Language Selection

புதிய கலாச்சாரம் 2009
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

 முக்கியமாக ஒரு பெண் தன் காதலை, திருமணத்தை, குடும்பத்தை, வேலையை, மொத்தத்தில் வாழ்வை தான் விரும்பியபடி தெரிவு செய்யும் சுதந்திரம் இல்லை. வேலைக்குச் சென்று தனது பொருளாதார சுயேச்சை நிலையை அடைந்திருக்கும் பெண்ணுக்குக் கூட முழுச் சுதந்திரத்தை இந்தச் சமூகம் கொடுத்து விடுவதில்லை. சமூகம் மரபாகப் பின்பற்றி வரும் எல்லாப் பிற்போக்குத்தனங்களுக்கும் பெண்தான் முதல் பலிகடாவாகின்றாள். சாதி, மத, இனங்களின் கவுரவமே ஒரு பெண்ணின் தூய்மையை வைத்தே அளவிடப்படுகின்றது. கீழ்க்கண்ட இரண்டு உண்மைச் சம்பவங்களைப் பார்த்துவிட்டு இந்த விமரிசனத்தை மேற்கொண்டு பரிசீலிக்கலாம்.

···

ரோடு மாவட்டம், குன்னத்தூரைச் சேர்ந்தவர் சங்கீதா. வெண்ணெய்க்குப் பிரபலமான ஊத்துக்குளியைச் சேர்ந்தவர் சதாசிவம். சொந்த மண்ணில் வாழ வழியில்லாதவர்களுக்கு சற்றே சிரமமென்றாலும், ஒரு குறைந்தபட்ச வாழ்வை உத்திரவாதம் செய்யும் திருப்பூருக்கு இருவரும் சில ஆண்டுகளுக்கு முன்பு பிழைப்பதற்கு வந்தனர். தமிழகத்தின் தெற்கு, கிழக்கு, மேற்கு என எல்லாப் பகுதிகளிலுமிருந்தும் இலட்சக்கணக்கான தொழிலாளிகள் திருப்பூரில் குவிந்துள்ளனர். பனியன் தொழிற்சாலைகளில் நூற்றுக்கணக்கில் ஆண்களும், பெண்களும் இணைந்து பணியாற்றும் வாய்ப்பு இருப்பதால் மற்ற ஊர்களில் சிரமப்படும் காதல் வாழ்க்கை இங்கே ஒப்பீட்டுரீதியில் சற்றே சுலபமானது எனலாம்.

அப்படித்தான் சதாசிவமும், சங்கீதாவும் காதலித்தனர். பிழைப்பதற்கு வந்த ஊர் காதலுக்கு வழியேற்படுத்தினாலும், அவர்களின் பிறந்த ஊர்கள் இந்தக் காதலை அடியோடு நிராகரித்தன. இந்த உண்மைக்கதையை வெளியிட்டிருக்கும் ஜூனியர் விகடனில் (28.01.09) அவர்களின் சாதி குறித்த விவரமில்லை. இருப்பினும் இருவரும் ஓரே தகுதி கொண்ட வெவ்வேறான சாதிகளாகவோ, அல்லது இருவரில் ஒருவர் சற்றே ஆதிக்கசாதியாகவோ இருக்கலாம். எப்படியும் இருவரின் குடும்பத்தாரும் இவர்களின் காதலுக்கு பச்சைக் கொடி காட்டவில்லை என்பதோடு உறவை அறுத்துக்கொண்டு தலைமுழுகினர். வேறுவழியின்றி இந்த ஜோடிகள் திருப்பூர் கோவிலொன்றில் திருமணம் செய்து கொண்டனர்.

திருமணத்திற்குப் பிறகாவது தன் குடும்பம் தன்னை எற்றுக் கொள்ளும் என்ற நம்பிக்கையில் தந்தைக்கு தொலைபேசியில் பேசினார் சங்கீதா. தந்தையோ உன் குடும்பத்தில் பிள்ளை பிறந்தாலும் எங்களுக்குச் சொல்லாதே! இழவு விழுந்தாலும் எங்கிட்ட வராதே என வெட்டு ஒன்று துண்டு இரண்டென பேசி முடித்துக் கொண்டார். சதாசிவம் வீட்டிலும் இதே கதைதான் என்பதால், இந்தப் புதுமணத் தம்பதியினர் திருப்பூரில் தங்கள் குடும்ப வாழ்க்கையைத் துவங்கினர். சொந்த பந்தங்களின் ஆதரவின்றி ஒருவருக்கொருவர் ஆறுதலாக அந்த வாழ்க்கை நகர்ந்தது.

