சிங்கள இனவெறி ராணுவத்தை எதிர்த்து விடுதலைப் புலிகள் வீரமரணமடைந்த நிலையில் ராஜபக்சேவை போர்க் கிரிமினலாக நடத்தவேண்டும் என்ற கோரிக்கையை வைத்து ம.க.இ.க தமிழகமெங்கும் ஆர்ப்பாட்டங்களை இன்று நடத்தியது.

சென்னை மெமோரியல் ஹால் அருகே நடந்த ஆர்ப்பாட்டத்தில் மக்கள் கலை இலக்கியக் கழகம், புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி, புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி, பெண்கள் விடுதலை முன்னணி ஆகிய அமைப்புகளைச் சேர்ந்த தோழர்கள் கலந்து கொண்டனர். இதில் பெண்களும், குழந்தைகளும் பெருந்திரளாக வந்திருந்தது பத்திரிகையாளர்களுக்கு ஆச்சரியத்தை தந்தது. ஆர்ப்பாட்டம் முழுவதும் தோழர்கள் எழுச்சியான முழக்கங்களை

எழுப்பினர். முழக்கங்களை காண விரும்புவோர் நேற்றைய ” துவண்டுவிடாது ஈழத்தமிழினம்! தோள்கொடுப்பார்கள் தமிழக மக்கள்” என்ற இடுகையைப் பார்க்கவும்.

பு.ஜ.தொ.மு வின் மாநில அமைப்புச் செயலர் தோழர் வெற்றிவேல் செழியனின் தலைமையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் பு.ஜ.தொ.முவின் மாநில தலைவர் தோழர் முகுந்தன் சிறப்புரையாற்றினார்.

அவரது உரையில் “நம்மைத் துயரத்தில் ஆழ்த்தும் வகையில் ஈழவிடுலைப் போர் ஒரு பெரும் பின்னடைவைச் சந்தித்திருக்கிறது. இது புலிகள் அமைப்பின் தோல்வி மட்டுமல்ல. ஈழத்தமிழ் மக்களின் விடுதலைப் போராட்டமே சந்தித்திருக்கும் பெரும் பின்னடைவு. இத்தகையதொரு நிலைமை நெருங்குகிறது என்பதைக் கடந்த சில மாதங்களில் அனைவருமே புரிந்து கொள்ள முடிந்தது எனினும், இந்த முடிவு பெரும் சோகத்தில் நம்மை ஆழ்த்தவே செய்கிறது.”

“புலிகள் இயக்கத்தை ஒழிப்பது என்று கூறிக்கொண்டு ராஜபக்சே அரசு நடத்திய இந்த ஈழத்தமிழின அழிப்புப் போரில், இந்திய அரசு துணை நின்று இறுதிவரை இலங்கை அரசை வழிநடத்தியிருக்கிறது. தேர்தல் முடிவதற்காகவே காத்திருந்து, நாள் குறித்து, இந்த இறுதிப் படுகொலை அரங்கேற்றப்பட்டிருக்கிறது. ஆயிரக்கணக்கான அப்பாவி மக்கள் படுகொலை செய்யப்படுவது கண் முன்னே தெரிந்தபோதும், செஞ்சிலுவை சங்கம், ஊடகங்கள் ஆகிய அனைவரும் கட்டாயமாக வெளியேற்றப்பட்டும், மேற்குலக நாடுகள் வாயளவுக்குக் கண்டனம் தெரிவித்தனவே ஒழிய, இதனைத் தடுத்து நிறுத்தும் வகையில் தலையிடவில்லை. ஏகாதிபத்திய உலகத்தின் ஆசியுடன், சீனா, ரசியா, பாகிஸ்தானின் ஆதரவுடன், இந்திய மேலாதிக்கத்தின் வழிகாட்டுதலில் இந்த இன அழிப்புப் போரில் வெற்றி பெற்றிருக்கிறது சிங்கள அரசு.”

“யூதர்களின் வதைமுகாம் போன்ற ராணுவக் கண்காணிப்பு முகாம்களில் முள் கம்பி வேலிகளுக்குப் பின்னே, ஈழத்தமிழ் மக்கள் கைதிகளாக அடைத்து வைக்கப்பட்டிருக்கிறார்கள். தமிழினத்தையே தோற்கடித்துவிட்ட வெற்றிக் களிப்பில் கூத்தாடுகிறது சிங்கள இனவெறி. உலகம் முழுதும் உள்ள ஈழத்தமிழ் மக்களோ, அவமானத்தால் துடிக்கிறார்கள். ஐரோப்பிய நாடுகளில் இரவு பகலாகத் தொடர்ந்து நடந்து கொண்டிருக்கிறது புலம் பெயர் தமிழர்களின் போராட்டம்.”

“ஈழத் தமிழினம் துவண்டுவிடாது. விடுதலைப் போராட்டம் தொடர்ந்து நடக்கும். ஈழத் தமிழினத்திற்கு தமிழக மக்கள் துணை நிற்பார்கள். சிங்கள இனவெறியர்களின் வக்கிரக் களியாட்டம் நீண்டநாள் நீடிக்காது. ஃபீனிக்ஸ் பறவையாய் ஈழப்போராட்டம் மீண்டெழும்” என்று தமிழக மக்களுக்கு புதிய போராட்டச் செய்தியை அறிவித்தார்.

வங்கக் கடலின் அருகே நடந்த இந்த ஆர்ப்பாட்டத்தின் செய்தி தமிழக மக்களின் ஆதரவோடு கடல் கடந்து ஈழத்திலும் எதிரொலிக்கும் நாள் வெகு தொலைவிலில்லை.

இந்த ஆர்ப்பாட்டத்தின் புகைப்படங்களை கீழே வெளியிட்டுள்ளோம்.

http://www.vinavu.com/2009/05/22/rajapakse-is-a-war-criminal/