நேற்றிரவு
ஒரு திரைப்படம் கண்டு அழுதேன்.
உங்களால்
அழ மட்டுமே
முடியுமெனும்போது,
நீங்கள் அழுகிறீர்கள்.
கடந்த வாரம்
ஒரு புத்தகத்தை


பாதியில் மூடி வைத்தேன்.
அதன் பக்கங்கள் உண்டாக்கிய வலியில்
முழுமையும் படிப்பது
சாத்தியப்படவில்லை.
கசப்புணர்வு…
இயலாமை…
எனது தாயகத்தில்
விஷயங்கள்
விபரீதமாகிக் கொண்டிருக்கின்றன.
புலம்புவதைத் தாண்டி
நான் அதிகம் செய்வதில்லை.
நிலையெடுப்பதும் எளிதில்லை.
இவ்வுலகத்தை
சிறந்ததாகவும்,
சுதந்திரமானதாகவும் மாற்றுவது
பின்விளைவுகள் கொண்டது.
அதனால்தான்,
எங்கோ ராய்ப்பூர் ஜெயிலில்
இரக்கத்திற்காக
ஒரு மனிதன் சிறைப்பட்டிருக்கிறான்.

கால்கள் வளைந்தகன்ற
ஒரு சிறுமியைக் கண்ணுற்றேன்.
அவளுக்கு
எட்டு அல்லது ஒன்பது வயதிருக்கலாம்.
அவளது இடுப்பிலொரு குழந்தை…
அவள் எனது கரங்களைத் தொட்டு,
பின்னர் தனது உதடுகளை தொடுகிறாள்.
இந்த தினசரித் தீண்டலில்
நான் அவளை அறிவேன்.
அவளுக்கு எனது கரங்கள் பிடிக்கும்.
எனது வாட்சை அவள் வருடுகிறாள்.
அவள் வினவுகிறாள்.
இன்றாவது ஏதாவது தருவாயா,
அல்லது நாளை…
நான் முடியாதென்றேன்.

 

மீண்டும் கேட்காதே,
நான் எதுவும் தரப் போவதில்லை.
நீ பசியோடிருப்பதை
என்னிடம் சொல்லாதே.
ஏனென்றால்,
இரண்டு வருடங்களாய்
ராய்ப்பூர் ஜெயிலில்
இரக்கத்திற்காக
ஒரு மனிதன் சிறைப்பட்டிருக்கிறான்.

கைகள் துண்டிக்கப்பட்ட மனிதர்கள்
தெருக்களில் காத்திருக்கிறார்கள்.
உன்னிடம் அவமான உணர்ச்சியை
திணிக்கும் வண்ணம்,
அவர்கள் ஊர்ந்து வருகிறார்கள்.
நீ காசை வீசுகிறாய்,
ஆனால்
எல்லா சமயங்களிலுமல்ல.
அவர்கள்
உன்னிடம்
அதனை எதிர்பார்ப்பதுமில்லை.
இது போன்றவற்றில்
சரியானவை என ஏதுமில்லை.
இந்த நாட்டை
நீ சரிசெய்ய வேண்டுமெனக் கோருவதற்கு,
மக்களை இருளிலிருந்து
வெளிக்கொணரக் கோருவதற்கு,
யாருக்கும் உரிமையில்லை.
உனக்கொரு வாழ்க்கையிருக்கிறது,
அதனால் நீ அஞ்சுகிறாய்.
அஞ்சாமலிருப்பதும் சாத்தியமில்லை.
ஏனென்றால்,
எங்கோ ராய்ப்பூர் ஜெயிலில்
இரக்கத்திற்காக
ஒரு மனிதன் சிறைப்பட்டிருக்கிறான்.


தொலைக்காட்சியில்
இரு பெண்கள் பேசுவதைக் கேட்டேன்.
ஒரு வாரம் அதையே
பத்திரிக்கைகள் பேசக் கேட்டேன்,
ஆண்டுக்கணக்கில்
சொந்த வீட்டில் நடந்த
வன்புணர்ச்சி குறித்து…
நாம் இதுகுறித்து
தொலைபேசியில் உரையாடினோம்.
சொந்த குடும்பத்திற்குள்ளேயே
பாலியல் வன்முறை…
இந்த விசித்திர மிருகம்…
விருந்தாளியல்ல.
விபரீதம்
உனது சொந்தப் படுக்கையில்
உறங்கும் பொழுது
விலகியோட திசையேது?
ஒரு குழந்தை எப்படித் தப்பும்?
பின்னர் விடுதலையடையும் பொழுதில்,
எங்கிருந்து,
எப்படித் துவங்கும்?
மேலும்,
எங்கோ ராய்ப்பூர் ஜெயிலில்
இரக்கத்திற்காக
ஒரு மனிதன் சிறைப்பட்டிருக்கிறான்.

இன்றிரவு ஒரு ஒளிக்குறுந்தகடு பார்ப்பேன்.
இனிமையானதும்,
வருத்தமானதுமானதுமான ஒரு கதை…
இறந்தவர்களுக்காகவும்,
கடந்தவர்களுக்காகவும்,
உண்மைகள் தோற்கும்
நமது காலங்களுக்காகவும்,
நான் கண்ணீர் வடிப்பேன்.
ஆனால் கூக்குரலிடக் கூடாதென்பதை
நான் நினைவில் கொள்வேன்.
அடங்காத கோபம் குறித்தும்,
தாங்கொணாத வலி குறித்தும்,
இரத்தம் குறித்தும், சல்லாத்துணி குறித்தும்
ஓலமோ, கூச்சலோ
சப்தத்தின் எந்தச் சுவடும்
என்னிடமிருந்து எழும்பாது.
ஏனெனில்,
நிறைய காதுகள் சுற்றியிருக்கின்றன.
ஆனால்,
எங்கோ ராய்ப்பூர் ஜெயிலில்
இரக்கத்திற்காக
ஒரு மனிதன் சிறைப்பட்டிருப்பதை
குறைவான கண்களே பார்க்கின்றன.

யார் என்று நாமனைவரும் அறிந்த ஒருவருக்காகவே இதனை எழுதினேன். ஆனால், பெரும்பாலும் இரக்கத்தின் குற்றத்தை புரிந்து கொள்ளும் ஒரு முயற்சி மட்டுமே.

ஆங்கில மூலம்: ஆனி ஜெய்தி

http://porattamtn.wordpress.com/about/