இந்தியன் எக்ஸ்பிரஸ் ஆசிரியரான சேகர் குப்தாவிற்கு, என்.டி.ரி.வி.யின் “வோக் த ரோக்" நிகழ்ச்சியில் பேரினவாதியான மகிந்த ராஜபக்ஷ பேட்டியளித்தபோது தான், 100 உட்பட்ட பொதுமக்களே யுத்தத்தில் இறந்ததாக கூறுகின்றார். மக்களைக் கொன்று குவித்துவிட்டு,  பாசிட்டுகளுக்கே உரிய கொழுப்புடன் பதிலளிக்கின்றான்.

இப்படி ஒரு பொய்யான, ஒரு புரட்டு பேர்வழி, ஒரு நாட்டின் ஜனாதிபதி. இவர்கள் எல்லாம் நேர்மையாக நாட்டை ஆள்வார்கள்!, இனப்பிரச்சனையை தீர்ப்பார்கள்!? தமிழ்மக்களை குத்தகைக்கெடுத்த அடாவடித்தனத்துடன் 'தமிழ் மக்களை பாதுகாப்பது எனது கடமையும் பொறுப்பும்" என்று தமிழ் வர்த்தகர்கள் முன் பேசுகின்றான். தமிழ் மக்களைக் கொன்று குவித்த இரத்தக்கறை மறைய முன், வெளிப்படும் திமிர். கொல்வது, பாதுகாப்பது எல்லாம், பாசிச சர்வாதிகாரத்தின் கீழ் அடங்கி ஓடுங்கி விடுகின்றது.

 

புலிப் 'பயங்கரவாதத்தில்" இருந்து நாட்டை மீட்ட கதையிது. இப்படி மக்களுக்கு விடுதலை தந்தவர்கள் என்று சொல்லியே, நம்பவைத்து தாலியை அறுக்கின்ற 'ஜனநாயக" அரை லூசுகள்தான், இந்த பாசிட்டுகளின் இன்றைய அடியாட் கும்பல்கள்.

 

100க்கு உட்பட மக்கள்தான் கொல்லப்பட்டனர் என்று சொல்லுகின்ற, பேரினவாத பாசிசத் திமிர், இது அந்த பாசிசத்துக்கே உரியது. புலிகள் தம் தலைவர் சாகவில்லை என்று கூறுவது போன்றது. தமிழ்மக்களை பணயக்கைதியாக வைத்திருந்தபடி அவர்களை எமலோகத்துக்கு கொத்துகொத்தாக அனுப்பிய புலிகள், எமது மக்கள் எம்முடன் இருந்து சாக விரும்புவதாக கூறியது போன்றதே இது. 

 

எல்லாப் பாசிட்டுகளும், இப்படித் தான் தம் உண்மைகளை போட்டு உடைக்கின்றனர். பேரினவாதம் நடத்திய இனவழிப்பு யுத்தத்தில் அண்ணளவாக 10000 முதல் 20000 மக்கள் கொல்லப்பட்டனர். அண்ணளவாக 25000 முதல் 35000 மக்கள் காயமடைந்தனர். நாட்டை ஆளுகின்ற ஒரு கொலைகார பேரினவாத ஜனாதிபதிக்கு, இது மட்டும் தெரிந்திருக்கவில்லை. 15000 மேற்பட்ட காயமடைந்த பொது மக்களை, செஞ்சிலுவைச் சங்கம், கப்பல் கப்பலாக ஏற்றி இறக்கிய அந்த உண்மையும் இந்த பாசிட்டுக்கு தெரிந்திருக்கவில்லை. அந்தக் கப்பல் காயமடைந்தவர்களை ஏற்றிவரும் போதே, 100 பேரளவில் இறந்து போனார்கள் என்ற உண்மை கூட, தெரிந்திருக்கவில்லை. அரச மருத்துவமனையில் வைத்து 100 மேற்பட்டவர்கள் இறந்தது கூட தெரிந்திருக்கவில்லை. இவர் தான், நாட்டின் அதியுத்தம ஜனாதிபதி. 

 

எப்படி முக்கினாலும், என்னதான் உலகம் கண்ணை மூடிக்கொண்டாலும், இனவழிப்பு செய்த போர் குற்றத்தை யாரலும் மூடிமறைக்க முடியாது. உன் பாசிச அதிகாரத்தால், அந்த உண்மையைப் புதைக்க முடியாது.

