ஐயா பழ.நெடுமாறன் புலிகள் இயக்கத்தின் ஆலோசகர். புலம் பெயர் தமிழர்கள் பலரின் மதிப்புக்கு உரியவர். ஈழத்தமிழர்க்காகவே தன் வாழ்வை அர்ப்பணித்துக் கொண்டவர் எனப் போற்றப்படுபவர்.

 

நேற்றைய தினமணி நாளிதழில் “தோற்றது இந்தியாவின் ராஜதந்திரம்தான்’ என்ற தலைப்பில் ஒரு நீண்ட கட்டுரை எழுதியிருக்கிறார் நெடுமாறன். “இலங்கைப் போரில் புலிகள் தோற்றார்களா இல்லையா என்ற கேள்விக்குரிய விடையை விட இந்தியாவின் ராஜதந்திரம் வெற்றி பெற்றதா இல்லையா என்ற கேள்விக்குரிய விடையை அறிவதுதான் முக்கியமானதாகும்” என்று தொடங்குகிறது அவரது கட்டுரை.

 

nedu_a-copy

 

"Loyal than the king” – ராஜ விசுவாசத்தில் மன்ன்னையே விஞ்சியவர்கள் எனப்படுவோர் எப்படி இருப்பார்கள் என்று புரிந்து கொள்ள முடியாதவர்கள் ஐயாவின் கட்டுரையைப் படித்துப் புரிந்து கொள்ளலாம்.

 

இந்திய அரசு ராஜபக்சேவுக்குத் துணை நின்றதற்கு எம்.கே.நாராயணன், மேனன், நம்பியார் போன்ற மலையாளிகளின் தமிழர் விரோத உணர்வுதான் காரணம் என்று நமக்குத் தெளிவு படுத்தியிருந்தார்கள் தமிழ் தேசியவாதிகள். மேற்படி மலையாளிகள் போதுமான அளவுக்கு இந்திய மேலாதிக்க உணர்வு இல்லாதவர்கள் என்பதும், நெடுமாறன் அளவுக்கு ‘நுண்மான் நுழைபுலமும் அறிவாற்றலும்’ இல்லாத கபோதிகள் என்பதும் அவரது கட்டுரையைப் படித்த பின்னர்தான் நமக்கு வெளிச்சமாகிறது.

 

நேற்றுவரை தொப்பூள்கொடி உறவு, தமிழ்ச் சொந்தங்கள் என்று கூறி ஈழத்தமிழரை ஆதரிக்குமாறு தமிழக மக்களிடம் கூறி வந்த ஐயா நெடுமாறனின் இரத்த நாளங்களுக்குள் கொதித்துக் கொண்டிருக்கும் இந்திய மேலாதிக்க கொலஸ்ட்ராலின் அளவை இந்தக் கட்டுரை துல்லியமாக எடுத்துக் காட்டுகிறது.

 

தமிழ் உணர்வைத் தூக்கிக் கடாசிவிட்டு, சிங்கள அரசால் ஏமாற்றப்பட்டு விட்ட இந்திய மேலாதிக்கவாதியின் உணர்விலிருந்து, அதாவது பார்ப்பன தேசிய உணர்விலிருந்து அல்லது ஆரிய உணர்விலிருந்து சிந்திக்குமாறு இந்திய தேசபக்தர்களுக்கு அறைகூவல் விடுக்கிறார் நெடுமாறன். அந்தக் கட்டுரையின் சாரமான பகுதிகளை மட்டும் கீழே தருகிறோம்:

 

“…ஆனால் இலங்கைப் போரில் புலிகள் தோற்றார்களா இல்லையா என்ற கேள்விக்குரிய விடையை விட இந்தியாவின் ராஜதந்திரம் வெற்றி பெற்றதா இல்லையா என்ற கேள்விக்குரிய விடையை அறிவதுதான் முக்கியமானதாகும். 1980-களில் தொடங்கி இன்று வரை இலங்கையில் தங்களது மேலாதிக்கத்தை நிலைநிறுத்திக் கொள்ளவும் இந்துமாக்கடலின் முக்கியக் கடல், வான் பாதைகளைத் தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டுவரவும் அமெரிக்கா, சீனா, இந்தியா ஆகிய நாடுகளுக்கு இடையே நடைபெற்று வந்த ஆதிக்கப் போட்டியில் இந்தியா படுதோல்வி அடைந்துள்ளது.”

“1977-ம் ஆண்டு ஜயவர்த்தனவின் ஐக்கிய தேசியக் கட்சி இலங்கையின் ஆட்சிப் பொறுப்புக்கு வந்தபோது இந்தியாவின் மேலாதிக்கத்தில் இருந்து விடுபட விரும்பியது. அதற்கு ஒரே வழி அமெரிக்கா மற்றும் மேற்கு நாடுகளுடன் உள்ள உறவுகளை வலுப்படுத்துவதேயாகும் எனத் திட்டமிட்டு செயல்பட்டது….”

