Language Selection

திட்டமிட்ட சதி மூலம் புலித்தலைமையும், அவர்கள் குடும்பமும் முற்றாக சரணடைய வைத்தே அழிக்கப்பட்டுள்ளது. அவர்களுடன் எஞ்சி இருந்ததாக நம்பப்படும் 2000 போராளிகளுக்கு கூட, இதுதான் கதி. இந்தச் சதி மூலமான சரணடைவின் பின், சித்திரவதைக் கூடங்களில் இன்னமும் சில தலைவர்கள் சிக்கி மரணிக்கின்றனர் என்பது வேதனையானது.

 

இந்த சதி வலையின் முன் பக்க பரிணாமத்தை நன்கு தெரிந்தவர்கள், இதை வழி நடத்தியவர்கள். சரணடைய வைத்து, இந்த துரோகத்தை முழுமையாக வழி நடத்தியவர்கள் தான், பிரபாகரன் உயிருடன் இருப்பதாக கதை சொல்கின்றனர். உண்மையில் புலித்தலைமையை விட்டில் பூச்சியாக்கிய அரசியல், அதன் பின்னணி என்பது துரோகத்தாலானது.

 

இந்தச் சதி நன்கு திட்டமிட்டு திணிக்கப்பட்டது. இந்த துரோகம் வெளித்தெரியாது இருக்க, புலித் தலைவரை உயிருடன் இருப்பதாக கூறுவதன் மூலம், துரோகிகளே இன்று புலித் தலைமையாகியுள்ளது.

 

யார் இதை நன்கு திட்டமிட்டு சரணடைய வைத்தனரோ, அவர்கள் தாங்கள் செய்த துரோகத்தை தலைவர் இருப்பதாக கூறி இன்று மூடிமறைகின்றனர்.

 

தங்களைத் தாங்களே இராணுவத்திடம் ஓப்படைத்து பலியான அந்த புலி அரசியல் அடிப்படை என்ன? தனிமனித வழிபாடும், சர்வாதிகாரமும் மேலோங்கிய ஒரு அமைப்பு, இதற்கு வெளியில் சிந்திக்கவும் செயலாற்றவும் அவர்களால் முடியவில்லை. தான் சரியாக இருப்பதாகக் கருதிக்கொண்டு, தன்னைத்தானே பலி கொடுத்துள்ளது. இதைத்தான் நோர்வே சமாதான முகவர்  எரிக்சூல்கெய்ம், எதையும் சிந்திக்கும் நிலையில் பிரபாகரன் இருக்கவில்லை என்கின்றார்.

 

இந்த சதிக்கு உதவியது, மாபியாக் குழுக்களுக்கு இருக்கக் கூடிய விசுவாசம் தான். அதைக் கைவிடும் போது, அது உள்ளிருந்தே கழுத்தறுக்கின்றது.

 

இன்று புலிப் போராட்டங்கள், நம்பிக்கைகள், விசுவாசங்கள் அனைத்தும் மந்தைத்தனத்தை அடிப்படையாக கொண்டது. புலித்தலைமை மக்களை வெறும் மந்தையாக பயன்படுத்தியது. இதில் துயரம் என்னவென்றால், அதே மந்தைத் தனத்தடன் புலித்தலைமை  இலங்கை அரசிடம் சரணடைந்து பலியானதுதான்.

 

மந்தைத்தனம் தலைமை வரை புரையோடிக் கிடந்தது. இது தன்னைத்தானே பலியிட அழைத்துச் சென்றது. மூன்றாம் தர மாபியாக்கள், இலகுவாக கழுத்தறுக்க முடிந்தது. இடைக் காலத்தில் தப்பி செல்ல முற்படா வண்ணம், அவர்களுக்கு ஒரு மூன்றாம் தரப்பு பற்றிய நம்பிக்கையை ஊட்டி, அவர்களை சுற்றிவளைக்கப் பண்ணிய பின் அதுதான் இது என்று சரணடைவை வைத்து கழுத்தறுத்துள்ளனர். மக்களை முட்டாளாக்கி மந்தையாக்கிய புலியின் பின், இந்தத் துரோகம் இலகுவாக ப+சி மெழுக முடிந்துள்ளது.  

