இலங்கை அரசின் ஜனாதிபதி கறுப்பு மயிருடனும் கறுப்பு மீசையுடனும் கம்பீரமாய் வருகிறார். ஏதோ ஒரு செய்தியை அறிவிக்கும் அவசரத்தில் விமானத்திலிருந்து இறங்கிவருகிறார்.  இதுவரை மண்ணைப் பிரிந்து அகதியாக இருந்ததுபோன்ற, அல்லது விடுவிக்கப்பட்ட ஒரு மண்ணில் முதன்முதல் காலடி வைப்பதுபோன்ற ஒரு பாவனையில் மண்ணை தொட்டு வணங்குகிறார். அவர் பரபரப்பாக இருந்தார். விமான ஓடுபாதையில் அமைச்சர் பட்டாளம் குதூகலமாய் வரவேற்றுக் கொண்டிருந்தது..

. அந்தப் பெண்ணின் முதுகுப்பகுதி நீளத்துக்கும் கோரமாகக் கிழிபட்டிருந்தது. வன்னி மண்ணில் சரிந்து வீழ்ந்திருந்தாள் அவள். இலையான்கள் காயத்தை மொய்த்துக்கொண்டிருந்தன. சதையின் கிழிவுக்குள் உட்புகுந்த இலையான்கள் வெளிவரத்துடிக்கும் முயற்சியில் ஈடுபடும்போதெல்லாம் அவளின் கிழிந்த சதைகள் பொருமுவதும் அமர்வதுமாக அசைந்துகொண்டிருந்தது. அவள் உயிருடன் இருந்தாள். முனகினாள். இரத்தம் கொட்டியபடி இருந்தது. காயத்துள் புகுந்த இலையானின் அரிப்பை விரட்ட அவளது கைகள் எழ எத்தனித்து எத்தனித்து தோல்விகண்டன. கண்கள் திறந்திருந்தன. சொற்கள் வடிந்து உதடுகளை அசைத்துக்கொண்டிருந்தன. மரணத்தை அவள் வருந்தி அழைத்துக்கொண்டிருந்தாள் என்று உறுதியாகவே சொல்லிவிட முடியும்... தெற்கின் சில பகுதிகளில் வெற்றி குறித்து தெருவெங்கும் நடனமாடினார்கள். இனிப்புகள் பரிமாறினார்கள். இராணுவ பொலிஸ் உடைசூடியவர்களின் வாய்களில் அவர்கள் கேக்கை அடசினார்கள்;. பட்டாசுகளை வெடித்தார்கள். சிங்கக் கொடிகளை அசைத்தார்கள்... வன்னியில் புலிகளின் இறுதிக் குறுநிலமும் வெடித்துச் சிதறியிருந்தது. ஒற்றையாட்சியின்கீழ் வாழும் இனத்தவர்களைக் கொண்ட, சோசலிச ஜனநாயகக் குடியரசில் குரங்கேறியுள்ள காட்சிகள் இவை. இந்தக் காட்சிகளை இணைத்து வரைய நிர்ப்பந்திக்கப்பட்ட ஓவியர்களாய் தமிழ்மக்கள் இருப்பதின் அவலம் இன்றைய சித்திரம்.

 

 

புலிகளின் தலைவர் கொலையுண்டதான செய்திகள் அதிர்வலைகளாக எழுந்துள்ளன. கருணா அதை உறுதிப்படுத்துகிறார். இதுசம்பந்தமான ஒளிப்படங்கள் மேன்மேலும் வெளிவந்தபடி உள்ளன. புலியாதரவாளர்களிடமும்கூட சந்தேகங்களும் நப்பாசைகளும் படிப்படியாய் செத்துக்கொண்டிருக்கின்றன. புலிகளின் அரசியலையும் தாண்டி ஒரு வெற்றிடத்தை வெறுமையை பலர் உணர்கின்றனர்.  சர்வதேசமும் ஒரு இனப்படுகொலையை தடுத்து நிறுத்தாமல் அல்லது அதில் பங்களித்து ஏமாற்றியிருந்த நிலையில் அவர்கள் அநாதரவான நிலையில் விடப்பட்டிருந்தனர். அடுத்தது என்ன என்ற கேள்விக்கு அவர்கள் மனம்போனபடி விடையை ஊகித்துக்கொண்டிருந்தனர். அச்சம் தரும் மனோநிலையில் கொழும்பில் பல தமிழர்கள் வீடுகளுக்குள் முடங்கினர். 

