“ஈழத்தில் தமிழின அழிப்பில் ஈடுபட்ட, துணைநின்ற இனப்பகைவர்களை அடையாளம் காண்போம்!” என்ற தலைப்பில் பா.ம.க ராமதாசின் வன்னிய சொந்தங்களுக்காக நடத்தப்படும் தமிழ்ப் படைப்பாளிகள் இயக்கம் 10.06.2009 புதனன்று சென்னை அண்ணா கலையரங்கத்தில் ஒரு மாலை நேரக் கருத்தரங்கை நடத்தியது. மாபெரும் கருத்தரங்கமென்றாலும் உள்ளே சுமார் 250 தலைகளே இருந்தன.  

 

ஓவியர் வீர.சந்தானம் தலைமை வகிக்க, புதுவை செயமூர்த்தி என்ன பிழை செய்தோமென்ற பாடலைப் பாட கவிஞர் ஜெயபாஸ்கரன், கவிஞர் பச்சியப்பன் கவிதை வாசிக்க கருத்தரங்கம் தொடங்கியது. யார் யார் என்ன தலைப்பில் பேசினார்கள் என்பதை அந்த அழைப்பிதழில் உள்ளபடியே கீழே தருகிறோம்

ராமதாஸ்

தமிழகச் சக்திகள்- அய்யா பழ.நெடுமாறன், தலைவர், உலகத் தமிழர் பேரமைப்பு

இந்திய அரசின் நிலைப்பாடு- திரு. எம்.ஜி. தேவசகாயம், இ.ஆ.பி.(பணிநிறைவு)

ஊடகங்கள்- தோழர் தியாகு, பொதுச்செயலாளர், தமிழ்த் தேசிய விடுதலை இயக்கம்.

போர்க்குற்றவாளிகள்- வழக்கறிஞர் சுரேஷ், தலைவர், மக்கள் சிவில் உரிமைக் கழகம்,தமிழநாடு-புதுவை.

இந்திய வெளியுறவுக் கொள்கை- தோழர் இராசேந்திர சோழன், ஆசிரியர், மண்மொழி,திங்களிதழ்.

சர்வதேசச் சக்திகள்- மருத்துவர் நா.எழிலன், அமைப்பாளர், இளைஞர் இயக்கம்

நிறைவுரை

தமிழினப் போராளி மருத்துவர் அய்யா ச.இராமதாசு

நன்றி

கவிஞர் விஜேந்திரா,

சென்னை மாவட்டச் செயலாளர், தமிழ்ப் படைப்பாளிகள் பேரியக்கம்.

இந்த தலைப்புக்களைப் பார்த்த பிறகு ஏதோ பயங்கரமான ஆய்வு நடந்திருப்பதாக நினைத்துக் கொள்ளாதீர்கள். எல்லாம் ஜெ தலைமையிலான கூட்டணி தேர்தலில் தோல்வி அடைந்ததைப் பற்றி ஒரு மூச்சு அழுதுவிட்டு தமிழர்களை திட்டி விட்டு ஈழத்திற்காக தாங்கள் என்னவெல்லாம் சாதித்தோம் என ஒருவருக்கொருவர் முதுகு சொறிந்து கொள்ளத்தான்.

பேசியோர் அனைவரும் சதீஸ்நாயர், விஜய நம்பியார், ஏ.கோபிநாத், எம்.கே.நாராயணன், சிவசங்கர் மேனன் உள்ளிட்ட கேரள மலையாளிகள்தான் இதற்கெல்லாம் காரணம் என திரும்பத் திரும்பஅழுத்தம் கொடுத்துப் பேசினர். இந்த மலையாள பூச்சாண்டி பற்றி வினவில் தனியாகவே ஒரு பதிவு எழுதுவோம்.

கூட்டத்தலைவர் வீரசந்தானம், நெடுமாறனை பேச அழைக்கும் போது, “பிரபாகரன் உயிரோடுஇருக்கிறாரா? இல்லையா? என விடை தெரியாது தமிழகமே தவித்துக்கொண்டிருக்கிறது. அதற்கு விடை தந்து நம்பிக்கையூட்ட அய்யாவை பேச அழைக்கிறேன்” என்றார்.