முதல் வருடத்திலேயே சங்கீதாவுக்கு ஒரு குழந்தை மூளை வளர்ச்சியின்றி இறந்தே பிறந்தது. தலைப்பிரசவத்துக்கு ஒரு பெண் தயாராகும்போது சுற்றமும் உற்றமும் புடைசூழ பார்த்துக் கொள்ளும். ஆனால் சங்கீதாவுக்கு அவளது கணவனைத் தவிர யாரும் துணையில்லை, வந்து பார்க்கவுமில்லை. பேறுகாலச் சிரமங்களை மிகுந்த சிரமத்துடன் பொறுத்துக்கொண்ட சங்கீதா அதன் பின் நான்கு வருடங்களுக்குப் பிறகுதான் கர்ப்பமானார்.

உறவுகள் அற்றுப்போய் தனித்தீவுகளில் வாழ்வது போல தனிமைப்பட்டிருந்த அந்த ஏழைத் தம்பதியினருக்கு ஒரு குழந்தையின் மூலம் புதிய உறவு வரப்போகின்றது என அளவில்லாத மகிழ்ச்சி! தன் மனைவியை அவளது தாய் பார்ப்பது போல பராமரித்து வந்த சதாசிவம், சங்கீதா கர்ப்பமான ஒன்பதாவது மாதத்தில் அதிக இருமலும் சளியுமாக அவதிப்பட்டார். திருப்பூர் அரசு மருத்துவமனையில் காட்டிய போது அவருக்கு காசநோய் முற்றியிருப்பதாகக் கண்டுபிடிக்கப்பட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டார். ஏதோ ஒரு நோய், கோவை சென்றால் சரியாகிவிடும் என்று புரிந்து கொண்ட அந்தப் பெண் கணவனைக் கோவைக்கு அழைத்துச் சென்றாள்.

திருப்பூரின் சாயப்பட்டறைகளினால் நொய்யல் ஆறு ரசாயன ஆறாக மாறி உயர்நீதி மன்றம் அதற்கு பல உத்திரவுகளைப் பிறப்பித்து சரி செய்வதற்கு முயன்ற விசயம் வாசகர்களுக்கு தெரிந்திருக்கலாம். ஆனால் பனியன் தொழிற்சாலைகளில் வேலை செய்யும் தொழிலாளிகள் பலருக்கு பஞ்சுத் தூசியினால் ஆஸ்துமாவும், காசநோயும், தோல் வியாதிகளும் இருக்கின்றது என்ற விசயம் அரசால் கூட கவனிக்கப் படவில்லை. திருப்பூர் மருந்துக் கடைகளில் இந்த நோய்களுக்கான மருந்துகள்தான் அதிகம் விற்பனையாகின்றது என்றால் இதன் பரிமாணத்தைப் புரிந்து கொள்ளலாம். அமெரிக்காவின் வால்மார்ட்டுக்காக ஆர்டர்கள் எடுத்திருக்கும் திருப்பூரின் முதலாளிகள் இப்படி தொழிலாளர்களின் நுரையீரலையும், எலும்புகளையும் சிதைத்துத்தான் ஆயத்த ஆடைகளைத் தயாரிக்கின்றனர் என்பது யாரும் கவலைப்படாத ஒன்று.

