வன்னிமுகாமில் உள்ள இளம் பெண் ஒருவருடனான உரையாடலின் போது, அள்ளிக் கொட்டிய குமுறல் தான் "நாசமாகப் போவாங்கள், அறுவாங்கள்" என்று திட்ட வைத்தது. அடக்கி ஒடுங்கிக் கிடக்கும் கோபங்கள், போராட்டங்கள், இப்படித்தான் குமுறி வெடித்தெழுகின்றது. சமாதான காலத்தில் இதே பெண், தமிழீழம் மிக விரைவில் மலரும் என்றவர். அப்படியா என்ற போது, எம்மை எள்ளி நகையாடிக் கதைத்தவர்.
அந்தளவுக்கு நம்ப வைக்கப்பட்ட ஒரு பிரமையில் வாழ்ந்தவர்கள். புலிகளோ தங்கள் பாசிச சுய ரூபங்களை மூடிமறைத்து, தம்மைப் பற்றி ஏற்படுத்திய பிரமிப்பை யுத்தத்தின் போது தகர்த்தெறிந்தனர். எப்படிப்பட்ட பாசிட்டுக்கள் தாங்கள் என்பதை, மக்கள் முன் நிர்வாணமாகவே நிறுவினர்.
இன்று அதே பெண் இந்தக் காட்டுமிராண்டிகளின் இனவழிப்பு யுத்தத்தினால் சொந்த வடுவுடன் குமுறி எழுந்தாள். அரச நாசி முகாமில் உணவுக்காக நெரிபட்டு கீழே வீழ்ந்ததால், தனக்கு கிடைக்க இருந்த ஒரு குழந்தை வயிற்றில் வைத்தே அழிந்து போனது. அதற்கு சரியான மருத்துவமின்றி, மீண்டும் கடுமையான உடல் நிலைக்கு சென்றார். இன்று இப்படி அவரின் கதையுள்ளது. அவரின் சொந்த தமக்கை ஒரு கண் பறிபோன நிலையில், உடலில் பல காயங்கள் நோய்கள் உடன், தனது நான்கு சிறு குழந்தைகளையும் விட்டுவிட்டு அனாதையாக மற்றொரு மருத்துவமனையில்; வாழ்வுக்காக அலைகின்றார். இவர் தன் குழந்தைக்காக வன்னியில் அங்கர் பால் பைக்கற் கொடுக்கும் நீண்ட கியூவில் நின்ற போது, புலிகள் அங்கு வாக்கிடோக்கியுடன் நின்று பேச, அந்த இடத்தில் குண்டு வீழ்ந்த போது ஏற்பட்டதே இந்தக் காயம். அதில் தம் குழந்தைகளுக்காக அங்கர் பால் பைக்கற்றைப் பெற வந்து நின்ற, 70 பொதுமக்கள் இறந்து போனார்கள். மக்களைக் கொல்லவேண்டும் என்ற குறிக்கோளுடன் இதை திட்டமிட்டு செய்த புலிகளை, அந்த வன்னி மக்கள் பாடையில் போவான்கள் என்று தூற்றாமல் வேறு என்னதான் செய்யமுடியும். இப்படி மக்கள் புலியை காறி உமிழ்வதில், நியாயங்கள் உண்டு. இவர்கள் மக்களையே பாடையில் அனுப்பியவர்கள் ஆயிற்றே.
இப்படி காறி உமிழ்ந்த அந்த பெண், தன் சக இரத்த உடன் பிறப்புகளை புலியின் அராஜகத்துக்கு பலிகொடுத்தவர். எந்த பயிற்சியுமற்ற தன் உடன் பிறப்புகளை கதறக் கதற தன் கண் முன் இழுத்துச் சென்றதையும், யுத்த முனையில் வீரமரணம் என்று கூறி மூன்றாம் நாளே புலிகள் உடலைக் கொண்டு வந்து கொடுத்த கதையைச் சொல்லி திட்டி அழுகின்றார். அந்தப் பெண் குழந்தை பருவமடைந்த 6 நாள்களில் இழுத்துச் சென்றவர்கள், அதன்பின் 3 நாளில் வீரமரணமடைய வைத்தனர். தமிழ் சமூகம் புலியிடம் சந்தித்த கொடுமைகள், வார்த்தைகளுக்கு உட்பட்டவையல்ல. இப்படி கண் முன்னால் கண்ட கேட்ட, எத்தனையோ கதைகள். அவைகளையோ அவர்களால் சொல்லி மாளாது.
