ஆஸ்திரியா நாட்டின் தலைநகர் வியன்னாவில் ஒரு சீக்கிய குரு கொல்லப்பட்டதையடுத்து பஞ்சாப் முழுவதும் பெரும் கலவரம் நடப்பதாகவும் இது சீக்கிய இனத்தின் எழுச்சியாகவும் பலரால் தவறாக புரிந்து கொள்ளப்பட்டிருக்கிறது. உண்மையில் இந்தக் கலவரம் சீக்கிய மக்களிடம் உள்ள தாழ்த்தப்பட்ட மக்களின் போராட்டம் என்பதும் பலருக்கு தெரியாத ஒன்று.

சீக்கிய மதம் கோட்பாடு ரீதியாக பார்ப்பனிய இந்து மதத்தின் சாதியத்தை எதிர்க்கிறது என்றாலும் நடைமுறையில் இங்கும் சாதி பலமாக வேர்விட்டிருக்கிறது. பக்தி இயக்கத்தைச் சேர்ந்த குரு ரவிதாஸை தங்களது முன்னோடியாக தலித் சீக்கியர்கள் கருதுகின்றனர். இந்தப் பார்வையில் உருவானதுதான் தேரா சச் காந்த் எனும் சீக்கிய மதப்பிரிவு. பஞ்சாப் முழுவதும் செல்வாக்கோடு இருக்கும் இந்தப் பிரிவில் தாழ்த்தப்பட்ட சீக்கியர்களே பின்பற்றுபவர்களாக உள்ளனர்.

ஆனால் இந்தப் பிரிவை மேல்சாதி சீக்கியர்கள் ஏற்றுக் கொள்வதில்லை. ஜாட் முதலான மேல்சாதி சீக்கியர்கள் இன்றும் தாழ்த்தப்பட்ட சீக்கியர்களை சமூகரீதியாக அடக்கியே வாழ்கின்றனர். மேலும் தேரா சச் காந்த் பிரிவில் குருநாதர்கள் இப்போதும் உண்டு. இதற்கு மாறாக மைய நீரோட்ட சீக்கியப் பிரிவில் வாழும் குருநாதர்கள் இல்லை. அவர்களைப் பொறுத்த வரை பத்தாவது குரு கோவிந்த் சிங்கோடு குருநாதர் பரம்பரை முடிகிறது. இப்படி மதரீதியிலும் மேல்சாதி சீக்கியர்கள் தலித் சீக்கியர்களை ஏற்றுக்கொள்வதில்லை. இந்தப் பிரச்சினை நீறுபூத்த நெருப்பாக கனன்று கொண்டிருந்தது.

இந்நிலையில் தேரா சச் காந்த்தின் தலைவர் குரு சாந்த் நிரஞ்சன் தாஸூம், இந்த பீடத்தின் இரண்டாவது தலைவரான குரு சாந்த் ராமா நந்தும் ஆஸ்திரியாவின் வியன்னா நகரிலிருக்கும் ஸ்ரீ குரு ரவிதாஸ் ஆலயத்திற்கு மதச் சடங்கு ஆற்ற சென்றார்கள். இந்த ஆலயத்திற்கு இவர்கள் வந்து செல்வதை வியன்னாவில் இருக்கும் மேல்சாசி சீக்கியர்கள் விரும்பவில்லை. அங்கே மொத்தம் 3000 சீக்கிய மக்கள் வாழ்வதாக கூறப்படுகிறது.

