உத்திரப் பிரதேசத்தின் பிலிபிட் மக்களைவைத் தொகுதியில் பா.ஜ.க சார்பில் போட்டியிட்ட வருண்காந்தி, மேனகா காந்தியின் செல்லப்பிள்ளை, முசுலீம்களின் கையை வெட்டுவேன் என்றெல்லாம் பா.ஜ.கவின் மதவெறி அனலைக் கக்கும் பேச்சாளர்களையும் விஞ்சி பேசி இந்துமதவெறியைப் பரப்புவதற்கு நேரு பரம்பரையும் எந்த விதத்திலும் குறைந்ததில்லை என்று நீருபித்தார். 

 

இதற்காக வழக்கு பதிவு செய்யப்பட்டு போலீசு அவரைக் கைது செய்யப் போனபோது வருண்காந்தியின் அடிப்பொடிகள் போலீசைத்தாக்கி கலவரம் செய்தனர். இதனால் மாயாவதி அரசு அவர் மேல் தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து சிறையில் அடைத்தது. இதனால் மாயாவதி முசுலீம்களின் வாக்குகளை தேர்தல் நேரத்தில் பெறலாம் என்பதைத் தாண்டி இப்போது பா.ஜ.க அரசமைப்பதற்கு மாயவாதியிடம் தூதுவிடுகிறது என்பதையும் இங்கே சேர்த்துப் பார்க்கவேண்டும்.

varun copy

தன் செல்லப்பிள்ளை சிறையில் அடைக்கப்பட்டதை வைத்து மேனகா காந்தி எல்லா ஆர்ப்பாட்டங்களையும் செய்தார். வருண்காந்தி அப்படிப் பேசியதில் உடன்பாடில்லை என பா.ஜ.கவும் அடக்கி வாசித்தது. ஆனாலும் நேரு பரம்பரையின் புதிய இளவரசரை இந்துமதவெறியின் தொண்டர்கள் வராது வந்த மாமணியாகக் கொண்டாடினர். தான் வேட்பாளர் என்பதால் தன்னை ஜாமீனில் வெளியே விடவேண்டும் என்று வருண் எடுத்த எடுப்பிலேயே உச்சநீதிமன்றம் சென்று கோரியதை பரிசீலித்த நீதிமன்றம் அவருக்கு மே 14 வரை பரோலில் விடுவித்தது.

இதற்கிடையில் அவரை தேசியபாதுகாப்பு சட்டத்தில் கைது செய்ததை விசாரித்த அலகாபாத் உயர்நீதிமன்ற ஆய்வுக்குழு, அந்த சட்டத்தில் கைது செய்ததை ரத்து செய்யுமாறு உ.பி அரசுக்கு பரிந்துரைத்தது. இதை எதிர்த்து உ.பி அரசு உச்சநீதிமன்றத்தில் முறையீடு செய்தது. இதை உடனே விசாரித்த தலைமை நீதிபதி கே.ஜி. பாலகிருஷ்ணன் தலைமையிலான அமர்வு ஆய்வுக்குழு தீர்ப்பையே உறுதி செய்தது. தீர்ப்பு வெளியான ஒரு மணிநேரத்திலேயே உ.பி அரசு அந்த சட்டத்தின் கீழ் கைது செய்ததை ரத்து செய்தது.

ஆக தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்ட நேரு பரம்பரையின் குலக்கொழுந்து சில நாட்கள் சிறையில் இருந்து விட்டு விடுதலையாகிவிட்டார். இங்கே சீமான், கொளத்தூர் மணி, நாஞ்சில் சம்பத் போன்றோரெல்லாம் தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டு சில மாதங்கள் கழித்தே விடுதலையாகினர். பாசிச ஜெயா ஆட்சியில் இதே சட்டத்தில் கைது செய்யப்பட்ட ம.க.இ.க தோழர்களெல்லாம் ஆறேழு மாதங்கள் சிறையில் இருக்க நேரிட்டது.

ஆனால் வருண்காந்தி என்பதால் எத்தகைய சட்டமும் நீதிமன்றமும் புயல் வேகத்தில் பணிவிடை செய்யும் போலும். இதே போல உயர்நீதிமன்றத்தால் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட சரவணபவன் அண்ணாச்சிக்கு உச்சநீதிமன்றம் உடனே பிணை வழங்கியிருக்கிறது. வழக்கமாக உயர்நீதிமன்றத்தால் ஆயுள்தண்டனை விதிக்கப்பட்டால் ஓரிரு ஆண்டுகள் சிறையில் இருந்த பின்னர்தான் உச்சநீதிமன்றம் அந்த மேல்முறையீடை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளும். இங்கே அண்ணாச்சி பணபலத்தால் உச்சநீதிமன்றத்தை விலைக்கு வாங்கியிருக்கிறார்.

ஆக இந்த விவகாரங்களில் கிடைக்கும் நீதி என்ன? ஒன்று நீங்கள் மேன்மக்களாக பிறந்திருக்கவேண்டும் அல்லது நீதிபதிகளை விலைக்கு வாங்கும் அளவு பணக்காரராக இருக்கவேண்டும்! 

http://www.vinavu.com/2009/06/16/rich-and-law/