 

அடையாளம் காணப்பட்டதாகச் சொல்லப்படும் பிரபாகரனின் உடலின் தலைமாட்டில் அருகிலிருந்தவரின் கையை இறுகப் பிடித்து அடிக்கடி முத்தம் கொடுத்துக்கொண்டிருந்தார் இராணுவ அதிகாரி. அந்தக் கை கொலைக்கான அல்லது காட்டிக்கொடுப்புக்கான நன்றிப்பிரவாகத்தை வாங்கிக்கொண்டிருக்க வேண்டும் என படிமமாகிறது மனதில் அந்தக் காட்சி.; புலிகளோ தலைவர் நலமுடன் உள்ளார் என எந்த ஆதாரத்தையும் முன்வைக்காமல் சொல்லிக்கொண்டிருக்கின்றனர். பாலசிங்கத்துடன் முன்னர் சேர்ந்து சிரித்த புகைப்படத்திலிருந்து கழன்று வந்து இராணுவத் திருவிழாவுக்குள் வைக்கப்பட்டிருந்த தனது உடலின் காணொளிப்படத் துண்டை பார்ர்த்துச் சிரிப்பவராக இணைந்துவிடுகிறார் பிரபாகரன். பாதுகாப்பை உறுதிப்படுத்தியபின் தலைவர் வருவார், தலைவர் நலமுடன் உள்ளார்... என செய்திகள் வேறு. பிரபாகரனின் மரணச் செய்தியை உறுதிப்படுத்த முடியாத, அஞ்சலி செலுத்தமுடியாத ஒரு அந்தர நிலையில் புலியாதரவாளர்கள் விடப்பட்டுள்ளனர். தலைமைமீதான அதீத நம்பிக்கைகளையும் அமைப்புமீதான சாகசங்களையும் ருசிக்கும்; மனோபாவம் புலிகளால் வளர்த்துவிடப்பட்ட ஒன்று. அதற்குள் நின்று அவர்கள் தவிக்கிறார்கள். தலைவரின் சாவை அவர்களால் கற்பனைபண்ணிக்கூடப் பார்க்கமுடியாமல் இருக்கிறது. 

 

ஊடகம் ஒரு சக்திவாய்ந்த ஆயுதம் என கெகலிய ரம்புக்கல வாய்மலர்ந்திருப்பது இந்தப் போரில் சுயாதீன ஊடக சுதந்திரத்தின் மீதான கொலைக்கு ஒரு சாட்சி. ஊடகத்தை ஆயுதமாய் பாவித்தபடி போர்களையும் போராட்டத்தையும் நடத்தியவர்கள் அரசும் புலிகளும். பிரபாகரனின் மரணத்திலும் நிலை இதுதான். தலைவரின் மரணத்தை மறுப்பதன் மூலம் புலிகள் மீண்டும் ஓர் இணைவுக்கான நிழல்தலைமையாக இதைப் பாவிக்க முனைகிறார்களா என்ற சந்தேகமே தூக்கலாய் எழுகிறது. 

