Language Selection

பு.மா.இ.மு
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

இன்று தனியார் கல்வி நிறுவனங்களின் பகற்கொள்ளை குறித்து பரவலாகப் பேசப்படுகிறது. இதுவரை தரமான கல்வி வேண்டுமானால் கொஞ்சம் காசு செலவு பண்ணித்தான் ஆகவேண்டும் என பேசிவந்த நடுத்தர வர்க்கம்கூட இப்போது, தனியார் கொள்ளைக்கு எதிராக முனுமுனுக்கத் தொடங்கியிருக்கிறது.

எண்பதுகளில் தொடங்கி, இரண்டு தலைமுறைகளை கடந்து விட்ட இத்தனியாரின் கொள்ளை இன்று விசுவரூபமெடுத்து நிற்பதற்கு யார் காரணம்?

கல்வி தனியார் மயமானதும், காசுக்குத்தான் கல்வி என்றானதும், சாராய ரவுடிகளும் அரசியல் வாதிகளும் முதலாளிகளும்தான் ‘கல்வி வியாபாரக் கம்பெணி’ நடத்தி ‘கல்லா’ கட்டுகின்றனர் என்பதும் எந்தப் பெற்றோருக்குத் தெரியாமலிருக்கிறது?

இதோ உங்களின் பிரதிநிதியாய் நீங்கள் செய்ய மறந்ததை, நீங்கள் செய்ய வேண்டியதை சுட்டிக் காட்டுகிறார் தனியார் கல்விக்கொள்ளையின் கொடூரம் உணர்ந்த பெற்றோர் ஒருவர்.

புரட்சிகர மாணவர்-இளைஞர் முன்னணி சார்பில், கடந்த ஜூன் 18 ந்தேதி, சென்னை மெமோரியல் அரங்கம் அருகே ‘கல்வி தனியார்மயத்தைத் தடுத்து அரசுடமையாக்க’க் கோரி நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஹிந்துஸ்தான் பொறியியல் கல்லூரியால் பாதிக்கப்பட்ட மாணவர் ஒருவரின் தந்தை முகமது ரபீக், பேசியதிலிருந்து….அவரின் வார்த்தகளிலேயே…


*******************************************************


உங்கள் அனைவருக்கும் வாழ்த்துக்களை தெரிவிச்சுக்கிறேன். வரும்பொழுது நான் நினைச்சேன் கல்வியை எதிர்த்து போராடுறதனால பொதுமக்கள் வந்து, கடுமையான கூட்டம்  கூடியிருப்பாங்கன்னு, எதிர்பார்த்து வந்தேன். ஆனா, எனக்கே ஒரு அதிர்ச்சியா இருந்தது.

இன்றைய சூழ்நிலையில எந்த பாதிப்புக்குமில்லாத இந்த சகோதரர்கள்தான் நம்மள மாதிரி பொதுமக்களுக்காகப் போராடிகிட்டுருக்காங்க. ஆனா யாருக்காக போராடுறாங்களோ அவன்பூரா சாராயக்கடையில இருக்கிறான். இல்லாட்டி சினிமா தியேட்டர்ல நிக்கிறான். இல்லாட்டி ஏதாச்சும் ஒரு கலைநிகழ்ச்சியை வேடிக்கை பார்த்துக்கிட்டிருக்கிறான்.

என்னுடைய நிகழ்வு என்னன்னு சொன்னா, என்னுடைய மகனவந்து இந்துஸ்தான் பொறியியல் கல்லூரில 2007-வது வருடம் போயி மூன்று லட்சரூபா டொனேசன் கொடுத்து கல்லூரில சேர்த்தேன். நானும் ஒரு மைனாரிட்டி கம்யூனிட்டியை சேர்ந்தவன். கல்லூரியை நடத்துறவன் ஒரு கிறிஸ்துவ மைனாரிட்டி. ஆனா, மூன்று லட்சரூபா டொனேசனை வாங்கிட்டுதான் எனக்கு சீட்டு கொடுத்தான்.