சங்கீதா நிறைமாதக் கர்ப்பிணியாய் தனக்கு எப்போது குழந்தை பிறக்கும் என்பது தெரியாமல் கணவனைக் கருத்தாகப் பார்த்துக் கொண்டாலும், கோவை அரசு மருத்துவர்கள் எவ்வளவோ முயன்றாலும் காசநோய் முற்றிய சதாசிவம் ஒரு சில நாட்களில் இறந்து போகின்றார். இந்த உலகில் தனக்கென இருந்த ஒரே உறவையும் தொலைத்து விட்ட அந்தப் பெண் அழுது புரண்டாள். பிறகு கணவனின் பிணத்தை எரிப்பதற்கு பணமில்லாமலும், தூக்குவதற்கு ஆளில்லாமலும் தவித்த அந்த அபலைப்பெண் பைத்தியமாய்ச் சுற்றியிருக்கின்றாள். சவக்கிடங்கில் இருக்கும் கணவனின் பிணத்தைத் தொட்டு அழுவதற்குக் கூட வாய்ப்பில்லாமல் தனது பெற்றோருக்கு தொலைபேசி மூலம் உதவுமாறு கேட்டிருக்கின்றாள் சங்கீதா.

எந்தச் சனியன் எக்கேடு கெட்டாலும் எங்களுக்கென்ன என குடும்பத்தினர் இரக்கமின்றி முறித்துக் கொண்டனர். பிறகு தோழமை அறக்கட்டளை என்ற தொண்டு நிறுவனத்தைக் கேள்விப்பட்டு அவர்களின் உதவியை நாடியிருக்கின்றாள் சங்கீதா. இந்தத் தன்னார்வத் தொண்டு நிறுவனத்தின் மூலம் கணவனது இறுதிச் சடங்கை முடித்த சங்கீதாவுக்கு தற்போது குழந்தை பிறந்திருக்கும். இருந்த ஒரே துணையையும் இழந்தவருக்கு ஆறுதலாக யாருமில்லை என்பதால் கைக்குழந்தையுடன் அவதிப்படப்போகும் சங்கீதாவின் எதிர்காலம் எப்படி நகரும்?

···

புது தில்லியில் இருக்கும் ஜவஹர்லால் நேரு மேல்நிலைக் கல்வி நிறுவனத்தில் ஆராய்ச்சியளராகப் பணிபுரியும் மீரா நந்தா அவரது சொந்த ஊரான சண்டீகரில் அவர் கண் முன்னே ஒரு இளம் பெண் கடத்தப்படுவதைப் பார்த்துவிட்டு அந்த அனுபவத்தை தி ஹிந்துதினசரியின் ஞாயிறு மலரில் (01.03.09 ) எழுதியிருக்கின்றார்.

பிப்ரவரி மாதத்தின் துவக்கத்தில் சண்டீகருக்கு வந்த மீரா நந்தா ஒரு பகல் பொழுதில் தனது வீட்டிலிருந்து அருகாமையில் இருக்கும் நீதிமன்ற வளாகத்தைக் கடந்து கடைத்தெருவுக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது அவரைக் கடந்து ஒரு இளம்பெண் வேகமாகச் சென்று கொண்டிருந்தாள். திடீரென வந்த ஒரு வெள்ளை வேனில் இருந்து இறங்கிய நான்கைந்து இளைஞர்கள், அவர்களைப் பார்த்துப் பதறி ஓடிய அந்தப் பெண்ணை விரட்டுகின்றார்கள். கணப்பொழுதில் அவளைப் பிடித்து தரதரவென இழுத்து அடித்து வேனில் ஏற்றிச் செல்கின்றார்கள்.

அதிர்ச்சியில் உறைந்திருந்த மீரா நந்தா அந்த வண்டியின் எண்ணைக் குறித்துக் கொண்டிருந்தபோது, நீதிமன்றத்தில் இருந்த மக்கள் கூட்டம் இச்சம்பவத்தைப் பார்த்து கூடுகின்றது. அந்தப் பெண் கடத்தப்பட்டதைப் போலீசிடம் புகார் கொடுக்கலாம் என்று அவர்கள் பேசியபோது கூட்டத்தில் நடுத்தர வயதிலிருக்கும் ஒரு சீக்கியர் குறுக்கிடுகின்றார். அந்த பெண்ணுக்கு ஒன்றும் ஆபத்தில்லை எனவும், தான் அவளது தந்தை, வேனில் பிடித்துச் சென்றது அவளது சகோதரர்கள்தான் என்றும் அவர் நிதானமாகத் தெரிவிக்கின்றார்.