 

கொரில்லா போர்முறையில் நீண்ட நெடிய அனுபவம் கொண்டவர்கள் புலிகள். விரைவாக தொடர்பாடல்கள் கொள்ளக்கூடிய வலுவும், தொழில்நுட்ப பாவனைகளின் சாதகமான நிலைமைகளும், புலம்பெயர் தமிழர்களின் ஆதரவும் ஒரு கொரில்லா அமைப்பாக மீண்டும் உருப்பெறும் வாய்ப்பை தரக்கூடியது. புலிகளின் போராட்ட அரசியலில் முரண்படும் அதேவேளை, புலிகளின் விளைநிலமாக பேரினவாத ஒடுக்குமுறைகள் இருந்தன என்பது யதார்த்தம். இந்த ஒடுக்குமுறை இந்த யுத்தத்தின்மூலம் இன்னும் ஆழப்படுத்தப்பட்டிருக்கிறது. இதை நிவர்த்திசெய்யக்கூடிய தீர்வுக்கான தேவை முன்னரைவிட அதிகப்படுத்தப்பட்டிருக்கிறது. இவ்வாறான ஒரு அரசியல் தீர்வு பொய்த்துப் போகுமெனில் காலவோட்டத்தில் போராட்டம் தவிர்க்கமுடியாமல்  மேலெழுந்தே தீரும். அது வௌ;வேறு வடிவங்களில் எழலாம். புலிகளின் பெயரில் அது எழவேண்டுமென்றுமில்லை. இந்த இயங்கியலை தற்போதைய யுத்தப் பேரழிவு வெறுப்புடன் நோக்குவதை நாம் புரிந்துகொள்ள முடியுமே தவிர மறுத்துவிட முடியாது. 

 

தமது இறுதிக்காலம்வரை தாக்குதல்களை செய்துகெண்டேயிருந்தவர்கள் புலிகள். இராணுவம் குறித்த காலக்கெடுகளெல்லாம் பொய்த்துப்போக வைத்துக்கொண்டிருந்தவர்கள். இவை ஏற்படுத்திய அழிவுகளை எப்போதுமே எதிர்கொள்ள நேரிட்டது இராணுவத்துக்கு. புலிகள்  இறுதிவரை போர்க்களத்திலேயே நின்று எதிரியுடன் போராடி மடிந்ததின்மூலம் தமிழ்மக்களின் போராட்டத்துக்கு ஒரு தொடர்ச்சியை விட்டுச் சென்றுள்ளனர். அந்தப் பெருமை புலிகளுக்கு இருக்கவே செய்கிறது. இதைச் சொல்ல தயக்கம் தேவையில்லை.  அதேநேரம் மக்களை மனிதக் கேடயமாகப் பயன்படுத்தியதன்மூலம் மனிதப் பேரழிவை அரசு நிகழ்த்த புலிகளின் அணுகுமுறை உடந்தையாய்ப் போயிருக்கிறது. கிளிநொச்சியின் வீழ்ச்சியுடனாவது நிலைமையை மதிப்பிட்டிருக்க வேண்டும். அவர்கள் மக்களை சுயாதீனமாக வெளியேற விட்டிருந்தால் பாரிய மனிதஇழப்புகள் தவிர்க்கப்பட்டிருக்கலாம். 

 

புலிகளின்மீதான அழித்தொழிப்பு என்பது பல்லாயிரம் மக்களின் அழித்தொழிப்புகளுடன் பல்லாயிரம் இராணுவத்தினரின் அழிவுகளுடன் நிகழ்ந்தேறியிருக்கிறது. பிரபாகரன் மரணம் பற்றிய செய்திகளுள் வன்னி மண்ணில் சூட்டுப் புழுதிக்குள்ளும் பங்கர்களுக்குள்ளும் இப்போதும் முனகும் குரல்களும் கேட்காமல் போயின. புலியெதிர்ப்பாளர்கள் இணையத்தில் பிரபாகரனின் மரணம் பற்றி ஆராய்ச்சி செய்கிறார்கள்... கூத்தாடுகிறார்கள். சிங்கள மேலாதிக்கம் வீதியில் நடனமாடுகிறது. பிரபாகரனின் உடலை அரைநிர்வாணப்படுத்தி கோவணம் கட்டி, பாடையில் கிடத்தி, மண் அள்ளிக் கொட்டி மனித நாகரிகத்தை கேலிசெய்யும் விதத்திலும் போர் நெறிமுறைகளில் எதிரியை கையாள்வது பற்றிய நடைமுறைகளை மறுக்கும் விதத்திலும் நடந்துகொண்டுள்ளது இலங்கை இராணுவம்.  புலிகள் தமிழ்தேசிய இனப் போராட்டத்தின் ஒரு குறியீடாக விரும்பியோ விரும்பாமலோ நிலைநிறுத்தப்பட்டுவிட்டார்கள் என்ற காரணத்தால் இந்த அவமானப்படுத்தல்களையெல்லாம்  தமிழினத்தின்மீதானதாக உணர்கிறார்கள் பெரும்பாலான தமிழ்மக்கள். ஒருவர் தனது அரசியல் நிலைப்பாட்டுக்குள் வைத்து புலிகளை ஏற்றுக்கொள்ள முடியாமல் இருந்தாலும்கூட மக்களின் உணர்தலை புரிந்துகொண்டே ஆகவேண்டும். 

