிறார்கள், இது வறுமையை ரசிக்கும் மேலைநாட்டு வக்கிர மனோபாவம்' என ஒளிரும் உலகமய இந்தியர்கள் கொதித்தார்கள்.

 

இந்த நாட்டில் சேரிகள் இருப்பது அவமானமில்லை. அங்கே புழுக்களைப் போல மக்கள் வாழ்வது அவமானமில்லை. அறுபதாண்டு ஜனநாயக சோசலிசக் குடியரசில் அவமானம் கொள்வதற்கான அனைத்து சமூக நிலைமைகளை மாற்றாமல் சத்தமின்றி ஏற்றுக் கொள்ளும் தேசபக்தர்கள், அதனை வெளிநாட்டவர் பேசினாலோ, திரைப்படமாக எடுத்தாலோ உடனடியாக இந்தியாவை இழிவுபடுத்துகிறார்கள் என்பது கடைந்தெடுத்த அயோக்கியத்தனம். பிரச்சினை இந்தியாவின் அவமானங்களை சித்தரிப்பதல்ல, அது சித்தரிப்பின் முழுமையும், நேர்மையும் குறித்ததாகும்.

 

இது தவிர, "சேரி நாய்' என்ற சொல் சேரி மக்களை இழிவுபடுத்துவதாக உள்ளது, அப்பெயரை நீக்க வேண்டும் என மும்பையிலும், பீகாரிலும் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன. இப்படியாக பல வண்ணக் கதம்பமாக இத்திரைப்படத்திற்கான எதிர்வினைகள் இந்தியாவில் எழும்பிய போதும், ஆஸ்கர் விருது கிடைத்த மறுநொடியே எல்லா முணு முணுப்புகளும், எதிர்ப்புகளும் இருந்த இடம் தெரியாமல் காணாமல் போய் விட்ட ன. எங்கு பார்த்தாலும், "ஜெய் ஹோ' மட்டும் ஒலிக்கத் துவங்கியது. இப்பொழுது தேசப்பற்றுக்கு புதிய விளக்கம் தொடங்கியது. பரிசுத்தமான ஆஸ்கர் மேன்மக்களின் கௌரவப் பிரச்சினைகளைக் கழுவிச் சுத்தம் செய்து விட்டதால், ஆஸ்கர் விருது பெற்றுத் தந்த திரைப்படத்தையும், கலைஞர்களையும் விமர்சிப்பது நாட்டுப்பற்றற்ற செயல் என்றாகியது. "ஜெய் ஹோ' பாடலை யார் தேர்தல் பிரச்சாரத்திற்கு பயன்படுத்துவது என பா.ஜ.கவிற்கும், காங்கிரசுக்கும் ஒரு பெரிய அக்கப்போரே நடந்தது. ரகுமானே கூச்சப்படும் அளவிற்கு அவரை "சென்னையின் மொசார்ட்' என ஒரு பத்திரிக்கை புகழ்ந்து தள்ளியது.

 

பிரிட்டிஷ் அமெரிக்க திரைப்படத் தயாரிப்பு நிறுவனங்களால் முதலீடு செய்யப்பட்டு, டானி பாய்ல் என்ற பிரிட்டிஷ் இயக்குனரால் எடுக்கப்பட்ட திரைப்படத்தை, இந்தியத் திரைப்படம் என்று கொண்டாடுவது அறிவீனம் மட்டுமல்ல, அமெரிக்க ஆஸ்கருக்கான அடிமை மோகத்தின் வெளிப்பாடாகும். ஆஸ்கர் விருது, அமெரிக்கத் திரைப்படங்களுக்காக, அமெரிக்க குடிமக்களை மட்டுமே உறுப்பினர்களாகக் கொண்ட கமிட்டியால் தெரிவு செய்யப்படும் திரைப்பட விருது. ஒரு வேளை டானி பாய்ல் இத்திரைப்படத்தை இயக்காவிட்டால், இந்தியாவில் வெளியிடப்படுவதற்கு முன்பே அமெரிக்காவில் வெளியிட்ட ராபர்ட் முர்டோச்சின் ஃபாக்ஸ் செர்ச்லட் இத்திரைப்படத்தை தயாரிக்காமல் இருந்திருந்தால், ஒரு மூன்றாம் உலக நாட்டுக்காரன் தயாரித்து வெளியிட்டிருந்தால், இத்திரைப்படத்திற்கு விருது கிடைத்திருக்குமா என சிலர் வாதிடுகிறார்கள். விசயம் யார் தயாரித்தது என்பது மட்டுமல்ல, என்ன சொல்லப்பட்டது, எப்படிச் சொல்லப்பட்டது என்பதும்தான் முக்கியம்.

