எம் மக்களின் பொது எதிரிக்கு எதிராக மரணித்துப் போன பல்வேறு வர்க்கங்களுக்கும், சமூகங்களுக்குமான இந்த அஞ்சலி அரசியல் ரீதியானவை. எம் மக்களின் பொது எதிரி, தன்னை தனிமைப்படுத்தி பலம்பெற்று நிற்கின்ற இன்றையநிலை. மக்களின் இரண்டாம் மூன்றாம் எதிரிகள் சிதைந்து சின்னாபின்னமாகி அழிந்து மரணிக்கும் இன்றைய நிலை. இந்த நிலையில் பிரதான எதிரிக்கு எதிராக மரணித்த அனைவருக்கும், நாம் அஞ்சலியை செலுத்தக் கோருகின்றோம்.
பொது எதிரிக்கு எதிராக, எம் வர்க்கத்தின் சார்பாக இதைக் கோருகின்றோம். பொது எதிரிக்கு எதிராக, இவர்கள் பெயரால் போராடக் கோருகின்றோம். இந்த யுத்தத்தில் இறந்த அனைத்து மக்களுக்கும் இதைக் காணிக்கையாக்கின்றோம்.
எதிரிக்கு எதிரான நட்பு சக்திகளை கடந்த காலத்தில் எதிரியாக்கி அழித்த தவறுகளை இனம் காண்பதும், அதேநேரம் எதிரிக்கு எதிரான சக்திகளிடம் விமர்சனம் சுயவிமர்சனத்தின் அடிப்படையில் ஒருங்கிணைந்த மக்களுக்கான அரசியல் செயல்பாட்டைக் கோருகின்றோம்.
மண்ணில் போராடிய புலித்தலைமையை அழித்தன் மூலம் எதிரியும், புலித் தலைமையைக் காட்டிக் கொடுத்த புதிய புலித் துரோகிளுமே, இந்த யுத்தத்தை வென்றுள்ளனர்.
இவர்களால் எம்மக்கள் அரசியல் அனாதையாகியுள்ளனர். கடந்த காலத்தில் தமிழ்மக்களின் அனைத்து சமூக கூறுகளையும் அழித்தவர்களை, ஒரு துரோகம் மூலம் அழித்துள்ளனர். இதன் மூலம் மக்கள் அரசியல் அநாதையாக்கப்பட்டுவிட்டனர். எதிரியின் இனவழிப்பு விருப்பங்களும் இதுதான்.
எம்மத்தியில் ஒரு வெறுமை. எதையோ இழந்து போன உணர்வு. புலிகளால் பாதிக்கப்பட்ட, புலி அரசியலுடன் என்றும் உடன்படமுடியாத எம்மத்தியில் கூட, இந்த வெறுமையை அரசியல் ரீதியாக உணர முடிகின்றது.
இது அடிப்படையில் தமிழ்மக்கள் அரசியல் அனாதையாக்கப்பட்டதனால் ஏற்படும் விளைவாகும். மக்களின் எதிரி வென்றதை ஏற்றுக்கொள்ள முடியாத அங்கலாய்ப்பும், கோபமுமாகும். புலித் தலைமையை ஏமாற்றி, மோசடி செய்து, அவர்களின் கழுத்தையறுத்த நயவஞ்சகம் மீதான அரசியல் கோபம்.
இந்த இழிசெயலை செய்த பேரினவாதம் முதல், இந்த காட்டிக்கொடுக்கும் துரோகத்தை செய்த புலித் துரோகிகளும் தான், இன்றும் தமிழ் மக்களை இன்னமும் ஆட்டிப்படைக்கின்றனர். இதன் மீதான வெறுப்பு எமது கோபமாக, இதற்கு பலியானவர்களை பாதுகாக்கும் அரசியலாக மாறுகின்றது.