உடனே மீரா நந்தா பெற்ற மகளையே இப்படி அடித்துக் கடத்துகின்றீர்களே! நீங்களெல்லாம் ஒரு தந்தையா, உங்களுக்கு வெட்கமில்லையா என்று கோபத்துடன் கேட்கிறார். தனது மகள் பொறியியல் கல்லூரியில் படிக்கும் ஒரு புத்திசாலிப் பெண்ணென்றும், அவளை ஒரு முசுலீம் இளைஞன் காதலிப்பதன் மூலம் அவளது வாழ்க்கை பாழாகக் கூடும் என்பதால் நீதிமன்றத்தில் வழக்குப் போட்டிருந்த அந்தக் காதலர்களைப் பிரிப்பதற்கு தான் எடுத்த நடவடிக்கை சரியானது என்றும் அந்தச் சீக்கியர் வாதிடுகின்றார்.

இதைக் கேட்டவுடன் கூட்டம் சமாதனத்துடன் கலைந்து செல்கின்றது. மீராவுடன் நான்கைந்து இளைஞர்கள் மட்டும் காவல் நிலையம் சென்று புகார் கொடுக்கலாம் என முடிவு செய்கின்றார்கள். காவல் நிலையத்தில் பொறுப்பிலிருந்த அதிகாரி சீக்கியரின் விளக்கத்தைக் கேட்டவுடன் திருப்தி அடைகின்றார். இப்போது மீராவுடன் ஒரு இளைஞர் மட்டுமே இருக்கின்றார். அந்த இளம்பெண் ஒரு மேஜர் என்பதால் தனது வாழ்க்கைத் துணையைத் தேர்ந்தெடுப்பதற்கு அவளுக்கு முழு உரிமை உண்டென மீரா அதிகாரியிடம் வாதிடுகின்றார். உங்கள் மகளுக்கு இப்படி நடந்திருந்தால் என்ன செய்வீர்கள் என அந்த அதிகாரி மீராவின் பதிலுக்குக்கூட காத்திராமல் அந்தத் தந்தையின் செயலை நியாயப்படுத்துகின்றார். அந்தச் சீக்கியரோ தான் குறுகிய எண்ணம் கொண்டவனல்ல, தனது மகள் ஒரு தாழ்த்தப்பட்ட சாதிக்காரனைக் காதலித்திருந்தால் கூட அதை ஏற்றுக் கொள்வாரெனவும், ஆனால் ஒரு முசுலீமைத் தனது மகள் காதலிப்பதை ஏற்க முடியாது என்றும் வாதிடுகின்றார்.

இறுதியில் மீரா போலீசு இதில் நடவடிக்கை எடுக்கவில்லையென்றால் தான் இந்தப் பிரச்சினையை ஊடகங்களுக்குக் கொண்டு செல்வதாக மிரட்டியதும் அந்த அதிகாரி இதைப் பற்றிக் கண்டிப்பாக விசாரிப்பதாக உறுதியளிக்கின்றார். அவரது செல்பேசி எண்ணை வாங்கிவிட்டு மீரா திரும்புகின்றார். அன்று மாலையே அந்த இன்ஸ்பெக்டர் மீராவுக்கு தொலைபேசியில் பேசுகின்றார், அதன்படி அந்தப் பெண்ணைச் சந்தித்து விட்டதாகவும், அவள் தனது சொந்த விருப்பத்தில் குடும்பத்துடன் சேர்ந்து இருக்க விரும்புவதாகவும் கூறிவிட்டு அந்தப் பெண்ணையே பேச வைக்கின்றார். அந்தப் பெண்ணும் ஏதோ கடமைக்குப் பேசுவது போல தனக்கு ஒரு பிரச்சினையுமில்லை எனவும் சுரத்தில்லாமல் கூற, எந்தப் பிரச்சினை என்றாலும் தனது செல்பேசி எண்ணுக்கு அழைக்குமாறு கூறிவிட்டு மீரா இந்த சம்பவத்தை அசை போடுகின்றார். துயரம் தோய்ந்த அந்தப் பெண்ணின் முகம் அவரைத் தொந்திரவு செய்கின்றது.