 

உதாரணமாக, தாஜ்மகாலை சுற்றி பார்க்க வரும் ஒரு அமெரிக்கத் தம்பதியர் உண்மையான இந்தியாவைக் காண விரும்புவதாக கைடாக வேலை செய்யும் ஜமாலிடம் கூறுகிறார்கள். அவர்களைப் பரந்து விரிந்த யமுனை நதிக்கரையோரம் வட மாநிலத்தவர்கள் நூற்றுக்கணக்கான துணிகளைத் துவைத்துக் காயப் போடப்பட்டிருக்கும் காட்சியைக் காண ஜமால் அழைத்துச் செல்கிறான். அதற்குள் அவர்களது காரின் டயர் முதற்கொண்டு அனைத்துப் பாகங்களையும் சலீம் களவாடி விடுகிறான். திரும்பி வரும் அமெரிக்க தம்பதியினர் அதிர்ச்சி அடைகின்றனர். ஜமாலும் திருடர்களின் கூட்டாளி என ஆவேசமுறும் இந்திய வாகன ஓட்டுனர், அவனைக் கீழே தள்ளி உதைக்கிறான். தங்களது உடைமைகளை இழந்த அந்த நேரத்திலும் ஜமால் அடிபடுவதைக் காணச் சகியாமல், தமது கரங்களால் அணைத்து அவனைக் காப்பாற்றுகின்றனர் அமெரிக்கத் தம்பதியினர். தனது கிழிந்த உதடுகளிலிருந்து கசியும் இரத்தத்தை துடைத்தவாறே, "உண்மையான இந்தியாவைக் காண வேண்டுமென்றீர்களே, இது தான் உண்மையான இந்தியா!' எனக் கூறுகிறான் ஜமால். "கவலைப்படாதே, உனக்கு உண்மையான அமெரிக்காவை காட்டுகிறேன்' எனக் கூறி டிப்ஸாக ஒரு நூறு டாலர் நோட்டைத் தருகிறாள் அமெரிக்கப் பெண்.

 

"உண்மையான அமெரிக்காவை' இராக்கின் பிணக்குவியலிலும், குவாண்டனமோவின் நிர்வாணச் சித்திரவதைகளிலும், ஆப்கானிஸ்தானின் தீராத ரணத்திலும் உலகம் தரிசித்தது. ஆனால், உண்மையான அமெரிக்காவின் மனிதாபிமானமிக்க முகத்திற்கு ஒற்றை வரியில் நுட்பமாக புதிய பொழிப்புரை வரைகிற இந்தக் ஒற்றைக் காட்சிக்காகவே ஒரு ஆஸ்கரென்ன, நூறு ஆஸ்கர் வழங்கினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

 

கோடீசுவரனான சேரி நாய், ஆஸ்கர் விருது வாங்கிய இந்தியா!

 

விகாஸ் ஸ்வரூப் என்ற இந்திய வெளியுறவுத்துறை அதிகாரி வினாடி வினாக்களில் ஆர்வமுடையவர். "சேரி மக்கள் மொபைல் போன்களைப் பயன்படுத்துகிறார்கள்' என்ற பத்திரிக்கைத் துணுக்கு அவருக்கு ஒரு சுவாரசியமான கற்பனையைத் தோற்றுவித்தது. "கோடீசுவரனாக விரும்புவது யார்?' என்ற புகழ்பெற்ற நிகழ்ச்சியில் சேரியில் பிறந்த இளைஞனொருவன் வெற்றி பெறுவதாக இலண்டனில் தனது ஓய்வு நேரத்தில் பொழுதுபோக்காக ஒரு கதை எழுதினார். வினாடி வினா நிகழ்ச்சி என்ற பெயரில் "கோடீசுவரனாக விரும்புவது யார்?' என்ற சூதாட்ட நிகழ்ச்சியை உலகிற்கு அறிமுகம் செய்து வைத்த செலடார் பிலிம்ஸ் என்ற பிரிட்டிஷ் நிறுவனம் இந்தக் கதையைப் பற்றிக் கேள்விப்பட்டு, இக்கதைக்கான உரிமைகளை வாங்கியது. ஐந்து மில்லியன் டாலர் முதலீடு செய்த வார்னர் இன்டிபெண்டன்ட் நிறுவனம் வட அமெரிக்காவிலும், கனடாவிலும் உள்ள இந்தியச் சமூகங்களிலும், கலைப்பட விரும்பிகள் மத்தியிலும் இத்திரைப்படத்தை வினியோகித்து இலாபமீட்டலாம் எனத் திட்டமிட்டது. இப்படிப் பிறந்ததுதான் "சேரி நாயின்' மீதான அக்கறை.

