உண்மையில் தமிழ்நாட்டில் உள்ள கோவில்கள் பார்ப்பன மேல்சாதியினரிடத்தில் இருந்தபோது எவ்வளவு கொள்ளையடித்திருக்கிறார்கள் என்பது நீதிக்கட்சி காலத்திலேயே கண்டுபிடிக்கப்பட்டு அரசுடமையாக்கப்பட்டன. இதெல்லாம் பழங்கதையென்றால் இப்போதைய நிலவரம் என்ன?
சங்கரமடத்தில் கொலை முதல் காமக்களியாட்டம் வரை எல்லாம் நடந்திருக்கின்றன. திருவாடுதுறை ஆதீனத்தில் இளையவர் பெரியவரைத் தீர்த்துக்கட்ட போட்ட திட்டம், தில்லைக் கோவிலின் ஆண்டு வருமானம் வெறும் முப்பதாயிரம் ரூபாய் எனக் கணக்கு காட்டும் தீட்சிதர்களின் கொள்ளை.. இப்படி அடுக்கிக் கொண்டே போகலாம்.
இந்தப் பட்டியலில் சமீபத்திய வரவு திருவரங்கத்தில் (ஸ்ரீரங்கம்) இருக்கும் பரகால ஜீயர் மடம். இந்த மடத்தில் நடக்கும் கூத்துக்கள் பற்றி குமுதம் ரிப்போர்ட்டர் 29.01.09 இதழில் அதன் நிருபர் ஷானு விரிவாகப் பதிவு செய்திருக்கின்றார்.
திருவரங்கத்தில் இது போன்று பல ஜீயர் மடங்கள் இருக்கின்றன. இவற்றுக்கு ஏராளமான சொத்துக்களும், அந்த சொத்துக்களை மடத்தின் அதிகாரபீடத்தில் உள்ளவர்கள் பினாமிகள் மூலம் தனியார் வசம் விற்பதும், அதில் ஏராளமான ஊழலும், இதற்கு உதவ மறுக்கும் சாமியார்களை ஊழல் செய்யும் சாமியார்கள் வெளியே தெரியாமல் கொலை செய்வதும் இங்கே சகஜம். வைணவத் தலமான திருவரங்கம் இந்திய அளவில் புகழ் பெற்றிருப்பதால் சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருவதும் அவர்கள் இந்த மடங்களுக்கு தான தர்மம் செய்வதும், அது பின்னர் ஸ்வாகா செய்யப்படுவதும் இங்கு வாடிக்கைதான்.
பெருமாளைப் பாடும் பாகவதர்கள் வந்தால் தங்குவதற்காக அந்தக்கால பணக்காரர்கள் சிலர் கட்டிய மடம்தான் இந்த பரகால ஜீயர் மடம். மடத்திற்கு திருச்சியைச் சுற்றி பல ஏக்கர் நிலங்கள் உள்ளன. இந்த வருமானத்தைக் கொண்டு கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு அன்னதானம் செய்வதும், மடத்தில் உள்ள சாமிக்கு பூஜை செய்வதும் நடைமுறையாம். இம்மடத்தின் சொத்து மதிப்பு அறுபது கோடிக்கு அதிகமாம்.
ஒரிசாவிலிருந்து வந்த பார்ப்பனரான பத்ரி நாரயண ராமானுஜதாசன் ஆரம்பத்தில் இம்மடத்திற்கு சமையல்காரராக வந்தவர். பின்னர் மடத்தின் இன்றைய ஜீயரான லக்ஷ்மண நாராயண ஜீயரின் பலவீனங்களை அறிந்து கொண்டு அதற்கான தேவைகளைச் செய்து கொடுத்து, அவரை மடக்கி‘பவர் ஆஃப் அட்டர்னி’ வாங்கிக் கொண்டு அடுத்த ஜீயராகப் போகின்றவர் என்ற தகுதியில் சொத்துக்களை அனுபவித்து வருகிறார். சைவ ஆதீனங்களைப் போல வைணவ ஜீயர்கள் பிரம்மச்சாரிகள் கிடையாது. எல்லா ஜீயர்களும் பேஷாக ஒன்றுக்கு இரண்டாகக்கூட திருமணம் செய்து கொண்டு பிள்ளை குட்டிகளைப் பெற்றெடுத்து சுபமாக வாழ்க்கை நடத்தலாம். இது ரோமன் கத்தோலிக்க பாதிரியார்கள் திருமணம் செய்யமாட்டார்கள், புராட்டஸ்டண்டு பாதிரியார்கள் திருமணம் செய்யலாம் என்பதோடு ஒப்பிடத்தக்கது.