 

புலிகளை இராணுவ ரீதியில் அழிக்க எடுத்த முடிவை எச்சரித்த சக்திகளிடம் அதை நியாயப்படுத்திய புலம்பெயர் மாற்றுகள் இப்போதாவது வெளியில் வந்து மக்களின் பேரழிவு குறித்துப் பேசவேண்டிய அவசியம் உள்ளது. பல நூறு புலிகளுக்காக பல்லாயிரக்கணக்கான மக்களை கொன்று குவித்துள்ளது குறித்து பேசியாகவேண்டும் அவர்கள். புலிகள்தான் முதல் எதிரி என்று வரையறுத்தவர்கள் அவர்கள். இப்போ புலிகள் நிலை இதுவென்றால் அரசு முதலாம் எதிரி நிலைக்கு வருகிறது. இப்போ எதை எதிர்கொள்ளப் போகிறார்கள் இவர்கள்.  இவர்கள் அரசுடன் ஒட்டியிருப்பதற்கான காரணத்தையும், அதுகுறித்த தமது அரசியல் பார்வையையும் போர்ப்பிரளயத்தை எதிர்கொண்ட மக்கள்முன் வைத்தாக வேண்டும்.; இலங்கை அரசு தமிழ் மக்கள் ஏற்றுக்கொள்ளக்கூடிய எந்தத் தீர்வையும் வழங்காதபோது எதிர்காலத்தில் என்ன நிலையை தாம் எடுத்துக்கொள்வோம் என்பதை இப்போ சொல்வது அரசியல் நேர்மை. புலிகளை எதிர்கொள்ள அரசிடம் ஒட்டிக்கொண்டதை ஒரு தந்திரோபாயமாகக் காட்டியவர்களின் நியாயப்பாடுகளும் புலிகளின் அழிவுடன் காலாவதியாகிறது. இன்று மௌனம் காப்பதின்மூலம் நாளை எதையும் பேசுவதற்கான வசதியை ஒருவர் எடுத்துக்கொள்வாராகில் அது அப்பட்டமான சந்தர்ப்பவாத அரசியல்.

 

சகோதர இனத்தின் ஒரு பகுதி செத்து மடிந்துகொண்டிருக்க சிங்கள மேலாதிக்கம் பாடல் இசைக்கிறது... நடனமாடுகிறது.. சகல இனங்களையும் சமமாக நடத்துவதாக சொல்லும் ஒரு அரசு இதை ஊக்குவிக்கிறது. விடுமுறை அறிவிக்கிறது. சுதந்திரம் அடைந்ததாக கொண்டாடுகிறது. இரு நாடுகளுக்கு இடையிலான யுத்தத்தில் வெற்றிகொண்டதுபோல் அது -தன் ஒருபகுதி மக்களின் மரணத்துயரைப் புறந்தள்ளி அல்லது அதன்மேல் நின்று- குதூகலிக்கிறது. தமிழினத்தின் மீதான சிங்கள இனத்தின் வெற்றியாகக் காட்ட சிங்கள இனவாதிகள் -மறைமுகமாக- முயல்கின்றனர். தமிழினத்தின் மேலான ஆதிக்க மனோபாவமாக இதை பார்ப்பதில் என்ன தவறிருக்கிறது. இது பேரினவாதத்தின் வெளிப்பாடன்றி வேறென்ன மசிர்?

