12022022வெ
Last updateபு, 02 மார் 2022 7pm

அகிம்சை போராட்டத்தில் இனி தமிழீழம்!

"நமது அமைப்பின் தார்மீக போராட்டத்திற்கான அடிப்படைக் காரணங்களை எதிராளி உணர்ந்து மனம் திருந்தி நம் கோரிக்கைகளை ஏற்றுக் கொள்ளும் வரையில் அகிம்சை முறையில் கிளர்ச்சி செய்வதே சத்தியாக்கிரகப் போராட்டத்தின் அர்த்தம்.

 எதிரி நம்மை எப்படி கொடுமைப்படுத்தினாலும், இழிபடுத்தினாலும் அடித்தாலும் திட்டினாலும் உயிரை எடுக்க முற்பட்டாலும் நம் தைரியத்தை மட்டும் இழந்துவிடாமல் அகிம்சையை மன உறுதியோடு விடாமல் நிற்க வேண்டும். எதிரி மீது எந்த வெறுப்பு உணர்ச்சியையும் நம் உள்ளத்தில் உருவாக்கிவிடக் கூடாது."

 

இந்த உருப்படாத புண்ணாக்கு சித்தாந்தம் தான் காந்தீயத்தின் அகிம்சை போராட்டத்தின் அடிப்படை. இயேசுவின் போதனையும் அகிம்சை கோட்பாட்டை தானே முன்வைத்திருக்கிறது?

 

அன்பால் எதையும் நாம் சாதிக்கலாம். கிறிஸ்தவ மதம் மட்டுமா? எல்லா மதங்களும் இதைத்தானே சொல்கிறது?

 

இதையெல்லாம் கேட்டு நாம் என்ன செய்வது?

 

எல்லாமே இப்படித்தான் சொதப்பல் கோட்பாடுகள், யதார்த்தங்களை மீறிய கற்பனை வாதங்களை மனித்ததிற்கு போதித்துக் கொண்டு அதற்கு நேர்மாறான வன்குருரத்தை கையாள்கிறது மதமும், மானிட அதிகாரங்களும்...

 

காந்திக்கு தோன்றிய அகிம்சை யுத்திகள் ஒன்றும் புதிய செய்திகள் இல்லை. இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே  மகாவீரவர்த்தமானர்  கையாண்ட கோட்பாடு போன்றது தான்.

 

காந்தியின் சிறுவயதில் அவரது அம்மாவிடம் இருந்து நிறைய ஆன்மீக கதைகளைக் கேட்டு வளர்ந்தவர். பிரகலாதன், அவுணர்கோமான், இரணியன் போன்ற கதைகளைக் கேட்டதன் விளைவு தான் காந்திய சித்தாந்தம். 

 

பிரகலாதன் அப்பாவிடம் பட்ட பாடு! இருப்பினும் தன் கொள்கையில் உறுதியாக இருக்கிறான்...

 

தீயில் தள்ளினாலும் ´ஓம் நமோ நாராயணாய...´

 

´யானையைக் கொண்டு தலையை நசுக்கச் செய்யச் சொன்னாலும் ஓம் நமோ நாராயணாய!..´

 

எத்தனையெத்தனை ஹிம்சை வந்தாலும் ´ஓம் நமோ நாராயணாய!´

 

எந்த எதிர்பும் இல்லை. தன் அகிம்சை வழியை மட்டும் உறுதியோடு தன் கோட்பாட்டுக்குள் வைத்திருக்கிறான் சிறுவன் பிரகலாதன். கடைசியில் பகவான் துணில் இருந்து பீய்த்துக் கொண்டு வெளியே வருகிறார்.

 

அப்போது தான் நம் மக்களுக்கு தெரிந்திருக்கிறது பகவான் தூணிலும் இருப்பான் துரும்பிலும் இருப்பானென்று...

 

ஆனால் இன்னொரு மேட்டரை பார்க்கத் தெரியவில்லை.

 

தனிமனிதச் சுதந்திர கருத்துக்கள் தலையிடும் உரிமை யாருக்கும் இல்லை என்ற கோட்பாட்டை அறிவுறுத்துவதற்கு டுபாக்கூர் கதையை அள்ளிவைக்கிறது. இதில் இருந்து மானிடம் எதைக் கற்றுக் கொள்ளும்? இங்கேயும் மதம் சொதப்பி வைக்கிறது.

 

சரி! இப்பலாம் ஏன் தூணில் இருந்து பகவான் வரமாட்டுகிறார்? ஒரு வேளை காங்கிரெட் ரொம்ப ஸ்டாங்காக இருக்கிறதோ? பகவான் வெளியே வரமுடியாமல் தடுமாறுகிறார்?