நான் ஒரு 15 வருசம் வெளிநாட்டுல வேலை பார்த்தவன். 2007-இலதான் இந்தியாவுக்கு திரும்பி வந்தேன். நான் சம்பாதிச்ச மூன்றரை லட்சரூபாயத்தான், இவன் தலையில போயி கொட்டுனேன். கட்டுனதுக்கு பரிசு மகனுக்கு சஸ்பென்சன்.

இந்த வருடம் மார்ச் மாசம் ஒரு உப்பு சப்பு இல்லாத சுண்டக்கா காரணத்த சொல்லி என் மகனை ஒரு மாசம் சஸ்பென்சன் கொடுத்து கல்லூரியை விட்டு வெளியேத்திட்டாங்க. அவன் கொடுத்த சஸ்பன்சன் எப்படினு சொன்னா மார்ச் மாசம் 4ந்தேதி என் மகனுக்கு சஸ்பென்சன் கொடுத்தாங்க. பேக் டேட் போட்டு பிப் 26 லேர்ந்து எஃபக்ட் ஆகும்னு சொல்லி. அதாவது என்ன காரணம் ஒரே நோக்கம்னு சொன்னா அப்பத்தான் அட்டணன்ஸ் லாக் ஆகும், பையனை  செமஸ்டர் எழுத விடக்கூடாது.

பையன் வந்து ரேக்கிங்ல ஈடுபடலை. அவுங்க வாகனங்களை உடைக்கலை. பெண் ஸ்டூடண்ட்கள சீண்டலை. இன்டர்நெட்ல இருக்கிற ஆர்குட்ல சகமாணவி ஒருவர் அழகா இல்லனுசொல்லி மேசேஜ் இருந்ததுங்கிறதுதான் அவங்க சொல்ற அலிகேசன்.

இந்த புகாருக்கு எந்த ஆதாரமும் இல்ல. நாங்க இதை மறுத்திருக்கிறோம். எந்த இன்டர்நெட்டிலிருந்து அனுப்பியிருக்கிறாரு. எந்த ஐ.பி.எண்ணிலிருந்து அனுப்பியிருக்கினு ஆதாரத்தோட நிரூபிங்க. நாங்க குற்றத்த ஒத்துக்குறோனு சொன்னோம் கேட்கலை.  ஏன்னா, எங்களுக்குத் தெரியும் இந்த குற்றத்தை எங்க புள்ள செய்யலேன்னு.

நான் ஒன்னும் சும்மா இருக்கல. மற்ற பெற்றோரை போல நான் ஒன்னும் மூலையில் ஒக்காந்து அழுகல. என் மகன கூட்டிகிட்டு நீதிமன்றத்துக்கு போனேன். ரிட்டு போட்டேன். ரிட்டு போட்ட வுடனே காலேஜ்லேருந்து வந்து காம்பரமைஸ் பண்ணினான். ரிட்ட வித்ட்ரா பண்ணிக்கங்க பையனை எக்சாம் எழுத விடறோம்னு சொன்னான். மூன்று வழக்குகள் அடுத்தடுத்து போட்டு, உயர்நீதிமன்றத்தில் போராடி என்மகன் இன்று எக்சாம் எழுதியிருக்கிறான்.

இதற்கிடையில கல்லூரியை மாத்தலாம்னு சொல்லி  சென்றவாரம் தாம்பரத்துல இருக்கிற ரெண்டு பொறியியல் கல்லூரிக்கு போனேன். அவன் கேபிடல் பீஸ்னு பேரு வக்கலை. புதுப்பேரு வச்சிருக்கானுங்க.  ஏன்னா கவருமெண்டு கொஞ்சம் ஸ்டிரிக்ட் பண்ணுதுன்னு சொல்லி. வாங்குற பணத்துக்கு புதுப்பேரு, டெவலப்மெண்ட் பீஸாம்.
நேர்லேயே கேட்டுட்டு வந்தேன். வெட்கமா இல்லையாடா உனக்கு? வாங்குற பீசுக்கு பேரு மாத்தி மாத்தி வச்சிக்கிறீங்களேன்னு.