 

பஞ்சாப் சீக்கிய தலித்துக்கள் போராட்டம்

 

இந்நிலையில் கடந்த ஞாயிற்றுக் கிழமை இந்த ஆலயத்திற்குள் துப்பாக்கி மற்றும் கத்திகளுடன் புகுந்த மேல்சாதி சீக்கிய வெறியர்கள் ஆறுபேர் அங்கு கண்மூடித்தனமாக தாக்குகிறார்கள். உள்ள இருந்த நூற்றுக்கணக்கான தாழ்த்தப்பட்ட சீக்கியர்கள் அதை எதிர்த்து போராடுகிறார்கள். இந்த தாக்குதலில் படுகாயம் அடைந்த குரு சாந்த் ராமா நந்த் (57) இறந்து போகிறார். மற்றொரு குருவான நிரஞ்சன்தாஸ் (68) அபாய கட்டத்தை தாண்டிவிட்டார். தாக்குதல் நடத்திய மேல்சாதி சீக்கியர்களை கோவிலில் உள்ள மக்கள் திருப்பித் தாக்கியதில் அவர்களில் இரண்டுபேர் அபாய கட்டத்திலிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மற்றவர்களை கைது செய்த வியன்னா போலிசு விசாரணையை நடத்தி வருகிறது.

குரு சாந்த் ராமா நந்த் இறந்த செய்தியைக் கேட்ட உடனே ஆத்திர மடைந்த தலித் சீக்கிய மக்கள் அதுவும் வெளிநாட்டில் கூட தனது குருநாதரை மேல்சாதி சீக்கியர்கள் கொன்றதைக் கேட்டு பதறி கோபம் கொண்ட மக்கள் பஞ்சாப்பில் தமது எதிர்ப்பைத் தெரிவித்தார்கள். பொதுவில் மேல்சாதி சீக்கியர்கள் வர்க்க ரீதியிலும் மேல்நிலைமையில் இருப்பதால் அவர்களது அலுவலகம், வாகனங்கள், கடைகள் அனைத்தும் எரிக்கப்பட்டன. கூடவே அரசு அலுவலகங்கள், ரயில்கள் எல்லாம் தாக்கப்பட்டன.

பஞ்சாப்பின் நான்கு முக்கிய நகரங்களில் ஊரடங்கு உத்திரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. போலிசு நடத்திய துப்பாக்கிச்சூட்டில் இருவர் கொல்லப்பட்டுள்ளனர். மேலும் இராணுவமும் பஞ்சாப்பில் அமைதியைக் கொண்டுவர இறக்கி விடப்பட்டுள்ளது. தலித் சீக்கியர்கள் அதிகமிருக்கும் பகுஜன் சமாஜ் கட்சியும் இந்த எதிர்த்தாக்குதலில் ஈடுபட்டுள்ளது. மேல்சாதி சீக்கிய வெறியர்கள் இத்தனை காலமும் அடங்கிக் கிடந்த தலித் சீக்கியர்கள் ஆவேசத்துடன் எழுந்திருப்பதைக் கண்டு பொருமுகிறார்கள்.

மற்ற படி எந்த அரசியல் கட்சியும் தலித் சீக்கியர்களின் பக்கம் இல்லை, எல்லாம் மேல் சாதி தரப்பை ஆதரித்துத்தான் இயங்குகின்றன. வெளிநாட்டில் கூட தமது மக்கள் மேல்சாதி சீக்கிய வெறியர்களால் தாக்கப்படுவதைக் காணசகிக்க முடியாமல் பஞ்சாபின் தலித் மக்கள் போராடுகிறார்கள். வரலாற்று ரீதியாகவே வஞ்சிக்கப்படும் இந்த சமூகம் இப்போது திருப்பித் தாக்குகிறது. ஒடுக்கப்பட்ட மக்கள் எப்போதும் ஒடுங்கிப் போவதாகவே இருக்க மாட்டார்கள். அதனால்தான் இந்த பஞ்சாப் ‘கலவரம்’ மற்றபடி இந்த உண்மையை மறைத்து பிரதமரும், சிரோன்மணி அகாலி தள கட்சியும் சீக்கிய மக்களை அமைதி காக்குமாறு வேண்டுவதெல்லாம் பலனளிக்காது. மேல்சாதி சீக்கிய வெறி தண்டிக்கப்பட்டால்தான் இந்தக் ‘கலவரம்’ தணியும்.

http://www.vinavu.com/2009/05/27/punjab-dalit-riots/