மற்றபடி பாதிரியார்களும், ஆதீனங்களும் தத்தமது பாலியல் தேவைகளைக் கள்ளத்தனமாக அனுபவிப்பது வேறு விசயம். ஆனால் ஜீயர்களுக்கு இப்படி வசதி இருப்பதால் மடத்திற்கு வரும் பக்தைகளைப் பணத்தால், வசதியால் மடக்கிப் பெண்டாளுவது திருவரங்கத்துக்கே தெரிந்த விசயம். அப்படித்தான் திருச்செங்கோட்டைச் சேர்ந்த கல்லூரி மாணவியான செல்வி என்ற பெண் தன் தோழியுடன் இந்த மடத்திற்கு வந்தார். எப்படியோ அந்தப் பெண்ணை வசியம் செய்து கொண்ட பத்ரி அவளது பெற்றோருக்கு தெரியாமல் மறைத்தும் வைத்திருக்கின்றார். இத்தனைக்கும் இந்த பத்ரிக்கு ஒரிசாவைச் சேர்ந்த கோதாராணி என்ற மனைவியும் உண்டு.
ஆனால் நாளொன்றுக்கு ஒரு மாது என்று அனுபவிக்கும் வசதி கொண்ட பத்ரி மனைவியை எல்லாம் ஒரு பொருட்டாக மதிப்பதில்லை. 83 வயதான ஜீயரும், கோதாராணியும் அங்கே ஆயுள்கைதிகளைப் போல காலந்தள்ளுகிறார்கள். அறுபது கோடி சொத்து என்பதால் பத்ரிக்கு அதிகாரிகள், அரசியல்வாதிகள் என எல்லா மட்டங்களிலும் செல்வாக்கு உண்டு.
இந்நிலையில் செல்வியின் பெற்றோர் தமது மகள் காணாமல் போனது குறித்தும், அவள் பத்ரியின் கட்டுப்பாட்டில் இருப்பதை வைத்தும் திருவரங்கம் காவல் நிலையத்தில் அழுதவாறே புகார் கொடுத்தனர். அதனால் செல்வியின் பெற்றோருடன் அந்த மடத்திற்கு சென்ற போலீசாரை பத்ரி திமிருடன் எதிர்த்தார். இது இந்துத் துறவியின் மேல் தொடுக்கப்பட்ட தாக்குதல், இந்துப் பீடத்தின் மீது தாக்குதல், இந்து மதம், அதன் சம்பிரதாயங்கள் மீது தாக்குதல் எனச் சாமியாடியிருக்கின்றார். உயர்மட்ட அதிகாரிகளுக்கும் போன் போட்டு இந்தியிலும்,ஆங்கிலத்திலும் புகார் செய்திருக்கின்றார்.
இதனால் பதறிய போலீசு அவரிடம் பக்குவமாக எடுத்துச் சொல்லி செல்வியை மீட்டு வந்தனர். செல்வியோ தான் மேஜர் என்றும், தான் பத்ரி சாமியாருடன்தான் வாழப் போவதாகவும் பேச,செல்வியின் தந்தை வயது கொண்ட பத்ரியோ, சட்டப்படி தான் செல்வியைத் திருமணம் செய்வதில் என்ன தவறு எனப் போலீசிடம் சட்டம் பேசியிருக்கின்றார். எனவே இந்தப் பிரச்சினையைப் போலீசார் திருவரங்கம் மகளிர் காவல் நிலையத்திற்கு தள்ளி விட்டனர். அதன்பிறகு அங்கு நடந்த பஞ்சாயத்தில் செல்வி கவுன்சிலிங் செய்யப்பட்டு பெற்றோருடன் அனுப்பப்பட்டார்.