நம்ம பரம ஏழை ஸ்பிக் முத்தையாவால வர்ற பிள்ளைகள்ட்ட பணத்த வாங்கலைன்னா கல்லூரிய நடத்த முடியாது பாருங்க. ரொம்ப வசதியில்லாதவரு அவரு. அவரு காசு வாங்குறது கோட்டூர்புறமாம், காலேஜ் இருக்கிறது சிறீபெரும்புதூராம். ஏமாத்துறான் பாருங்க.

டெவலப்மெண்ட்பீசு, அட்மிசன் பீசு 25,000. எங்கப்போறது இது? யாரால பொறியியல் படிக்க முடியும்?


பேரு மட்டும் பெருசா வருது எல்லா பத்திரிக்கைகளிலும். தமிழ்நாட்டுல 240 கல்லூரி சென்ற வருடம் இருந்தது. இந்த வருடம் 480 கல்லூரினு. யாருக்கு பிரயோசனம்?  250 கல்லூரியானாலும் 480 கல்லூரியானாலும் யாராவது  ஒரு ஏழைசனங்களுக்கு பிரயோசமான்னு சொல்லச்சொல்லுங்க பார்ப்போம்.

இதோ கிண்டியில இருக்க கத்திபாரா பாலத்துக்கு கீழே கட்டியிருக்கானே, இவன்  600 ஏக்கருக்கு சொந்தக்காரன். ஜேப்பியாரு 1000 ஏக்கருக்கு சொந்தக்காரன். இவன் கேரளா கிறிஸ்டின்காரன். இவ்வளவையும் கேரளாவிலிருந்த பணத்தை கொண்டு வந்தா வாங்கிப்போட்டிருக்கான். இந்தா இந்த தெருவில இருக்கிற மக்களு, இந்தா இருக்கிற தொழிலாளிங்க, காக்கிசட்டை போட்டிருக்கிற போலீசுகாரங்ககிட்ட ஒரு சென்ட் நிலம் சொந்தமா இருக்கான்னு கேளுங்க. வெறும் 500 சதுரஅடிக்கு சொந்த காரங்க இருந்தா கைதூக்குங்க பாப்போம்.


நமக்கு ஒரு சென்ட்டுக்கு வழியில்லை, இவனுக்கு 600 ஏக்கரு 1000 ஏக்கரு. எங்கயிருந்து வந்தது? என்ன அப்பன்வூட்டு காசா? நம்மள மாதிரி பொதுமக்கள் மூன்றரை லட்சம் நாலு லட்சம்னு கொடுக்குற காசு.

சமீபத்துல மருத்துவ கல்லூரி ஒன்னுல இந்த நிகழ்வுகள நேரடியா படம் புடுச்சி காண்பித்ததற்கு பின்னாடி, இப்ப மத்திய அமைச்சர் வந்து பேட்டி கொடுக்கிறாரு. இனிமே யாருக்கும் டீம்டு யுனிவர்சிட்டி அந்தஸ்து கொடுக்கமாட்டோம்னு சொல்லி. இதத்தானய்யா பல காலமா சொல்லிகிட்டிருக்கான். இவனங்கள டீம்டு யுனிவர்சிட்டி ஆக்காதேன்னு. இவனுங்க பூரா கூட்டு களவானிங்க. பொதுமக்களாகிய நீங்கதான் விழிப்புணர்வோட இருக்கனும்.

