Language Selection

பி.இரயாகரன் -2009
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

தேசியத்தில் வர்க்கமில்லை என்று, தமிழ் தேசியத்தை அழித்தவர்கள், இப்படி சன்னி கண்டு புலம்புகின்றனர். வேடிக்கையான குதர்க்கம். தமிழ்மக்களை தமிழ்தேசியத்தின் பெயரில் அழித்தவர்கள், தமது புலித் தமிழ் தேசியத்தை வர்க்கக் கண்ணோட்டம் அழிக்கப் போவதாக குமுறுகின்றனர். வேல் தர்மா என்ற இணைய பதிவாளர் "ஈழப் பிரச்சனையும் வர்க்கக் கண்ணோட்டமும்" என்ற தலைப்பில், தமிழ்மக்களை அழித்த புலித்தேசியத்தைப் பாதுகாக்க பொங்கி எழுகின்றார்.

 

அதை அவர் 'ஆரிய-சிங்களக் கூட்டமைப்பின் அடிவருடிகள் தமிழ்த் தேசியவாதத்தை அழிப்பதற்கு வர்கக் கண்ணோட்டம் என்ற ஆயுதத்தை கையிலெடுத்து வைத்திருக்கின்றனர்" என்று, எம்மைப் பார்த்து குமுறிய வண்ணம் கூச்சல் எழுப்புகின்றார். வர்க்கம் என்ற சொல்லை கண்டு, அதை ஆரியவாதம் என்று பகுதறிவற்ற அரைவேட்காட்டுடன் புலிப்பாசிசம் புலம்புகின்றது. வர்க்கம் தமிழனைப் பிளக்கின்றதாம். புலித் தமிழ்த்தேசியத்தின் பெயரில், வர்க்கமில்லை என்று கூறி, தமிழனையே பிளந்து போடாத பிளவையா வர்க்கம் பிளந்தது!?

 

தமிழனை நிர்வாணமாக்கி, அவர்களைக் கொத்திப் பிளந்தவர்கள் யார்? இப்படி தமிழனைப் பிளந்து, அவனையே துரோகியாக்கியவர்கள் யார்? தமிழனை நாயிலும் கீழாக ஒடுக்கியவர்கள் யார்? நீங்கள் தான். ஒடுக்கப்பட்ட வர்க்கங்களின் உரிமைகளை மறுத்தும், ஒடுக்கப்பட்ட சமூகப்பிரிவுகளின் உரிமைகைளை நசுக்கியும், தமிழினத்தையே சுரண்டல்காரனுக்கும் சாதிக்காரனுக்கும்… மக்களை அடிமைப்படுத்தி ஒடுக்கியவர்கள் யார்?  நீங்கள் தான். ஏய்த்துப் பிழைக்கும் கூட்டம், உழையாது வாழும் கூட்டம், விடுதலையின் பெயரில் தமிழனை நக்கித் தின்னவைத்தது யார். நீங்கள் தான். சுரண்டித் தின்னும் உங்கள் வர்க்கம் தான். விடுதலையே வித்துத் தின்றவர்கள் நீங்கள்.  

 

மக்களின் அடிப்படையான ஜனநாயக உரிமையை மறுத்து, மனித சுதந்திரத்தை மறுத்து நின்றவர்கள் நீங்கள். இப்படி தேசியத்தையும், அதன் அரசியல் கூறையும் மறுத்து நின்றவர்கள் நீங்கள். பார்ப்பன ஆரியனுக்கு நிகராக, சிங்கள பேரினவாதிக்கு நிகராக, தமிழனை ஒடுக்கி அவர்களையே தின்றவர்கள் நீங்கள்.

 

இப்படி மக்களை ஏமாற்றி பிழைப்பதில் நீங்கள் மாபெரும் மோசடிக்காரர்கள். இடையில் புகுந்த, புல்லுருவிகள்;. புலி வரலாறு தெரியாத உங்கள் பாசிசம், காவியாகி உங்கள் கண்ணை மறைக்கின்றது. புலிகள் "சோஷலிசத் தமிழீழத்தை நோக்கி" என்று தான் தங்கள் சொந்த அரசியல் அறிக்கையை வெளியிட்டனர். இது என்ன "ஆரிய-சிங்கள" வர்க்க சதியா!?   