 

இந்தப் போரில் ஈடுபட்டிருந்த சக்திகள் (இந்தியா, சீனா, பாகிஸ்தான், ஈரான், ரசியா) பற்றிய மதிப்பீடுகள் இருந்திருக்க வேண்டும். அதாவது அவர்களின் மேற்குலகின் மீதான காய்நகர்த்தல்கள் குறித்து ஒரு சர்வதேசப் பார்வை இருந்திருக்க வேண்டும். உலகமயமாதலின் அரசியல் அசைவுக்குள் நேபாளம், அயர்லாந்து, ஆச்சே... போன்ற தேசங்களில் போராட்டக் குழுக்கள் எடுத்த நிலைப்பாடுகளை கவனத்தில் எடுத்திருக்க வேண்டும். இராணுவ வெற்றியென்பது அரசியல் வெற்றியை அடைவதற்கான வழிமுறை மட்டுமே என்பதை காலம்தாழ்த்தியாவது ஏற்றுச் செயற்பட்டிருக்க வேண்டும். அவர்கள் இதைச் செய்யவில்லை. புலிகள்; கோசோவாவை ஒரு முன்னுதாரணமாக தமிழீழத்துக்கு படம்காட்டினார்கள். ஒபாமாமீது -அமெரிக்க வெளியுறவுக்கொள்கைக்கு வெளியே போய்நின்று- நம்பிக்கைகளை வளர்த்தார்கள். தமிழக மக்கள்மீது நம்பிக்கை வைப்பதைவிடவும் தமிழக அரசியல் பிழைப்புவாதிகள்; மீது நம்பிக்கை வைத்தார்கள். கருணாநிதியிடம் ஏமாந்து, இப்போ ஜெயலலிதா அம்மாவுக்கு வாழ்த்துப்பா பாடுவதுவரை போயிருக்கிறது அவர்களின் அரசியல் வெறுமை.

 

குறைந்தபட்சம், மக்களுக்காகப் போராடப் புறப்பட்டுவிட்டு மக்களையே பணயம் வைத்து தமது இருப்பை தக்கவைத்துக்கொள்ள துணிந்த -அரசியல் நீக்கம் செய்யப்பட்ட- செயலையாவது கேள்விக்கு உள்ளாக்கியிருக்க வேண்டும். அவர்கள் அதைச் செய்யவில்லை.; குறுக்குவழிகளையே நாடினார்கள். மக்களை தமது மனிதக் கேடயமாகப் பயன்படுத்துவதன் மூலம் தமது பாதுகாப்பைத் தேடலாம் என நம்பினார்கள். சர்வதேசத்தை அதன் மனித உரிமைகள் பற்றிய விளாசல்களை நம்பினார்கள். ஊடகவியலாளர்கள் உட்புக முடியாத, உதவிநிறுவனங்கள் செயற்பட முடியாத ஒரு மூடுண்ட போரை விடாப்பிடியாக நடத்திய இலங்கை அரசை சர்வதேசம் அறிக்கைகளை எழுதி பக்கங்களை புரட்டிக்கொண்டிருந்ததுக்கு அப்பால் செல்லவே இல்லை. எல்லோருமே கைவிட்டுவிட்டதான இறைஞ்சலுடன் புலிகளின் துப்பாக்கிகள் மௌனித்தன.