 

மக்கள் எவ்வளவு முட்டாளாக மந்தைகளாக உள்ளனர் என்பதை பார்க்க, நக்கீரன் வெளியிட்ட மோசடிப் படத்தை புலி கொண்டாடிய விதம் நல்ல எடுத்துக்காட்டு. ஒரு நாள் கூட அந்த படம் உயிர் வாழமுடியாது போனது. பாலசிங்கத்துடன் அமர்ந்து இருந்து பிரபாகரன் உரையாடும் அந்தப் படத்தை வைத்து, நக்கீரன் அரங்கேற்றிய மோசடி அம்பலமாகின்றது. மக்களை மந்தையாக்கி, அதை நம்பவைத்து நக்கீரன் போன்ற பொறுக்கிகள் பணம் சம்பாதிக்கின்றனர். ஒரு விடுதலைப் போராட்டத்தில் பல மாபியாக்கள். இறந்தவர்களை வைத்து பிழைப்பு.

{pdf=http://www.tamilcircle.net/document/TamilnetNakkeran/TamilNet_ 02.03.pdf|750|800}

 

http://www.tamilnet.com/art.html?catid=13&artid=8456#

 

 

இப்படி மக்களை மந்தையாக்கிய புலிகள், அந்த வழியிலேயே சரணடைய வைத்து பலியிடப்பட்டனர். மாற்று அபிப்பிராயம் எதுவும் எழுப்ப முடியாத ஒரு அமைப்பில், சரணடைவைத் தவிர வேறு வழியில்லை என்பதை பிரபாகரனை ஏற்க வைக்க, பத்மநாதனுக்கு 4 மணி நேரம் தேவைப்பட்டது. நாலு மணி நேரம் தான் இப்போது தான் உரையாடியதாக கூறியது இதையே தான்.

 

இங்கு இந்த சரணடைவை ஏற்க வைக்க, நம்பிக்கை உருவாக்க சில நாடகங்கள் போதுமானதாக இருந்தது. சரணடைவு அரங்கேறிய இடத்தில், இதை நம்பவைக்கும் வண்ணம் அன்னிய (வெள்ளை நிறம் கொண்டோர்) சக்திகள் நிச்சயமாக இருந்திருப்பர் என்பது உண்மை. இந்திய றோ உள்ளிட்ட அதிகாரிகள் இந்த இடத்தில் இருந்தது கசிகின்றது.

 

நம்பிக்கை மோசடி மூலமான சரணடைவை வைத்த பின், ஒவ்வொருவராக கொல்லுகின்ற சம்பவம் மனதை உலுக்கக் கூடியவை. இதையே புலிகள் முன்பு தாமல்லாத பலருக்கு செய்தவர்கள் தான். பேச்சுவார்த்தைக்கு வருமாறு மாற்றியக்க குழுக்களை அழைத்து வரும் வழியில் கிளைமோர் மூலம் கொன்றவர்கள். என் சொந்த அனுபவத்தில், என் நெற்றிப்பொட்டில், என் வாய்க்கு துவக்கை திணித்து விசையை இயக்கி மிரட்டியவர்கள் தான். குண்டு இல்லாததால் மரணிக்கவில்லை, ஆனால் மரணம் வந்து போகும்.

 

இதே நிலையில் நிறுத்தி புலித்தலைவர்கள் கொல்லப்படுவதை எண்ணும் போது வேதனையானது. துரோகத்தை தம் மோசடி மூலம் ஏமாற்றி, அனைவரையும் குடும்பம் குடும்பமாக பலிகொடுத்த அந்த நிகழ்வு இன்று மூடிமறைக்கப்படுகின்றது. தம் துரோகத்தை மூடிமறைக்கும் ஒரு கூட்டுச்சதி மூலம், புலிகள் இயக்கத்தையே இட்டுச்செல்ல முனைகின்றனர்.

 

மக்களின் மந்தைத்தனத்தை மூலதனமாகக் கொண்டு, தனிமனித சர்வாதிகார வழியைப் பின்பற்றியே அனைத்தையும் கட்டமைக்கின்றனர். பிரபாகரன் உயிருடன் இருக்கின்றார் என்ற மோசடி மூலம், தம் தலைமைக்கு தாம் செய்த படுதுரோகத்தில் இருந்து தப்பிப்பிழைக்க முனைகின்றனர்.

 

உண்மையில் பிரபாகரனுக்கு எந்த சூழலில் என்ன நடந்தது என்று தெரிய வந்தால், இது எப்படி என்ற கேள்வி எழும். இலங்கை அரசின் கையில் சரணடைய வைத்த இந்த துரோகத்தை வழிநடத்திய துரோகிகளுக்கு எதிரான உணர்வாக மாறுவதைத் தடுக்க, பிரபாகரனை உயிருடன் இருப்பதாக அவரை காட்டிக்கொடுத்து கொன்ற துரோகிகளே சொல்லுகின்றனர். மக்களுக்கு இந்த உண்மை தெரியவராது என்று, இந்த துரோகிகள் கனவு காண்கின்றனர்.  

          

பி.இரயாகரன்
22.05.2009