புலித்தலைவர் வீர மரணம் அடைந்து விட்டார், இல்லையில்லை அவர் உயிருடன் உள்ளார் என்று கூறி, புலித் தலைவர்களை சரணடைய வைத்துக்கொன்ற தமது சொந்தத் துரோகத்தை மூடிமறைகின்றனர்.
புலிகளின் வெளிநாட்டு தலைவராக அறிவிக்கப்பட்ட பத்மநாதன், பிரபாகரன் கொல்லப்பட்டு விட்டார் என்று அறிவித்துள்ளார். இதையடுத்து இந்த உண்மையைச் சொன்னதற்காக, அவரை துரோகியாக்கி வைகோ மற்றும் நெடுமாறன் போன்ற பிழைப்புவாதிகளின் அறிக்கை வெளிவந்துள்ளது. புலிக்குள் இப்படி ஒரு பிளவு உருவாகியுள்ளது. பிரபாகரனின் மரணத்துக்கு அஞ்சலி செலுத்துவதா இல்லையா என்ற ஒரு திரிசங்கு சொர்க்க நிலையில், பிரபாகரன் விசுவாசிகள் திணறுகின்றனர்.
இங்கு பத்மநாதன் பிரபாகரனின் மரணத்தை சண்டையில் ஏற்பட்ட வீரமரணம் என்ற ஒரு பொய்யை இதற்கூடாக உமிழ்கின்றார். வீரமரணமான தலைவனுக்கு அஞ்சலி என்று இதற்கு ஊடாக, அவர் முன்னின்று காட்டிக்கொடுத்து கழுத்தறுத்த அந்த சரணடைவு என்ற அந்த உண்மையை புதைத்து விடுகின்றார். தமது காட்டிக்கொடுப்பை மூடிமறைக்க, மரணம் என்ற ஓரு உண்மையைப் பயன்படுத்துகின்றார்.
பிரபாகரன் மரணிக்கவில்லை என்ற ஒரு பொய்யைச் சொல்லத் தவறியதற்காக, அவரை துரோகியாக அறிவிக்கின்றனர் மறுதரப்பு. இப்படி இங்கு பிரபாகரனை சரணடைய வைத்த அந்தக் காட்டிக்கொடுப்பை துரோகமாக இனம் காட்டவில்லை. இங்கு பொய் சொல்ல தவறியது தான் துரோகம். இப்படி ஏற்பட்டுள்ள பிளவு எதார்த்தமாகிவிட்டது. இனி காட்டிக்கொடுப்பை நீ தான் செய்தாய் என்று பரஸ்பரம் கூறும் தகவல்கள் சந்திக்கு வரும் என்பதில் எந்த சந்தேகமுமில்லை.
இந்தக் காட்டிக்கொடுப்பு நாடகத்தின் முன் புலித்தலைமை தன்னை பாதுகாத்துக் கொள்ள மக்களை பலியிட்டது. கட்டாயப்படுத்தி பல ஆயிரம் போராளிகளை களத்தில் பலியெடுத்தது. இவை எல்லாம் தாண்டி தம் உயிரைப் பாதுகாத்துக்கொள்ள, இது தன் சரணடைவையும் கூட தேர்ந்தெடுத்தது. ஆனால் உயிரை விடும் வண்ணம், இலங்கை அரசிடமல்ல. இந்த நிலையில் தான், இதைப் பயன்படுத்திய வெளிநாட்டு புலித்தலைமை காட்டிக் கொடுப்பைபும் துரோகத்தையும் அரங்கேற்றியது.
இப்படி பிரபாகரனும் ஏனையோரும் வெளிநாட்டில் உள்ள புலித்தலைமையால் சரணடைய வைக்கப்பட்டனர். இதன் மூலம் அவர் நிர்வாணமாக்கப்பட்டு, பலத்த சித்திரவதைக்கும் அவமானத்துக்கும் உள்ளாக்கப்பட்டார் என்ற செய்தி, அரசுடன் நிற்கும் துரோகக் குழுக்கள் ஊடாக மெதுவாக கசிந்து வருகின்றது. புலித் தலைவர்களை இப்படி அவமானப்படுத்தி கொல்கின்ற அந்த வேலையை, அரசுடன் நிற்கும் துரோகக் குழுக்கள் முன்னின்று செய்கின்றது. பிரபாகரனின் மகன், மகள்… பிரபாகரன் கண்முன் கொல்லப்பட்டதாகவே தகவல்கள் கசிகின்றது.
இந்த நிலையில் பிரபாகரன் கொல்லப்படவில்லை என்று கூறி மற்றவர்களை துரோகியாக்குகின்றனர். இப்படி பிரபாகரன் இருப்பதாக கூறுவதன் மூலம், தம் பின் நடந்த இந்த துரோகத்தை, பிரபாகரன் இருப்பதாக கூறுவதன் மூலம் பாதுகாக்கின்றனர்.
