பதினைந்தாவது நாடாளுமன்றத்திற்கு நடைபெற்ற தேர்தலில் போட்டியிட்ட எந்தவொரு கூட்டணியும் தங்களுக்கு இப்படியொரு வெற்றி கிடைக்குமென்றோ அல்லது தோல்வி கிடைக்குமென்றோ கனவிலும் நினைத்துப் பார்த்திருக்க மாட்டார்கள்.

அத்வானி, மாயாவதி, ஜெயலலிதா ஆகியோரின் பிரதமர் கனவு கானல் நீராகிவிட்டது. மூன்றாவது அணிக்குத் தலைமை தாங்கிய ‘மார்க்சிஸ்டு’ கட்சி அதன் கோட்டையிலேயே கலகலத்து விட்டது. 200 தொகுதிகளில்தான் வெற்றிபெறும் எனக் கணிக்கப்பட்டிருந்த காங்கிரசு கூட்டணி 262 தொகுதிகளில் வென்றிருக்கிறது. தொங்குநிலை நாடாளுமன்றமும் குதிரை பேரமும்தான் தேர்தலின் முடிவாக இருக்கும் என்ற எதிர்பார்ப்புகளுக்கு மாறாக, காங்கிரசு கூட்டணி நிலையான ஆட்சியை எளிதாக அமைத்துவிட்டது.


வேலைவாய்ப்பின்மை, விலைவாசி உயர்வு, விவசாய நசிவு உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியில் தலைவிரித்தாடின. இதே பிரச்சினைகளை எதிர்கொள்ளும் இலத்தீன் அமெரிக்க மக்கள், தங்கள் நாடுகளில் நடந்த தேர்தல்களில் ‘இடதுசாரி’ கட்சிகளைத் தேர்ந்தெடுத்து ஆட்சியில் அமர்த்தி வருகின்றனர். இதே பிரச்சினைகளை எதிர்கொள்ளும் ஐரோப்பிய மக்கள் முதலாளித்துவம் ஒழிக என முழங்கி வருகின்றனர். ஆனால், இந்தியாவிலோ தனியார்மயத்திற்கு மாற்று வேறில்லை எனக்கூறி வரும் மன்மோகன் சிங் வெற்றி பெற்றிருக்கிறார். இந்த “வரலாற்றுப் பிழை”க்கு யாரைப் பொறுப்பாக்குவது?


பா.ஜ.க.வின் ஆதரவு ஏடான இந்தியா டுடே அக்கட்சியின் தோல்வி குறித்து எழுதும்பொழுது, “இந்துத்துவமும் கோவில் கட்டும் கோஷங்களையும் தவிர, அதனிடம் புதிய திட்டங்கள் எதுவும் இல்லை” என அக்கட்சி திவாலாகிப் போயிருப்பதை இடித்துக் காட்டியுள்ளது. அ.தி.மு.க. என்ற கொள்ளைக்கூட்டத்தின் தலைவியான ஜெயலலிதா வாக்காளர்கள் விலை போய்விட்டதாகக் கூறி, மக்களைக் குற்றவாளியாக்குகிறார். தமிழகத்தைச் சேர்ந்த போலி கம்யூனிஸ்டுகளும் இதற்கு ஒத்தூதுகின்றனர். இதைக் கேட்கும்பொழுது, “தவறே செய்யாதவன் இவள் மீது கல்லை வீசட்டும்” என இயேசுநாதர் ஒரு விபச்சாரிக்காகப் பரிந்து பேசிய வசனம்தான் நம் நினைவுக்கு வந்து போகிறது.


ஓட்டுக் கட்சிகளிடையே எந்தவொரு வேறுபாடும் கிடையாது என்பதை மக்கள் பாமரத்தனமாகவேனும் புரிந்து வைத்துள்ளார்கள். சிங்குரிலும், நந்திகிராமிலும் மார்க்சிஸ்டுகள் ஆடிய வெறியாட்டத்தைக் கண்ட மக்கள், அக்கட்சியைத் தங்களின் இரட்சகனாக ஏற்றுக் கொள்வார்களா? உலக வங்கியின் அடிவருடிகள் என அம்பலப்பட்டுப் போன சந்திரபாபு நாயுடுவையும், நவீன் பட்நாயக்கையும், ஜெயலலிதாவையும்தான் மன்மோகன் சிங்குக்கு மாற்றாக மக்கள் முன் நிறுத்தினார்கள், மார்க்சிஸ்டுகள். நயவஞ்சகமான மூன்றாவது அணியா அல்லது காங்கிரசு கயவாளிகளா என்ற கேள்விக்கு மக்கள் பின்னதைத் தேர்ந்தெடுத்துவிட்டனர்.


