செஞ்சிலுவைச் சங்கத்தின் மீட்பு முயற்சியை தடுத்து, வகைதொகையின்றி கொன்று குவிக்கும் 'மீட்பு" 'ஜனநாயகம்"

புலிகள் தமிழ் மக்களை பணயம் வைத்திருப்பதாகக் கூறிக்கொண்டு, அவர்களை குறிவைத்துக் கொல்லுகின்றது இந்த அரச 'ஜனநாயகம்". இந்த ஜனநாயகத்தின் மகிமையோ, இன்று தாம் குண்டு போட்டு காயப்படுத்திய மக்களை மருத்துவமனையில் வைத்து கொல்லுகின்றது. மருத்துவ மனைகளையே, குண்டு வீசி அழிக்கின்றது.

 

அங்கு இரவு பகல் பாராது மருத்துவம் செய்யும் வைத்தியர்கள் முதல் சமூக நல மனிதாபிமானிகளை, பழிவாங்கும் உணர்வுடன் கொல்லும் மிருக வெறியுடன் தாக்குதலை நடத்துகின்றது. தாம் கொல்வதற்கு தடையாக உள்ள உயிர்காக்கும் மருத்துவமனையை, செயல்படவிடாத வண்ணம் மீண்டும் மீண்டும் தாக்கி அழிக்க முனைந்தது, முனைகின்றது. 

 

 

பேரினவாத இனவழிப்பில் ஆயிரக்கணக்கான மக்கள் குண்டுக் காயங்களுக்கு உள்ளாகி தவிக்கும் இன்றைய சூழலில், ஒரு சில மருத்துவர்களின் உதவியுடன் மருத்துவமனை இயங்க முனைகின்றது. அரசோ அதை தரைமட்டமாக்கி அழிக்க முனைகின்றது. தாம் கொல்ல முனைவதற்கு எதிராக, அவர்கள் உயிரை பாதுகாப்பது பேரினவாத கொலைவெறி அரசுக்கு சினத்தை ஊட்டியுள்ளது. தான் வகை தொகையின்றி தமிழரை கொல்ல முயல்கையில், அவர்களை பாதுகாப்பது இன்று குற்றமாகியுள்ளது. மருத்துவமனை மேல் தாக்குதல் நடத்தி, அதை அழிக்க முனைகின்றது.

 

இந்த பாசிசப் பயங்கரவாதக் குற்றத்தின் முழுமையையும், இந்த மருத்துவமனை தான் முழு உலகுக்கும் கொண்டு செல்லுகின்றது. குண்டு போட்டு கொல்ல முயன்ற நிலையில், காயத்துக்குள்ளாகிய 15000 பேரையாது இந்த மருத்துவமனை உயிருடன் மீட்டுள்ளது.  அண்மைக் காலத்தில் உலகறிய இவர்களை மீட்டு, அவர்களை பாதுகாப்பாக செஞ்சிலுவைச் சங்கக் கப்பல் ஏற்றி அனுப்பியுள்ளது. இதன் மூலம் அப்பட்டமாகவே பேரினவாதத்தின் இந்தக் கொலை வெறித்தனத்தை, உலகம் முன் இந்த மருத்துவமனை அம்பலமாகியுள்ளது. இந்த மருத்துவமனைகள் உயிரை மீட்டதுடன், அவர்களை பாதுகாப்பாக மீட்க செஞ்சிலுவைச் சங்கத்துக்கும் உதவியது.

 

இப்படி மருத்துவமனையில் என்ன நடக்கின்றது என்பதை, உலகம் தெரியும் வண்ணம் அதன் காட்சிகள் எடுத்துக் காட்டுகின்றது. யார் கொலைஞர்கள் என்பதை, உலகமறிய மருத்துமனைகள் எடுத்துக் காட்டுகின்றது. இங்கு சிகிச்சை பெறுபவர்கள் சமூகத்தில் கையறு நிலையில் உள்ள அப்பாவிகளான அபலைகள். இப்படி சிகிச்சை பெறுபவர்களும், கப்பல் மூலம் மீட்கப்பட்டவர்களும், அப்பாவி மக்கள். பச்சிளம் குழந்தைகள் முதல் 90 வயது முதியவர்கள் வரை, வகை தொகையின்றி கொல்லப்பட்டும் காயமடைந்ததுமான மனித அவலத்தைப் பார்க்கின்றோம்.