 

1. உன் இனவழிப்புக் குற்றத்தை மறைக்க, மருத்துவர்களை நீ சிறையில் அடைக்கலாம். வாயை மூட வைக்கலாம்;. நாளை விலைக்குக் கூட நீ வாங்கலாம். நீ செய்த இனவழிப்பு இதனால் இல்லாமல் போய்விடாது.

 

2. உன் இனவழிப்பு குண்டுமாரியில் இனத்தை அழித்தது போக, எஞ்சியவரை நீ திறந்தவெளிச் சிறைகளில் அடைக்கலாம். அவர்களின் வாயை உன் பாசிசம் மூலம் ஊமையாக்கலாம். ஆனால், நீ இனவழிப்பு செய்ததும், மக்களை கொன்றதும் இல்லையென்றாகிவிடாது.

 

3. உண்மைகளை மூடிமறைக்க, அன்னிய நாட்டு தன்னார்வக் குழுக்களை நீ வெளியேற்றலாம். இதன் மூலம் இனவழிப்பு செய்த குற்றத்தை உலகம் அறியாத வண்ணம் மூடிமறைக்கலாம் என்று, உன் பாசிசம் நம்புகின்றது. இதனால் உண்மை என்றும் பொய்யாகிவிடாது.

 

4. உன் இனவழிப்பு பேரினவாத பாசிசத்தை நாட்டு மக்கள் அறியாத வண்ணம் தடுக்க, ஊடகவியலாளர்களை தாக்கியும் கொன்று உன் குற்றங்களை மூடிமறைக்கலாம் என்று நீ நம்புகின்றாய். ஆனால் அது உன்னால் முடியாது.

 

5. குற்றம் நடந்த இடத்தை, வெளியார் சென்று பார்க்கமுடியாத வண்ணம் தடுக்கலாம். குற்ற அடையாளங்களை, குற்றம் செய்தவர்களைக் கொண்டு நீ இல்லாததாக்கலாம். இதனால் இந்த உண்மை ஒருநாளும் புதைந்து விடுமா? 

 

6. வெள்ளைக்கொடியுடன் சரணடைந்தவரைக் கொன்ற போர்க்குற்றத்தை நீ மறைக்கலாம்;. பிழைத்து வாழும் புலிகள், சுயநலத்துடன் அதை மூடிமறைக்கலாம். இதனால் இந்த குற்றம் பொய்யாகிவிடாது. 

 

7. நீ விரும்புகின்றாய், 100 க்கு உட்பட்ட மக்கள் தான், உனது இந்த இனவழிப்பு யுத்தத்தில் இறந்ததாக அனைவரும் சொல்ல வேண்டும் என்று. இதற்காக நீ செய்யும் பாசிசக் கூத்துகள் கூட, மற்றொரு யுத்தக் குற்றம்தான்.

 

இனவழிப்பு நீங்கள் நடத்தவில்லை என்றால், சில பத்தாயிரம் மக்களை நீங்கள் கொல்லவில்லை என்றால், கனரக ஆயுதத்தை நீங்கள் பயன்படுத்தி இனத்தை அழிக்கவில்லை என்றால், நீங்கள் இதில் குற்றவாளிகளல்லத்தான். இதை நீ வெளிப்படையாக நிறுவ முன்வரவேண்டும். ஒரு சர்வதேச நீதி விசாரணைக்கு, இதை நீ உட்படுத்த வேண்டும். உன் நேர்மை அதில் தான் உள்ளது. இதை மறுக்கும் நீ, அதை மூடிமறைக்க, உன் பாசிசத்தை இதன் மேல் மீளமீள ஏவுகின்றாய். இது எதைக் காட்டுகின்றது. இனவழிப்பு குற்றத்தை நீ செய்தாய் என்பதை;தான். இதுவே இதில் வெளிப்படையான உண்மையாகின்றது. இன்று இந்த இனவழிப்பும், அதை முன்னின்று நடத்திய குற்றவாளிகளின் அதிகாரமும், பாசிசமாக படமெடுத்தாடுகின்றது. பொய்கள், புனைவுகள், புரட்டுகள், பேரினவாத ஜனாதிபதியின் பாசிச மொழியாகின்றது. அதைத் தமிழிலும் கொட்டித் தீர்க்கின்ற போது, பாசிசம் வக்கிரமாகின்றது.   

  

பி.இரயாகரன்
06.06.2009