அய்யா நெடுமாறனோ, இத்தனை அழிவுகளுக்கும் காரணம் கருணாநிதிதான் என்று ஆரம்பித்தவர்,”அனைத்துக்கட்சி கூட்டத்தில் நாங்களெல்லாம் மத்திய மந்திரிகளை மட்டும்தான் ராஜினாமா செய்வது என்று பேசினோம்.ஆனால் கலைஞர்தான் ஒருபடி மேலேபோய் எம்.பி.க்கள் அத்தனைபேரும் ராஜினாமா செய்வார்கள் என அறிவித்தார். ஆனால், பிரணாப் இலங்கை சென்றுவந்தது மனநிறைவு தருகிறது எனக்கூறி, தான் முன்பு கூறியது போல எம்.பிக்களெல்லாம் ராஜினாமா பண்ணத்தேவையில்லை, தில்லி அரசு பார்த்துக்கொள்ளும் என நாடகமாடினார். அன்று மட்டும் அவர் அவ்வாறு முடிவெடுக்காமல், எம்.பிக்களை ராஜினாமா செய்ய வைத்திருந்தால் தில்லி அரசு பயந்திருக்கும். ஒரு இலட்சம் தமிழர்கள் இறந்திருக்க மாட்டார்கள். இதன் மூலம் வரலாற்றுப்பிழையை கருணாநிதி இழைத்துவிட்டார். மத்திய அரசின் நடவடிக்கையை எப்போதும் இவர் நியாயப்படுத்தியே பேசிவருவதால், தில்லி அரசும் மாநில அரசு நம்பக்கம் இருக்கிறது, எனவே, தமிழக மக்கள் குரலுக்கு நாம் செவிசாய்க்க தேவையில்லை என கருதுகிறது. அதற்கேற்ப கருணாநிதியும் மக்கள் எழுச்சியை ஒடுக்கும் வேலையைத்தான் செய்து வருகிறார்” என்று வழக்கமான கருணாநிதி பழிப்பு புராணத்தை பேசினார்.

ஈழத்திற்கு கருணாநிதி துரோகம் செய்வது எல்லோரும் ஒத்துக்கொள்ளக் கூடியதே. ஆனால் அவர் ராஜினாமா நாடகம் மட்டும் தடைபடாமல் நடந்திருந்தால் ஒரு இலட்சம் ஈழ மக்கள் காப்பாற்றப்பட்டிருப்பார்கள் என அளந்தாரே அதுதான் தாங்க முடியவில்லை. ஏதோ கருணாநிதிக்குப் பயந்துதான் இந்தியாவும், இலங்கை அரசும் அங்கே போர் நடத்திக் கொண்டிருந்ததைப் போல கருணாநிதியே எதிர்பார்த்திராத வல்லமையை அய்யா நெடுமாறன் கருணாநிதிக்கு அளித்தாரே அதுதான் கொஞ்சம் கூட ஒட்டவில்லை. ஒரு வேளை தேர்தலில் ஜெயலலிதா வெற்றி பெற்றிருந்தால் ஈழமக்கள் காப்பாற்றப்பட்டிருக்கலாம் என்று நெடுமாறன் ஏன் பேசவில்லை? கருணாநிதிக்கு ஒரு நீதி, ஜெயலலிதாவுக்கு ஒரு நீதியா?

பேசியவர்கள் அனைவரும் ஜெயலலிதாவை பற்றி மட்டுமல்ல, ஜெ.என்ற வார்த்தையைக் கூட எவரும் உச்சரிக்க வில்லை. குறிப்பாக ராமதாசு பேசவேயில்லை. போயஸ் தோட்டத்திலிருந்து தொலைவில் உள்ள கொடநாடு எஸ்டேட்டில் ஓய்வு எடுத்துவரும் அம்மாவைப் பற்றி அத்தனைபேருக்கும் அவ்வளவு மரியாதை இல்லையில்லை பயம்.

வழக்கமாக இத்தகைய கூட்டங்களில் ‘சே’ படம் பொறித்த டி.சர்ட்டில் வலம் வரும் ஒரு சில இளசுகளைத் தவிர எல்லாமே பெருசுகளின் தலைகள் பெரும்பாலும் தென்பட்டன.