···

ங்கீதா செய்த குற்றம் சாதி மாறித் திருமணம் செய்தது, சண்டீகர் பெண் செய்த குற்றம் மதம் மாறிக் காதலித்தது. சங்கீதாவின் பெற்றோரும், உறவினரும் அவளைப் புறக்கணித்து எந்த உதவியும் செய்யாமல் இருந்ததன் மூலம் அவளைத் தண்டித்தார்கள். சண்டீகர் பெண்ணின் குடும்பமோ அவளை வன்முறையின் மூலம் மிரட்டி அவளது காதலை நசுக்கித் தண்டிக்கின்றார்கள். தாங்கள் விரும்பியபடி மணவாழ்க்கையை அமைத்துக்கொள்ள முயன்ற அந்தப் பெண்களுக்கு இந்தச் சமூகம் ஒப்புதல் தரவில்லை.

சாதிவெறியும், மதவெறியும் பெண்ணின் இரத்தக் கலப்பில்லாத தூய்மையை வைத்ததே தத்தமது கவுரவத்தைக் காப்பாற்ற நினைக்கின்றன. ஆனால் இந்தப் புனிதக்கடமை ஆண்களுக்கில்லை. ஆதிக்கசாதி ஆண்கள் ஊருக்கு வெளியே இருக்கும் தலித் பெண்களைப் பாலியல் வன்முறை செய்வது இந்தியா முழுவதும் நடக்கும் விசயம். இதை மட்டும் சாதியின் கவுரவக் குறைச்சலாகக் கருதாமல், ஆதிக்கசாதி ஆண்களின் கம்பீரமாக இந்தச் சமூகம் பார்க்கின்றது. மேலும் தன்மானத்துடன் வாழ நினைக்கும் தலித் மக்களைக் கேவலப்படுத்துவதற்கும் அடக்குவதற்கும் ஆதிக்கசாதி வெறியர்கள் செய்யும் முதல் விசயம் தலித் பெண்களைப் பாலியல் வன்முறை செய்வதுதான். ஒரு ஆதிக்கசாதிப் பெண் ஒரு தலித் ஆணைக் காதலித்து திருமணம் செய்தால் ஊரே பற்றி எரியும். இந்தக் காதலை கனவில் கூட நினைத்துப் பார்க்க முடியாத சூழலே இந்தியாவெங்கும் இருக்கின்றது.

வட இந்தியாவில் ஒரு ஆதிக்கசாதி அல்லது பிற்படுத்தப்பட்ட பெண் ஒரு முசுலீமைக் காதலித்தால் மேற்கண்ட வெறியால் இன்னும் தீவிரமாக எதிர்க்கப்படும். இதைத் தடுப்பதற்கென்றே இந்தி பேசும் மாநிலங்களில் இந்து மதவெறியர்கள் தனி இயக்கமே நடத்துகின்றார்கள். சண்டீகர் பெண்ணின் தந்தை கூறியதைப் பாருங்கள், இந்துமதத்தில் இருக்கும் தலித் ஆணைக் கூட ஏற்றுக் கொள்வாராம், ஆனால் ஒரு முசுலீமை ஏற்றுக்கொள்ள மாட்டாராம். உண்மையில் அப்படி ஒரு தலித்தை அந்த சீக்கியப் பெண் காதலித்தாலும் இதுதான் நடக்கும். என்றாலும், முசுலீம் என்றால் அந்தக் கவுரவ வெறி சில மடங்கு அதிகமாக இருக்கின்றது.

உலகெங்கும் முசுலீம்களைப் பற்றிய வெறுப்பும், தவறான கற்பிதங்களும் திட்டமிட்டே பரப்பப்படுகின்றன. இதில் இந்தியாவைப் பொறுத்தவரை பிரிவினை காலந்தொட்டு நடந்துவரும்,இந்துமதவெறியர்களால் இயக்கப்படும் இந்து முசுலீம் கலவரங்கள் அந்த வெறுப்பைப் பிரச்சாரம் ஏதுமின்றி ஒரு இந்துவின் மனதில் ஏற்படுத்தி விடுகின்றன. எனவேதான் இந்தி பேசும் மாநிலங்களில் இதற்காக அதாவது இந்து மற்றும் ஆதிக்கசாதியின் கவுரவத்தைக் காப்பாற்றும் விதமாக யாரெல்லாம் அந்த எல்லையை மீறுகின்றார்களோ அவர்களெல்லாம் கொல்லப்படுவது சகஜமாக இருக்கின்றது. இந்தக் கவுரவக் கொலைகளில் பத்து சதவீதம் பஞ்சாப் மற்றும் ஹரியாணாவில் நடக்கின்றது. முக்கியமாக இந்தக் கொலைகளுக்கு ஆளாவதில் பெரும்பான்மையினர் பெண்கள்தான்.

