03282023செ
Last updateபு, 02 மார் 2022 7pm

பணமில்லையா, ஹார்ட் அட்டாக் வந்து சாகட்டும் !

பணமிருப்பவன் மட்டுமே வாழ்க்கைய அனுபவிக்க வேண்டும், மற்றவர்கள் சாக வேண்டுமென்ற விதியை மறைமுகமாக இல்ல நேரடியாகவே பிரச்சாரம் செய்வதை புரிந்து கொள்வதில்லை. 

 

6.5.09 தினமணியில் வந்துள்ள இந்த செய்தி தாரளமயத்தின் அருகதையை வலியுடன் சொல்கிறது. இதய வால்வு கோளாறு உள்ளிட்ட இதயநோய் உள்ளவர்கள் நாள்தோறும் ஒரு வேளை சாப்பிட வேண்டிய உயிர்காக்கும் மாத்திரையின் பெயர் டிகாக்ஸின். இதன் விலை 60 காசு. ஆக மாதம் இருபது ரூபாய் செலவழித்தால் தீடிர் இதயத் தாக்குதலை பெருமளவு தடுக்கமுடியும்.

 

இவ்வளவு நாளும் வெளிச்சந்தையில் கிடைத்துவந்த இந்த மாத்திரை இப்போது தீடீரெனக் கிடைக்கவில்லை. இதனால் தமிழகத்தில் பல இடங்களில் மக்கள் கடை கடையாய் ஏறி இறங்கியும் இந்த மாத்திரைகள் கிடைத்தபாடில்லை. இந்த மாத்திரைக்கு சமமாக வேறு மாத்திரைகள் பரிந்துரைக்கப்பட்டாலும், அவை டிகாக்ஸின் மாத்திரைக்கு ஈடாகாது என இதயநோய் மருத்துவர்கள் சொல்கின்றனராம்.

மருந்து தயாரிப்பு நிறுவனங்கள் கட்டாயமாக உற்பத்தி செய்ய வேண்டிய மருந்து பட்டியலில் இந்த மருந்தும் உள்ளதால் அரசு மருத்துவமனைகளுக்கு மட்டும் இந்த மாத்திரை கொடுக்கப்படுகிறதாம். ஆனால் தினசரி இந்த மாத்திரைக்காக அரசு மருத்துவமனை சென்று வரிசையில் நின்று வாங்கினால் அதுவே இதயத்தின் இயக்கத்தை நிறுத்திவிடும். 60 காசு மாத்திரைக்காக அரை நாள் முழுவதும் செலவழிக்கும் அளவுக்கு நம் மக்களுக்கு வசதியில்லையே.

ஏற்கனவே இந்த மருந்தை தயாரித்து வந்த கிளாக்ஸோ, மேக்லாய்ஸ் நிறுவனங்கள் இதன் இலாபம் குறைவு என்பதால் உற்பத்தியை நிறுத்தி விட்டன. அறுபது காசில் மொத்த விற்பனையாளர், சில்லறை விற்பனையளர் கழிவு போக சில நயா பைசாக்கள்தான் இலாபமென்பதால் தற்போது டிகாக்ஸின் வெளிச்சந்தைக்கு கொடுக்கப்படுவது நிறுத்தப்பட்டுள்ளது.

மேலும் இந்த மாத்திரையை இப்படி இதயநோயாளிகளைப் பற்றிய கவலையில்லாமல் கொன்றதற்கு காரணம் வேறு விலை கூடிய மாத்திரைகளை அறிமுகப்படுத்துவதற்குத்தான். இனி அறுபது காசு மாத்திரைகள் கிடைக்கவில்லை என்பதால் மருத்துவர்கள் புதிய விலைகூடிய மாத்திரைகளை எழுதுவார்கள்.

ஆக இதய வலி வந்தால் பணமிருக்க வேண்டும். இல்லையேல் சாக வேண்டும். இந்தியாவில் தாராளமயம் வந்து செல்போன் என்ன, பேரங்காடிகள் என்ன, என்று வாய் பிளப்பவர்கள் எவரும் இந்த தனியார்மயமும், தாராளமயமும் பணமிருப்பவன் மட்டுமே வாழ்க்கைய அனுபவிக்க வேண்டும், மற்றவர்கள் சாக வேண்டுமென்ற விதியை மறைமுகமாக இல்ல நேரடியாகவே பிரச்சாரம் செய்வதை புரிந்து கொள்வதில்லை. அப்பல்லோக்களும், 24 மணிநேர மருத்துவமனைகளும் பெருகிவரும் நாட்டில் மக்களின் பணம் வம்படியாக கொள்ளையடிப்பதற்கு ஒரு எடுத்துக்காட்டுதான் இந்த இதயவலி மாத்திரையின் மறைவு. இனி உயிரோடிருக்க வேண்டுமென்றால் இதயத்தை மட்டுமல்ல பொதுசுகாதரத்தையும் பாதுகாப்பதற்கு தனியாரின் இலாபவேட்டைக்கு எதிராகவும் போராடவேண்டும். அப்போது மட்டுமே உயிர் வாழ்வது உத்திரவாதம் செய்யப்படும்.

 

http://www.vinavu.com/2009/05/18/die-if-you-dont-have-money/


கட்டுரையாளர்களின் ஆக்கங்கள்