அங்கே இந்த நாசமறுப்பாங்கள், மானம் வெட்கம் எல்லாவற்றையும் இல்லாதாக்கினார்கள் என்றால், இங்கே இந்த மற்ற அறுவாங்கள் அதையே செய்கின்றார்கள் என்று, தம் மனக்குமுறலைக் கொட்டித் தீர்த்தார்.
மக்கள் இப்படித்தான் குமுறி வெடிக்கின்றனர். இப்படித்தான் போராடுகின்றனர். தமது ஆயுதமாக சொற்கள். இதன் மூலம் இந்த மனித அவலத்துக்கு காரணமான அனைவரையும் திட்டித்தீர்க்கும், உச்சத்தில் வன்னி மக்கள் உள்ளனர். தமக்கு நடந்த நடக்கின்ற கொடுமைகளை, கொடூரங்களைச் சொல்லி காறி உமிழ்கின்றனர். புலிகள் இனி அந்த மக்களை நெருங்கவே முடியாத அளவுக்கு, பாரிய கொடுமைகளை அவர்களுக்கு செய்திருக்கின்றனர். ஆண், பெண் பால் வேறுபாடு கடந்த எல்லைக்குள், புலிகள் அந்த மக்களை இழிவாகவும் மலிவாகவும் நடத்தினர்.
அந்த மக்களுக்கு எதிராக தூசணம் புலியின் மொழியாகியது. இப்படி தூசணம், மக்களுக்கு எதிரான, வன்முறை கொண்ட மொழியாக்கப்பட்டது இதுவல்ல முதன்முறை. பெண்களை அவர்களின் உறுப்பு சார்ந்து இழிவு செய்யும் தூசண மொழியால், ஆண் புலிகள் இதை தம் துப்பாக்கி முனையில் திட்டி தீர்த்து அடக்கினர். இனத்தினதும்;, பெண்ணினதும் மானம் வெட்கம் அனைத்தையும் இழக்க வைத்தனர். புலிகள் பலிகொடுக்க விரும்பிய இடத்தில், மக்களை கட்டாயப்படுத்தி அமரவைத்தனர். மறுத்தவர்களை பச்சை மட்டைகொண்டு விளாசினர். மக்கள் இராணுவத்தின் செல்லடியில் சாக வேண்டும் என்ற அடிப்படையில், துப்பாக்கி முனையில் படு தூசணங்கள் மூலம் வன்முறையை ஏவினர். இதன் மூலம் பலி மேடையில், பலியாடுகளாக மக்களைத் திணித்தனர். பச்சை மட்டை கொண்டு தாக்கப்பட்டனர்.
இந்தளவுக்கும் அந்த மக்கள் சுயமாக தப்பிப் போகாத வண்ணம், உயிர்வாழ முனையாத வண்ணம், அனைத்துவிதமான வன்முறைகளையும் ஏவினர். இதன் மூலம் புலிகள் தாம் விரும்பியவாறு, மக்களை மரணப்பொறியில் சிக்க வைத்து மரணிக்க வைத்தனர். இதற்கேற்ற பலி இடத்தில், மக்கள் இருக்கவேண்டும் என்பது தான் புலியின் தாகமாகியிருந்தது.