நேற்றுவரை இந்த தேர்தல் முடிவுதான் ஈழத்தின் தலையெழுத்தையே தீர்மானிக்கப் போகும் சக்தியென முழங்கி வந்த தியாகு, இக்கூட்டத்தில், மிகவும் கம்மியான குரலில் “நம்முடைய எதிர்பார்ப்புகளுக்கு மாறாக தேர்தல் முடிவுகள் அமைந்திருந்தாலும், இதில் எப்படி தி.மு.க.வினர் வெற்றி பெற்றனர் என்பதை அய்யா (ராமதாசு) அவர்கள் காட்சி விளக்கமே தந்துவிட்டார். எனவே நம்மை பொருத்தவரை இந்த தேர்தலில் பெறும் வெற்றி தோல்விகள் முக்கிய விசயமல்ல” என போகிற போக்கில் பேசிவிட்டுப் போனார்.

இறுதியாக அய்யா ராமதாசு முழங்க வந்தார். தேர்தலுக்கு முந்தைய மணித்துளி வரை ஈழத்தின் பிணங்களைக் காட்டி சதை வியாபாரம் செய்து ஏழு இடங்களையும் அள்ளிவிடலாம் என மனப்பால் குடித்த அந்த தமிழினக் காவலர் என்ன பேசினார் என்பதை கீழே அப்படியே தருகிறோம்.

இங்கே பேசிய தலைவர்கள் அவர்களுக்கான தலைப்பில் மிகச்சுருக்கமாப் பேசினார்கள். குறிப்பாக தியாகு பேசிய தலைப்பிற்கு இரண்டு மணிநேரம் வேண்டும். இரண்டுமணி நேரம் வேண்டும் என்றால் அதை கேட்க இரண்டாயிரம் இளைஞர்கள் வேண்டும். அவர்கள் தமிழர்களாக இருக்க வேண்டும். தமிழ் இளைஞர்களாக இருக்க வேண்டும். தமிழ் உணர்வாளர்களாக இருக்கவேண்டும். அவன் தமிழச்சிக்குப் பிறந்தவனாக இருக்க வேண்டும். தமிழை ஊட்டி வளர்ப்பவர்களாக இருக்க வேண்டும். தமிழை நேசிப்பவர்களாக இருக்கவேண்டும். வீட்டில் தமிழை பேசுபவர்களாக இருக்க வேண்டும். பள்ளி, கல்லூரிகளில் தமிழ் படிப்பவராக இருக்க வேண்டும். இரண்டுமணி நேரம் அதற்கு கொடுக்கலாம்.

ஆனால், இங்கு ஒவ்வொருவரும் பேசிய இந்திய ஆட்சிப் பணியிலிருந்து ஓய்வுபெற்ற மிகுந்த அக்கறை காட்டி *** முதன்மை செயலாளராக இருந்து ஓய்வுபெற்ற தேவசகாயம் அவருக்கு இரண்டுமணி நேரம் வேண்டும், பி.யூ.சி.எல். சுரேசுக்கு இரண்டு மணிநேரம் வேண்டும். இங்கு பேசிய எல்லோருக்கும் இரண்டுமணி நேரம் வேண்டும். இராசேந்திர சோழனுக்கு இரண்டுமணி நேரம் வேண்டும். ஒவ்வொருத்தருக்கும் இரண்டுமணி நேரம் வேண்டும். ஆனால், மாணவர்கள் வேண்டும், இளைஞர்கள் வேண்டும். எங்கே இளைஞர்கள்? நாங்க அரைச்சமாவையே அரச்சிகிட்டிருக்கிறோம். அரைச்ச மாவையே அரைக்கலை… இங்க பேசினவங்கல்லாம், அரைக்கலை… ஆனா வந்தவர்களே கேட்டவர்களே கேட்டுக் கொண்டிருக்கிறார்கள். கேட்டவர்களே கேட்டுக் கொண்டிருக்கிறார்கள் வந்தவர்களே வந்து கொண்டிருக்கிறார்கள். ஆறுகோடி தமிழன் எங்கே? தமிழனை தேடுங்க. தேடுங்க எங்கே இருக்கிறான் தமிழன்?