ஒரு செல்வி போனால் என்ன இன்னும் ஓராயிரம் செல்விகள் கிடைப்பார்கள் என்பதனாலோ என்னவோ பத்ரி அலட்டிக் கொள்ளாமல் மடத்திற்கு திரும்பினார். இவ்வளவுக்கும் இந்தத் திமிரெடுத்த ஒரியாப் பார்ப்பானுக்கு பிளட் கேன்சராம். அதனால் செல்வி கோவிலுக்குச் சென்று அங்கே படுத்துக் கிடக்கும் பெருமாளிடம் தன் வாழ்க்கையில் பாதியைப் பத்ரிக்கு கொடுக்குமாறு வேண்டிக்கொள்ள அதைப் பெருமாளும் அங்கீகரித்து விட்டதாகவும் இந்தப் பத்ரி காவல்நிலையத்தில் பேசியிருக்கிறான் என்றால் என்னத்தைச் சொல்ல?
தற்போது இந்த மடத்தின் தொண்டுக் கிழமான லக்ஷ்மண நாராயண ஜீயரைக் காணவில்லையாம். எனவே அடுத்த ஜீயர் நான்தான் என பத்ரி தன்னைத்தானே நியமித்துக் கொண்டார். உண்மையில் பெரிய ஜீயரைப் பத்ரி கொன்று விட்டதாகவும், அவரை அடுத்த ஜீயராக்க அனுமதிக்கக் கூடாது என்றும் ஒரு வைணவ ஐயங்கார் மதுரை உயர்நீதி மன்றத்தில் வழக்குத் தொடுத்திருக்கிறார். மடத்தின் அதிபர் பதவியைக் கைப்பற்றுவதில் இந்த ஆன்மீகவாதிகள் கொலை வரைக்கும் போவார்கள் என்பது இங்கேயும் நிரூபிக்கப்பட்டிருக்கின்றது.
இரத்தப் புற்றுநோயினால் சாகப்போகின்ற பார்ப்பன ஐயங்கார் ஜீயருக்கே இவ்வளவு கொழுப்பு இருக்கின்றது எனில் நோயில்லாமல் ஆரோக்கியமாக இருக்கும் ஜீயர்களை நினைத்தால் திகிலாக உள்ளது. ஒரு தில்லைக் கோவிலை அரசுடைமையாக்கியதைப் போல எல்லா ஜீயர்,ஆதீனங்களையும் அரசு கைப்பற்றி மடத்தலைவர்களுக்கு மடத்திலேயே ஏதாவது எடுபிடி வேலைகள் கொடுப்பதுதான் தமிழ்நாட்டு மக்களின் சொத்துக்களைக் காப்பாற்றுவதற்கு ஒரே வழி!
மற்றபடி பெண்டாளும் ஒரு ஃபிராடு சாமியாரைக் கைது செய்யப் போனால் அது இந்துமதத்திற்கு ஆபத்து வருகிறது, இந்துமத சம்பிரதாயங்களின் மீதான தாக்குதல் என்றால் இதைவிட இந்து மதத்தை நாம் கேவலப்படுத்தத் தேவையில்லை. திருவரங்கத்தானைப் பார்ப்பதற்கு பாரததேசம் முழுவதிலுமிருந்து வரும் பக்தர்களுக்கு இந்த ஜீயர்களின் உண்மைக் கதைகளை முத்து காமிக்ஸ் போல படக்கதையாகப் பல்வேறு மொழிகளில் வெளியிட்டால் அது நிச்சயம் இந்துமதத்திற்கு செய்யப்படும் பேருதவியாக இருக்குமே!
-புதிய கலாச்சாரம், மே’2009