புலிகளின் வீழ்ச்சியும், சர்வதேச சூழ்ச்சியும்

பிரபாகரன் உயிரோடு இருக்கிறாரா இல்லையா என்ற சர்ச்சைகள் ஓயப் போவதில்லை. ஆதரவாளர்களைப் பொறுத்த வரை சாகாவரம் பெற்ற மாமனிதராகிய பிரபாகரன் அவர்களின் இதயத்தில் குடியிருக்கலாம். நக்கீரன் போன்ற தமிழ் தேசிய நாளிதழ்கள் அதற்கான ஆதாரங்களையும் அள்ளிவீசலாம். உலகம் அதைக் கடந்து நகர்ந்து  கொண்டிருக்கின்றது. ஈழத்தமிழரின் ஆயுதப்போராட்டத்திற்கு முற்றுப் புள்ளி வைத்து விட்ட இறுமாப்பில், இலங்கை அரசும், இந்தியாவும், சர்வதேச நாடுகளும் எதிர்காலம் குறித்து ஆராய்கின்றன. போர் உச்சத்தில் இருந்த போது, தமிழர்கள் கொல்லப்பட்ட போது வராத ஐ.நா. செயலாளர் பான் கி மூன், எல்லாம் முடிந்த பிறகு இலங்கைக்கு விஜயம் செய்கிறார். இன்று பூகோள அரசியல் முற்றாக மாறி விட்ட நிலையில், பிரபாகரன் உயிரோடு இருந்தாலும், இறந்திருந்தாலும் எந்தத் தாக்கத்தையும் கொண்டு வரப் போவதில்லை.
ஈழத்திற்கான ஆயுதப் போராட்டம் தொடர வேண்டும், என்று தமிழ் நாட்டு தமிழர்களும், புலம்பெயர்ந்த தமிழர்களும் எதிர்பார்க்கலாம். ஆனால் கள நிலைமை அதற்கு மாறாக உள்ளது. ஈழத்தில் இருக்கும் தமிழரும், புலம்பெயர்ந்த தமிழரும் ஒரே நேர்கோட்டில் பயணம் செய்யவில்லை. அவர்களின் நலன்கள் வேறுவேறாக உள்ளன. அன்றாடம் அவலங்களை வாழ்க்கையாக கொண்டிருந்த ஈழத் தமிழர்கள், போரிட வலுவற்று துவண்டு போயுள்ளனர். அவர்கள் இன்னொரு போரை எதிர்கொள்ளும் சக்தியற்றுக் கிடக்கின்றனர். தமிழ் ஊடகங்கள் கூறியது போல, வன்னியில் நடந்த இறுதி யுத்தத்தில் 25000 தமிழ் மக்கள் அழிக்கப் பட்டதாக இருக்கலாம். இதுவரை காலமும் கொடூரமான இனவழிப்புப் போருக்கு முகம் கொடுத்த எஞ்சியிருக்கும் ஈழத் தமிழ் மக்கள், மீண்டும் ஒரு இனவழிப்பை எதிர்கொள்ள தயாராக இருப்பார்களா என்பது சந்தேகமே. போரினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தான், அதன் வலியும், வேதனையும் புரியும்.