 

புலியெதிர்ப்பிலேயே சோம்பேறி அரசியல் நடத்தியவர்களும் பிழைப்புவாதத்தை நியாயப்படுத்தியவர்களும் இன்று மக்கள் சார்ந்து என்ன பேசப்போகிறார்கள் என்று கேட்கும் ஆவல் மேலிடுகிறது. புலிகளை அரசியல் ரீதியாக இல்லாமல் செய்திருந்தால் இப்படியொரு இனப்படுகொலையை தமிழினம் சந்தித்து இருக்க வாய்ப்பு இல்லை. அதேநேரம் அரசியல் சக்திகள் தமிழ்மக்கள் சார்ந்து பேரம்பேசும் நிலைக்கு படிப்படியாக வளர்ந்திருக்கவும் முடியும். இன்றோ நிலைமை வேறு. பாதாளத்தின் விளிம்பில் அவர்கள் நிறுத்தப்பட்டிருக்கிறார்கள். தமிழ் மக்கள் சார்ந்து பேசக்கூடியவர்களாக அரசிடம் ஆளுமையை அடகுவைத்த கருணாவாலோ டக்ளஸினாலோ முடியாது. மந்திரிப் பதவி இடறிவிடும். இந்த யுத்தத்தின் சுரங்கவழி விளக்குப்பிடித்து வழிகாட்டிய கருணா மந்திரிப் பதவியையும் தேசியக் கட்சியொன்றின் உபதலைவர் பதவியையும் கண்டடைந்தார். புலியெதிர்ப்பில் அடித்தளம் கொண்ட இவர்களினது பவுசு புலியழிப்புடன் அவிழ்துவிழாது என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை.

 

இந்தியாவின் பிராந்திய நலனும் ராஜீவ் கொலைக்கான பழிவாங்கலும்; இணைந்து யுத்தத்தை வழிநடத்தியது. தமிழக மக்களின் உணர்வுகளை புறக்கணித்தது இந்திய அரசு. குறைந்தபட்ச மனிதாபிமானம்கூடக் காட்டாமல் போர்நிறுத்த கோரிக்கைமீது நெளிவுசுழிவுகளை மேற்கொண்டு போரை தீவிரப்படுத்திய வடு தமிழ்மக்களிடம் குறியாய்ச் சுடப்பட்டிருக்கிறது. கருணாவிடமும் சோனியாவிடமும் உறைபனியாய் இருந்த பழிக்குப்பழி வாங்கும் மனோபாவம் அப்பாவிப் பொதுமக்களினதோ இராணுவத்தினதோ இழப்புகளை ஒரு பொருட்டாகக் கொள்ளவுமில்லை என்பதை குறித்துத்தான் ஆக வேண்டும். இந்திராகாந்தி சீக்கியப் போராளிகளால் கொலைசெய்யப்பட்டதிற்கு பழிக்கப்பழியாக 5000 சீக்கியர்களுக்குமேல் பலிகொள்ளப்பட்டபோது ராஜீவ்காந்தி சொன்னார், ~ஆலமரம் சரிந்து வீழ்ந்தால் செடிகொடிகளுக்கு சேதம் வரத்தான் செய்யும்| என்று. அண்மையில் புதுச்சேரியில் பத்திரிகையாளர்களிடம் பேசிய ராகுல்காந்தி தனது தகப்பனார் கொலைசெய்யப்பட்டதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுக் கொண்டிருப்பதாகச் சொன்னார். வன்னியில் பல்லாயிரக்கணக்கான மக்கள் மடிந்துகொண்டிருந்தார்கள்.

  

