Language Selection

பி.இரயாகரன் -2009
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

மகிந்தாவை நம்பு, மக்களை நம்பாதே. மகிந்தா அரசியலை வை, மக்கள் அரசியலை வையாதே. மகிந்தாவை நம்புவதா? என்ற இந்தக் கேள்வியின் பின்னுள்ள அரசியல் நோக்கம், மக்கள் அரசியலை மீண்டும் மறுப்பது தான். இதன் மூலம் மகிந்தாவின் பாசிச சிந்தனையை ஆதரிப்பதுதான்.

 

இன்று அரசின் கூலி எழுத்தாளர்கள் முன்வைக்கும் மையமான பிரச்சாரம் இதுதான். சுற்றிச் சுழன்று இதற்குள் மனிதவாழ்வை திரித்துக் காட்ட முனைகின்றனர். இதன் மூலம்  புலியெதிர்ப்பு பேசிய கூட்டத்தை அரசு சார்பு அரசியல் மயமாக்கி, அரசை நம்பக் கோரும் பிரச்சாரத்தை முன் தள்ளுகின்றனர். வேறு மாற்றுவழி தமிழ் மக்களுக்கு இல்லை என்கின்றளர். இப்படி இதற்குள் தர்க்கம் செய்யும் பாசிசக் கூட்டம், மக்கள் அரசியல் எதையும் கொண்டிருப்பதில்லை, அதை நம்புவதும் கிடையாது. இப்படி செயற்படுபவர்களில் சிலர் இலங்கை இந்திய இரகசிய அரசியல் ஏஜண்டுகள்.

 

இவர்கள் முன்தள்ளும் தர்க்கங்கள், புலிப் பாணியிலானது. எப்படி புலிகள் மக்களை நம்பாது செயற்பட்டனரோ, எப்படி தர்க்கம் செய்தனரோ அதை ஒத்தது. அன்று புலிக்கு, இன்றோ அரசுக்காக தர்க்கம் செய்கின்றனர். எதிர்த்தால், வேறு வழி தான் என்ன என்கின்றனர். அரசின் செயல்களை ஆதரிக்கின்ற நியாயவாதங்களை இதன் மூலம் முன்தள்ளுகின்றனர். புலியின் அதே பிளேட்டை மாற்றிப் போட்டு, அதை புலிப்பாணியில் உளறுகின்றனர். வேறு எந்த மாற்று மக்கள் அரசியலும் இதன் பின் கிடையாது என்ற உண்மை, இதன் பின் உண்மையாக மகிந்தாவின் சொந்த முகம் இருப்பதை இனம் காண உதவுகின்றது. வேறு எந்த வேஷத்தையும் போட முடியாத வண்ணம், மகிந்தா அரசு ஊடாகவே எமக்கு மறு உலகத்தைக் காட்ட முனைகின்றனர். இவர்கள் வைக்கும் தீர்வு புலிப்பாசிசத்துக்கு பதில், மகிந்த பாசிசம் தான் தீர்வு. அனைத்தும் புலிப் பாசிசத்தால் நடந்தவை, அரச பாசிசத்தால் அல்ல என்று சொல்ல முனைகின்றனர், காட்ட முனைகின்றனர். இதற்கு வெளியில், மக்களைச் சார்ந்த எந்த தர்க்கமும், அரசியல் நோக்கமும் இவர்களிடம் கிடையாது.

 

அரசு என்பது என்ன?

 

அரசு என்பது மக்களின் அடிப்படையான தேவைகளையும், உரிமைகளையும் பூர்த்தி செய்து பாதுகாப்பதாக இருக்கவேண்டும். இதுதான் மக்கள் அரசு. இதையா அரசு செய்கின்றது. இல்லை. அடிப்படைத் தேவைகளை மறுக்கின்றது. உரிமைகளை பிடுங்குகின்றது. தேவைகள் மறுக்கப்படுவதுக்கு எதிரான மக்கள் உணர்வுகளை ஒடுக்குகின்றது. மறுக்கப்பட்ட உரிமைகளை கோரும் உரிமையைக் கூட மறுக்கின்றது. இப்படி அரசு மக்களை ஒடுக்கும் அரசாக உள்ளது. ஒடுக்கும் பிரிவுகளின் அரசாக உள்ளது.