···


தி.மு.க.வைச் சேர்ந்த டி.ஆர்.பாலுவையும், ஆ.ராசாவையும் புதிய அரசாங்கத்தின் அமைச்சரவையில் சேர்த்துக் கொள்ளப் போவதில்லை என்ற செய்தியைக் கசியவிட்டதன் மூலம், காங்கிரசு தூய்மையான ஆட்சியை அமைக்க விரும்புவதாகப் பிரச்சாரம் செய்யப்பட்டது. காங்கிரசின் இந்தத் ‘தூய்மையான’ ஆட்சி மக்களின் குறைந்தபட்ச எதிர்பார்ப்புகளைக்கூட நிறைவேற்றிக் கொடுக்குமா என்ற சந்தேகம் முளையிலேயே தெரிகிறது.


புதிய அமைச்சரவையின் நிதியமைச்சராக மாண்டேக் சிங் அலுவாலியாவை நியமிக்க மன்மோகன் சிங் விரும்பியிருக்கிறார். நாடாளுமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்படாத அலுவாலியாவை நிதியமைச்சராக்க மன்மோகன் விரும்பியதற்குக் காரணம், அலுவாலியா உலக வங்கியில் அதிகாரியாகப் பணியாற்றியவர்; கடந்த ஐக்கிய முற்போக்குக் கூட்டணியில் அலுவாலியா திட்டக் கமிசனின் துணைத் தலைவராக இருந்தபொழுது, தேசிய ஊரக வேலைவாய்ப்பு உத்தரவாதத் திட்டத்திற்கும், கல்விக்கும் மைய அரசு அதிகமாக நிதி ஒதுக்கீடு செய்வதை எதிர்த்தவர். இப்படிபட்டவரை நிதியமைச்சராக்கினால் ஆட்சியின் இலட்சணம் அம்மணமாகத் தெரிந்துவிடும் என்பதால்தான் பிரணாப் முகர்ஜி நிதியமைச்சர் ஆக்கப்பட்டுள்ளார்.


எனினும், அலுவாலியாவை பொதுத்துறை நிறுவனங்களின் பங்குகளைத் தனியார் முதலாளிகளுக்குத் தாரை வார்க்கும் அமைச்சராக்கி விடலாம் எனச் சமரச முடிவு எடுக்கப்பட்டிருப்பதாகச் செய்திகள் வெளிவருகின்றன. வாஜ்பாயி ஆட்சியின்பொழுது இயங்கிய இத்துறை, கடந்த ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியில் ஓரமாக ஒதுக்கி வைக்கப்பட்டிருந்தது என்பதை இங்கு குறிப்பிட வேண்டும்.


புதிய அரசாங்கம் விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்துவது பற்றிச் சிந்தித்தாகத் தெரியவில்லை. அதற்கு நேரெதிராக, அரிசி ஏற்றுமதிக்கு விதிக்கப்பட்டிருந்த தடையை நீக்கவும், முன்பேர வர்த்தகத்தில் கோதுமை இடம் பெறுவதற்கு விதிக்கப்பட்டிருந்த தடையை நீக்கவும் ஆர்வமாக இருப்பதாகக் கூறப்படுகிறது. மேலும், 40 பொதுத்துறை நிறுவனங்களின் பங்குகளைத் தனியாருக்கு விற்பது, சுரங்கத் தொழிலில் தனியாரை அனுமதிப்பது, அரசுத் துறை வங்கிகளை ஒன்றிணைப்பது, காப்பீடு துறையில் அந்நிய மூலதனம் நுழைவதற்கு விதிக்கப்பட்டுள்ள வரம்பைத் தளர்த்துவது, சில்லரை வணிகத்தில் அந்நிய முதலீட்டை அனுமதிப்பது ஆகிய சீர்திருத்த நடவடிக்கைகள் ஒன்றன்பின் ஒன்றாகப் பாயும் என்றும் செய்திகள் வெளிவந்துள்ளன. தரகு முதலாளிகள் பத்திரிகைகள் வாயிலாக என்னென்ன ஆலோசனைகளை வழங்கி வருகிறார்களோ, அவைதான் புதிய அரசாங்கத்தின் கொள்கைகளாக இருக்கின்றன என்பதற்கு இவையெல்லாம் சாட்சிகளாக உள்ளன.