இந்த இடத்தில் ஒன்றை எடுத்துக்காட்டுவது அவசியம். பாராளுமன்ற பொறுக்கியும் கூட்டமைப்பு எம்.பி.யுமான ஒருவர், நோர்வேயில் புலிகளுடனான உரையாடல் ஒன்றின் போது 50000 மக்கள் இறந்தால் தமிழீழம் கிடைக்கும் என்றான். அதாவது இந்தப் பொறுக்கி மக்களை பலியிடுவதும், பலிகொடுப்பதும் அவசியமென்றான். அதைத்தான் புலி பலிமேடையில் நிறுத்தி நடத்தியது. அன்று இந்தப் பொறுக்கி யாழில் உள்ள 40000 இராணுவத்துக்கு சவப்பெட்டியை தயார் செய்ய பாராளுமன்றத்தில் வீராப்பு பேசியவன். இந்தப் பொறுக்கிகளை உள்ளடக்கிய கும்பல், 50000 தமிழ் மக்களை கொன்றால், சர்வதேச தலையீடு ஏற்படும்; என்று திட்டமிட்டவர்கள். இதன் மூலம் தமிழீழத்தைப் பெறமுடியும் என்று கூறி, அதைச் செய்ய தூண்டி அதை நியாயப்படுத்தி வழிகாட்டியவர்கள்.
இதற்கமையவே மக்கள் தாமாக உயிர் வாழ முனைவது குற்றமாகியது. இதை மீறினால் பச்சைமட்டை அடி கிடைத்தது. தூசணத்தினால் படுகேவலமாக அவதூறு செய்யப்பட்டனர். அதையும் மீறினால் சுட்டுக்கொல்லப்பட்டனர். இதன் மூலம் மக்களை தம் பலி கொடுக்கும் கொலைவெறிக்கு அடங்கிப் போக கோரப்பட்டனர். பேரினவாதக் குண்டுகள் எங்கே கொட்டப்படுகின்றதோ, அங்கு மக்களை வலுக்கட்டாயமாக புலிகள் நிறுத்தி வைத்தனர். இராணுவம் எதை வைத்து இலக்குத் தவறாத குண்டுவீச்சை நடத்துகின்றதோ, அதற்கேற்ப அதை மக்கள் மத்தியில் விழுந்து சிதற புலிகள் தூண்டினர். பலியெடுக்கவும், பலிகொடுக்கவும், ஒரு அரசியல் திருவிளையாடலை வன்னியில் புலிகள் நடத்தி முடித்தனர்.
இந்த உளவியல் பாதிப்பில் இருந்து மீள முடியாதவர்கள், புலிகள் மேல் காறித் துப்புகின்றனர். அகதி முகாம்களில் தப்பிப் பிழைக்கும் புலிகளை பழிவாங்கும் உணர்வுடன் காட்டிக்கொடுக்கின்றனர் அல்லது தாக்குகின்றனர். புலிகள் மேலான மக்களின் வெறுப்பு, சாபமாக மாறி நிற்கின்றது.
இந்த நாசமறுத்தவங்களே பாடையில் போவாங்களே என்ற திட்டிய அந்தப் பெண், புலிகள் அழிந்துவிட்டனர் என்பதையும், தலைமை அழிந்துவிட்டது என்பதையும் இன்னும் நம்பவில்லை. அந்த நாசமறுப்பாங்களைத் தான், பாடையில் போவாங்கள் என்று இன்றும் காறி உமிழ்கின்றனர். மக்கள் தங்களைப் பற்றி என்ன நினைக்கின்றார்கள் என்பதை புலிகளின் புலனாய்வு அறிக்கைகள் கண்டுபிடிக்காது, உல்லாசமாக புலத்தில் அறிக்கை விடுவதைப் பார்க்கின்றோம்.