 

எனவே, இந்தியாவில் சேரிகள் இருப்பதோ, இங்கே சிக்னல்களில் சிறுவர்களும் சிறுமிகளும் பிச்சையெடுக்கிறார்கள் என்பதோ இந்த மாபெரும் கலைப்படைப்பின் தூண்டுகோலாக இருக்கவில்லை. மேலை நாடுகளில் ஏற்கெனவே புகழ் பெற்றிருந்த "கோடீசுவரனாக விரும்புவது யார்?" நிகழ்ச்சிதான் மையமான கலாச்சார இணைப்புப் பாலமாக விளங்குகிறது. அந்த வகையில் இது ஒரு உலகமயப் படம்.

 

பிரச்சினை வெளிநாட்டவரின் பார்வை என்பதல்ல. அமெரிக்காவில் வாழும் மீரா நாயர் மும்பைத் தெருவோரச் சிறார்களின் வாழ்வின் கோலங்களை "சலாம் பாம்பே' எனும் திரைப்படமாக எடுத்தார். கனடாவில் வாழும் தீபா மேத்தா "ஃபயர்' மற்றும் "1947 எர்த்' முதலான திரைப்படங்களை இந்தியாவைக் கதைக்களனாக கொண்டு எடுத்தார். இவையெதுவும் தட்டையான சித்திரங்களில், குறியீடுகளால் இந்தியாவை சித்தரிக்க முனையவில்லை. ஆனால், "ஸ்லம் டாக் மில்லியனர்' தாராவி + தாஜ்மகால் +சிவப்பு விளக்குப் பகுதிகள் + பிச்சையெடுக்கும் குழந்தைகள் + தாதாக்கள் + மதக்கலவரங்கள் + கால்சென்டர் + "கோடீசுவரனாக விரும்புவது யார்?' + சிகரமாக ஒரு காதல் = இந்தியா என்ற சூத்திரத்தின் அடிப்படையில்தான் எடுக்கப்பட்டுள்ளது.

 

பிரிட்டிஷ் உச்சரிப்போடு கதாநாயகன், பெரும்பாலும் ஆங்கிலத்திலும், ஒரி ஜினாலிட்டிக்காக அவ்வப்போது இந்தியிலும் விரையும் உரையாடல்கள், ஒட்டாத காதல் கதை, ஊறுகாய் போல தொடப்பட்டுள்ள சேரிகளும், சிவப்பு விளக்குப் பகுதிகளும் எனத் தட்டையான கருத்தமைவுகளில் உருவான இந்த சராசரிப் படம் இந்திய மக்களின் மனதில் ஒட்டவில்லை.

 

ஆஸ்கர் விழாவில் இத்திரைப்படத்தின் செய்தியாக, "நம்பிக்கை! இத்திரைப்படம் நம்பிக்கையைப் பேசுகிறது!" எனக் குறிப்பிட்டனர். இதுகாறுமான வாழ்க்கையில் ஜமால் பட்ட காயங்கள், நிகழ்ச்சித் தொகுப்பாளர் ஜமாலை தோற்கடிக்க செய்யும் முயற்சிகள், போலீசு செய்யும் சித்திரவதைகள் அனைத்தையும் தாண்டி நம்பிக்கையினால் ஜமால் வெற்றி பெறுகிறான் என விளக்கவுரை எழுதுகிறார்கள். மூல நாவலில் லத்திகா என்றொரு கதாபாத்திரமே இல்லை. டைட்டானிக் கப்பல் மூழ்கிய அவலத்தைக் காதலில் மூழ்கடித்த ஸ்பீல் பெர்க்கைப் போல, சேரி நாய் கோடீசுவரனான கதையும் காதலையே மைய இழையாகக் கொள்கிறது. என்ன இருந்தாலும் நாயகனுக்கு ஒரு இலட்சியம் அவசியமல்லவா? கேவலம் பணத்துக்காக அவன் கோடீஸ்வரன் நிகழ்ச்சியில் விளையாடினான் என்றா கதை சொல்வது?