 

இவர்கள் யாரும் மோதல் பிரதேசத்தில் கொல்லப்படவில்லை, காயமடையவில்லை. அரசு தானே அறிவித்த, மோதலற்ற பிரதேசத்தில் வைத்து அப்பாவி மக்களை தாக்கிக்கொல்ல முனைவதை இது அம்பலமாக்குகின்றது.  இப்படி  பேரினவாதம் மிருகவெறியுடன், கொல்லுகின்ற உண்மையை இது தெளிவாக அம்பலமாக்கியுள்ளது. எதார்த்தத்தில் மருத்துவமனைகள் கூட, இன்று தப்பிப் பிழைக்க முடிவதில்லை.

 

இன்று நாளையோ மரணம் எதிர்கொள்ழும் நிலையில், கடும் காயத்துக்குள்ளாகி மருத்துவமனையில் சிக்கியுள்ள அபலைகளை, அவர்களின் எந்த சாட்சியமுமின்றி கொன்றழிக்கவே பேரினவாத பாசிசம் மிருக வெறியுடன் முனைகின்றது.

 

இந்த வகையில் செஞ்சிலுவைச் சங்கத்தின் மீட்புக் கப்பல், அந்த மக்களை மீட்க வந்த போது, கடந்த இரு நாட்களும் அதை அனுமதிக்கவில்லை. இப்படி உண்மையான மீட்பை மறுக்கும் அரசு, இன்று தன் கொலைவெறி சாட்சிகளையே கொன்று விடமுனைகின்றது.

 

இப்படி பேரினவாதம் சாகடித்துக் கொண்டிருக்கும் மக்களை, கடந்த இரண்டு (12,13.05.2009) நாட்களாக செஞ்சிலுவைச் சங்கம் தன் கப்பல் மூலம் மீட்க எடுத்த முயற்சி அனுமதிக்கவில்லை. மாறாக இந்த இரண்டு நாளும், மருத்துவமனையையே குண்டு போட்டு, அதன் சுவடு தெரியாது அழித்துவிடவே முனைந்தது. இதன் மூலம் நூற்றுக் கணக்கானவர்களைக் கொன்றது. இப்படி இங்கிருந்து மக்கள் தப்பிச் செல்லமுடியாத வண்ணம் அழிக்க முனைகின்றது. செஞ்சிலுவைச் சங்கத்தின் சட்டபூர்வமான மீட்பு முயற்சியை, இதனால் அது தடுத்துவருகின்றது.

 

இப்படி அந்த மக்களை சாட்சியமின்றி கொன்று அழித்து விடவே, இன்று அரச பாசிசம் தீவிரமாக முனைகின்றது. தம் இனவழிப்பு யுத்த குற்றங்களை சுவடு இன்றி அழிக்க, அந்த மக்களையே கொன்றுவிடுவதுதான் பேரினவாதத்தின் தீர்வாக இன்று உள்ளது. இன்றோ, நாளையோ, ஆயிரம் ஆயிரம் உயிர்களை இந்த பேரினவாதம் காவு கொள்ளத் துடிக்கின்றது. மிருகவெறியுடன், ஒரு இனத்தின் ஒரு பகுதி மக்கள் மேல் பாய்ந்து குதறுகின்றது. அதை சர்வதேசத்தின் துணையுடன் செய்ய, தன் பாசிச இனவெறிக்கு ஜனநாயக முகமூடியை போட்டுக்கொள்கின்றது. எல்லா உலகத் திருடர்களும், இதன் பின் பவனி வருகின்றனர்.       

 

பி.இரயாகரன்
14.05.2009