அடுத்து, இந்த கல்லூரி காரனை நம்பி எவனும் புள்ள பெறலை. யாரும் ஜேப்பியார் காலேஜ் கட்டுவான் 25 வருசத்துக்கு முன்னாடி புள்ள பெறுவோன்னு எவனும் கணக்கு பார்க்கல.  தயவு செய்து இந்த பெற்றோர்களை கேட்டுக் கொள்கிறேன். பொறியியல் படிச்சாதான் லைப்ங்கிற வார்த்தையை விட்டுறங்க முதல்ல. ஒரு குற்றமும் செய்யாத நம்ம பிள்ளைகளை பிளஸ்டூ முடிச்சோடன ஜேப்பியார் காலேஜ் ஹாஸ்டல்ல கொண்டுபோயி சேர்த்து  5 வருசம்  சிறையில போயி அடைக்கிறத நிறுத்துங்க முதல்ல. 

கண்டிப்பாக விடிவு காலம் பெறும். போராடனும். போராடாம எதுவும் கிடைக்காது. இந்த போராட்டம் இந்த சகோதரர்கள் அவர்களுக்காக போராட வில்லை. இதோ வேடிக்கை பார்க்கிற சனம். பஸ்ல போற சனம், எல்லோத்துக்கும் சொல்லிக்கிறேன். உங்களுக்காகத்தான் போராடுறாங்க. போராட்டத்துக்கு வலு சேர்க்கனும்னு சொன்னா நிச்சயமா இவங்களோட சேர்ந்துக்கோங்க.

ரெண்டாவது, சோர்ந்து விடாதீங்க. நம்மளால போராட்டம் பண்ண முடியலைன்னு சொன்னா புரட்சிகர மாணவர்-இளைஞர் முன்னணி போன்ற சகோதரர்கள் நமக்காக போராட தயாரா இருக்காங்க.

வாய்ப்பு கொடுத்த இந்த சகோதரர்களுக்கு நன்றியை தெரிவிச்சுக்கிறேன். உங்க போராட்டம் தொடரட்டும். கண்டிப்பா உங்களுக்கு பக்கத்துணையாக நிற்போம்.


*******************************************************

 

ஆக, இத்தனியார் கொள்ளை என்பது, தனிநபர் சார்ந்த பிரச்சினையாக நின்றுவிடவில்லை. மனுபோட்டு, கோர்ட் படியேறினால் முடிந்து போகிற பிரச்சினையாகவும் இருக்கவில்லை. ஒட்டு மொத்த சமூகத்தையே பீடித்திருக்கும் ஒரு தொற்றுக் கிருமியாய், விசக் கிருமியாய் படர்ந்திருக்கிறது. இது, நம் மூளை வரை ஊடுருவியிருக்கிறது.

அரசு கல்விக் கூடங்களை அதிகப்படுத்து; அதிக நிதி ஒதுக்கிடு; அரசுக் கல்வியின் தரம் உயர்த்து; என அரசை எதிர்த்துப் போராடாமல், ‘தரமான கல்வி’ யென தனியாரை நாடிப்போனதின் ‘பக்கவிளைவு’ இது!

இதற்கான சிகிச்சை நம்மிடமிருந்தே தொடங்கியாக வேண்டும். குறைந்த பட்சம் இத்தனியாரின் கொள்ளையால் பாதிக்கப்ட்ட மாணவர்களும் அவர்களின் பெற்றோர்களும் இந்த சிகிச்சைக்கு தங்களை உட்படுத்தியே ஆகவேண்டும்.

பன்றிக் காய்ச்சலை தோற்றுவிக்கும்  ஸ்வைன் புளூவை விட மோசமான இந்தக் கிருமியை நம் நாட்டை விட்டு வெளியேற்ற வேண்டுமாயின், முதலில் நாம் நம் வீட்டை விட்டு வெளியே வந்தாக வேண்டும்!

இந்த நச்சுக்கிருமிகளின் தோற்றுவாய் தனியார்மயம்! இதனை தகர்க்காமல்-எரித்துப் பொசுக்காமல், இதன் கோரப்பிடியிலிருந்து நாம் ஒருபோதும் விலக முடியாது!

 

http://rsyf.wordpress.com/2009/07/06/கல்வி-கட்டணக்-கொள்ளை-கொட/