 

உலகப் பொருளாதாரமே அதல பாதாளத்தை நோக்கி சரிந்து கொண்டிருக்கும் இருண்ட சூழலில், திரைப்படத்தின் நாயகன் ஒரு சூதாட்டப் போட்டியில் ஜெயிப்பதை யதார்த்தத்தில் உலக சூதாட்ட முதலாளித்துவத்தினால் தோற்றுக் கொண்டிருக்கும் அமெரிக்க மக்கள் ரசிக்கிறார்கள்.

 

கடந்த ஆண்டு செப்டம்பரில் ஸ்பீல்பெர்க்கின் படத்தயாரிப்பு நிறுவனம், அம்பானியின் ரிலையன்ஸ் அடா நிறுவனத் துடன் 1.2 பில்லியன் மதிப்புள்ள ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது. யூ டிவி கம்யூனிகேஷன்ஸ் நிறுவனம், ஃபாக்ஸ் செர்ச்லைட்டுடன் ஒப்பந்தமிட்டுள்ளது. நெட்வொர்க் 18 நிறுவனத்துடன் அமெரிக்காவின் வயாகாம் குழுமம் கூட்டு வைத்துள்ளது. ஹாலிவுட்டில் 50 மில்லியன் செலவழித்து எடுக்க வேண்டிய ஒரு திரைப்படத்தை இங்கே 2 மில்லியன் தொகையில் எடுக்கலாம் என்பதும், அதே வேளையில் உலகளாவிய வலைப்பின்னல் வினியோகத்தில் அதிகபட்சமான லாபம் சுருட்டலாம் என்பதும் புரிந்த பிறகு, "இந்தியாவின் சக்தியை உலகம் அங்கீகரிப்பதைத்' தவிர வேறென்ன உலகத்திற்கு வழி இருக்கிறது?

 

ஒரு காட்சியில் லத்திகாவிடம் ஜமால் சொல்லுகிறான். "நாம் இருவரும் இணைவது விதி!'. இந்தியர்களிடையே விதி என்கிற கருத்தாக்கம் எவ்வளவு வலிமையானது என ஒரு பேட்டியில் விளக்குகிறார் டானி பாய்ல். ஸ்ல்ம்டாக் மில்லியனர் ஆஸ்கர் விருது பெற்றதும் கூட விதிதான், சந்தையின் விதி! உலகிலேயே அதிகமான திரைப்படங்களை தயாரிக்கும் நாட்டின் திரைப்பட நுகர்வு சந்தையில் உறுதியான அடியெடுத்து வைப்பதற்கான விதி.

 

ஹாலிவுட்டுக்கும் பாலிவுட்டுக்குமான இணைப்பின் அடையாளம் என ஒரு சராசரிப் படத்தைப் போற்றிப் புகழ்வதை சகித்துக் கொள்ள முடியாமல், சென்னையைச் சேர்ந்த திரைப்பட இயக்குனரும், விமர்சகருமான ஹரிஹரன் கசப்போடு தமது கட்டுரையில் குறிப்பிடுகிறார். "சில ஆண்டுகளுக்கு முன்பு வரை ஆஸ்கர் கமிட்டிகளில் நான் நம்பிக்கை வைத்திருந்தேன். ஆனால் மூன்றாம் உலக நாடுகளில் அழகுப் பொருட்கள் சந்தையை விரிவுபடுத்துவதற்காக இந்திய மாடல்களுக்கு உலக அழகிப் பட்டங்கள் வழங்க வேண்டிய நிர்ப்பந்தங்களுக்கு அழகிப் போட்டி நடுவர்கள் ஆளானதைப் போல, இவர்களும் நிர்ப்பந்தங்களில் சிக்கி கொண்டு விட்டார்கள். வெட்கக்கேடு!' என்கிறார். எனவே, ஆஸ்கர் கொடுத்தேயாக வேண்டும் என முடிவோடு செயல்பட்ட அமெரிக்காவிற்கு, "எல்லாப் புகழும் அமெரிக்காவுக்கே!' என நேரடியாக நன்றி கூறி விடுவது நேர்மையானது.

 

வாணன்