மரணித்துப் போன புலித்தலைமை கடந்தகால மக்கள் விரோதங்களை எல்லாம் மிஞ்சியது, இன்றைய புலித்தலைமையின் புதிய துரோகம், அதன் மனிதவிரோதமும். தான் வழிபட்ட தலைவனையே காட்டிக்கொடுத்த கும்பலுக்கு பின்னால், அதையறியாது தமிழ் மக்களை அனாதையாகி ஏமாற்றப்படுகின்ற காட்சிகள் எம்முன்.
இப்படி காட்டிக்கொடுத்தவர்கள் தான், தம் தலைவர் இன்னும் மரணிக்கவில்லை என்றும் கூறுகின்றனர். காட்டிக்கொடுத்தவன் இதைக் கூற, அதை தலையில் வைத்து ஆடுகின்ற மந்தைகளின் அவலம்.
காட்டிக் கொடுத்த நிலையில், விட்டில் பூச்சியாக மரணித்துப் போன பிரபாகரனின் அப்பாவித்தனம் எம்முன். தலைவனையே மோசடி செய்து கொன்ற புதிய அரசியல் நிலைமைகள். பிரபாகரனை தலைவனாக கொண்டு உருவாக்கிய அமைப்பு, தன் தலைவனுக்கே அஞ்சலி செலுத்த முடியாத அவலநிலை. மண்ணில் போராடிய முழுத் தலைமையும் அழிக்கப்பட்ட நிலையில், அவர்கள் மரணித்துப் போன செய்திகளைக் கூட மக்கள் முன் சொல்ல மறுக்கின்ற மக்கள் விரோத துரோக அரசியல்;. அவர்கள் எந்த நிலையில்? எப்படி ஏன் கொல்லப்பட்டனர்? கொல்லப்படுகின்றனர் என்பதைக் கூட, தெரியாத வண்ணம் மூடிமறைக்கின்றனர். இதற்கு தாங்கள் எப்படி உதவினர் என்பதை, சொல்ல மறுக்கின்ற புதிய துரோகம்.
மக்கள் தம் தலைவனாக நம்பிய அந்த புலித்தலைவர்கள், சர்வதேச சதியுடன் கூடிய ஒரு புலித் துரோகம் மூலம் ஏமாற்றப்பட்டு கொல்லப்பட்டனர்.
அவர்கள் நாம் கோரியபடி, இறுதிவரை போராடி மடியவில்லைத்தான். நாங்கள் அஞ்சியபடி ஒரு சரணடைவுக்கு முன்வந்தவர்கள் தான். இருந்தபோதும், அது நயவஞ்சகமாக ஏமாற்றி சரணடைய வைத்தே கொல்லப்பட்டனர். அரசியல் ரீதியான இந்த சரணடைவை, மற்றொரு துரோகம் மேவித்தான், இந்த அவல நிலையை உருவாக்கியது. அந்தத் துரோகம் தான் செய்த இந்த காட்டிக்கொடுப்பபை மூடிமறைக்கவும், தமது துரோகத்தை மக்கள் முன் அம்பலமாகாது தக்கவைக்கவும் முனைகின்றது. இதனால் மக்கள் முன், களத்தில் போராடிய புலித்தலைமை இன்னமும் எஞ்சி உள்ளதாக காட்ட முனைகின்றது. இதன் மூலம் அவர்களுக்கு அஞ்சலியை செலுத்த மறுக்கின்றது. நாம் அவர்களுக்கு அஞ்சலியை செய்யக் கோருகின்றோம்.
இப்படிப்பட்ட அரசியல் மோசடிகளின் பின், துரோகிகள் தம் முன்னைய தலைவர்களுக்கு அஞ்சலி செலுத்த மறுக்கின்றனர். நாங்கள் புலித் தலைவர்களை, இந்த துரோகிகளிடம் இருந்த காப்பாற்ற வேண்டியுள்ளது.