2001 ம் ஆண்டு, ஈழத்திலும், உலகிலும் நிலைமைகள் வெகு வேகமாக மாறி விட்டிருந்தன. இந்த மாற்றத்தை பலர் கவனிக்கத் தவறி விட்டார்கள். அப்போது யாழ் குடாநாட்டை கைப்பற்றும் அளவிற்கு புலிகள் பலமாக இருந்தனர். இலங்கை இராணுவம் பலவீனமான நிலையில் இருந்தது. அப்படி இருந்தும் யாழ் குடாநாட்டு போரில் இருந்து புலிகள் பின்வாங்கிச் சென்றனர். இதன் காரணத்தை தலைவர் பிரபாகரன் பின்னர் தனது மாவீரர் உரையில் ஏற்கனவே குறிப்பிட்டார். (இந்தியா போன்ற) வெளி நாடுகளின் அழுத்தம் காரணமாக குடாநாட்டை கைப்பற்றும் முயற்சி கைகூடாமல் போனதை சூசகமாக தெரிவித்தார். இந்தியா மீண்டும் தனது இராணுவத்தை அனுப்பி, யாழ் குடாநாடு புலிகளின் கைகளில் போகாமல் தடுக்க தயாராக இருந்தது. போரில் திருப்புமுனையாக, பாகிஸ்தான் பல் குழல் பீரங்கிகளை இலங்கை இராணுவத்திற்கு அனுப்பி வைத்தது. இலங்கை இராணுவத்தின் கண்மூடித் தனமான அகோர குண்டு வீச்சிற்கு இலக்காகி சாவகச்சேரி என்ற நகரமே வரைபடத்தில் இருந்து அழிக்கப்பட்டது. சிங்கள பேரினவாதம் தனது கோரப்பற்களை அப்போதே காட்டி விட்டது.
மறுபக்கத்தில் வருடக்கணக்காக சொல்லொணாத் துயரங்களை அனுபவித்து வந்த வன்னித் தமிழ் மக்கள், புலிகளின் கட்டுப்பாட்டை மீறி வெளியேற தலைப்பட்டனர். அரசு ஏற்படுத்திய நீண்ட கால பொருளாதாரத் தடை, வன்னியில் மக்கள் இனி வாழ முடியாது என்ற நிலையை உருவாக்கியது. குழந்தைகள் போஷாக்கின்மையால் இறந்து கொண்டிருந்தனர். 2002 ம் ஆண்டு, சமாதான உடன்படிக்கை உருவாவதற்கு வன்னி வாழ் தமிழ் மக்களின் அழுத்தம் ஒரு காரணம். மக்கள் 20 வருட தொடர்ச்சியான போரினால் களைப்படைந்து விட்டனர். எப்படியாவது சமாதானம் வந்தால் நல்லது என்ற எண்ணம் மட்டுமே அவர்கள் சிந்தனையில் இருந்தது.
இலங்கைப் பிரச்சினையில் சர்வதேச தலையீடு ஏற்பட்டது. நோர்வேயின் அனுசரணையில் பேச்சுவார்த்தைகள் இடம்பெற்றன. உலக வல்லரசான அமெரிக்காவும், பிராந்திய வல்லரசான இந்தியாவும் ஆதரவு வழங்கின. அப்போது மீண்டும் போர் தொடங்கினால் என்ன நடக்கும் என்று அமெரிக்க தூதுவர் பகிரங்கமாகவே தெரிவித்தார். "தமிழீழ இராஜ்யம் உருவாக விட மாட்டோம். புலிகளின் ஆயுதக் கொள்வனவு எங்கே நடக்கிறது போன்ற விபரங்கள் எம்மிடம் உள்ளன. புலிகளுக்கு எதிரான போரில் இலங்கை அரசின் கரங்களை வலுப்படுத்துவோம்." 9ஃ11 க்குப் பின்னான காலமது. பயங்கரவாதத்திற்கு எதிரான போரில் அமெரிக்கா முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டிருந்தது. 2006 ம் ஆண்டு, மீண்டும் போர் தொடங்கிய போது, தெற்கில் சில குண்டுவெடிப்பு சம்பவங்கள் இடம்பெற்றன. இவற்றை அரசு சர்வதேச ஆதரவை தேட பயன்படுத்திக் கொண்டது. சில குண்டுவெடிப்புகள் அரச புலனாய்வுத் துறையின் கைவரிசையாக இருந்திருக்கலாம். இருப்பினும் பயங்கரவாத சம்பவங்களை எதிர்க்காத புலிகளினதும், தமிழ் மக்களினதும் சந்தர்ப்பவாத மௌனம், இலங்கை அரசிற்கு சாதகமாகிப் போனது. பெரும்பான்மை சிங்கள மக்களினதும், சர்வதேச நாடுகளினதும் ஆதரவை கேள்விக்கிடமின்றி பெற்றுக் கொள்ள முடிந்தது.