“…இலங்கையில் மேற்கு நாடுகளின் ஆதிக்கம் வளர்ந்தோங்கிய நிலையில் இந்திய அரசின் கருத்துகள் எதற்கும் சிங்கள அரசு மதிப்புக் கொடுக்கவில்லை. எனவே அதற்கு எதிராக சிங்கள அரசை மிரட்டுவதற்காக பிரதமர் ராஜீவ்காந்தி காலத்தில் அதாவது 1987-ம் ஆண்டு ஜூன் மாதம் 4-ம் தேதி இந்திய ராணுவ விமானங்கள் முற்றுகைக்கு ஆளாகியிருந்த யாழ்ப்பாணத்தின் மீது பறந்து சென்று உணவுப் பொதிகளை வீசின. இதைக் கண்டு சிங்கள அரசு அச்சம் அடைந்தது. 1987-ம் ஆண்டு ஜூலை 27-ம் தேதி இந்திய இலங்கை உடன்பாட்டில் கையெழுத்து இட்டாக வேண்டிய நெருக்கடி ஜயவர்த்தனவுக்கு ஏற்பட்டது…”

“…இந்திய அரசு அவரை மிரட்டியபோது மேற்கத்திய நாடுகள் ஒன்றுகூட அவருக்கு உதவ முன்வரவில்லை. சின்னஞ்சிறிய இலங்கைக்காகத் தங்கள் பொருள்களின் விற்பனைக்கான மிகப் பெரிய சந்தை நாடான இந்தியாவுடன் முரண்பட மேற்கு நாடுகள் தயாராகவில்லை என்பதே உண்மையாகும்…”

“…இலங்கையில் சீனாவின் ஆயுதக்கிடங்கு அமைவது என்பது இந்தியாவுக்கு மட்டுமல்ல, தென் ஆசியப் பகுதிக்கே ஆபத்தானதாகும். இப்பகுதியில் உள்ள நாடுகளுக்குத் தேவைப்படும் போது உடனுக்குடன் ஆயுத உதவிகளைச் சீனா செய்யமுடியும்….”

“….இதன்மூலம் சேதுக்கால்வாயில் செல்லும் அனைத்து நாட்டு சரக்குக் கப்பல்கள் மற்றும் இந்தியக் கடற்படைக்குச் சொந்தமான கப்பல் ஆகியவற்றை சீனா தொடர்ந்து கண்காணிக்க முடியும். 1974 ஜூலை 8-ம் தேதி இந்திரா காந்தி காலத்தில் செய்து கொள்ளப்பட்ட இந்திய இலங்கை உடன்பாட்டின்படி இந்தத் துரப்பணப்பணியை இந்தியாவும் இலங்கையும் கூட்டாக மேற்கொள்ளவேண்டும். ஆனால் அந்த உடன்பாட்டை மீறும் வகையில் இந்தப் பணி சீனாவிடம் ஒப்படைக்கப்பட்டது….”

“…சீனாவுடனும் அதன் கூட்டாளிகளுடனும் கூட்டு வைத்துக் கொள்வதன் மூலம் மட்டுமே புலிகளுக்கு எதிரான ராணுவ வெற்றிகளை அடைய முடியும் என இலங்கையை உணரச் செய்வதே சீன அரசின் நோக்கம் என்பதையும் அந்த நோக்கத்தில் அது வெற்றி பெற்றுவிட்டது என்பதையும் இந்தியா உணரவே இல்லை…”

“… பாகிஸ்தானுடன் சீனா கொண்டுள்ள நெருக்கமான உறவு கூட இந்தியாவுக்கு பெரும் அபாயமாக விளங்குகிறது. அதே அளவுக்கு இப்போது உருவாகியிருக்கும் இலங்கை சீன உறவு எதிர்காலத்தில் தென்னிந்தியாவிற்குப் பெரும் சவாலாக விளங்கும் என்பதில் ஐயம் இல்லை…”

“… இலங்கையரசுக்கு சீன அரசு ராணுவ ரீதியில் உதவி வருவது எதிர்காலத்தில் வணிக நலன்களை கருதி அல்ல. இந்தியா அமெரிக்காவுடன் கொண்டுள்ள கூட்டணியின் விளைவாக இந்துமாக்கடல் பகுதியிலும் அதனைச் சுற்றியுள்ள நாடுகளிலும் தான் தனிமைப்பட்டுவிடக்கூடாது எனக் கருதுவதனாலேயேயாகும். ராணுவம் மற்றும் பொருளாதார ரீதியில் இப்பகுதியில் உள்ள இலங்கை, நேபாளம், வங்கதேசம், மியான்மர், மலேசியா ஆகிய நாடுகளுடன் மிக நெருக்கமான உறவை சீனா வளர்த்து வருகிறது. ஏற்கனவே பாகிஸ்தான், ஈரான் ஆகியவை சீனாவின் கூட்டாளிகளாகிவிட்டன…”