 

அப்பறம் இந்த திருநாவுக்கரசர்

 

கூத்தும் ஞாபகத்திற்கு வருகிறது.

 

சைன சமயத்தில் இருந்து சைவ சமயத்திற்கு மாறும் திருநாவுக்கரசர் மீது மன்னன் மகேந்திரவர்ம பல்லவனுக்கு பெருங்கோபம்!

 

"பரதேசியை இழுத்துக் கொண்டு வாருங்கள்..." மன்னன் ஆணை போடுகிறான்.

 

ஆணை நிறைவேற்றப்படுகிறது.

 

மன்னன் முன் திருநாவுக்கரசர் நெற்றியில் திருநீறு பூசிய முகத்துடன் நிற்கிறார்.

அதைப் பார்த்து மன்னனுக்கு வயிறு எரிகிறது...

 

"சைவ சமயத்தில் இருந்து மீண்டும் சைன சமயத்துக்கு திரும்பிவிடு" மிரட்டலாக கேட்கிறான் மன்னன்.

 

"முடியாது அரசே! ஓம் நமச்சிவாய...."

 

"சுண்ணாம்புக் காளவாய்க்குள் தள்ளுங்கள் இவனை" அதிகாரத்தின் ஆணை நிறைவேற்றப்படுகிறது.

 

சுண்ணாம்புக் காளவாய்க்குள் விழும் திருநாவுக்கரசர் சொல்கிறார் ´ஓம் நமச்சிவாய..´

 

அதிசயம் நடக்கிறது. திருநாவுக்கரசருக்கு ஒன்றும் நடக்கவில்லை

 

அடுத்தது யானையைக் கொண்டு தலையை மிதித்துக் கொல்ல ஆணை...

 

வீதியில் குப்பறத்தள்ளப்படும் திருநாவுகரர் தலை மீது யானையை அழுத்த  யானைப்பாகன் சொல்கிறான்.

 

திருநாவுக்கரசர் ´ஓம் நமச்சிவாய´ என்கிறார்..

 

யானையோ அந்த மந்திரக் குரலைக்கேட்டு போய்விடுகிறது.

 

இதுவும் வேலைக்கு ஆகவில்லைறென்றதும் மன்னன் பாறாங்கல்லோடு கட்டி கடலில் போடச் சொல்கிறான். அப்படியே போடப்படுகிறது.

 

திருநாவுக்கரசர் ´ஓம் நமச்சிவாய´ என்கிறார்

 

கல் கடலுக்குள் போகாமல் மிதக்க ஆரம்பிக்கிறது.

 

இன்னொரு அகிம்சை மேட்டர் நம்ப பாஞ்சாலி அம்மா பற்றி....

 

சபையில் புடவையை உருவும் போது எந்த எதிர்ப்பும் தெரிவிக்காமல் கண்ணா என்கிறார். பண்டல் பண்டலாக மேலோகத்தில் இருந்து துணி வந்துக் கொண்டே இருக்கிறது...

 

இந்த மாதிரி போராட்டங்கள் எல்லாம் அகிம்சைப் போராட்டத்தைச் சேர்ந்தது தான். அது புராணக்கதைகளாகவோ வேறு ஏதோ ஒன்றாகவோ கிடந்துவிட்டுப் போகட்டும். ஆனால் இந்த பாணியில் ஆன்மீகக் கதைகளைக் கேட்டு வந்த காந்தியார் இந்த அகிம்சை முறை போராட்டத்தை காப்பியடித்து சத்தியாகிரகமாக மாற்றிய போது வந்தது கிரகசோதனை இந்திய மக்களுக்கு...

 

"சத்தியத்தை விடாப்பிடியாகப் பற்றி நில். உயிரே போவதாயினும் தீமையை, கொடுமையை எதிர்க்காதே!" என்கிறது காந்தீய தத்துவம்.

 

ஆக்கிரமிப்புக்கு எதிரான சத்தியாகிரக கோட்பாடு இயற்கைக்கு முரணானதாகும். ஆறறிவு மனிதனிதனிடம் செயல்படுத்த முடியாத சங்கதிகள் காந்தியக்கோட்பாட்டுக்குள் இருக்கின்றன.