புலம்பெயர்ந்த தமிழ் மக்கள் ஒரு போதும் ஏகாதிபத்தியத்தின் அரசியலை அறிந்து கொள்ள ஆர்வம் காட்டுவதில்லை. அவர்களைப் பொறுத்த வரை உலகில் உள்ள ஒரேயொரு ஏகாதிபத்தியம் "சிங்கள ஏகாதிபத்தியம்" மட்டுமே. வலதுசாரி அரசியல் கோட்பாடுகளில் இருந்தே இது போன்ற சிந்தனை பிறக்கின்றது. வர்க்கம் என்றால் ஆண், பெண் என்ற பாலியல் பிரிவாக புரிந்து கொள்பவர்களிடம் வேறெதை எதிர்பார்க்க முடியும்? அவர்களை சொல்லிக் குற்றமில்லை. புலம் பெயர்ந்த தமிழர்களை தலைமை தாங்கும் நிலையில் உள்ள படித்த மத்திய தர வர்க்கம், எப்போதும் ஏகாதிபத்தியத்திற்கு சேவை செய்வதில் பெருமை கொள்கின்றது. மேலைத்தேய நாடுகளில் அவர்களின் வர்க்க நலன்கள் பிரிக்க முடியாதவாறு பின்னிப் பிணைந்துள்ளன.
உலகம் முழுவதும் இனப்படுகொலைகளை அரங்கேற்றி அதிகாரத்தைப் பிடித்த, காலனிய மக்களை அழித்து செல்வம் சேர்த்த மேற்கத்திய நாடுகளிடம், இலங்கையின் இனப்படுகொலை பற்றி இடித்துரைப்பதில் அர்த்தமில்லை. நான் கூட ஒரு காலத்தில் மேற்கத்திய அரச அதிகாரிகளுக்கு, அரசியல்வாதிகளுக்கு, ஊடகங்களுக்கு இலங்கை நிலவரம் பற்றி விலாவாரியாக எடுத்துச் சொல்லியிருக்கிறேன். எல்லாவற்றையும் கவனமாக கேட்டுக் கொள்ளும் அவர்களது இராஜதந்திரம், செயலில் மட்டும் தமது தேச நலன் என்பதற்கு அப்பால் செல்ல விடுவதில்லை. உலகின் எந்த மூலையிலும் ஒரு பிரச்சினையை உருவாக்கவோ, தீர்க்கவோ வல்ல சாணக்கியர்கள் அவர்கள். உலகில் ஒவ்வொரு நாட்டுடனும் எவ்வாறு நடந்து கொள்வது, அந்த நாட்டைப் பற்றிய எமது நிலைப்பாடு என்ன, எனபன குறித்து மேற்கத்திய அரசுகள் தெளிவாகவே கொள்கை வகுத்துள்ளன. அதிலிருந்து அவை மாறப் போவதில்லை.