“…இலங்கையின் இந்தப் போக்கினை கண்ட இந்தியக் கடற்படையின் முன்னாள் தளபதியான ரவி கவுல் என்பவர் இந்துமாக்கடலும் இந்தியாவின் முக்கியத்துவம் வாய்ந்த நிலையும்என்னும் தலைப்பில் எழுதியுள்ள நூலில் பின்வருமாறு கூறியுள்ளார். பிரிட்டன் பாதுகாப்புக்கு அயர்லாந்து எவ்வளவு முக்கியமானதோ, சீனாவின் பாதுபாப்புக்கு தைவான் எவ்வளவு இன்றையமையாததோ அதைப்போல இந்தியாவின் பாதுகாப்புக்கு இலங்கை மிக முக்கியமானதாகும். இந்தியாவின் நட்பு நாடாக அல்லது நடுநிலை நாடாக இலங்கை இருக்கும் வரை இந்தியா கவலைப்பட வேண்டியதில்லை. ஆனால் இந்தியாவுக்கு எதிரான நாடுகளின் வசத்தில் இலங்கை சிக்குமானால் அந்த நிலைமையை இந்தியா ஒருபோதும் சகித்துக் கொள்ளமுடியாது. ஏனென்றால் இந்தியாவின் பாதுபாப்புக்கு அதனால் அபாயம் நேரிடும்.‘ “

“அமெரிக்காவுடன் இந்தியா செய்த கொண்ட அணுசக்தி உடன்பாட்டின் விளைவாக விரிவடையப்போகும் இந்தியாவின் பிராந்திய ஆதிக்க வலிமையானது எதிர்காலத்தில் தனக்கு பெரும் அச்சுறுத்தலாக மாறும் என்ற கலக்கம் சீனாவுக்கு உள்ளது. இந்தியாவில் ராணுவ, பொருளாதார முக்கியத்துவம் மிக்க பகுதியாக மாறிவரும் தென்னிந்தியாவின் பாதுபாப்பினை உறுதி செய்வதற்கு இலங்கை தனது முழுமையான கட்டுபாட்டிற்குள் வரவேண்டும் என்பது இந்தியாவின் அவசியத் தேவை என்பதை சீனா புரிந்து கொண்டுள்ளது.”

” இலங்கையில் தமிழர் பகுதிகளை சிங்கள ராணுவம் தனது ஆதிக்கத்தின் கீழ் கொண்டுவருவதற்கும், விடுதலைப் புலிகளை ஓரங்கட்டுவதற்கும், தான் அளித்த உதவியினால் எதிர்காலத்தில் இலங்கை தனது கட்டுப்பாட்டிற்கு உட்பட்ட ஒரு நாடாக இருக்கும் என இந்தியா கருதியது குறுகிய காலத்திலேயே பகற்கனவாய் போய்விட்டது. தனது நோக்கம் நிறைவேறியவுடன் இந்தியாவைத் தூக்கியெறிய இலங்கை தயங்கவில்லை. இந்தியாவின் தயவு இனி இலங்கைக்குத் தேவையில்லை…” இதுதான் அய்யா நெடுமாறனின் கட்டுரை சாரம்சம்.

ஒரு பெரிய நாடு, தனது சிறிய அண்டை நாட்டை ஆதிக்கம் செய்வது நியாயம். சிறிய நாடு அதற்கு அடங்கி நடப்பதுதான் தருமம். நாடுகளுக்கு இடையிலான சமத்துவம், சுதந்திரம் என்றெல்லாம் ஒரு சிறிய நாடு பேச முடியாது. பேசக்கூடாது என்பதே நெடுமாறனின் கருத்து. “ஈழத்தமிழர்களை ஆதரித்திருந்தால், இந்தியாவின் விசுவாசமிக்க அடிமைகளாக தமிழர்கள் இருந்திருப்பார்கள். இப்படி சிங்களனை நம்பிக்கெட்டாயே பாரதமே” என்று புலம்பியிருக்கிறார் நெடுமாறன்.

 

இலங்கை அரசு ஈழத்தமிழர்களை ஒடுக்குகிறது என்ற காரணத்தினால்தான் இலங்கையின் மீதான இந்திய மேலாதிக்கத்தை அவர் நியாயப்படுத்துகிறார் என்று யாரும் கருதிக் கொள்ளவேண்டாம். இலங்கை அரசுக்கும், அதற்கு துணைநின்ற பாகிஸ்தான் அரசுக்கும் மட்டும் இந்த நியாயத்தை நெடுமாறன் கூறவில்லை. தமிழர்களை எந்த விதத்திலும் ஒடுக்காத, நேபாளம், பூடான், வங்கதேசம் உள்ளிட்ட எல்லா தெற்காசிய நாடுகளும் இயற்கையிலேயே இந்திய மேலாதிக்கத்துக்கு அடிமையாக இருக்க கடமைப்பட்டவர்கள் என்கிறார் நெடுமாறன். யாரிடம் ஆயுதம் வாங்குவது, எந்த நாட்டு முதலாளிகளை தொழில் தொடங்க அனுமதிப்பது, எந்த நாட்டுடன் நட்புறவு கொள்வது என்று தீர்மானிக்கும் உரிமை சிறிய நாடுகளுக்கு இருக்க முடியாது என்ற மேலாதிக்க நீதியை நிலைநாட்டுவதற்கு ரவி கவுல் எனும் இந்திய கடற்படை அதிகாரியையும் மேற்கோள் காட்டுகிறார்.