···

விஜய் டி.வியில் நீயா நானா நிகழ்ச்சி ஒன்றில் காதலைத் தீர்மானிப்பது அப்பியரன்சா,அப்ரோச்சா என ஒருமுறை விவாதிக்கும் போது எப்படி கடலை போடுவது, எதிர்பாலைக் கவருவது அல்லது கவிழ்த்துவது, இன்ன பிற அயிட்டங்களையெல்லாம் பயங்கரமாக அலசினார்கள். ஆனால் கலப்பு மணம் செய்தால் அதைத் தீர்மானிப்பது அரிவாள்தான் என்பதை அங்கிருக்கும் நடுத்தர வர்க்க அறிவாளிகள் எவரும் மருந்துக்குக் கூட தொட்டுப் பேசவில்லை.

இந்த விவாதம் நடந்து சில மாதங்கள் இருக்கலாம். இதே காலத்தில் தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்த சிவாஜிராவ் எனும் தலித் இளைஞரும், லட்சுமி எனும் கள்ளர் சாதிப் பெண்ணும் காதலிக்கின்றார்கள். கள்ளர் சாதி கோலோச்சும் இம்மாவட்டத்தில் இருக்கும் அபாயத்தைக் காதலர்கள் உணர்ந்திருந்ததால் யாருக்கும் தெரியாமல் திண்டுக்கல் சென்று ஒரு கோவிலில் திருமணம் செய்து கொண்டு வாழ்கின்றார்கள். இதை எப்படியோ மோப்பம் பிடித்த லட்சுமியின் மூன்று அண்ணன்கள் ஒரு டாடா சுமோவில் சில ரவுடிகளை ஏற்றிக்கொண்டு திண்டுக்கல் சென்று லட்சுமி கதறக் கதற அவளது கணவனை அடித்து வண்டியில் எற்றுகிறார்கள். சில நாட்கள் கழித்து அந்த தலித் இளைஞன் கொடைக்கானல் சாலையில் கொடூரமாகக் கொலை செய்யப்பட்டு பிணமாகக் கிடக்கின்றான்.

தனது அண்ணன்கள் கொலை செய்யுமளவு துணிய மாட்டார்கள் என நம்பிய அந்தப் பெண் இன்றும் அழுது கொண்டிருக்கின்றாள். சில ஆண்டுகளுக்கு முன் விருத்தாச்சலம் அருகே ஒரு தலித் ஆணும் வன்னிய சாதிப் பெண்ணும் திருமணம் செய்து கொள்ள அந்தப் பெண்ணின் ஊர்க்காரர்கள் அதாவது வன்னியர்கள் முன்னிலையில் அந்தக் காதல் ஜோடி உயிரோடு எரித்துக் கொளுத்தப்பட்டது. வழக்கு இன்றும் நடக்கின்றது என்றாலும் மொத்த ஊரே இதில் சம்பந்தப்பட்டிருக்கும் போது யாரைத் தண்டிப்பது?

ஸ்ரீராம் சேனா என்ற இந்து மதவெறி இயக்கத்தினர் மங்களூர் பஃப்புகளில் இருந்த மேல்தட்டுப் பெண்களைத் தாக்கியதை வாசகர்கள் அறிந்திருக்கலாம். இதே போல காதலர் தினத்தில் சங்க பரிவாரங்கள் இந்தியா முழுவதும் செய்த அராஜகங்களையும் அறிவோம். ஆணாதிக்கத்தினோடு இந்து மதவெறியும் சேரும்போது அதனுடைய வெறி தீவிரமாகத்தான் இருக்கின்றது. இங்கும் கூட கவனியுங்கள் பெண்தான் குறிவைக்கப்படுகின்றாள். ஆண்கள் டாஸ்மாக் தொட்டு நட்சத்திர விடுதி மதுவறைகள் வரை குடித்து விட்டு ஆடலாம். ஆனால் இதை இயல்பு எனக் கருதும் இந்து மனம் பெண்கள் குடிப்பதை மாபெரும் கவுரவக் குறைச்சலாக நினைக்கின்றது. ஸ்ரீராம் சேனாவின் அத்துமீறலைக் கண்டித்து பல பெண்கள் அமைப்புக்கள் அந்த சேனாவின் தலைவருக்கு பிங்க் நிற ஜட்டிகள் அனுப்பித் தங்களது எதிர்ப்பைக் காண்பித்தன.