சர்வதேச நாடுகள் புலிகளின் வீழ்ச்சியை எதிர்பார்ப்பதற்கு இரண்டு காரணங்கள் உள்ளன. நோர்வேயின் அனுசரணையிலான சமாதான பேச்சுவார்த்தையின் போது, இலங்கை அரசாங்கமும், விடுதலைப் புலிகளும் அதிகாரத்தை பங்கு போட்டுக் கொள்ள வேண்டும் என எதிர்பார்த்தன. இரண்டு பக்கமும் இதயசுத்தியுடன் பேச்சுவார்த்தையில் பங்குபற்றவில்லை. போர்நிறுத்தம் என்பதை போருக்கான தயார்படுத்தல் என்று புரிந்து கொண்டார்கள். சமாதான காலத்தில் புலிகள் ஆயுதக் கடத்தலை மேற்கொண்ட போது, இந்திய செய்மதிகள் காட்டிக் கொடுத்தன. அமெரிக்காவில் ஆயுதக் கொள்வனவில் ஈடுபட்ட முகவர்கள் கைது செய்யப்பட்டனர். புலிகளின் சர்வதேச பொறுப்பாளரும், ஆயுதங்களை வாங்கி அனுப்புவருமான கே.பி. பத்மநாதன் தாய்லாந்தில் கைது செய்யப்பட்டதாக செய்தி வந்தது. அவரை இலங்கை அரச அதிகாரிகள் பொறுப்பெடுக்க சென்ற போது, ஆள் அங்கே இல்லை. இடையில் என்ன நடந்தது என்பது இன்னமும் துலங்காத மர்மம். பத்மநாதன் ஊ.ஐ.யு., சுயுறு ஆகிய சர்வதேச உளவுத்துறையினரின் கண்காணிப்பில் இருப்பவர். புலிகளின் ஆயுதக் கொள்வனவு எந்த விதப் பிரச்சினையுமின்றி தொடருமானால், அது வேறு பல விடுதலை இயக்கங்களையும் ஊக்குவிக்கும் என்று சர்வதேசம் அஞ்சியது.
புலிகளுடனான சமாதானப் பேச்சுவார்த்தைகள் இடம்பெற்ற அதே கால கட்டத்தில், இந்தோனேசியாவில் அச்சே விடுதலை இயக்கம், சூடானில் கிறிஸ்தவ தென் பகுதியின் சுதந்திரத்திற்கு போராடிய இயக்கம், ஆகியன உலகமயமாக்கலின் நிபந்தனைகளுக்கு உட்பட்டு ஆயுதப் போராட்டத்தை கைவிட்டன. அதற்கு மாறாக இலங்கையில் மட்டும், இரு தரப்பும் பேச்சுவார்த்தையில் நாட்டமற்று போருக்கு தயாராகின. இலங்கை அரசு யுத்தநிறுத்தை ஒரு தலைப்பட்சமாக முறித்திருந்தாலும், தமிழர் தரப்பு தொடர்ந்து சமாதானத்திற்காக போராடி இருந்திருக்க வேண்டும். அப்படியான நிலையில் இலங்கை அரசின் மீது சர்வதேச அழுத்தம் அதிகரித்திருக்கும். ஏனெனில் இலங்கையில் மீண்டும் யுத்தம் ஏற்படுவதை சர்வதேச சமூகம் விரும்பவில்லை. இது அவர்களின் நலன்களுக்கு பாதகமானது.
மேற்குல நாடுகளின் ஊடகங்கள், இலங்கையில் நடக்கும் போரை, அல்லது தமிழின அழிப்பு யுத்தத்தை, முக்கியமற்ற செய்தியாக மட்டுமே தெரிவித்து வருகின்றன. தமது மக்கள் எதற்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என தீர்மானிக்கும் நிலையில் ஊடகங்கள் உள்ளன. அனேகமாக பத்திரிகைகளில் மட்டும், சர்வதேச செய்திகளுக்காக ஒதுக்கிய பக்கத்தில் தீப்பெட்டி அளவில் தான் இலங்கைப் போர் பற்றிய செய்தி பிரசுரமாகும். இனப்படுகொலை என்று சொல்லக் கூடிய அளவிற்கு, மூவாயிரம் ஈழத் தமிழர்கள் கொல்லப்பட்டாலும், அந்தச் செய்திக்கு தீப்பெட்டி அளவு தான் இடம் ஒதுக்கப்படும். மே 16 ம் திகதி, எதிர்பாராவிதமாக புலிகளின் சர்வதேச பொறுப்பாளர் பத்மநாதன் தெரிவித்த, "புலிகள் ஆயுதங்களை மௌனமாக்குகின்றனர்" என்ற செய்தி அனைத்துப் பத்திரிகைகளிலும் முதல் பக்கத்தில் இடம்பெற்றது. "தமிழ்ப் புலிகள் தோற்று விட்டனர்" என்று அந்தச் செய்திக்கு தலைப்பிடப் பட்டிருந்தது. பத்மநாதன் சொன்னதை யார் எப்படி மொழிபெயர்த்துக் கொண்டாலும், மேற்குலகைப் பொறுத்த வரை, புலிகள் ஆயுதங்களைக் கீழே போட்டு விட்டு சரணடைவதாகத் தான் புரிந்து கொண்டார்கள். மேற்குலக அரசுகள் புலிகளின் தோல்வியை எப்போதோ எதிர்பார்த்திருந்ததை, செய்திக்கு அளிக்கப் பட்ட முக்கியத்துவம் எடுத்துக் காட்டுகின்றது.