 

மேலாதிக்கம் என்பது என்ன? அதனால் ஆதாயம் அடைபவர்கள் யார்? இந்திய மேலாதிக்கம் என்பது இந்திய மக்களுக்கோ, இந்திய அரசால் ஒடுக்கப்படும் தெற்காசிய நாடுகளின் மக்களுக்ககோ என்ன நன்மையைச் செய்யும்? இந்தக் கேள்விகளுக்கெல்லாம் பிரணாப் முகர்ஜியோ சிவசங்கர் மேனனோ எப்போதுமே பதில் சொல்வதில்லை. அரூபமான இராணுவ அபாயங்களைக் காரணம் காட்டுவதன் மூலம் மேலாதிக்கத்தை அவர்கள் நியாயப்படுத்துக்கிறார்கள். அதையேதான் நெடுமாறனும் செய்கிறார்.

 

டாடா, பிர்லா, அம்பானி, இந்துஜா, மிட்டல் போன்ற எந்த இந்தியத் தரகு முதலாளிகளுக்காக இந்திய மக்களை இந்திய அரசு ஒடுக்குகிறதோ, அதே முதலாளிகளின் லாப வேட்டைக்கு சிறிய நாடுகளையும் உட்படுத்துவதுதான் மேலாதிக்கத்தின் நோக்கம். எளிமையாகச் சொன்னால், வங்கதேசத்தின் சணல் ஆலைகளை இந்தியத் தரகு முதலாளிகள் கைப்பற்றிக் கொண்டதும், நேபாளத்தின் மின் நிலையங்களையும், ஆற்றுநீரையும், தொழில்களையும் இந்தியா கட்டுப்படுத்துவதும்தான் மேலாதிக்கத்தின் நோக்கம். இதனைப் பாதுகாக்கும் நோக்கத்தை மறைப்பதற்குத்தான் பாதுகாப்பு அபாயம் என்ற புருடாக்கள். வாஜ்பாயியும் முஷாரப்பும் நடத்திய எக்ஸிபிஷன் மாட்ச் ஆன கார்கில் போரின் போது, இரண்டு பக்கமும் நூற்றுக்கணக்கான சிப்பாய்கள் கொல்லப்பட்டனர். ஆனால் குஜராத்தில் பாக் எல்லையில் இருக்கின்ற, 25,000 கோடி மதிப்பிலான அம்பானியின் எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையின் மீது மட்டும் பாகிஸ்தான் ஒரு கல்லைக் கூட எறியவில்லை.

 

இராக்கின் மீது அமெரிக்கா படையெடுத்தது, ஜனநாயகத்தை நிலைநாட்டுவதற்கா, குர்து மக்களுக்கு இன உரிமை வாங்கித்தருவதற்கா? இராக்கின் எண்ணெய் வயல்களை அமெரிக்க கம்பெனிகள் அபகரித்துக் கொள்வதற்குத்தான் அந்தப் போர் என்பது பாமரனும் அறிந்த உண்மை. சிறிய நாட்டின் மக்களுக்குச் சொந்தமான தொழில்களையும், இயற்கை வளங்களையும் பெரிய நாடு ஆக்கிரமித்துக் கொள்வதும், ஆதிக்கம் செய்வதும் நியாயம்தான் என்பதே நெடுமாறனின் வாதம். எனவேதான் இந்தியாவின் புவிசார் நலன்கள் என்றெல்லாம் சுற்றி வளைக்காமல், இந்திய மேலாதிக்கம் என்று பச்சையாகச் சொல்லியே அதனை ஆதரிக்கிறார். நெடுமாறன் முதலான தமிழ்த் தேசியவாதிகளும், தமிழக ஓட்டுக் கட்சிகளும் இந்திய மேலாதிக்கத்தை ஆதரிக்கும் மனோபாவத்தை ஈழத்தமிழ் மக்களுக்கும் ஏற்படுத்தியிருக்கிறார்கள். “நேபாளத்தை ஒடுக்குகிறாயா ஒடுக்கு, வங்கதேசத்தை சுரண்டுகிறாயா சுரண்டு, சிங்கள ஆதிக்கத்திலிருந்து விடுபடுவதற்கு எங்களுக்கு மட்டும் உதவி செய்” என்று கேட்கும் அநீதிக்கும் அடிமைத்தனத்திற்கும் அவர்களைப் பழக்கியிருக்கிறார்கள்.