 

இந்த அறிக்கையில் என்ன கூறுகின்றனர். "சுதந்திர தமிழீழம் ஒரு மக்கள் அரசாகத் திகழும். மத சார்பற்ற, சனநாயக சோசலிச அரசாக அமையும். மக்களால் தெரிவு செய்யப்பட்டு, மக்களால் நிர்வகிக்கப்படும் ஆட்சியாக இருக்கும். சகல பிரஜைகளும் சமத்துவத்துடனும், சனநாயக சுதந்திரங்களுடனும் வாழ வகைசெய்யும்" ஆட்சியாக அமையும் என்றவர்கள் புலிகள்;. மேலும் அதில் "சோசலிசப் புரட்சி எனும்பொழுது எமது சமூகத்தில் நிலவும் சகலவிதமான சமூக அநீதிகளும் ஒழிந்து, ஒடுக்குதல்முறைகளும் சுரண்டல்முறைகளும் அகன்ற, ஒரு புதிய புரட்சிகர சமதர்ம சமுதாய நிர்மாணத்தையே குறிக்கின்றோம்" என்றனர். அத்துடன் விட்டார்களா இல்லை, "தமிழீழ சமூக வடிவமானது ஒரு முதிர்ச்சிகண்ட முதலாளித்துவ உற்பத்தி முறையைக் கொண்டிருக்கவில்லை. முதலாளிவர்க்கம் தொழிலாளி வர்க்கம் என்ற பிரதான வர்க்க முரண்பாட்டின் அடிப்படையில் பொருள் உற்பத்தி முறை இயங்கவில்லை. வளரும் முதலாளித்துவ அம்சங்களும், பிரபுத்துவ எச்சசொச்சங்களும், சாதிய தொழில் பிரிவு உறவுகளும் ஒன்று கலந்த ஒரு பொருளாதார அமைப்பானது சமூக அநீதிகள் மலிந்த ஒடுக்கு முறைகளையும் சுரண்டல் முறைகளையும் கொண்டுள்ளது. எமது சமூகத்தில் ஊடுருவியுள்ள சகலவிதமான சமூக ஒடுக்குமுறைகளையும் ஒழித்துக்கட்டி, வர்க்க வேறுபாடற்ற சமதர்ம சமுதாயத்தை கட்டி எழுப்புவதே தமிழீழ விடுதலைப் புலிகளின் இலட்சியமாகும்" என்றனர். இதை நாங்கள் சொல்லவில்லை. புலிகள் தான் சொன்னார்கள். இதையா நீங்கள் முன்வைக்கின்றீர்கள். யார் துரோகி, நீங்கள்தான். உங்கள் அரசியல் திட்டத்தையே மறுக்கின்ற பச்சைத் துரோகிகள் நீங்கள். இப்படி உங்கள் பச்சைத் துரோகத்தை மூடிமறைக்க, மற்றவனை துரோகியாக்கியவர்கள் நீங்கள். தேசியம் என்பது "முதிர்ச்சிகண்ட முதலாளித்துவ"த்தை உருவாக்குவதை, குறைந்தபட்சம் அடிப்படையாக கொண்டது.

 

இப்படியிருக்க உங்கள் பாசிசம் மூலம், எம்மை மறுப்பது அர்த்தமற்றது. ஏன் முரணானது கூட.   தமிழ்தேசியத்தை அழிக்க, வர்க்க கண்ணோட்டத்தை எடுப்பதாக கூறுவதில் எந்த அர்த்தமுமில்லை. உங்களிடம் நேர்மை கூட இல்லை. உங்கள் அரசியல் திட்டத்தில் கூறாத எதையும், நாம் கூறவில்லை. இதைப் புலிகளே மக்களுக்கு மறுத்ததால்தான், புலிகள் தோற்கடிக்கப்பட்டனர். இப்படி போராட்டத்தை தோற்கடித்த, துரோகிகள் தான் நீங்கள்.

 

உங்கள் தலைவர் எழுதியதாக எரிமைலையில் வெளியாகியிருந்த கவிதை வரிகளை, எப்படி நீங்கள் மறுக்கின்றீர்கள் என்பதைப் பாருங்கள் .

 
"....
நாம் செல்லும் இடமெல்லாம்,
எமது எதிரிகள் அஞ்சி ஓடுகிறார்கள்,
மக்களிடம் உள்ள,
பிரதேசம் சாதி,
மதமென்னும் பேய்களும்,
அலறி ஓடுகின்றன,
எமது படையணி விரைகின்றது,…,
எமது தேசத்தை மீட்க,
நாம் செல்லும் இடமெல்லாம்,
காடுகள் கழனிகள் ஆகின்றன,
வெட்டிப் பேச்சு வீரர்கள்,
மிரண்டோடுகின்றனர்..!,
உழைப்போர் முகங்களில்,
உவகை தெரிகிறது,
ஏழைகளின் முகங்களில்,
புன்னகை உதயமாகின்றது."

