03212023செ
Last updateபு, 02 மார் 2022 7pm

மகிந்த பாசிசத்துக்கு ஒளிவட்டம் கட்டி கூத்தாடும் பாசிச பக்தர்கள், மக்களுக்கு என்ன தான் சொல்லுகின்றனர்

மக்களின் விடுதலைக்காக ஒரு அரசியலை முன் வைத்து, அவர்களுக்காக போராட முடியாதவர்கள்  யார்? இதைச் செய்யாத அனைத்தும், மக்களுக்கு எதிரானது. இதுவே, வெளிப்படையான உண்மை.

 

இப்படி மக்களின் வாழ்வுக்காகவும், உரிமைக்காகவும் முன்னிற்க முடியாதவர்கள், மகிந்தாவின் பாசிசத்துக்காக குலைக்கின்றனர். புலிப் பாசிசத்துக்கு பதில், மகிந்தாவின் பாசிசத்தை தமிழ்மக்கள் மத்தியில் திணிக்கவே படாதபாடு படுகின்றனர். புலியை தமிழ்மக்கள் மத்தியில் ஒழித்தல் தான், இவர்களின் குருட்டுக் கண்ணுக்கு முன்னாலுள்ள பேசும் பொருள்.


 
இதைச் செய்யவே, மகிந்தாவை நம்பலாமா என்ற கேள்வி கேட்டு, எப்படியோ நம்பித்தான் ஆக வேண்டும் என்கின்றனர். இதைத் தவிர வேறு வழிதான் என்ன என்று எதிர் கேள்வி கேட்டு, பாசித்துக்காக கூத்தாடுகின்றனர்.

 

இந்த பாசிச கூத்தாடிகள் பெரும்பாலும் நன்றாகப் பிழைக்கத் தெரிந்தவர்கள், சமூகத்தை மடக்கி கதைக்கத் தெரிந்தவர்கள். இவர்கள் தயவில் மகிந்தா பாசிசம், தமிழ்மக்கள் மத்தியில் பூத்துக்குலுங்க  முனைகின்றது. கருணா, டக்கிளஸ் போன்ற நக்குண்ணி பாசிசக் கூலிகளை போலல்லாது, இயல்பான பாசிசத்தை கட்டமைக்க முனைகின்றனர். புலிப் பாசிசத்தை கருத்துத் தளத்தில் முறியடித்தால் இதை உருவாக்க முடியும் என்று மகிந்த பாசிசம் கணக்கு போட்டு, தம் கூலி எழுத்தாளர்களை புனைபெயரில் விதைத்துள்ளனர். உலகமறிந்த பக்காப் பொறுக்கிகள், இன்று புனைபெயரில் உலவுகின்றனர். அரச பாசிசத்தை நியாயப்படுத்துகின்றனர். எப்படி இதை முன்வைக்கின்றனர் என்று பாருங்கள்;. (இது விரிவாக தனித்தனியாக பின் ஆராயப்படும்) 

 

1. மக்கள் குண்டுச் சத்தம் இல்லாத அமைதியை சமாதானத்தை விரும்புகின்றனர். நீங்கள் அரசை எதிர்ப்பது, அதை கெடுக்க விரும்புவதாகும்.

 

2. அகதி முகாமில் இனக் (இவர்கள் இதை புலி) களையெடுப்பு அவசியமானது. இல்லையென்றால், மீண்டும் நாட்டில் அமைதி கெட்டுவிடும்.

 

3. மக்கள் எதுவுமில்லாத அகதிகள். அவர்களை இப்படி முகாமில் அடைத்து வைத்து உணவு போடாவிட்டால், அவர்கள் எப்படித்தான் எங்கும் தான் வாழமுடியும்;. எனவே இந்த நாசிய முகாம் தான், அந்த மக்களுக்கு உணவை போடும் மனிதாபிமான நடவடிக்கை. மாற்று வழி, தீர்வு. வேறு என்னதான் செய்யமுடியும். 

 

4. எல்லாவற்றையும் இழந்துவிட்ட மக்கள், இனி அவர்கள் விரும்பியவாறு வாழமுடியாது. அரசு சொல்வது போல்தான் வாழவேண்டும். இதை நாட்டின் அபிவிருத்தியுடன் இணைப்பது  அவசியமானது. அன்னிய மூலதனத்துக்கு ஏற்ப, அவர்களை அரசு கையாளும் உரிமையை  நாம் ஆதரிக்கவேண்டும். நாளை வன்னியில் அன்னிய மூலதனத்தின் கீழ் பண்ணை அடிமைகளாக அவர்களை மாற்றினால், அது தவறல்ல. அதை நாம் ஆதரிக்க வேண்டும். அது தமிழ் மக்களுக்கு நன்மையானதாகவே, மக்களுக்குள் பார்க்கவேண்டும்.   