 

நெடுமாறன் கூறுகின்ற நியாயப்படி தனது பாதுகாப்புக்கு கியூபாவும், வெனிசூலாவும் அச்சுறுத்தலாக இருக்கின்றன என்ற அமெரிக்காவின் கவலையும், அதன் அடிப்படையில் அந்த நாடுகளில் அமெரிக்கா நடத்தும் ஆட்சிக்கவிழ்ப்பு முயற்சிகளும் நியாயமானவை. பிரிட்டிஷ் ஏகாதிபத்தியம் அயர்லாந்தை ஒடுக்கியதும் நியாயம். தற்போது நேபாளத்தில் இந்தியா நடத்தியிருக்கும் ஆட்சிக்கவிழ்ப்பும், வங்கதேசத்திலும், மாலத்தீவிலும் நடத்திய தலையீடுகளும், சிக்கிமை இணைத்துக் கொண்டதும் நியாயமே.

 

ஒரு சிறிய நாடு, பெரிய அண்டை நாட்டுடன் சம உரிமை கோர முடியாது. பெரிய நாடு என்பது ண்டை நாடல்ல, ண்டை நாடு என்று வலியுறுத்துகிறார் நெடுமாறன். இதே நியாயத்தைத் தான் ராஜபக்சேவும், ஜாதிய ஹெல உறுமயவும் தமிழர்களிடம் கூறுகிறார்கள். பெரிய இனத்துடன் சிறிய இனம் எப்படி சம உரிமை கோர முடியும் என்பதுதானே அவர்களது கேள்வி. அவர்கள் மட்டுமா? பெரும்பான்மை இந்துக்களுடன சிறுபான்மை முஸ்லீம்கள் எப்படி சம உரிமை கோர முடியும் என்று கேட்கிறார் மோடி. பெரும்பான்மை சாதி இந்துக்களுக்கு சிறுபான்மை தலித் எப்படி ஊராட்சித் தலைவராக வரமுடியும் என்று கூறித்தான் மேலவளவு முருகேசனை வெட்டினார்கள் தேவர் சாதி வெறியர்கள். “இந்திய மேலாதிக்கம் ஏமாந்துவிட்டதே” என்று பதறித்துடிக்கும் ஐயா நெடுமாறனின் உணர்வும், “சாதி ஆதிக்கம் சரிந்து விட்டதே” என்று குமுறும் ஆதிக்க சாதி ஆண்டையின் உணர்வும் எந்தவகையில் வேறுபட்டவை என்பதை தமிழ் உணர்வாளர்கள்தான் விளக்க வேண்டும்.

 

ஒருவேளை, நெடுமாறனின் ஆதரவு பெற்ற புரட்சித்தலைவி 40 தொகுதியிலும் வென்று தமிழ் ஈழத்தையும் வாங்கிக் கொடுத்திருந்தால் அதன்பின் இலங்கையில் என்ன நடக்ககக் கூடும்? ஈழத்தமிழர்கள் இந்தியாவின் அடிமைகளாகி இருப்பார்கள். சீனாவின் அடிமைகளாக சிங்களர்கள். அதன்பின் சீனாவுக்கும் இந்தியாவுக்கும் நடக்கக் கூடிய பதிலிப்போரில், இந்திய மேலாதிக்கத்தைக் காப்பாற்றும் பொருட்டு, சீனக்கைக்கூலி சிங்கள அரசுக்கு எதிராக, ஈழத்தமிழ் அடிமைகள் இலங்கையில் உள்நாட்டு யுத்தம் நடத்தி தங்களைக் காவு கொடுத்துக் கொண்டிருப்பார்கள்.

 

வேறுவிதமாகச் சொன்னால், இன்று கருணாநிதி செய்த அதே வேலையை செய்யும் “அதிகாரம்’ பிரபாகரனுக்கு வழங்கப்பட்டிருக்கும். தமிழ் ஈழம் யாரிடம் ஆயுதம் வாங்குவது, தமிழ் ஈழத்தில் யார் ரோடு போடுவது, கடை போடுவது என்பனவற்றைத் தீர்மானிக்கும் அதிகாரம் டாடா, பிர்லா, அம்பானிக்குக் கிடைத்திருக்கும். “அத்தகைய பொன்னான வாய்ப்பை கெடுத்து விட்டாயே நாராயணா” என்று தலையிலடித்துக் கொள்கிறார் நெடுமாறன்.

 

முன்னர் சீனப்போரைக் காரணம் காட்டி திராவிட நாட்டை மூட்டை கட்டினார் அண்ணா. இன்று அதே சீனாவைக் காரணம் காட்டி ஈழத்தில் தனிநாடு வாங்கித்தரச் சொல்கிறார் நெடுமாறன். “திராவிடத்தால் வீழ்ந்தோம்! – திரவிட, திரமில, தமில, தமிழ – எனவே தனித் தமிழ்நாடுதான்” என்றெல்லாம் முழங்கி, 45 ஆண்டுகளுக்குப் பிறகு கடைசியாக சுற்றி வந்து சேர்ந்திருக்கும் இடம் சீரங்கம். எங்க சுத்தியும் ரெங்கனைச் சேவி! எல்லாம் பேசிவிட்டு கடைசியில் “சீன அபாயத்திலிருந்து பாரதத்தைக் காப்பாற்றும் விபீஷணாழ்வார்கள் ஈழத்தமிழர்கள்தான்” என்று பகவான் நாராயணனுக்கு அவதார ரகசியத்தைப் புரிய வைக்கிறார் நெடுமாற முனிவர்.