 

இந்த வரிகள் புலிகளின் நடைமுறைக்குரியதல்ல. இதற்கு எதிர்மறையில் மக்களுக்கு எதிராக பயணித்து, அழிந்தவர்கள் நீங்கள். அதைக்கொண்டு எம்மைத் தாக்குவது அதர்மம்;.  இதைத் தூக்கிகொண்டு பாசிசக் கூத்தாடுவது கேவலமானது. புலிகள் சொன்னது ஒன்று செய்தது ஒன்று. சொல்வது மக்களை ஏமாற்றத்தான். இதை உங்கள் பாசிசத்தின் தத்துவமேதை பாலசிங்கம் அழகாகவே தாம் செய்ததைக் கூறுகின்றார். "ஆயுதப் போராட்டமானது சுயநிர்ணய உரிமைக்கான அரசியல் போராட்டம் என்பதை நியாயப்படுத்துவதற்காகவே, விடுதலைப் புலிகள் தங்களது ஆரம்பகால வரலாற்று வளர்ச்சிக் கட்டத்தில் மார்க்சிய லெனினிச தத்துவங்களை பயன்படுத்தினார்கள்." என்கின்றார். உண்மையும், மக்கள் நலனும், மார்க்சிய லெனினிய தத்துவங்களில் உள்ளது என்பதை ஏற்றுக்கொண்டு, அதை வைத்து மக்களை எமாற்றியதைத்தான் பாலசிங்கம் புட்டு வைக்கின்றார். எவ்வளவு பெரிய துரோகி. இப்படி  இதை மக்களுக்கு மறுத்தவர்கள்தான், இந்தப் பாசிசப் புலிகள். மக்களை ஏமாற்ற, மோசடி செய்த துரோகிகள் தான் இவர்கள். அந்தப் பாசிசத்தின் வாரிசான வேல் தர்மாவோ, வர்க்கத்தின் மேல் காறி உமிழ்கின்றார்.

    

இந்த மோசடியை பற்றி மேலும் பாலசிங்கம் கூறுகின்றார் "சோஷலிச தத்துவம் மட்டில் பல போராளிகளுக்கு உள்ளார்ந்த பற்று இருந்தது. ஆனால் யாரும் மார்க்சிய நிலைப்பாட்டை என்றும் தழுவியதில்லை. மார்க்சிய புரட்சியாளர்கள் என்ற அந்த மாமூல் தோற்றம் கூட இல்லை" என்றார். தத்துவ பற்றும், தோற்றமும் எப்படித்தான் இருக்கமுடியும். அவை பிரபாகரனுக்கு பிடிக்காத ஒரு விடயம். இதை மீறினால் தண்டனை மரணம் வரை உண்டு. அதையும் நாம் கூறத் தேவையில்லை. இப்படி பாசிசமான புலி வரலாறு, மக்களை அழித்துள்ளது. இதைத் தலையில் தூக்கி ஆடுவதால், உலகம் தலைகீழாகி விடிந்துவிடாது.

 

புலிக்கு ஆதரவாக அண்மைக்காலம் வரை இணையத்தில் எழுதிக்கொண்டிருந்த இரண்டு பேரின் கூற்றுக்களை, வேல் தர்மாவின் கூற்றுடன் ஒப்பிட்ட பார்க்க இங்கு தருவது  பொருத்தமானது.   

  

"இட்டாலி வடை" என்ற இணைய எழுத்தாளர் "அரை மொட்டைகளும் அரை வேக்காட்டு அரசும்" என்ற தலைப்பில், 'அடிமைத்தமிழினத்தின் கழுத்தைச் சுற்றிய இரும்புச்சங்கிலியைப் பிடித்து ஆளாளுக்குகாள் இழுத்துக் கொண்டிருக்கின்றார்கள். புலிகளின் வீழ்ச்சிக்குப்பிறகும் சில எடுபிடிகள் நாட்டாமை விளையாட்டை விட்டுவிடுவதாக இல்லை. சில படித்த புலிகளையும் கூட்டிக் கொண்டு புல்லுத் தின்ன வெளிக்கிட்டிருக்கின்றன" என்றவர் "இன்னும் பாசிசப் புலிகள் என்ற பெயரைக்கூட மாற்றிக்கொள்ளும் மனபலமில்லாத இவர்களா ..கோழி கூவ முன்னர் அறுவடையைக் கொண்டு வந்து சேர்க்கப்போகின்றார்கள்." என்று மிகச் சரியாகவே, இதைப் பார்க்க முனைகின்றார்.