மேற்குலக பொருளாதாரம் இறங்குமுகமாக இருக்கும் காரணமாக, நிதி நெருக்கடி தோற்றுவித்த பொருளாதார தேக்கம் காரணமாக, இலங்கையில் போர் முடிவுக்கு வருவது அவர்களுக்கு தேவையாகப் படுகின்றது. மேற்குலக நாடுகள், ஆண்டு தோறும் வருகை தரும் இலங்கை அகதிகளை கட்டுப்படுத்த, முடியுமானால் ஒரேயடியாக நிறுத்த விரும்புகின்றன. இலங்கையில் போர் தொடரும் பட்சத்தில், மனிதாபிமான காரணத்தினால் அகதிகளின் வருகையை தடுக்க முடியாது. இலங்கையில் போரை எதோ ஒரு வகையில் நிறுத்துவதன் மூலம், அதை நிறைவேற்றிக் கொள்ளலாம். தற்போது போர் முடிவுக்கு வந்து விட்டதால், தமிழ் அகதிகள் இனிமேல் பெருமளவில் திருப்பியனுப்பப் படுவார்கள்.
இலங்கைப் பிரச்சினையில், ஒன்றில் பேச்சுவார்த்தை மூலம் ஒரு உடன்பாட்டிற்கு வர வேண்டும், அல்லது போரில் யாராவது ஒருவர் வெல்ல வேண்டும். இந்த முடிவை மேற்கத்திய நாடுகள் எப்போதோ எடுத்து விட்டன. ஒரு காலத்தில் இலங்கையின் உள் நாட்டு யுத்தம், தமிழ்-சிங்கள இனங்களைப் பிரித்து வைக்கும், அதனால் அந்நியத் தலையீட்டுக்கு வழி பிறக்கும் என நம்பினார்கள். தற்போது அந்தப் போர், உலகமயமாக்கலுக்கு தடையாகத் தெரிகின்றது. புலிகளின் தலைமையை காட்டிக் கொடுத்த சர்வதேச சூழ்ச்சியை, இதன் பின்னணியிலேயே புரிந்து கொள்ளப்பட வேண்டும். புலிகளின் வீழ்ச்சியால், ஏகாதிபத்தியம் திருப்தியடைந்து விடவில்லை. ஏகாதிபத்தியமானது ஈழத் தமிழர்களை மட்டுமல்ல சிங்களவர்களையும் தனது மறுகாலனிய அடிமைகளாக்க கங்கணம் கட்டிக் கொண்டு நிற்கின்றது. இப்போதே காலனிய அடிமைப் படுத்தலை நியாயப்படுத்த தொடங்கி விட்டார்கள். மேலைத்தேய விழுமியங்களை ஏற்றுக்கொள்வதன் மூலம் உலகமயமாக்கப்பட்ட சிறந்த குடிமக்களாகும் படி அழைப்பு விடுக்கின்றனர்.