வரம் கொடுத்த சிவன் தலையிலேயே கைவைக்க முயன்ற பத்மாசுரன் பற்றிய இந்து மதப் புராணக் கதையை அறியாதவர்கள் இருக்க முடியாது. பாகிஸ்தானின் இன்றைய நிலை அப்புராணக் கதையைத்தான் நினைவுபடுத்துகிறது.

 அந்நாட்டிலுள்ள வடமேற்கு எல்லைப்புற மாநிலத்திலுள்ள மாலாகண்ட் பகுதியில் “அமைதியை” ஏற்படுத்த, அப்பகுதியில் செயல்பட்டு வரும் தெஹ்ரிக் இநிபாஸ் ஹரியத் இ முஹமதி என்ற இசுலாமியத் தீவிரவாத அமைப்போடு பாகிஸ்தான் அரசு ஓர் உடன்பாடு செய்துகொண்டது. இதன்படி, மாலாகண்ட் பகுதியில் ஸ்வாட் சமவெளியையும் உள்ளிட்ட ஏழு மாவட்டங்களில் நிஜாம் இ அத்ல் என்ற ஷரியத் நீதிமன்றங்களை அமைத்துக் கொள்ள அனுமதி வழங்கப்படும். இதற்கு கைமாறாக, தெஹ்ரிக் இநிபாஸ் அமைப்பு தனது சகோதர அமைப்பான தெஹ்ரிக் இ தாலிபான் பாகிஸ்தான் அமைப்பினை ஆயுதப் போராட்டத்தைக் கைவிடுமாறு செய்ய வேண்டும். ஆனால், நடந்த்தோ பாகிஸ்தான் அரசாங்கத்தின் எதிர்பார்ப்பிற்கு நேர்மாறாக அமைந்துவிட்டது.


இந்த அமைதி ஒப்பந்தம் பிப்ரவரி 2009இல் கையெழுத்தானது. பாகிஸ்தான் அரசு ஒப்பந்தப்படி ஷரியத் நீதிமன்றங்களை அமைத்து, அதற்குரிய நீதிபதிகளை (காஸி) நியமித்துக் கொண்டிருந்த வேளையில், பாகிஸ்தானைச் சேர்ந்த தெஹ்ரிக் இ தாலிபான் அமைப்பு ஆயுதங்கள் ஒப்படைக்க மறுத்த்தோடு, மாலாகண்ட் பகுதியில் ஸ்வாட் சமவெளியை ஒட்டியுள்ள புனேர், தீர் மாவட்டங்களுக்குள் அணிஅணியாக ஊடுருவியது. தாலிபான் அமைப்பால் அம்மாவட்டங்களைச் சேர்ந்த பல பகுதிகளில் சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டன; ரோந்து படைகள் ஏற்படுத்தப்பட்டன. அம்மாவட்டங்களில் பாகிஸ்தானின் அதிகாரம் இனி செல்லுபடியாகாது என்ற தோற்றம் உருவாக்கப்பட்டது. .


பாகிஸ்தானின் தலைநகர் இஸ்லாமாபாத், புனேர் மாவட்டத்தில் இருந்து 100 கி.மீ. தொலைவிற்குள் அமைந்திருப்பதால், அடுத்து இஸ்லாமாபாத்திற்குள்ளும் தாலிபான் ஊடுருவிவிடும் என்ற பீதி பொதுமக்கள் மத்தியில் உருவானது. இஸ்லாமாபாத்தைச் சேர்ந்த சில தனியார் பள்ளிக்கூடங்கள் தங்கள் பள்ளிக் கட்டிடத்தின் சுற்றுச்சுவரை உயர்த்திக் கட்டும் நடவடிக்கைகளில் இறங்கியதாகவும், சில தனியார் பள்ளிக்கூடங்கள் பெண்கள் பள்ளிக்கூடத்திற்கு இறுக்கமான உடைகளையோ, ஜீன்ஸ் ஆடையையோ அணிந்து வரக் கூடாது எனக் கட்டளையிட்டதாகவும், தாராளவாத சிந்தனை கொண்ட கனவான்கள் தங்களின் பாதுகாப்புக்குத் துப்பாக்கி வாங்கி வைத்துக் கொள்ள அலைந்ததாகவும் பத்திரிகைகள் இந்தப் பீதியைப் படம் பிடித்துக் காட்டின.