 

அமெரிக்க-இந்திய அணுசக்தி உடன்பாட்டின் விளைவாக விரிவடையப்போகும் இந்தியாவின் பிராந்திய ஆதிக்க வலிமை தனக்கு அச்சுறுத்தலாக மாறும் என்பதாலும், இந்து மாக்கடல் பகுதியில் தான் தனிமைப்பட்டுவிடக் கூடாது என்பதனாலும்தான் சீனா இலங்கை அரசுக்கு உதவுகிறது என்கிறார் நெடுமாறன்.

 

இந்து மாக்கடல் பகுதியில் அமெரிக்காவுக்கு என்ன வேலை என்ற கேள்வி மட்டும் அவருக்கு எழும்பவேயில்லை. தெற்காசியாவில் மேலாதிக்கம் செய்ய இயற்கையாகவே இந்தியா பெற்றுள்ள உரிமையை அங்கீகரிக்கும் அவருடைய ஆதிக்க சிந்தனை, உலகை மேலாதிக்கம் செய்வதற்கு இயற்கையாகவே அமெரிக்கா பெற்றுள்ள உரிமையையும் அங்கீகரிக்கத் தானே செய்யும்? புரியும்படி சொல்லவேண்டுமானால், தலித் மக்கள் மீது ஆதிக்கம் செய்வதைத் தங்களது பிறப்புரிமையாகக் கருத்தும் சாதி இந்துக்கள், பார்ப்பன மேலாண்மையை இயற்கையாகவே அங்கீகரிப்பது போலத்தான் இதுவும்.

 

சீனாவையும் ரசியாவையும், அந்நாடுகளின் கடல்வழிப் பாதைகளையும் உலக அளவில் முற்றுகையிட்டு வருகிறது அமெரிக்கா. அமெரிக்காவின் உலகப் போர்த்தந்திர வியூகத்தில் தெற்காசியாவின் அடியாளாக இந்தியா நியமிக்கப் பட்டிருக்கிறது. இந்திய அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தம், இராணுவ ஒப்பந்தம் ஆகியவற்றின் நோக்கம் அதுதான். இதற்கு சீனா வகுத்திருக்கும் எதிர் வியூகம் இந்தியாவைச் சுற்றி வளைப்பது. சிங்கள இனவெறி அரசை ஆதரிப்பது மட்டுமல்ல,  பர்மாவின் இராணுவ ஆட்சியையும் சீனா ஆதரிக்கிறது. பிலிப்பைன்சில் உள்ள அமெரிக்க இராணுவ தளத்தின் மூலம் மலாக்கா நீரிணையை அமெரிக்கா கட்டுப்படுத்துவதால், அதற்கு மாற்றாக சீனாவிலிருந்து பர்மாவுக்கு 1300 கி.மீ நீள எண்ணெய் குழாயும் அமைக்கிறது. மேலை நாடுகளோ பர்மாவில் ஆங் சாங் சுயியை ஆதரிக்கின்றன.

 

இதுதான் ஆட்டம். அமெரிக்காவின் தற்போதைய உலக மேலாதிக்கத் திட்டம், அதற்குப் போட்டியாக சீனாவும் ரசியாவும் இணைந்து 2005 இல் உருவாக்கிய ஷாங்காய் கூட்டுறவு அமைப்பு, அதில் சேருமாறு ரசியாவும் சீனாவும் இந்தியாவை அழைத்த மறுகணமே நடைபெற்ற கண்டலிசா ரைஸின் டெல்லி விஜயம், அமெரிக்க இந்திய அணுசக்தி- இராணுவ ஒப்பந்தங்கள், அதன் தொடர்ச்சியாக ஜப்பானுடன் இணைந்து சீனக்கடற் பகுதியில் இந்திய கடற்படை நடத்திய கூட்டுப்பயிற்சி, தற்போது டாலர் மேலாதிக்கத்தை அசைக்க சீனாவும் ரசியாவும் மேற்கொள்ளும் முயற்சிகள்.. இவை பற்றி விரிவாக எழுதுவதற்கு இது இடமல்ல. ஆனால் சீனாவையும், இந்தியாவையும், பாகிஸ்தானையும், ரசியாவையும், கியூபாவையும், வெனிசூலாவையும் ராஜபக்சேவுக்கு ஆதரவாக அணிவகுக்கச் செய்த காரணிகளில் முக்கியமானவை இவை.

 

ஒரு இனப்படுகொலைக்குத் துணை நின்ற குற்றத்துக்காக  சீனாவையும் பாகிஸ்தானையும் நாம் கண்டிப்பதென்பது வேறு. இந்திய மேலாதிக்க நலனை நிலைநாட்டும் பொருட்டு சீனத்தை கண்டிப்பது என்பது வேறு. நெடுமாறனோ, இந்திய மேலாதிக்கத்தின் ராஜதந்திரம் தோற்றுவிட்டதற்காகக் கண்ணீர் விடுகிறார்.