இராசேந்திர சோழன் சொன்னார், நாமெல்லாம் போராட்டம் நடத்தினோம், பேரணி நடத்தினோம், உண்ணாவிரதம் இருந்தோம். நாம நடத்தாத போராட்டமில்லை. எல்லாம் நடத்திட்டோம் எல்லாம் சொல்லிட்டோம், என்னன்ன வழி இருக்குதோ அதெல்லாம் செய்தோம்

தனித்தனியாகச் செய்தோம், கூட்டாகச் செய்தோம், இயக்கம் கண்டு செய்தோம், இன்று படைப்பாளர் பேரியக்கம் அவங்களோடு பங்கை நிறைவேற்றுகிறார்கள்.

இவ்வளவும் செய்தோம் ஆனால் ஒன்னும் பலனில்லை. *** மீதித் தமிழன் எங்கே?தமிழன் காயடிக்கப்பட்டு விட்டானா? இல்லை தமிழனே இல்லையா? எங்கே போனான் தமிழன்? நமக்குள்ளே பேசிக்கொண்டிருக்கிறோம். தியாகு சொன்னார் கடைசித் தமிழன் இருக்கிற வரைக்கும் அங்கே தமிழ் ஈழம் மலரும் நாள்வரும். ஆனால் இங்கேயிருக்கிற தமிழ்நாட்டு தமிழன் 6.5கோடி, 7 கோடி இந்தியாவிலிருக்கிற தமிழன் என்ன செய்யப்போகிறான்? இவனை எங்கே தேடுவது? எங்கே போயிருக்கிறான்?

நாங்கள் தேர்தலில் பேசாத பேச்சா? எல்லாம் சொன்னோம். உலகத்திலிருக்கிற கதைகளெல்லாம் படிச்சோம். எல்லாத்தையும் சொல்லிப் பார்த்தோம். ஆனால்,எவ்வளவுச் சொல்லியும் தமிழன் உணரவில்லையே?

இங்கே தமிழோசை படிக்கிறவர்கள் எத்தனைப்பேர்? மக்கள் தொலைக்காட்சிப் பார்க்கிறவங்க எத்தனை பேர்? இத ரெண்ட தவிர இந்த செய்தியை கொண்டு போறது யாரு? நானும் அய்யா நெடுமாறனும், தியாகு, இராசேந்திர சோழன், வை.கோ., நாங்கதான் ஊர் ஊரா போனாம். ஊர் ஊரா சொன்னோம்.

யாரைப் போயி சொல்றது? எங்கே போயி சொல்றது? இல்ல எங்கப் போயி முட்டிக்கிறது? எந்த சுவத்துல, எந்த குட்டி சுவத்துல முட்டிக்கிறது? யாருகிட்ட சொல்றது? எங்கே தமிழன்? அவன் எங்க இருக்கிறான்? தமிழர்கள் எங்கே இருக்கிறார்கள்? இருக்கிறார்கள் எல்லாம் தமிழச்சிதான். 6.5 கோடின்னு சொல்றோம், 6 கோடி இருப்பான், 5.5 கோடியாவது இருப்பான். ஆனால் உணர்வுள்ள தமிழன் எத்தனைபேர்? உணர்வை எப்படி ஊட்டப்போறோம்?

தோழர் தியாகுவின் பேச்சுக்களை எத்தனை கல்லூரிகளில் கேட்கத் தயாராயிருக்கின்றன? தமிழ் மன்றங்கள் எங்கே போச்சு? இவர்கள் எங்கே போய்க்கொண்டிருக்கிறார்கள்? சினிமா கொட்டகைகளில், குடிகாரதமிழர்களாக இளைஞர்களை ஆக்கி வைத்திருக்கிற இந்த கொடுமைக்கு நாம் என்ன முடிவு காணப்போறோம்.