இஸ்லாமாபாத்தில் பீதி பரவி வந்த நேரத்தில் புனேர் மாவட்டத்தில் பொதுமக்கள் தாலிபானின் ஊடுருவலை எதிர்க்கத் தொடங்கியிருந்தனர். அரசு தாலிபானுக்கு எதிராக உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி, பாகிஸ்தானின் பல பகுதிகளிலும் ஆர்ப்பாட்டங்கள் நடைபெறத் தொடங்கின. அமைதி ஒப்பந்தத்தை ஆதரித்து வந்த அமெரிக்கா, புனேர் ஊடுருவலுக்குப் பிறகு நிலைமை கைமீறிப் போவதை உணர்ந்து, பாகிஸ்தான் அரசு தாலிபானுக்கு எதிராக இராணுவ நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்ற நிர்பந்தம் கொடுக்கத் தொடங்கியது. “இந்தியா பாகிஸ்தானை அச்சுறுத்தும் எதிரி கிடையாது; உள்நாட்டு தீவிரவாதிகள்தான் பாகிஸ்தானின் அபாயகரமான எதிரிகள்” என பாகிஸ்தானுக்குப் புதிய உபதேசத்தை வழங்கியது, அமெரிக்கா.


இத்தகைய உள்நாட்டு மற்றும் மேற்குலக நாடுகளின் நெருக்குதல்கள் ஒருபுறமிருக்க, வளர்த்த கடா மார்பில் பாய்ந்துவிடக் கூடாது என்பதையும், தாலிபானுக்கு எதிராக ஏதாவதொரு நடவடிக்கை எடுத்தால்தான் அமெரிக்காவில் இருந்து நிதியுதவி கிடைக்கும் என்பதையும் புரிந்து கொண்ட பாகிஸ்தான் அரசு, மிகவும் தாமதமாகத் தாலிபானுக்கு எதிரான இராணுவ நடவடிக்கைகளில் இறங்கியது. பாகிஸ்தானுக்குத் தனது பலத்தைப் புரிய வைத்த தாலிபான், புனேர் மாவட்டத்திலிருந்து தானே பின்வாங்கிக் கொண்டது.


அதேசமயம், அமைதி ஒப்பந்தம் நடைமுறையில் இருப்பதால் மாலாகண்ட் பகுதியில் பாகிஸ்தான் இராணுவம் தாக்குதால் நடத்தாது என எதிர்பார்த்தது. ஆனால், பாகிஸ்தானோ இஸ்லாமியத் தீவிரவாதத்திற்கு எதிராகத் தான் உறுதியான நடவடிக்கை எடுத்து வருவதைக் காட்டிக் கொள்வதற்காக மாலாகண்ட் பகுதியில் இராணுவத் துருப்புகளையும் ஆயுதங்களையும் குவித்துத் தாக்குதலை நடத்தி வருகிறது. இதனால் மாலாகண்ட் பகுதியைச் சேர்ந்த இலட்சக்கணக்கான மக்கள் தாங்கள் வாழ்ந்து வந்த பகுதியில் இருந்து வெளியேறி, உள்நாட்டிலேயே அகதிகளாக அலையும் அவலநிலை உருவாகியுள்ளது.


அமைதி ஒப்பந்தம் உருவாவதற்கு முன் மாலாகண்ட் பகுதியில் நடந்த சண்டையினால் வெளியேறிவர்கள், தற்போது வெளியேறி வருபவர்கள் என எல்லாமுமாகச் சேர்த்து ஏறத்தாழ 15 இலட்சம் மக்கள் மாலாகண்ட் பகுதியில் இருந்து வெளியேறி, பாகிஸ்தானின் பல்வேறு பகுதிகளில் அகதிகளாகத் தஞ்சம் அடைந்திருக்கலாம் என ஐ.நா. மன்றம் மதிப்பிட்டுள்ளது. வெளியேறிச் சென்றவர்களுள் 20 சதவீத மக்கள்தான் அகதி முகாம்களில் தஞ்சம் அடைந்துள்ளனர். மீதமுள்ள 80 சதவீத மக்கள் உறவினர்கள், நண்பர்களிடம் அடைக்கலம் அடைந்துள்ளதாகக் கூறப்படுகிறது.


அகதி முகாம் என்ற பெயரில் வெறும் துணிக் கூடாரத்தைத்தான் அமைத்திருக்கிறது, பாகிஸ்தான் அரசு. குடிநீர் வசதியற்ற, மின்சார வசதியற்ற, கழிப்பிட வசதியற்ற இம்முகாம்களில் நாங்கள் மிருகங்களைப் போல வாழ்ந்து வருவதாகக் குறிப்பிடுகிறார், அஸ்மத்துல்லா கான். ஏற்கெனவே திவாலாகிப் போய்விட்ட பாகிஸ்தான் அரசு, இந்த அகதி முகாம்களை இதற்கு மேல் “வசதியாக’’ப் பராமரித்துவிட முடியாது. பாகிஸ்தான் ஆளுங்கும்பலின் அமெரிக்க அடிவருடித்தனம், அமெரிக்கா ஊட்டி வளர்த்த இராணுவ சர்வாதிகாரம், முசுலீம் தீவிரவாதம் இவை ஒன்றோடொன்று கைகோர்த்துக் கொண்டும் போட்டி போட்டுக் கொண்டும் அந்நாட்டில் மிகப் பெரும் மனிதப் பேரழிவை மிகவும் அமைதியாக நடத்தி வருகின்றன என்பதே உண்மை.