ஒரு பெண்ணுக்கு பஃப்புக்கு செல்வதற்கு சுதந்திரம் தேவை எனப் போராடுவதை விட சங்கீதாவும், சண்டீகரின் சீக்கியப் பெண்ணும் நடத்தும் போராட்டம் மிகவும் கடினமானது. மதுவறைகளுக்கு மேல்தட்டு பெண்கள் செல்வதை போலீசு உதவியுடன் கூட செய்து விடலாம். ஆனால் சங்கீதாவுக்கும், லட்சுமிக்கும் கறுப்புப் பூனைகள் போட்டாலும் பாதுகாக்க முடியாது. ஏனெனில் இங்கே முழுச் சமூகமுமே அந்த அபலைகளை எதிர்த்து நிற்கின்றது.

மேலும் மாநகரங்களைச் சேர்ந்த நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்த மக்களிடத்தில் இவர்களில் ஐ.டி துறையில் பணிபுரியும் இளைஞர்களும் உண்டு எடுக்கப்பட்ட கருத்துக்கணிப்பின் படி 75% பேர் பெற்றோர் நிச்சயம் செய்யும் திருமணத்தைத்தான் செய்யப் போவதாகத் தெரிவித்திருந்தார்கள். படித்து, சற்றே வசதியுடன் வாழும் இந்த வர்க்கத்துக்கே இதுதான் கதியென்றால் அந்த ஏழைப் பெண் சங்கீதா என்ன செய்ய முடியும்?

ஆகவே பெண்ணுக்கு உரிமை என்பது தனிநபர் உரிமையாக சுருக்கிப் பார்த்தால், பஃப்புக்கு செல்வது, மானாட மயிலாட அல்லது ஜோடி ஒன்று நிகழ்ச்சியில் பங்கேற்பது, பார்வையாளராகச் செல்வது, தனியாக ஸ்கூட்டரிலோ, காரிலோ ஓட்டிச் செல்வது, வேலைகளில் ஏற்றத்தாழ்வின்றி எல்லா வகை வேலைகளுக்கும் செல்வது… இப்படித்தான் பலரும் புரிந்து கொள்கின்றனர். ஆனால் இத்தகைய தனிநபர் உரிமைகளைப் பெற்றுள்ள பெண்கள் தமது மணவாழ்க்கையைச் சுயேச்சையாக முடிவெடுக்க முடியாது. அப்படி மீறி எடுத்தால் கொலைவெறியைச் சந்திக்க வேண்டும் எனும் போது இங்கே எது பெண்ணுரிமை? ஏது பெண்ணுரிமை?

இந்தக் கட்டுரை எழுதும் சமயத்தில் சங்கீதாவுக்கு குழந்தை பிறந்திருக்கலாம், சண்டீகர் பெண்ணுக்கு வேறு மணம் கூட நடந்திருக்கலாம். ஆனால் அந்தப் பெண்கள் தனிமையில் கதறி அழுதவாறு இந்த வாழ்க்கையை எப்படி ஓட்டப் போகின்றோம் என விரக்தியில் உறைந்திருப்பார்கள். ஒருவேளை தற்கொலைக்குக் கூட முயற்சிக்கலாம். பரவாயில்லை,விரும்பியபடி வாழ்வதற்கு கதியில்லாத போது உயிரை முடித்துக் கொள்வது ஒன்றும் மோசமானதல்ல.

-புதிய கலாச்சாரம் மே’ 2009

புதிய கலாச்சாரம் மே 2009 இ

வாழத்துடிக்கும் பெண்ணினம்! வாழ்க்கை மறுக்கும் சமூகம்!!