வன்னி நாசி முகாமை நடத்தும் அறுவாங்கள் பற்றி, அந்த இளம் பெண் தன் பாணியிலேயே அவர்கள் மேல் காறி உமிழ்ந்தார். ஒரு நேர உணவு கூட கிடையாது. அதுவும் கியூவில் முட்டி மோதி வாங்கித் தின்றால் தான், அன்றைக்கு உணவு. அந்த உணவு மனிதன் தின்ன முடியாத அளவுக்கு தரம் கெட்டது. குளிக்கும் ஆற்றிலோ, மலம் மிதந்து வருகின்றது. இரவில் நோய் என்றால், மரணத்தைத் தவிர வேறு வழி கிடையாது. பகலில் நோய் என்றால், ஒரு கிலோ மீற்றர் நடக்க வேண்டும். கடுமையான வருத்தம் என்றால் அதை யாரும் ஒடிப்போய்ச் சொன்னால் தான், அம்புலன்ஸ் வரும். இங்கு வாழ்வது என்பது, மரணத்துடனான போராட்டம் தான்.
உள்ளே சாராய வியாபாரம் கொடிகட்டிப் பறக்கின்றது. 900 ரூபாவுக்கு வெளியில் வாங்கும் சாராயம், உள்ளே 1500 ரூபா. உள்ளே கூட்டுறவு சங்கங்கள் முதல் பலவிதமான கடைகள், விலையோ அதிகம். பொருளை வாங்க எவரிடமும் பணமில்லை. உழைப்பில்லை, வருமானமில்லை. உள்ளே பணப்புழக்கம் கொண்டோர் பாடு கொட்டாட்டம். அனைத்தையும் விலை பேசி வாங்குகின்றனர். புலிகளின் வங்கி ஒன்றை உடைத்து அதில் பணத்தையும் நகையையும் அள்ளிய கும்பல் ஒன்று, பணத்துடன் உள்ளே அலைகின்றது.
நோய் கடுமையாகி வவுனியா பொது மருத்துவமனைக்கு சென்றால், மனிதத்தன்மையற்ற வகையில்தான், அங்கு மருத்தவ ஊழியர்கள் இந்த மக்களை நடத்துகின்றனர். நாய்களாக, பேய்களாக, அகதிகளை நடத்துகின்றனர். இந்த அகதிகளிடம் கூட, பணத்தைக் கறக்க முனையும் வைத்தியர் உலகம். பணப் பிசாசுகளே, எங்கும் அலைகின்றனர்.
வைத்திய கலாநிதிகளோ அகதிகளை, வெளியில் தம் தனியார் மருத்துவமனைக்கு பணத்துடன் வரும்படி நச்;சரிக்கின்றனர். பணம் இல்லாதவர்களை, அரையும் குறையுமாக மருத்துவம் பார்த்து, அவர்களை வருத்தியே கொல்லுகின்றனர். ஒரு சில மனிதாபிமான மருத்துவர்கள் செயலைக் கூட, இந்த பணப் பேய்கள் செல்லாக் காசாக்குகின்றனர். இப்படி எங்கும் எதிலும் மனித அடிப்படையை தகர்த்து விடுகின்ற, காட்டுமிராண்டித்தனங்கள்.
இப்படி பாதிக்கப்பட்ட மக்களின் மேலான ஈவிரக்கமற்ற தண்டனைகள். நாலு வேலிக்குள் வைத்து விலை பேசப்படும் மக்கள் கூட்டம். எத்தனை துயரங்கள், துன்பங்கள். இவை எல்லாம் எதற்கு? இனி இந்த மக்கள் வாழ்ந்த பிரதேசத்துக்கு என்ன நடக்கப் போகின்றது!?
இன்று உலகம் தழுவிய வகையில் பெரும் பண்ணைகளை உருவாக்கும் பன்னாட்டு நிறுவனங்களுக்கு வன்னிநிலம் கொடுக்கப்படப் போகின்றதா!? இங்கு சிங்களக் குடியேற்றமல்ல, பன்னாட்டு நிறுவனங்களின் குடியேற்றம்; நிகழப்போகின்றது என்ற அச்சம், இன்று எதார்த்தமாக உள்ளது. தேசத்தை அன்னியனுக்கு விற்பதுதான், பேரினவாத அரசின் அரசியல் குறிக்கோள். இதைத்தான் சிங்களப் பேரினவாதம், அபிவிருத்தியின் பெயரில் செய்ய முனைகின்றது.
பி.இரயாகரன்
24.06.2009