தாலிபான்களைத் துடைத்துவிட்டுத் தான் மறுவேலை எனக் காட்டிக் கொள்வதற்காக, பாகிஸ்தான் அதிபர் ஆசிஃப் அலி ஜர்தாரி இத்தாக்குதலை பாகிஸ்தானின் ஆன்மாவை மீட்பதற்கான யுத்தம் எனப் பலமான பீடிகை போட்டு வருணித்து வருகிறார். ஆனால், முசுலீம் தீவிரவாத அமைப்புகளுக்கும், பாகிஸ்தான் அரசு, இராணுவம் மற்றும் அதன் சர்வதேச உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ.க் கும் இடையே இருந்து வரும் நெருக்கமான உறவுகளை வைத்துப் பார்க்கும்பொழுது அதிபர் ஜர்தாரியின் வார்த்தைகளை எவ்வளவு தூரத்திற்கு நம்ப முடியும் எனத் தெரியவில்லை.


இதற்கு ஆதாரமாக "அரசு முசுலீம் தீவிரவாத அமைப்போடு போட்டுக்கொண்ட அமைதி ஒப்பந்தத்தை ரத்து செய்யாமல் இருப்பது; இதுவரை இத்தாக்குதலில் 700க்கும் மேற்பட்ட தீவிரவாதிகள் கொல்லப்பட்டபோதும், பாகிஸ்தானில் பதுங்கிக்கொண்டு செயல்பட்டு வரும் பல்வேறு தீவிரவாத அமைப்புகளின் தலைவர்களைக் கைது செய்யாமல்கூட விட்டு வைத்திருப்பது; குறிப்பாக, ஆப்கான் மற்றும் பாகிஸ்தானைச் சேர்ந்த பல்வேறு தீவிரவாத அமைப்புகளின் புகலிடமாக இருக்கும் ஆப்கான் எல்லையையொட்டியுள்ள பழங்குடியினப் பகுதிகளை பாகிஸ்தான் அரசு கண்டு கொள்ளாமல் இருப்பது” ஆகியவற்றை பாகிஸ்தான் மக்களே சுட்டிக் காட்டுகின்றனர். ஒரு காலத்தில் பாகிஸ்தான் மக்களால் “சகோதரர்கள்” என அழைக்கப்பட்ட முசுலீம் தீவிரவாத அமைப்புகள் இன்று அம்மக்களால் கொலைகாரர்களாகப் பார்த்து வெறுக்கப்படுவதாக பாகிஸ்தான் பத்திரிகைகள் குறிப்பிடுகின்றன.


மாலாகண்ட் பகுதியைச் சேர்ந்த மக்கள் விரும்பியதால்தான் முசுலீம் தீவிரவாத அமைப்போடு ஒப்பந்தம் போட்டுக் கொண்டதாகவும், ஷரியத் நீதிமன்றங்களை அமைத்து வருவதாகவும் பாகிஸ்தான் அரசும் இராணுவமும் கூறி வருகின்றன. மாலாகண்ட் பகுதியைச் சேர்ந்த பழங்குடி இன மக்கள் பாகிஸ்தான் அரசின் மீதும், அதன் ஊழல் நிறைந்த நீதி பரிபாலன முறையின் மீதும் கொண்டிருந்த வெறுப்பை பாகிஸ்தான் அரசும் இராணுவமும் முசுலீம் தீவிரவாத அமைப்புகளும் தங்களுக்குச் சாதகமாக்கிக் கொண்டன என்பதே உண்மை.


வடமேற்கு எல்லைப்புற மாநிலத்தை ஆண்டு வரும் அவாமி கட்சி இராணுவத்தின் நிர்பந்தத்தின் காரணமாகத்தான் முசுலீம் தீவிரவாதிகளோடு ஒப்பந்தம் போட்டுக் கொண்ட உண்மையைப் போட்டு உடைத்து விட்டது. “பாகிஸ்தான் இராணுவம் முசுலீம் தீவிரவாத அமைப்புகள் தனது அதிகாரத்தைக் கேள்விக்குள்ளாக்கும் அளவிற்கு வளர்ந்து விடவில்லை எனக் கருதுவதால்தான், தாலிபான் புனேர் மாவட்டத்திற்குள் ஊடுருவியதைப் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை” என பாகிஸ்தான் பத்திரிகைகள் குற்றஞ்சுமத்தி வருகின்றன.