இந்த விவகாரத்தை ஒரு உள்நாட்டுப் பிரச்சினையாகக் காட்டுவதில் சீனா இந்தியா யப்பான் போன்ற நாடுகள் ஐநாவரை செயற்பட்டன. மேற்குலகுக்கு மறிப்புப் போடுவதில் இணைந்து செயற்பட்டன "உலகின் மிகப்பெரும் ஜனநாயக நாடான" இந்தியாவும் "முன்னைநாள் சோசலிச நாடான" சீனாவும். தமது முரண்பாடுகளை இணக்கப்பாடாய் வைத்துக்கொண்டு மேற்குலகின் மூக்குநுழைப்பை தடுத்துக்கொண்டிருந்தன. அதன் விசுவாசமான கிறுக்குத்தனமான கோஷ்டியாக ராஜபக்ச அன்ட் கோ மேற்குலகையும் ஐநாவையும்கூட தடாலடியான கருத்துகளால் எதிர்கொண்டது. பிரிட்டனை நோக்கி வெள்ளையின ஆதிக்கம், காலனியாதிக்க மனோபாவம் பற்றியும் பேசினார்கள்.  சர்வதேச நிர்ப்பந்தத்துக்கு அடிபணிய மாட்டோம் என்று வெளிப்படையாக பலமுறை பேசினார்கள். நான் போய் போர்நிறுத்தம் ஏற்படுமென்றால் போகத்தயார் என்று ஒரு ஐநாவின் செயலாளர் முனகும் அளவுக்கு நிலைமை இருந்தது. இதைச் சொல்லுமளவுக்கான கையறுநிலையில் ஐநா இருப்பதென்றால் அது தேவையா என்ன. 1994 இல் 100 நாட்களுக்குள் றுவண்டாவில் எட்டு இலட்சம் பேரைப் பலிகொண்ட இனப்படுகொலையினை தாம் மௌனமாய் பார்த்திருந்ததுக்கு 10 வருடங்களுக்குப் பிறது கோபி அனான் முகத்தை உம்மென்று வைத்தபடி பகிரங்க மன்னிப்பு கோரினார். பயனென்ன?. இன்றைய தமிழினப் படுகொலையை அவர்கள் மீண்டும் கைகட்டிப் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறார்கள். காசா மீதான இஸ்ரேலின் படுகொலைகளையும் அவர்கள் பார்த்துக்கொண்டுதான் இருந்தார்கள்.

 

வெற்றிக் கூத்தடிப்புகள் முடிய, மனித அழிவுகள் பற்றி மக்களுக்கு "முன்னாள் மனித உரிமைவாதி" ராஜபக்ச கணக்குச் சொல்ல வேண்டிய நிலைக்கு வரவேண்டியிருக்கும். அது இன்று உத்தியோகபூர்வமாக அரசு வெளியிட்டுள்ள கொசுறுக் கணக்காக இருக்காது. அது இராணுவத்துக்கப் போன தனது பிள்ளைகளை கணவனைத் தேடும் சிங்கள வறிய குடும்பத்திலிருந்து வரும்.; வன்னியின் புதைகுழிகளுக்குள்ளிருந்து வரும். மனச்சாட்சியுள்ள இராணுவத்தினரிடமிருந்து வரும். தமது உறவுகளைத் தேடிக்கொண்டிருக்கும் மக்களிடமிருந்து வரும். எத்தனையாயிரம் இராணுவத்தினரை பலிகொடுத்து அவர் மண்ணை முத்தமிட்டார் என்ற விடயம் நீண்ட நாட்களுக்கு மூடிமறைக்கப்பட முடியாதது.  வறிய மற்றும் வேலைவாய்ப்பு அற்றுத் தவித்த சிங்கள இளைஞரையெல்லாம் கவர்ந்திழுத்து குறைந்த பயிற்சியுடன் போர்க்களம் அனுப்பிய அவர் அந்த மக்களின் கேள்விகளை எதிர்கொள்ள வேண்டி ஏற்பட்டே தீரும். யுத்தச் செலவில் நாடு அடைந்துள்ள பொருளாதாரச் சுமை இலங்கை மக்களின் தலையில் சுமையாக விழப்போகிறது. இலங்கையை பிராந்திய வல்லாதிக்க சக்திகளிடம் அடகுவைத்து அடைந்த இன்றைய வெற்றிக் கொண்டாட்டங்கள் மனிதப் பேரழிவின்மேல் அலங்காரமாக அமைக்கப்பட்ட மேடையில் சிலுப்புகிறது.

 

- ரவி (20052009)