 

5. தமிழ் மண்ணில் சிங்கள குடியேற்றம் செய்வது ஏன் தவறு. அங்கு புத்த விகாரைகள் கட்டுவது தவறல்ல என்கின்றனர். ஏன் தமிழ்மக்கள் சிங்களப் பகுதியில் குடியேறவில்லையா, கோயில் கட்டவில்லையா? அந்த உரிமை சிங்கள அரசுக்கு உண்டு.

 

6. இன்று நடக்கும் கடத்தல்கள், பத்திரிகை மேலான தாக்குதல்கள், அரச வன்முறைகள்  கடந்த காலத்தின் எச்சங்கள்;. அவை அரச பாசிசமல்ல. எல்லாம் விரைவில் சரிவரும். இதை தம்மைப் போல் கண்டுகொள்ளக் கூடாது.

 

7. பேரினவாதம் தமிழ் மக்களிடம் இருந்து ஆக்கிரமித்த மண்ணை, அன்னியனுக்கு விற்பது அரசின் உரிமை. அதை தமிழ்மக்களோ, அந்த மண்ணின் உரிமையாளனோ கேட்கமுடியாது. அது தமிழ் மக்களின் அபிவிருத்திக்கு அவசியமானது. அன்னிய மூலதனத்துக்கு நாட்டை விற்பது, தமிழ்மண்ணை அன்னியன் சுரண்டிக் கொள்ளையிட தாரைவார்ப்பது தவிர்க்க முடியாது. அதை தமிழ் மக்களின் நன்மைக்கானதாக நாங்கள் சொல்ல வேண்டும்.  

 

7. ஜனநாயக சூழல் அவசியமானது. வடக்கில் 1000 பேர் தேர்தல் கேட்டால், அது ஜனநாயகத்தின் முதல்படி. அரசு பாசிச பிரதிநிதிகளுடன் நாம் சேர்ந்து விவாதிப்பதும், அவர்களை எம்முடன் இணைத்து கருத்து சுதந்திரத்தை அங்கீகரித்து நாம் கூத்தாடுவதுதான் ஜனநாயகம். இப்படி கருத்துகள் முட்டி மோதினால் தான் நல்லம். எமக்கு என்னதான் தெரியும். நாலு பேர் விவாதித்தால் தான் நாலும் தெரியவரும். அரச பாசிசத்துடன் சேர்ந்து நிற்பது அவசியம்.

  

இப்படி பலவற்றை தர்க்கிக்கின்ற பாசிட்டுகளை, இன்று புலியின் எதிர்ப்தரப்பில் ஒவ்வொருவரும் சந்தித்திருப்பீர்கள். புலிகள் தம்மை கடந்த காலத்தில் எப்படி நியாயப்படுத்த முனைந்தனரோ, அதே குதர்க்கத்துடன் மகிந்தாவின் பாசிசத்துக்காக கூத்தாடும் பாசிட்டுகள் இன்று புலிக்கு பயந்து அருபமாகவில்லை.

 

வெளிப்படையாக கொக்கரிக்கின்றனர். இந்த விடையத்தை அறிவுபூர்வமாக விளக்க முனையும் அரச கூலி எழுத்தாளர்கள் மட்டும், புனைபெயரில் ஒளித்து நின்று இந்த நவீன பாசிச பிரச்சாரத்தை முன்தள்ளுகின்றனர்.

 

இவர்கள் கூட்டிக் கழித்து சொல்ல வருவது மகிந்தாவின் பாசிசம், மக்களுக்கு நன்மையானது என்பதைத்தான். கொஞ்சம் தம்மை மாற்றுக் கருத்தாக காட்டி நியாயப்படுத்த முனைபவர்கள், இதை ஆதரிக்காவிட்டாலும் எதிர்க்கத் தேவையில்லை. நல்ல எதிர்க்கட்சிகளாக இருந்து இதை சரிசெய்ய முனைவதன் மூலம், இதை நாம் சேர்ந்து  சரிசெய்ய முடியும். அரசு செய்வதில் நல்லதே இல்லையா, அதையாவது நாம் ஆதரிப்பது அவசியம்;. மகிந்தா பாசிசத்தின் பின் கொடி பிடிக்கும் கூட்டம், இப்படித்தான் தம்மை இனம் காட்டி வருகின்றனர். இதை இன்று நாம் இனம் காண்பதும், அதை வேர் அறுப்பதும் அவசியம். புலிப் பாசிச வேரை மட்டுமல்ல, அரச பாசிசத்தின் வேரையும் அறுக்க வேண்டியுள்ளது. எம் சமூகத்தினுள் இது புரையோடியுள்ளது. எம்மில் ஒருவராக இருக்க முனைகின்றது. முதலில் இதை நாம்  இனம் காணத் தெரிந்து கொள்வது அவசியம்.

 

பி.இரயாகரன்
27.06.2009 


பி.இரயாகரன் - சமர்