பாகிஸ்தானின் ஆளும் கும்பல்களுள் ஒன்றான பெரும் நிலப்பிரபுக்களுக்கும் முசுலீம் மத குருமார்களுக்கும் இடையே இருந்து வரும் நெருக்கமான பிணைப்பு; பாகிஸ்தானின் இராணுவம் மற்றும் ஐ.எஸ்.ஐ.க்கும் பல்வேறு முசுலீம் தீவிரவாதக் குழுக்களுக்கும் இடையே இருந்து வரும் உறவு; அமெரிக்காவாலும், பாகிஸ்தானின் ஆளும் கும்பலாலும் பாகிஸ்தான் சமூகம் கடந்த இருபது ஆண்டுகளுக்கும் மேலாக முசுலீம் மத அடிப்படைவாத சித்தாந்தம் மற்றும் அரசியலுக்குள் மூழ்க வைக்கப்பட்டிருப்பது; பாகிஸ்தானின் உற்பத்தித் தேங்கிப்போய் அதனால் அம்மக்களைப் பிடித்தாட்டும் வறுமை; இவ்வறுமையின் காரணமாக மதரஸாக்கள் போதித்துவரும் கல்வியைத் தவிர, வேறெந்த சீர்திருத்தக் கருத்துக்களுக்கோ, முற்போக்குக் கருத்துக்களுக்கோ ஆட்படாத பாகிஸ்தானின் அடித்தட்டு மக்கள்; அமெரிக்கா ஆப்கானில் நடத்தி வரும் மேலாதிக்கத் திமிர் பிடித்த போர்; இப்போரை பல்வேறு முசுலீம் தீவிரவாத அமைப்புகள் எதிர்த்துப் போராடி வருவது — இவை காரணமாக பாகிஸ்தான் இராணுவம் முசுலீம் தீவிரவாத அமைப்புகளுக்கு எதிராக ஒப்புக்காக நடத்தும் தாக்குதல்கள்கூட, முசுலீம் தீவிரவாத அமைப்புகளை மேலும் மேலும் பலப்படுத்தும் எதிர்மறையான விளைவுகளைத்தான் ஏற்படுத்துகின்றன.


அமெரிக்க மறுகாலனியாதிக்க எதிர்ப்பையும், நாட்டின் ”தந்திரத்தையும், ஜனநாயகத்தையும், மதச்சார்பின்மையையும் குறிக்கோள்களாகக் கொண்டு நடத்தப்படும் மக்கள்திரள் புரட்சிகரப் போராட்டங்களின் மூலம் மட்டும்தான் பாகிஸ்தானைப் பீடித்திருக்கும் எல்லா துயரங்களையும் துடைத்தெறிய முடியும். மாறாக, சட்ட வரம்புகளுக்கு உட்பட்ட சீர்திருத்தப் போராட்டங்களினால்கூட இந்த அவலங்களை ஒழித்துக்கட்ட முடியவில்லை என்பதைத்தான் பாகிஸ்தானின் வரலாறு நமக்கு உணர்த்துகிறது.

 

பெரும்பான்மையான பாகிஸ்தான் மக்கள் முசுலீம் மதத்தைச் சேர்ந்தவரகள் என்பதும், அந்நாட்டு அரசு ஒரு மதவாத அரசு என்பதும் பெரும்பான்மையான இந்திய மக்களுக்குத் தெரிந்த உண்மைதான். எனினும், பாகிஸ்தான் மக்களுள் ஒரு சாரார் முசுலீம் தீவிரவாத அமைப்புகளுக்கு எதிராகப் போராடி வருகின்றனர். ஆனால், இந்தியாவிலோ, குஜராத் இனப் படுகொலையை நடத்திய பிறகும் ஆர்.எஸ்.எஸ். பரிவார அமைப்புகளை எந்தவொரு முதலாளித்துவப் பத்திரிகையும் பயங்கரவாத அமைப்பாகச் சுட்டிக்காட்ட மறுத்து வருகின்றன. ‘இந்து’ எனச் சொல்லிக் கொள்ளும் மக்களுள் பெரும்பான்மையோர் ஆர்.எஸ்.எஸ். கும்பலைப் பயங்கரவாதிகளாகப் பார்க்க மறுக்கின்றனர். இன்னும் சொல்லப்போனால், பாகிஸ்தான், முசுலீம்கள் ஆகியோர் பற்றி ஆர்.எஸ்.எஸ். பரப்பிவரும் நச்சுக் கருத்துக்கள்தான் பெரும்பான்மையான ‘இந்து’ மக்களின் பொதுப் புத்தியாக இருந்து வருகிறது. அந்த வகையில் நாம் பாகிஸ்தானைப் பார்த்து வெட்கங்கொள்ளத்தான் வேண்டும்!


கட்டுரையாளர்: குப்பன்