 

சீனாவுக்கும் பாகிஸ்தானுக்கும் எதிராக நெடுமாறன் தமிழில் எழுதியிருக்கும் இந்தக் கருத்துகளை, இந்தியில் மொழிபெயர்த்தால் உடனே அதன் கீழே கையெழுத்துப் போட்டு தன்னுடைய சொந்த அறிக்கையாகவே வெளியிட்டுவிடுவார் அத்வானி. இதே கருத்துகளை அத்வானி இந்தியில் சொன்னால் அதன் பெயர் பார்ப்பன இந்து தேசியம். அதையே நெடுமாறன் தமிழில் சொல்லும்போது அதற்குப் பெயர் தமிழ்த் தேசியம்.

 

நெடுமாறனிடம் இயல்பாக வெளிப்படும் பாகிஸ்தான் எதிர்ப்பு உணர்வை நம்மால் புரிந்து கொள்ள முடிகிறது. எனினும் ஒரு ராஜதந்திர ஆலோசகர் என்ற முறையில் சூழ்நிலையையும் அவர் புரிந்து கொள்ளவேண்டும். பாகிஸ்தான் எதிர்ப்பு தேசபக்தி சவடால்களை கொஞ்சகாலத்துக்கு நிறுத்தி வைக்குமாறும், பாகிஸ்தான் எல்லையிலிருந்து இந்தியத் துருப்புகளை வாபஸ் பெறுமாறும் ஒபாமா மன்மோகனுக்கு உத்தரவிட்டு, இந்தியப் படையையும் வாபஸ் வாங்கியாகிவிட்டது. இதுபற்றி அத்வானி கூட சவுண்டு கிளப்பவில்லை என்பதை நெடுமாறன் கவனிக்கவேண்டும். அமெரிக்க ஆசியுடன் பாகிஸ்தானால் உருவாக்கப்பட்ட தலிபானை ஒழிப்பதற்கான போரில் பாகிஸ்தானே இப்போது ஈடுபட்டிருக்கிறது – புலிகளை ஒழிப்பதற்கு இந்தியாவே போரில் ஈடுபட்டதைப் போல. தலிபானை முடித்த பின் சீனாவுக்கு எதிராக இந்தியாவையும் பாகிஸ்தானையும் “பாய்.. பாய்” சொல்லவைப்பது அமெரிக்காவின் திட்டம்.

 

“எனவே சீன எதிர்ப்பு இந்திய தேசியம்தான்” அமெரிக்காவின் இப்போதைய திட்டமாகத் தெரிகிறது. பாகிஸ்தான் எல்லையிலிருந்து ராணுவத்தை வாபஸ் வாங்கிய மன்மோகன் அரசு, படையை சீன எல்லைக்கு அனுப்பியிருக்கிறது. எனவே “இலங்கையின் மூலம் தென்னிந்தியாவுக்கு சீன அபாயம்” என்று நெடுமாறன் ஊதியிருக்கும் ‘தமிழ்ச்சங்கு’ டெல்லியின் காதில் விழுவதற்கு வாய்ப்பிருக்கிறது.

 

யார் கண்டது? “ரவிசங்கர் கொடுத்த சி.டியைப் பார்த்தேன். தமிழ் ஈழம்தான் தீர்வு” என்று ஜெயலலிதா சொல்வார் என்று யாராவது எதிர்பார்த்தார்களா என்ன? “சிவசங்கர் (மேனன் தான்) கொடுத்த சி.டியைப் பார்த்தேன். ஈழம்தான் தீர்வு” என்று நாளை மன்மோகனும் சொல்லக்கூடும். டாலர் ஆதிக்கத்துக்கு அபாயம் அதிகரிக்க அதிகரிக்க, தெற்காசியாவில் சீன அபாயமும் அதிகரிக்க வாய்ப்புண்டு. 5 வது ஈழப்போரை அமெரிக்காவின் ஆசியுடன் மீண்டும் ரா (RAW) ஸ்பான்சர் செய்வதற்கும் வாய்ப்புண்டு.

 

“தனி ஈழம் வாங்குவதற்காகத்தான் இந்திய மேலாதிக்கத்தை ஆதரிப்பது போல நடிக்கிறார்கள்” என்று ஐயா நெடுமாறனைப் பற்றித் தவறாகப் நினைத்துக் கொண்டிருந்த அயலுறவுத்துறை அதிகாரிகள், “இந்திய மேலாதிக்கத்தைக் காப்பாற்றும் பொருட்டுத்தான் நெடுமாறன் ஈழத்தை ஆதரித்திருக்கிறார்” என்ற உண்மையை காலம் கடந்தேனும் புரிந்து கொள்வார்களா பார்ப்போம். சம்பளத்துக்கு வேலை பார்க்கும் அதிகாரிகள் உண்மையான ராஜவிசுவாசிகளின் உணர்வை என்றைக்குப் புரிந்து கொண்டிருக்கிறார்கள்?