 

உதாரணத்திற்கு அகிம்சை போராட்டத்தை ஈழத்தில் தற்போது நிலவும் இனஒழிப்பு போராட்டத்தில் வைத்துபாருங்கள். 11-வயதிலிருந்து 16- வயதிற்குட்பட்ட ஆண் குழந்தைகளையெல்லாம் பெற்றோர்களிடம் இருந்து சிங்கள இராணுவம் இழுத்துக் கொண்டு போவதாக சிங்கள சமூக அமைப்பு ஒன்றே குற்றம் சுமத்தி இருக்கிறது. அப்படிப்பட்ட சிறுவர்களின் நிலை என்னவென்றே இதுவரையில் தெரியவில்லை. இந்த தமிழ் சிறுவர்களில் ஒருவனாவது பிரகலாதனாக இருந்திருக்க மாட்டானா? கடவுளே காப்பாற்று என்று கதறியிருக்க மாட்டானா? பகவான் வந்தானா? குண்டு வீச்சில் அடிப்பட்ட மக்களை இராணுவ டாங்கிகளை ஏற்றிக் கொல்வதாக செய்திகள் வருகிறதே! அந்த மக்கள் கதறி இருக்க மாட்டார்களா? ´கடவுளே எங்களை காப்பாற்று´யென அலறி இருக்க மாட்டார்களா? எத்தனையோ தமிழ்பெண்களை பாலீயல் வல்லுறவு செய்கிறார்களே சிங்களர்கள்... பண்டல் பண்டலாக புடவை வந்ததா?

 

கேள்விகள் எல்லாம் லூசுத்தனமாக இருப்பது போல் தான் இருக்கும். ஆனால் ஒற்றை வரியில் அகிம்சைப்போராட்டத்தில் நமக்கான உரிமைகளை வென்றிடலாம் என்கிறார்களே கேணத்தனமாக.

 

அவர்களிடம் தான் கேட்க வேண்டும்.

 

அகிம்சை போராட்டமா? உன்னை ஒரு அப்பு அப்பினால் உடனே என்ன செய்வாய்? டாய் எம்மேலேயா கைய வச்சாய்னு எகிறிட்டு வருவான் பாரு அப்ப சொல்லனும்

"தோழா அகிம்சை வழியில் உன் எதிர்ப்பைக் காட்டு" என்று.

 

சமீபத்தில் அரை லூசுத்தனமான எழுத்தாளர் ஒருவர் எழுதிக் கிழித்திருந்தார். ´தீவிரவாதத்தால் ஒன்றையும் சாதிக்க முடியாது. அகிம்சையே ஈழத்திற்கு தேவை´யென...

 

என்னமோ நடப்பது மக்களாட்சி என்கிறார்கள்; ஜனநாயகம் என்கிறார்கள்; மக்களுக்கான உரிமைகள் கிடைக்காத போது அதை வென்றெடுக்க போராட்ட ஆரம்பித்தால்; தீவிரவாதிகள் என்கிறார்கள், புரட்சி போராட்டங்களை எல்லாம் சதி செய்து ஒழித்துக்கட்டுகிறார்கள்.

 

ஒருவேளை அகிம்சையில் ஈழத்தமிழர்கள் போராட ஆரம்பித்திருந்தால்....

 

திலீபனை தெரியுமா?

 

உண்ணாவிரதம் இருந்து செத்துப்போன போராளி!

 

அகிம்சையை நம்பினான் செத்துப் போனான்.

 

இந்த காந்தியார் உண்ணாவிரதப் போராட்டத்தில் பிரபலமானவர். எத்தனை உண்ணாவிரதப் பேராட்டங்கள் நடத்தியிருப்பார். தொடர்ந்து 5-நாளாவது இருந்திருப்பாரா? திலீப்பனின் அகிம்சை போராட்டத்திற்கு முன்னே காந்தியின் அகிம்சை போராட்டம் குப்பைக்கு சமானம்.

 

´தெரிகிறது..... எல்லோருக்கும் எல்லா சங்கதிகளும் தெரிகிறது.´

 

´அரசியல் பிராடுத்தனம் எல்லோருக்கும் எல்லாம் புரிகிறது.´

 

இருந்தும் என்ன எழவுக்கு மௌனிகளாக சமூகம் இருக்கிறது?

 

சுயநலம்!! அத்தனையும் சுயநலம்!!!


எவனாவது எக்கேடாவது போகட்டும் என்னும் அலட்சிய புத்தி!!!

 

இவர்கள் தான் மானிடர்களா? இவர்களிடம் இருப்பது தான் மனித நேயமா?


எதைச் சொல்வது? எதை எழுதுவது?

 

ஒன்று மட்டும் புரிகிறது....

 

"மிருகங்களுக்கு இருக்கும் சுதந்திரம் மனிதர்களுக்கு இல்லை"யென்று!

 

எதையோ சொல்ல வருகிறேன். எதையும் சொல்லாமல் போகிறேன் நான். இதுவும் பேச்சு சுதந்திரம், கருத்துத் சுதந்திரம் இல்லாததால் தான். 


தமிழச்சி
27.06.2009

 

http://tamizachi.com/index.php?page=echoarticle&rubrique=01&article=1328


கட்டுரையாளர்களின் ஆக்கங்கள்