 

இதே போல் இன்னமும் தலைவரை வழிபடும் எல்லாளன் என்ற இணைய எழுத்தாளர் "சரணாகதியை முறியடித்தல் புதிய காலகட்டத்தினுள் புகுமுன்பாக…" என்ற தலைப்பில் "விடுதலைப்புலிகளின் தலைமையின் கீழ் நான்காவது ஈழப்போர் ஏற்படுத்திய திருப்புமுனையாக புறப்பட்டிருக்கும் புதிய புலம்பெயர் தலைமுறை ஈழக்காடுகளிலும் மேடுகளிலும் மக்கள் முன்னெடுக்கப்போகும் புதிய போராட்டங்களை உள்வாங்கிக்கொண்டு, ஊமையாகக் கிடக்கும் தமிழகத்தின் போராட்ட சக்திகளுக்கு புதுவடிவம் கொடுத்து, உலகமய போக்கினுக்கு ஏற்றபடி அல்லாமல் அதற்கு எதிர்முகமாக, ஏகாதிபத்திய எதிரி முகாமாக போராட்டத்தைக் கட்டியமைக்க வேண்டும்." என்கின்றார்.

 

இப்படி உண்மைகள், சுயவிமர்சனங்கள், விமர்சனங்கள் இப்படி ஆங்காங்கே எம்முன்னால் வரத்தான் செய்கின்றது. மக்களின் நிலை பற்றிய உண்மையான அக்கறையே, இதற்கு உரைக்கல்லாக அமைகின்றது.

 

மறுதளத்தில் இதற்கு எதிரான பாசிசம், வேல் தர்மா வடிவில் கக்குகின்றது. "இலங்கையின் இனப்பிரச்சனையைப் பற்றி தெரிந்தவர்களுக்கு ஒன்று தெரியும் இலங்கையில் நடந்த சகல இனக் கொலைகளிலும் இனக் கலவரங்களிலும் சிங்களப் பாட்டாளி வர்க்கமும் முதலாளி வர்க்கமும் தமிழர்களை வர்க்க பேதமின்றி தாக்கியது. தனிச் சிங்கள சட்டத்தை இலங்கையில் அறிமுகம் செய்தது தன்னை இடதுசாரி எனக் கூறிய ஒரு அரசுதான். இலங்கை பொது உடமைக் கட்சி இலங்கை சமசமாஜக் கட்சி ஆகியன தந்தை செல்வாவின் இணைப்பாட்சி(சமஷ்டி) கொள்கையை பலமாக எதிர்த்தவர்கள். "பொதுஉடமைவாத" ஆயுதப்புரட்சியில் ஈடுபட்ட ரோகணவிஜயவீர தமது இயக்கத்தில் தமிழர்களை இணைக்கவில்லை. அவரது தோல்விக்கு அடையாளம் காணப்பட்ட ஐந்து காரணங்களில் தமிழர்களை இணைக்காததும் ஒன்று. தமிழர்களின் சுயநிர்ணய உரிமையை அங்கீகரிப்பவர்கள் சிங்கள மக்களால் அரசியல் ரீதியாக ஏற்றுக் கொள்ளப்படுவதில்லை. வாசுதேவ நாணயக்காரவும் கலாநிதி விக்கிரமபாகுவும் இதற்கு நம்முன் உள்ள நல்ல உதாரணங்கள்." ஆகவே நாங்கள் சிங்கள மக்களுடன் சேரமுடியாது என்பதில் உள்ள, இந்த தர்க்கத்தின் அரசியல் சாரம் என்ன? குறுந்தேசியம் விதைக்கும், தமிழ்ப் பாசிசம். இடதுசாரிய செயலை மறுக்கு வலதுசாரிய வக்கிரம். சிங்கள பாட்டாளி வர்க்கம் இருக்கட்டும், தமிழ் பாட்டாளி வர்க்கத்தை சார்ந்து நின்று போராட மறுக்கின்ற வலதுசாரிய பாசிசம் இங்கு கொப்பளிக்கின்றது.