 

இப்படி அரசு ஆளும் வர்க்கத்தின் பிரதிநிதிகள். ஆளும் வர்க்கத்தின் நலனை பாதுகாப்பதுதான், இந்த அரசின் கடமையாக உள்ளது. ஆளப்படும் மக்கள் மேல் அரசு என்பது, தன் அதிகாரத்தை நிலை நிறுத்துகின்றது. இப்படி அரசு என்பது அனைத்து மக்களின் நலனையும் உறுதி செய்யும் அரசல்ல.

 

இந்தச் சுரண்டல் சமூக அமைப்பில் அரசுகள் மக்கள் நலனுக்கானவையல்ல. சுரண்டும் வர்க்கத்தின் நலனை பாதுகாப்பது தான், இந்த அரசுகளின் வரம்பாகின்றது.

 

இலங்கை அரசும் அப்படிப்பட்டது தான். இதற்கு வெளியில் அதில்லை. மக்களைச் சுரண்டுவதையும், அதற்கு தடைகள் ஏற்படாத வண்ணம் சுரண்டும் வர்க்கத்தை பாதுகாப்பதும், சுரண்டுவதை இலகுபடுத்துவதையும் தான் இலங்கை அரசு செய்தது.

 

இதற்கு இந்த அரசு, பேரினவாத மேலாதிக்கத்தை கையில் எடுத்தது. இதன் மூலம் ஒரு இனத்தை இன்னுமொரு இனத்துக்கு எதிராக மோதவிட்டதன் மூலம், சுரண்டும் வர்க்கத்தின் நலனை பாதுகாக்க முனைந்தது. சுரண்டும் வர்க்கத்துக்கு எதிரான போராட்டத்தை தடுக்க, சுரண்டப்படும் மக்களிடையேயான மோதலை தூண்டிவிட்டனர்.

 

இப்படி அரசு சுரண்டும் வர்க்கத்தைச் சார்ந்து, இன மேலாதிக்கத்தை தூண்டியது. அதைச் சார்ந்து ஒடுக்கப்பட்ட வர்க்கத்தை ஒடுக்கியது. இனங்களின் மேலான ஒடுக்குமுறையும், இனச் சலுகையும் கொடுத்து, இனங்களுக்கு இடையிலான மோதலாக அதை மாற்றினர். இதைத்தான் இலங்கை அரசு செய்தது.

 

இதன் விளைவுதான் புலிகள். இந்த அரசு இன மோதல்களைத் தூண்டியதன் மூலம்  உருவாக்கியதுதான், புலிகள் என்ற அமைப்பு. இப்படி தன் இன மோதல் மூலம், புலிகளை உருவாக்கியதும் இந்த அரசு தான். உருவான அமைப்புக்களைச் சீரழித்து, அதை பாசிசமயமாக்கியது இந்தியா. இப்படி இலங்கை அரசு, இந்திய அரசு, தத்தம் நலன்களை முன்னிறுத்தி தமிழ்மக்களை ஒடுக்க ஏற்படுத்திய வடிவங்களில் எஞ்சியது தான் புலி.

 

புலியை உருவாக்கி, அதைப் பாசிசமயமாக்கி மக்களுக்கு எதிராக நிறுத்தியவர்கள், அதை கூட்டாக சேர்ந்து அழித்துள்ளனர். இதுதான் நடந்து முடிந்த கதை.

 

பி.இரயாகரன்
26.06.2009

 

மற்றொரு தலையங்கத்தில் தொடரும்.