 

என்ன செய்வது? பாகிஸ்தானை உடைத்த துர்க்காதேவி என்று வாஜ்பாயியால் புகழப்பட்டவரும், இந்திய மேலாதிக்கத்தின் அன்னையுமான இந்திராவின் உயிரைக் காப்பாற்றியதற்காகத்தான் ஐயா நெடுமாறனுக்கு “மாவீரன்” பட்டம் கிடைத்தது என்ற வரலாற்று உண்மை கூடத் தெரியாத மரமண்டைகள் டெல்லி அதிகாரவர்க்கத்தில் நிரம்பியிருக்கும்போது, உண்மையான ராஜ விசுவாசிகள் சந்தேகிக்கப் படுவதில் என்ன ஆச்சரியம் இருக்கிறது?

 

“அடிமையாக இருக்கிறேன் என்று தமிழன் ஆயிரம் முறை சொன்ன பிறகும் தமிழன் மீது நம்பிக்கை வைக்காமல், சிங்களனோடு சேர்ந்து கொண்டு தமிழினத்தைக் கருவறுத்திருக்கிறது இந்திய அரசு என்றால், அதற்குக் காரணம் ஆரியம் அன்றி வேறு என்ன?” என்று தமிழர் கண்ணோட்டம் இதழில் குமுறியிருக்கிறார் மணியரசன். நியாயம்தானே! “அடிமைச் சேவகம் செய்கிறேன்” என்று மன்றாடிய பிறகும் அந்த அடிமையின் விசுவாசத்தை மதிக்கவில்லை என்றால், அப்படிப்பட்ட ஆண்டைக்கு எதிராக விடுதலைப் போராட்டம் நடத்துவதைத் தவிர ஒரு அடிமைக்கு வேறு என்ன வழி இருக்கமுடியும்?

 

எனினும் மணியரசனைப் போல ஐயா நெடுமாறன் கோபப்படவில்லை. தினமணி கட்டுரையின் மூலம் டெல்லிக்கு இன்னொரு வாய்ப்பு கொடுத்திருக்கிறார். ராஜவிசுவாசம் நிரம்பிய தமிழ்த் தேசியவாதிகளின் கையில் பொறுப்பை ஒப்படைப்பதன் மூலம் இந்திய தேசியத்தையும், மேலாதிக்கத்தையும் பாதுகாத்துக் கொள்வதா அல்லது தமிழ்த்தேசியவாதிகளின் ராஜவிசுவாசத்தை அலட்சியப் படுத்துவதன் மூலம் விடுதலைக்குப் போராடும் துர்ப்பாக்கிய நிலைக்கு அவர்களைத் தள்ளுவதா என்பதை டெல்லி ஆண்டைகள் முடிவு செய்தாக வேண்டும்.

 

எந்த நாட்டின் வரலாற்றிலும் ஆண்டை வர்க்கம் சந்தித்திருக்கவே முடியாத சவால் இது.

 

பின் குறிப்பு:

1. ஈழத்தின் இனப்படுகொலையை வழிகாட்டி இயக்கியது மட்டுமின்றி, இறுதி நாட்களில் புலிகள் இயக்கத் தலைவர்களை அடையாளம் கண்டு கொலை செய்வதற்கு சிங்கள இராணுவத்துடன் ரா அதிகாரிகளும் உடனிருந்தனராம். இந்திய அரசின் கொடூரம் குறித்து, நமக்கெல்லாம் தெரியாத ஏராளமான பல உண்மை விவரங்கள் ஐயா நெடுமாறனுக்குத் தெரிந்திருக்கக் கூடும். இந்திய தேசியக் கொடிக்கு சல்யூட் அடித்த, தேசிய கீதத்துக்கு விரைப்பாக நின்று கொண்டிருந்த பல வெவரங்கெட்ட தேசபக்தர்களுக்குக் கூட ஈழப்படுகொலைக்குப் பின்னால் ‘பக்தி’ போய்விட்டது. ஆனால் ரொம்பவும் வெவரமா ஐயாவுக்ககோ, தேச பக்தி மட்டுமல்ல, மேலாதிக்க வெறியும் ஒரு மில்லி கூட இறங்கவில்லை. குடிமகன் என்றால் இவரல்லவோ இந்தியக் குடிமகன்!

 

2. தினமணி கட்டுரையைப் படித்த தேசபக்தர் ஒருவர், “ஏங்க, ஐ.ஏ.எஸ் படிச்சவனைத்தான் தேசிய பாதுகாப்பு ஆலோசகரா நியமிக்கணுமா? இந்த மரமண்டை நாராயணனுக்குப் பதிலா நெடுமாறனை அந்த போஸ்ட்ல நியமிக்க கூடாதா என்ன?” என்று கேட்டார்.

 

எதிர்பாராத இந்தக் கேள்வியால் நான் திகைத்துப் போனேன். கலைஞர் தொலைக்காட்சியில் 23 ஆம் புலிகேசி ஓடிக்கொண்டிருந்த்து. “கககபோ” என்றார் வடிவேலு.

 

இதிக்கி மேலா நாஞ்சொல்றதுக்கு என்ன இருக்கி?