 

இங்கு நீங்கள் காட்டிய இடதுசாரியம், சிங்கள பாட்டாளி வர்க்கத்தை வர்க்கப் போராட்டத்துக்காக அணிதிரட்டியதா!? இல்லை. அது பின்னர் எப்படி தமிழ் மக்களை பாதுகாக்கும்;.  இந்த அடிப்படையான அறிவின்றி, இடதுசாரியம் மீதும், பாட்டாளி வர்க்கம் மீது கக்கும் வலதுசாரிய பாசிசம் இங்கு கொப்பளிக்கின்றது. இங்கு "சிங்களப் பாட்டாளி வர்க்கமும் முதலாளி வர்க்கமும் தமிழர்களை வர்க்க பேதமின்றி தாக்கியது" என்பது வேடிக்கையான, அடிப்படை அறிவற்ற விவாதம். இது யாழ் முஸ்லீம் மக்களை, தமிழ்மக்கள் அனைவரும் சேர்ந்து அடித்து துரத்தியதாக கூறும் அரசியல் எல்லைக்கு இட்டுச்செல்லும். புலிகள் செய்ததை தமிழ் மக்கள் செய்வதாக கூறுவதும், சிங்கள இனவாதிகள் செய்ததை சிங்கள மக்கள் செய்வதாக கூறுவதும், முஸ்லீம் மத அடிப்படைவாதிகள் செய்யும் காட்டுமிராண்டித்தனத்தை முஸ்லீம் மக்கள் செய்தாக கூறுவதற்கு ஒப்பானது. இப்படி பாசிச புலியைப் பாதுகாக்கும் வலதுசாரிய தர்க்கம், தமிழ் தேசியமல்ல.  

    

"விடுதலைப் புலிகளின் எதிரிகள் சந்தர்ப்பம் கிடைக்கும் போதெல்லாம் இலண்டன் தமிழர்களைத் தாக்குவதில் மிகுந்த மகிழ்ச்சியடைந்து கொள்வர். இவர்கள் பொதுஉடமைவாதிகளாகத் தம்மைக் காட்டிக் கொண்டு இலண்டன் தமிழர்கள் இலங்கைப் பிரச்சனையை வர்க்கரீதியல் அணுகாத பிற்போக்கு வாதிகள் அரசியல் அறிவற்றவர்கள் என்று கூறிவருகின்றனர். அத்துடன் நின்று விடுவதில்லை இன்றைய தமிழர்களின் அவல நிலைக்கு புலம் பெயர் தமிழர்கள் புலிப் பாசிச வாதிகளுக்கு வழங்கிய ஆதரவு தான் காரணம் என்றும் குற்றம் சாட்டி மகிழ்கின்றனர்" தமிழ்மக்களின் பெயரில் பிழைக்கும், படித்த லண்டன் புல்லுருவிகள் என்ன, தமிழ்மக்களின் கொம்பா? புலிப் பாசிசத்தைப் பயன்படுத்தி, மக்களையே தின்றவர்கள் தான் இந்த லண்டன் புல்லுருவிகள். வர்க்கப் போராட்டத்தை மறுத்த வர்க்க வலதுசாரியம், தன்னை நியாயப்படுத்துகின்றது. எப்படி "இலங்கையில் தமிழர்களின் ஆயுத போராட்டம் தமிழ்நாடு வாழ் தமிழர்களினதும் புலம் பெயர்ந்து வாழும் தமிழர்களினதும் ஆதரவின்றிச் சாத்தியப்பட்டிருக்காது" என்று கூறி கதவுக்கு பின்னால் ஒளிக்கின்றது. சரி இந்தப் போராட்டம் சாதித்தது எதை!? அதைச் சொல்லுங்கள். தமிழினத்தின் அழிவைத் தவிர, வேறு எதையும் அது சாதிக்கவில்லை. அந்த மனித அவலத்தைத்தான், இன்று நாம் பார்க்கின்றோம். வர்க்கத்தை மறுத்து அதை ஒடுக்கிய உங்கள் தேசியம், இன்று மனிதனின் உணர்வுகளைக் கூட நலமடித்துள்ளது.

 

ஆனால் லண்டன் புல்லுருவிகள் போல், சிலர் இதன் மூலம் கொழுத்துள்ளனர். மக்களின் பெயரில் உழையாது சுரண்டி வாழ்ந்த சிறு கூட்டத்துக்கு, இந்த புலித் தமிழ் தேசியம் சோறு போட்டுள்ளது. அதைத் தொடரும் கனவே தான், வர்க்கங்களின் அணி சேர்க்கையைக் கண்டு கொதித்தெழுகின்றது. இதுவோ, ஒடுக்கப்பட்ட தமிழ்மக்களின் ஒரு வர்க்கப் போராட்டம்.

 

பி.இரயாகரன்
21.06.2009