காங்கிரசின் தேர்தல் வெற்றிக்குப் பின், “இளவரசர்” ராகுல் காந்திக்கு மகுடாபிஷேகம் பண்ணி வைக்கும் வேலையில் முதலாளித்துவப் பத்திரிகைகள் இறங்கியுள்ளன. ” அவர்தான் இந்தியாவின் ஒபாமா” என ராகுலைப் புகழ்ந்து தள்ளுகிறது, தெகல்கா வார இதழ்.

அவரது மேடைப் பேச்சுக்கும் மட்டுமல்ல, அவரது “ஸ்டைலுக்கும்” ஒரு பொருள் இருப்பதாகக் கண்டுபிடித்து எழுதுகிறது, இந்தியா டுடே இதழ். எதிர்கால இந்தியாவுக்கு ராகுலை விட்டால் வேறு சிறந்த தலைவன் யாரும் கிடையாது என்றொரு கருத்து, பாமர மக்களிடம் திட்டமிட்டுத் திணிக்கப்படுகிறது.

தன்னை மக்கள் தலைவனாகக் காட்டிக் கொள்ளும் நடிப்பில் ராகுலும் சளைத்தவராகத் தெரியவில்லை. திடீரெனத் தாழ்த்தப்பட்டோர் வீடுகளுக்கு “விஜயம்” செய்து, அப்பாவி மக்களைத் திக்குமுக்காட வைக்கிறார். ஏழை விவசாயிகளைத் தேடிப்போய்ப் பேசுகிறார். அவர்களது துயர வாழ்க்கையை கலாவதிநாடாளுமன்றத்தில் எடுத்துப் பேசித் தன்னை ஏழைப் பங்காளனாகக் காட்டிக் கொள்கிறார். ராகுல், தனது பிறந்த நாளன்று இலண்டனில் குதூகலமாக இருந்தாலும், அவரது அடிப்பொடிகள் இந்தியாவில் அவரது பிறந்த நாளை சமூக நல்லிணக்க நாளாகக் கொண்டாடினர்.

திராவிடக் கட்சிகளின் அரசியலைப் பார்த்தவர்களுக்கு ராகுலின் இந்தக் கவர்ச்சி அரசியல் புதிதாகத் தெரியப் போவதில்லை. பழைய கள்ளு, புதிய மொந்தை; அவ்வளவுதான்!
இதோ, இந்தப் படத்தில் இருக்கும் தாயின் பெயர் கலாவதி. மகாராஷ்டிர மாநிலத்தின் விதர்பா பகுதியைச் சேர்ந்த ஏழை விவசாயி. விதர்பா பகுதியைப் பிடித்தாட்டி வரும் சாபக்கேடு இவரது குடும்பத்தையும் விட்டுவைக்கவில்லை. கலாவதியின் கணவர், தான் பட்ட 90,000 ரூபாய் கடனை அடைக்க வழி தெரியாமல் சில ஆண்டுகளுக்கு முன்பு தற்கொலை செய்து கொண்டார்.

ராகுல் காந்தி கடந்த ஆண்டு திடீரென கலாவதியின் குடிசைக்கு விஜயம் செய்து, அவரது துயரக் கதையைக் கேட்டுவிட்டு, அவருக்கு ஒரு வீடு ஒதுக்கித் தருமாறு அதிகாரிகளிடம் கூறுவதாக “அருள்” பாலித்துவிட்டு “மறைந்து” போனார். இடதுசாரிக் கட்சிகள் மன்மோகன் சிங் அரசிற்கு அளித்துவந்த ஆதரவை விலக்கிக் கொண்டபொழுது, கலாவதியின் துயரக் கதையை ராகுல் காந்தி நாடாளுமன்றத்தில் எடுத்துப் பேசி, அவர்களை மடக்கினார். பத்திரிகைகள் அனைத்திலும் கலாவதியின் துயரக் கதையும், ராகுல் அவருக்கு அளித்திருந்த வாக்குறுதியும் பிரசுரமாயின.

கலாவதி நம்பிக்கையோடு ஒவ்வொரு அதிகாரியாகத் தேடிப் போய்ப் பார்த்து, ராகுல் காந்தியின் வாக்குறுதியை நிறைவேற்றித் தருமாறு கேட்டார். அந்தோ பரிதாபம்! அவர் ஒவ்வொரு அதிகாரியாலும் பந்தாடப்பட்டார். “ஐயா, ராகுல் காந்தியே, நீங்கள் எனக்கு அளித்த வாக்குறுதியை ஒரு சான்றிதழாக எழுதித் தாருங்கள்” என இப்பொழுது கலாவதி ராகுல் காந்திக்குத் தனது கதையை நினைவூட்டிக் கொண்டிருக்கிறார்.
கலாவதிக்குத் தான் அளித்த வாக்குறுதி அதிகார வர்க்கத்தால் உதாசீனப்படுத்தப்படும் என்பதை அறியாத அப்பாவி அல்ல ராகுல் காந்தி.  தனக்கு விளம்பரம் தேடிக் கொள்ளவே, அந்தப் பாமர ஏழை விவசாயத் தாயின் துயரத்தை ராகுல் காந்தி பயன்படுத்திக் கொண்டார் என்பதே உண்மை.

கலாவதியின் கதை, ராகுல் காந்தி தாழ்த்தப்பட்டோர் மீதும், ஏழைகளின் மீதும் காட்டும் திடீர் கரிசனம் வக்கிரம் நிறைந்த நாடகம் என்பதை அம்பலப்படுத்திவிட்டது. எனவே, உழைக்கும் மக்களே, ராகுல் காந்தி உங்கள் பகுதிக்கு வரப் போகிறார் எனக் கேள்விப்பட்டால், ஆரத்தித் தட்டிற்குப் பதிலாகத் துடைப்பத்தைக் கையில் எடுத்துக் கொள்ளுங்கள்!

-புதிய ஜனநாயகம், ஜூலை-2009