எட்டு சதவீத வளர்ச்சியை மீண்டும் எட்டிப் பிடிப்பதற்கு இச்சீர்திருத்தங்களை உடனே செய்ய வேண்டியது அவசியம் எனச் சாக்குச் சொல்லப்படுகிறது. எட்டு சதவீத ‘வளர்ச்சி’ இருந்த கால கட்டத்திலும் விவசாயிகளின், நகர்ப்புற கூலித் தொழிலாளர்களின் வாழ்க்கை சகிக்க முடியாததாகத்தானே இருந்தது?


இதுவொருபுறமிருக்க, இப்புதிய அரசாங்கம் ஓட்டுக்கட்சித் தலைவர்களின் வாரிசுகளாலும் நிரம்பி வழிகிறது. ஈழத் தமிழர்களுக்காக ஒருமுறையேனும் காங்கிரசை மிரட்டாத கருணாநிதி, தனது வாரிசுகளுக்காக காங்கிரசை மிரட்டிப் பதவிகளை அள்ளியிருக்கிறார். மூத்த மகனுக்கும் இளைய மகனுக்கும் இடையே அதிகாரப் பகிர்வைப் பூசல்களுக்கு இடமின்றி முடித்துவிட்ட மகிழ்ச்சியில் திளைத்துப் போயிருக்கிறார், மு.க. கூச்சநாச்சமற்று நடந்த இந்த பேரத்தை தமிழகம் அமைதியாகச் சகித்துக் கொண்டிருப்பது வெட்கக்கேடானது.


ஜம்மு காஷ்மீரின் பரூக் அப்துல்லா, அவரது மருமகனும் இறந்து போன காங்கிரசு தலைவர் ராஜேஷ் பைலட்டின் மகனுமான சச்சின் பைலட், இறந்து போன காங்கிரசு தலைவர் மாதவ்ராவ் சிந்தியாவின் மகன் ஜோதிராதித்யா சிந்தியா, தேசியவாத காங்கிரசு கட்சியின் தலைவர் பி.ஏ. சங்மாவின் மகள் அகதா சங்மா என பதவிகளைப் பிடித்த வாரிசுகளின் பட்டியல் நீளமானது.


வாரிசுகளால் மட்டுமின்றி கோடீசுவரர்களாலும் நிரம்பி வழிகிறது நாடாளுமன்றமும் அமைச்சரவையும். மன்மோகன் சிங் அரசில் இடம் பெற்றுள்ள 79 அமைச்சர்களில் 47 பேர் கோடீசுவரர்கள். தேர்ந்தெடுக்கப்பட்ட 543 நாடாளுமன்ற உறுப்பினர்களுள் கிட்டதட்ட 300 உறுப்பினர்கள் கோடீசுவரர்கள்.


இப்புதிய அரசாங்கத்தை வாரிசுகளும், கோடீசுவரர்களும், உலக வங்கியின் அடிவருடிகளும்தான் குத்தகைக்கு எடுத்துள்ளனர் என்பது அப்பட்டமாகவே தெரிகிறது. இதனை மூடிமறைப்பதற்காகவே, தூய்மையான அரசாங்கம், செயல்படும் அரசாங்கம், நிலையான அரசாங்கம் என்ற வார்த்தை ஜாலங்களை காங்கிரசு கும்பலும் முதலாளித்துவ பத்திரிகைகளும் அள்ளி வீசிவருகின்றன.


கட்டுரையாளர்: கீரன்

 

புதிய ஜனநாயகம், ஜூன்'2009,