இவர்கள் கடந்த காலத்தில் தேசவிடுதலையின் பெயரில் ஆயிரக்கணக்கான தேச பக்தர்களையும், மக்களையும் படுகொலை செய்தவர்கள் தான். ஒரு இனத்தின் அழிவு வரை இட்டுச் சென்றதுடன், இன்று அந்த மக்களை நடுரோட்டில் அரசியல் அனாதையாக்கியவர்கள்; தான். இந்த நிலையிலும் கூட, ஒடுக்கப்பட்ட எம் வர்க்கத்தினதும் சமூகத்தினதும் எதிரியாக இருந்த போதும், தமிழ் தேசியத்தின் பெயரில் நின்று போராடியவர்கள். இதை நாம் விமர்சனத்துடன் மதிக்கின்றோம். இவர்கள் தம் வர்க்க நலன்களால் ஊசலாடிய போது, ஏமாற்றப்பட்டு மோசமான ஒரு நிலையில் மரணித்துப் போனார்கள். இந்த மோசடிக்கு எதிராக, இவர்களின் அப்பாவித்தனமான அவலத்துக்கு எதிராக, அதை கூடி காட்டிக் கொடுத்தவர்களுக்கு எதிராக கொதித்து போய் நிற்கின்றோம்.
மறுபக்கத்தில் இவர்களால் கொல்லப்பட்ட அப்பாவி மக்கள் முதல், மக்களுக்காக போராடியதால் பலி எடுக்கப்பட்ட தேசபக்தர்களின் மரணங்களும் தியாகங்களும்;, புலித் தலைவர்களின் மரணத்தின் முன் உயர்வானவை. புலிகள் கொன்று குவித்த அப்பாவி முஸ்லீம், சிங்கள மற்றும் கிழக்கு மக்கள் மரணங்கள் மேலானவை. இதேபோல் பேரினவாத கொடுங்கோன்மைக்குள் பலியான மக்களின் மதிப்பில்லாத உயிர்கள், உயர்வானவைதான்;. தேசியத்தின் பெயரில், இதுதான் தமிழ்மக்களின் விடுதலை என்று நம்பிப் போராடி மரணித்த போராளிகளின் மரணங்கள் சுயநலமற்றவை, மக்களுக்கானவை. இவைகளின் பின் தான், ஏமாற்றப்பட்டு படுகொலை செய்யப்பட்ட புலித்தலைவர்களின் மரணங்கள் கூட மதிப்புக்குரிய வகையில் உள்ளது.
இதற்கு எதிரில் இந்த மரணத்தை கொண்டாடும் எதிரி. அரசுடன் சேர்ந்து நின்று கொண்டாடும் துரோகக் குழுக்கள். அதேநேரம் இவர்களை காட்டிக்கொடுத்து படுகொலை செய்ய உதவிய, இன்றைய வெளிநாட்டு புலித்தலையின் துரோகம். இவர்கள் எல்லோர் முன்னும், இவர்கள் முன்பு போற்றிய புலித்தலைமை அரசியல் ரீதியாக மதிப்புக்குரியனவாக உள்ளது. எம் வர்க்கத்தின் எதிரி என்ற போதும், எம் வர்க்கத்தின் எதிரிக்கே சிம்மசொப்பனமாக இருந்தவர்கள். இந்த வகையில் மதிக்கப்பட வேண்டியவர்கள்.
இன்று மக்கள், முன்பைவிட மோசமான துரோக அரசியலின் பின் வைக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் இந்த யுத்தத்தின் அறியாமைக்குள் சிக்கி அப்பாவித்தனமாகவும், பாசிசத்தாலும் பலியான அனைவருக்கும், சிரம் தாழ்த்தி அஞ்சலி தெரிவிக்கும் அதேநேரம், எம் எதிரிகளுக்கு எதிராக உள்ள அனைவரையும் போராட அறை கூவுகின்றோம்.
பி.இரயாகரன்
23.05.2009