புலிகளை போரில் வெல்வது என்ற பெயரில் இனப்படுகொலை செய்திருக்கும் ராஜபக்சேவை போர்க்கைதியாக விசாரித்து தண்டிக்க வேண்டும், இலங்கை அரசுக்கு உதவியாய் இருக்கும் இந்திய மேலாதிக்கத்தை எதிர்க்க வேண்டும், இராணுவ வதை முகாம்களிலிருக்கும் மக்கள் அவர்களது சொந்த இடங்களுக்கு செல்ல அனுமதிக்க வேண்டும், இலட்சக்கணக்கான தமிழ் மக்கள் அகதிகளாக வெளியேறிய இடத்தில்

சிங்களக் குடியேற்ற பகுதிகளாக மாற்ற நினைக்கும் சதியை முறியடிக்க வேண்டும் ஆகிய கோரிக்கைகளை தமிழக மக்களிடத்தில் கொண்டு செல்லும் நோக்கில் 21.05.09 வியாழனன்று தமிழகத்தின் மாவட்டத் தலைநகரங்களில் ம.க.இ.கவும் அதன் தோழமை அமைப்புக்களும் மாபெரும் ஆர்ப்பாட்டத்தை நடத்த இருக்கின்றன. சென்னையில் மெமோரியல் ஹால் அருகே காலை 10.30 முதல் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற இருக்கிறது. பதிவுலகின் நண்பர்கள், வாசகர்கள் அனைவரையும் வருமாறு அழைக்கிறோம். இந்த முழக்கங்களை அனைவரும் பயன்படுத்திக் கொள்ளுமாறும் வேண்டுகிறோம்.

 

முழக்கங்கள்

சிங்கள இனவெறிப் பாசிசத்தின்
இன அழிப்புப்போரை எதிர்த்துப் போராடி
விடுதலைப் புலிகள் வீரமரணம்!

ஓயமாட்டோம்!

ராஜபக்சே கும்பலை
போர்க்கிரிமினலாக அறிவித்து
தண்டனை வழங்கப் போராடுவோம்!

சிங்கள இராணுவத்தின் வதை முகாம்களிலிருந்து
ஈழத்தமிழர்களை மீட்டெடுப்போம்!

ஐ.நா மன்றத்தின் மூலம் மீள்குடியமர்த்தவும்,
உணவு-மருத்துவம் உடனே வழங்கவும் போராடுவோம்!

அரசியல் தீர்வு, மறுநிர்மாணம் என்ற பெயரில்
தமிழர் பகுதிகளை சிங்களக் காலனியாக்க முயலும்
இராஜபக்சே-இந்திய அரசு கூட்டுசதியை முறியடிப்போம்!

துவண்டுவிடாது ஈழத்தமிழினம்!
துணை நிற்பார்கள் தமிழக மக்கள்!

நீடிக்காது சிங்கள இனவெறியின் வக்கிரக் களியாட்டம்!
பீனிக்ஸ் பறவையாக மீண்டெழும் ஈழவிடுதலைப்போர்!

000

கண் திறந்து பார் தமிழகமே!

ஈழத்தமிழன் கழுத்தில் ஈரத்துணி சுற்றினார் கலைஞர்
இழுத்து அமுக்கியது இந்திய தேசிய காங்கிரசு
அறுத்து முடித்தது ராஜபக்சே அரசு!

இலங்கை அரசின் வெற்றிக்களிப்பு
சிங்கள வெறியின் கோரநடனம்!

முல்லைத்தீவின் கடறகரையெங்கும்
இரைந்து கிடக்கும் ஈழத் தமிழர் பிணம்!

முட்கம்பிச் சிறையின் உள்ளே துடிக்கிறது
முகம் சிதைந்த ஈழத்தமிழினம்!

படுகொலைக்கு நாள் குறித்த பாதகர்கள் - டில்லியில்
பதவி ஏற்பு விழா நடத்துகிறார்கள்!

பச்சைத்துரோகம் செய்த கருணாநிதி குடும்பத்துக்கு
பத்தாதாம் மந்திரிப் பதவி!

படுகொலைத் தலைவி சோனியாவின் மகனோ
பாரதத்தின் நாளைய பிரதமராம்!

“படை அனுப்பி ஈழம் அமைக்கும்” புரட்சித்தலைவியோ
படுத்துத் தூங்குகிறார் போயசு தோட்டத்தில்!

எனக்குத் தெரியாதென்று ஒதுங்க முடியுமா நம்மால்?

உன்னுடைய ஓட்டு, உன்னுடைய வரிப்பணம்,
உன்னுடைய பல்லிளிப்பு, உன்னுடைய ஏமாளித்தனம்,
உன்னுடைய மவுனம், உன்னுடைய அங்கீகாரம்,
நீ வழங்கிய அதிகாரம்..

நாம் பேசத்தவறினால் யார் பேசுவார்?

அமைதி காப்பது அவமானம்
அலட்சியம் காட்டுவது அநீதி
ஆர்த்தெழுவோம் இந்திய மேலாதிக்கத்துக்கு எதிராக!
வீழ்த்திடுவோம் சிங்கள இனைவெறிப் பாசித்தை!
மீண்டெழட்டும் ஈழ விடுதலைப் போராட்டம்!

 

http://www.vinavu.com/2009/05/20/eelam-protest-slogans/