இங்கு
1. பிரபாகரன் வீரமரணம் அடைந்தாக உரிமை கோருவதன் மூலம், அங்கு காட்டிக்கொடுப்பும் சரணடைவும் நடக்கவில்லை என்று காட்ட முனைகின்றனர். இதன் மூலம் காட்டிக்கொடுத்த, தம் சொந்த துரோகத்தை வீரமரணம் என்றதன் மூலம் பூசி மெழுகுகின்றனர்.
2. பிரபாகரன் மரணிக்கவில்லை என்று கூறுவதன் மூலம், தாம் நடத்திய இந்த துரோகத்தையும் காட்டிக்கொடுப்பையும் இல்லை என்கின்றனர்.
பிளவுபட்டுள்ள வெளிநாட்டு புலித்தலைமையின் இரண்டு அணியும், காட்டிக்கொடுத்த அந்த நிகழ்வை தத்தம் நிலைப்பாடுகளுடாக மறுக்க முனைகின்றது.
இவை அனைத்தும் வெளிநாட்டு உளவு அமைப்புகளுடன் சேர்ந்து, மிகத்திட்டமிட்ட ஒரு நீண்ட சதியுடன் அரங்கேறியுள்ளது.
புலிகள் வைத்திருந்த தம் பலத்தின் மேலும், போராடும் ஆற்றல் மேலுமான நம்பிக்கையை, இந்த துரோகிகள் மூன்றாம் தரப்பு என்ற மாயை ஊடாக அரசியல் ரீதியாக இல்லாததாக்கினர். இதன் மூலம், அவர்களை சரணடைய வைத்துக் காட்டிக்கொடுத்தனர். யுத்த நெருக்கடி அதிகரித்த போது, வேறு மார்க்கங்கள் மூலம் போராடித் தப்பும் வழிகளை வேறு நம்பிக்கைகளை ஊட்டி தடுத்தனர். தப்ப பல வழிகள் இருந்தபோது, அதை அவர்கள் ஏன் தேர்ந்தெடுக்கவில்லை. வெளிநாட்டு புலித்தலைமை அதை சிதைக்கும் வண்ணம், திட்டமிட்ட வகையில் மூன்றாவது அணி மூலமான 'தமிழீழ" மீட்சி என்ற சதித்திட்டத்தின் மூலம், தம் சொந்த போராடும் ஆற்றலை நலமடித்தனர். நாங்கள் மூன்றாவது அணி மூலம் மீட்போம் என்று, நம்பிக்கை ஊட்டினர். இதன் மூலம் அவர்கள் வேறு வழியில் தப்ப முடியாத வண்ணம் கொண்டு வந்ததுடன், தம் திட்டப்படி சரணடைவை வைத்து அழித்துள்ளனர்.
இதற்கமைய வெளிநாட்டு போராட்டங்கள், அதன் கோசங்கள் அனைத்தும் அமைந்திருந்தன. வேறு அரசியல் கோசங்கள், ஒரு அரசியல் மீட்சியை உருவாக்காத வண்ணம் திட்டமிட்டு அவற்றை வழிநடத்தியுள்ளனர். உண்மையில் இதன் பின்னணியில் மேற்கு உளவு அமைப்புகள் முதல் இந்திய உளவு அமைப்புகள் வரை, வெளிநாட்டு புலித்தலைமையின் பின்பாக இருந்துள்ளது. இவை அனைத்தையும் அவையே அரங்கேற்றியுள்ளனர். புலம்பெயர் நாட்டில் நடந்த போராட்டங்கள் புலியின் மீட்பாக அமையா வண்ணம், அதன் கோசங்களைக் கூட இந்த வெளிநாட்டு புலித் துரோகிகள் ஊடாகவே, உளவு அமைப்புகள் முன்தள்ளியுள்ளனர்.
இன்று இந்தத் தலைமை பிளவுபட்ட போதும், தம் துரோகத்தை மூடிமறைக்க முனைகின்றது. ஒன்று தலைவனுக்கு வீரமரணம் அஞ்சலி என்கின்றது, மற்றது உயிருடன் தலைவன் இருப்பதால், எதற்கு வீரமரணம் என்கின்றது.
இப்படி காட்டிக்கொடுத்த துரோகிகள் கன்னை பிரிந்து நிற்க, பிழைப்புவாத இந்திய அன்னக் காவடிகள் புலித்தலைமையின் பெயரால் அறிக்கைவிட்டு இதில் பிழைக்க முனைகின்றது.
பேரினவாதம் இந்த துரோகத்தையும், அலுக்கோசு தனத்தையும் பார்த்து மகிழ்ச்சி கொள்கின்றது. தனக்கு எதிரான போராட்டம், துரோகத்தால் திசைமாறி சிதைவது கண்டு அதற்குள் தூண்டில் போடுகின்றது. தமிழினமோ இந்த துரோகத்தால் மேலும் ஒடுக்குமுறைக்குள்ளாகி வருகின்றது. இந்த துரோகத்தை தோலுரித்து, மக்களை சார்ந்து அரசுக்கு எதிராக போராட அறை கூவுகின்றோம். இது தவிர வேறுவழியில், பேரினவாதத்தின் இனவழிப்பை நாம் எதிர்கொள்ள முடியாது.
பி.இரயாகரன்
25.05.2009