எவ்வளவோ புத்திமதி சொன்னோம். இன்னும் பேசப்போறோம். இதுக்கு முன்னாடி பேசுனோம், போராட்டம் நடத்தினோம். இனியும் பேசுவோம் இன்னும் ஒருமணிநேரம் சட்டையை பிழிஞ்சு வேர்வையை நனைச்சுட்டு ஊத்தோ ஊத்தோன்னு வெயில்ல பேசப்போறோம். சொல்லப் போறோம். ஆனால், என்ன நடக்கப் போகிறது? என்ன நடந்துகிட்டிருக்குது?

எல்லாத்துக்கும் மொத்தமா சொல்லிட்டாரு நம்முடைய தமிழக முதல்வர். என்ன சொல்லிட்டார் -நான் அடிமை- நான் அடிமைன்னா அப்ப நாமெல்லாம்? நாமெல்லாம் அடிமைகள்தான். அந்த ஒரு வார்த்தை சொன்னதற்காக கலைஞரை நான் பாராட்ட கடமைப்பட்டிருக்கிறேன். அய்யா கலைஞர் அவர்களே நீங்கள் மட்டும் அடிமையில்லை. நாங்களும்தான் அடிமை. 6.5 கோடி, 7 கோடி, 6.25(ஆறேகால்) கோடி என்னமோ ஒரு கணக்கு தமிழ்நாட்டு கணக்கு புள்ளிவிவரம். எல்லாம் அடிமை. வாயற்ற பூச்சிகளாயிருக்கிறோம். ஒன்னும் நடக்கவில்லையே?

இரண்டு தீர்மானங்களை தமிழக முதல்வர் ஒன்று அய்யகோ தீர்மானம். அடுத்து டெல்லிகோ போனோம். இப்படியெல்லாம் சொன்னோம்.

யார் யார் என்ற அதிகாரிகளின் பட்டியலையே சொன்னார். விஜய நம்பியார்,கோபிநாதன், எம்.கே.நாராயணன், சிவசங்கர்மேனன். என் பட்டியல் நீளுது.

அங்கே ஒரு வங்காளிப் பாதிக்கப்பட்டால், ஒரு மலையாளி பாதிக்கப்பட்டால், நிலைமை வேறு. ஆனால், ஒரு இந்தியத் தமிழன் பாதிக்கப்பட்டால் ஒன்றுமே இல்லியே,நடக்கலியே.

ஆக நமக்குள்ளேயே நாம பேசிக்கொள்வது. தமிழனை அடையாளம் காணவேண்டும். தோழர் தியாகு அவர்களே தமிழனை கொஞ்சம் அடையாளம் காட்டுங்கள். டாக்டர் எழிலன் தமிழனை கொஞ்சம் அடையாளம் காட்டுப்பா. நம்முடைய அருமை மிகு இங்குள்ள எல்லோரையும் கேட்டுக் கொள்கிறேன் கொஞ்சம் அடையாளம் காட்டுங்கள்.

இங்கே, நம்முடைய அய்யா பழ.நெடுமாறன் அவர்கள் சொன்னார்கள், நம்முடைய மிகப்பெரிய ஆபத்து சீனா, பாகிஸ்தான். தியாகுகூடச் சொன்னார், வடக்குதான் ஆபத்தாயிருந்தது இப்ப கிழக்கு தெற்கயும் வந்துட்டான். மேற்குல பாகிஸ்தான் இருந்துச்சு அதே பாகிஸ்தான் இப்ப தெற்கேயும் வந்துட்டான். இரண்டுபேரும் சங்கமிக்கிறான், தமிழனை அழிக்கனும், பூண்டோடு அழிக்கனும்,கூண்டோடு அழிக்கணும் தமிழினமே இருக்க கூடாது என்பதற்காக.

வெளியுறவுத்துறை அமைச்சரைப் பார்த்து உன் வேலையைப் பார் என்கிறான். இலங்கைக்காரனே ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்துவிட்டான். நான் எங்களுக்காகப் போரை நடத்தவில்லை. இந்தியாவிற்காகத்தான் போரை நடத்தினோம் என்று.

நாம் எத்தனை தீர்மானங்களை நிறைவேற்றினோம். எத்தனை உண்ணாவிரதங்கள். நீங்களும் உண்ணாவிரதம் இருந்தீர்கள். அதை கொச்சைப்படுத்திக்கூட பேசினோம். இப்போது பேச விரும்பலை.

