ஒடுக்குமுறையாளர்கள் அனைவருக்கும் நோக்கம் ஒன்று தான்.
இன்னொரு தேசமாகவே வாழ்கிறவர்கள்.
ஒடுக்கப்பட்டவர்களிடையிலான இந்த உறவு பற்றி
ஈழத்துக்கவிஞர் சிவசேகரம்
'ஒன்றைப்பற்றி சொல்வது தொடர்பாக'
எனும் தலைப்பில் ஒடுக்குகிறவன்
ஒடுக்கப்படுகிறவனுடைய இயங்கியலை
அருமையாக கவிதையாக்கியுள்ளார்.
விரைவில் அந்த கவிதையை இங்கு பதிகிறேன்.
மனிதன் ஒருவன் குறித்து
என்கிற கீழ் உள்ள கவிதை
பாலத்தீன கவிஞர் மொஹமத் தார்வீக்ஷ்
தனது தாய் தேசத்தின் மீதான
ஒடுக்குமுறையை எதிர்த்து எழுதிய
கவிதையாகும்.
ஒடுக்கப்படுகின்றவனுக்கு உலகில் ஒடுக்கப்படும் தேசம் அனைத்தும்
தன் தாய் தேசமே எனும் வகையில் இக்கவிதை ஈழத்திற்கும் பொருந்தும்.
இதை சிவசேகரம் மொழிபெயர்த்துள்ளார்
25 கவிதைகளும் 500 கமாண்டோக்களும்
என்கிற கவிதை தொகுப்பிலிருந்து இது இங்கு பயன்படுத்தப்படுகிறது.
அவன் உதடுகளின் மீது
விலங்குகளைப் பூட்டினார்கள்
சாவுப்பாறையில் இறுகக்கட்டினர்கள்.
பிறகு சொன்னார்கள்
நீ ஒரு கொலைகாரன்.
அவனுடைய உணவைப் பறித்தார்கள்
ஆடைகளை,
அவனது பதாகைகளைப் பறித்தார்கள்.
சாவுக் கிடங்கில் அவனை வீசினார்கள்.
பிறகு சொன்னார்கள்
நீ ஒரு திருடன்.
எல்லா நிலைகளன்களிலிருந்தும்
அவனை நெட்டித்தள்ளினார்கள்.
அவனது உயிராயிருந்த காதலியை
சின்னஞ்சிறு பெண்னை
இழுத்துப் போனார்கள்.
பிறகு சொன்னார்கள்
நீ ஒரு அகதி.
உனது எரியும் விழிகளுக்கும்
இரத்தம் உறைந்த கைகளுக்கும் சொல்
இரவு போய்க் கொண்டிருக்கும்
சிறைச்சாலையில்லை
விலங்குகளேதும் நிலைத்திருக்காது
நீரோ செத்துப்போனான்
ஆனால்
ரோம் சாவதில்லை.
தனது விழிகளோடு ரோம் தாய் தேசம்
போராடியது.
செத்துக்கொண்டிருக்கும்
கோதுமைக்கதிரின் விதைகள்
லட்சோபலட்சம் பசுங்கதிர்களாக
இந்த பூமி வெளியை நிரப்பும்.
-மொஹமத் தார்வீக்ஷ்