இந்தியாவுக்கானப் போரை நாங்கள் நடத்தினோம். தமிழின அழிப்புப் போரை நாங்கள் நடத்தினோம்.உங்க வேலையைப்பார் என்கிறான். மைன்ட் யுவர் ஒர்க்ஸ்* (ஒன்ஸ) என்கிறான், எஸ்.எம்.கிருஷ்ணாவை. என்ன செய்யப் போறோம். என்ன சொல்லப் போறோம். இனி நாம் என்ன செய்யப் போகிறோம். என்னப் பேசப் போகிறோம்.

பேசுவோம். எல்லா அமைப்புகளும் சேர்ந்து எல்லா தலைவர்களும் சேர்ந்து பேசுவோம். ஒரு நாளு பேசுவோம். ஒருமணிநேரமல்ல, ஒருநாளை இதற்காக ஒதுக்கி நிறைய பேரெல்லாம் இருக்கக் கூடாது.

ஒவ்வொரு உணர்வுள்ள அமைப்புக்கு ஒருவராக ஒரு இருபது முப்பது பேராக உட்கார்ந்து பேசுவோம். இந்த அடிமை விலங்கை தகர்ப்பதற்கு நீங்கள்தான் ஒரு வழியை சொல்ல வேண்டும்.

ஒன்னும் புரியலை ஒன்னுமே புரியலை எங்களுக்கும் ஒன்னும் புரியலை. ஆக நாமெல்லாம் முட்டாள்களாக்கப்பட்டிருக்கிறோம் அது மட்டும் நமக்கு புரியுது. மீண்டும் நாம் கூடுவோம், ஆனாலும்கூட துன்பப்படுகிற அந்த ஈழத்தமிழர்களை பற்றி நினைக்கின்றோம். ஆனால், நினைக்கிறோமே தவிர வேறு ஒன்றும் நம்மாலே செயலளவிலே செய்ய முடியாத அளவிலிருக்கிறோம்.

தமிழ் ஈழம், தமிழ் ஈழம் மலரும், தமிழ் ஈழம் ஒருகாலத்தில் உருவாகும் என்கிற எண்ணம் அந்த ஒரு வேட்கை இருக்கிறது.

ஆகையால் இதை எப்படிநாம் சாதிக்கப்போகிறோம். என்பதை நாம் உட்கார்ந்து ஒருநாள் பேசுவோம். ஒருநாள் பூராவும் பேசுவோம். அடுத்து இதை எப்படி கொண்டு செல்லப்போகிறோம் என்பதையும் பேசுவோம்.

இங்கே பேசியவர்களெல்லாம் மிகச்சுருக்கமாக 15 நிமிடங்களில் பேசி அமர்ந்தார்கள். இரண்டு மணிநேரம் கொடுக்க வேண்டும். ஆனால், கேட்பதற்கு ஆள்வேண்டும். கேட்பதற்கு தமிழர்கள் வேண்டும். தமிழ் இளைஞர்கள் வேண்டும். புதுப்புது இளைஞர்கள் வேண்டும். கேட்டவர்களே கேட்டுக் கொண்டிருக்கிறார்கள். வந்தவர்களே வந்து கொண்டிருக்கிறார்கள். இந்த எண்ணம் மாற்றம் வேண்டும் என யோசிப்போம்”…

இதுதான் அய்யா தமிழினக் காவலர் ராமதாசு பேசிய பேச்சு. இதற்கு தனியே விமரிசனம் தேவையா என்ன? தமிழன் எங்கே என்று அய்யா பேசும்போது எல்லோரையும் பார்த்து சிரிக்க சிரிக்க பேசினார். அரசனை நம்பி புருசனை கை விட்ட கதையாக ஒரு சீட்டுக்காக அணி மாறிய அய்யா ஒரு சீட்டு கூட தேறாமால் மண்ணைக் கவ்வினார். கல்லாக் கட்டிய மந்திரிப் பதவி போச்சு. தமிழோசைக்கும், மக்கள் டி.விக்கும் வந்த விளம்பரங்கள் போச்சு. அமைச்சராக இருந்து தேற்றிய கைக்காசு பலநூறு கோடி தேறினாலும் இனி கட்சிக் கம்பெனியை கைக்காசு போட்டு நடத்த வேண்டுமே என்ற கவலை. இதெல்லாம் சேர்ந்துதான் அய்யா எங்கே தமிழனென்று சிரித்துக்கொண்டே தேடுகிறார்.

ஈழத்திற்காக தமிழகத்தில் நடந்த போராட்டங்களால் எந்தப் பயனுமில்லை என அய்யாவுக்கு இப்போதுதான் புரிந்ததாம். ஆனால் ஜெவை ஈழத் தாயாக்கி இலை மலர்ந்தால் ஈழம் மலரும் என பிலிம் காட்டினாரே அப்போது ஏன் உரைக்க வில்லை? தேர்தலில் தோற்றதால் ஈழத்திற்கு நம்மால் ஒன்றும் செய்ய முடியவில்லை என்ற ஆதங்கத்தை பாதுகாப்பாக எழுப்புகிறார் ராமதாசு. ஒரு வேளை தமிழகத்தில் அ.தி.மு.க கூட்டணி வெற்றி பெற்றிருந்தால்? நிச்சயம் தமிழனைக் காணவில்லை என புலம்பமாட்டார். மாறாக இரண்டு இலட்சம் தமிழர்கள் சாகவேண்டியது தங்கள் ஆட்சியினால் ஒரு இலட்சமாக குறைந்திருக்கிறது என்று சாதனையாக அறிவிப்பார்.

தேர்தலில் தோற்றால் தமிழனுக்கு சுரணையில்லை என்ற இந்த சோக நாடக புலம்பலை தமிழக மக்கள் கருணாநிதியின் புண்ணியத்தில் பலமுறை பார்த்திருக்கிறார்கள். இந்த முறை அந்த இடத்தை அய்யா ராமதாசு எடுத்திருக்கிறார். தனது சொந்த தேர்தல் தோல்விக்காக தமிழன் இலாயக்கில்லை என்று கிண்டலடிக்கும் இந்த சுயநலக் கோமாளிகளையெல்லாம் ஈழத்து மக்கள் நம்புகிறார்களே என்ன செய்ய? இறுதி தாக்குதலில் பல ஆயிரம் மக்கள் கொல்லப்பட்ட போதும் தேர்தலுக்காக வாய் கிழிய ஈழம் ஈழம் என முழங்கிய அ.தி.மு.க கூட்டணி ஒரு மாலை நேர ஆர்ப்பாட்டம் கூட செய்யவில்லையே? அய்யா ராமதாசு அவர்களே முதலில் உங்களுக்கும், உங்கள் அணி தலைவிக்கும் சுரணையும், நன்றியுணர்வும் உள்ளதா என்பதை விளக்குங்கள். அப்புறம் தமிழனைப் பற்றி கவலைப்படலாம்.

இறுதியாக தற்போது ராமதாசின் கவலை என்ன தெரியுமா? வன்னியில் வதை முகாமில் அடைக்கப்பட்டிருக்கும் மக்களை காப்பாற்றுவது குறித்து என்று நினைத்து விடாதீர்கள். அய்யா அம்மாவுடன் ஒப்பந்தம் போட்ட போது ஏழு சீட்டுக்கு பிறகு எட்டாவது சீட்டை நாடாளுமன்ற மேலவை தேர்தலில் அ.தி.மு.க தரவேண்டும் என்று பேசியிருந்தார்கள். இப்போது கொடநாட்டில் குப்புறப்படுத்திருக்கும் புரட்சித் தலைவி தேர்தல் தோல்வி கோபத்தில் அந்த எட்டாவது சீட்டை தரமாட்டேன் என்று சொல்லிவிட்டால் என்ன செய்வது? இந்தப் பிரச்சினைக்கு தீர்வும் ஆறுதலும் தர விரும்புவர்கள் தைலாபுரம் தோட்டத்திற்கு கையில் விளக்குமாற்றுடன் செல்லலாம்.

http://www.vinavu.com/2009/06/17/ramadoss/