வலது கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழக செயலாளர் தா.பாண்டியன் அம்மாவின் ஆசியுடன் வடசென்னையில் போட்டியிடுகிறார். வேட்பு மனு தாக்கல் செய்யும் போது தாக்கல் செய்த சொத்துக் கணக்கில் அவர் பெயரில் வாங்கியிருந்த நிலத்தின் மதிப்பை குறிப்பிடாமல் ஏமாற்றி விட்டதாக தி.மு.க பரபரப்பு கிளப்பியதை நீங்கள் அறிந்திருக்கலாம். எல்லா வேட்பாளர்களும் தமது சொத்துக் கணக்காக ஒப்புக்கு ஏதோ ஒரு செட்டப் கணக்கை காட்டுவதும் தேர்தல் கமிஷனும் அதை ஏதோ கடமைக்கு ஏற்றுக் கொள்வதும் வாடிக்கைதான்.

இங்கே ஒரு கம்யூனிஸ்ட் கட்சியின் முழுநேர ஊழியராக அறியப்படும் ஒரு நபர் அவர் காட்டிய கள்ளக் கணக்கிலேயே வீடு, நகைகள், நிலம் என 43 இலட்சத்திற்கு கணக்கு கொடுத்திருக்கிறார். இது போக அவருக்கு கோடம்பாக்கம் வங்கியொன்றில் 23 இலட்சத்திற்கு கடன் இருக்கிறதாம். இவ்வளவு பெரிய தொகையை அவர் ஏன் கடனாக வாங்கினார்? அந்த அளவுக்கு ஒரு கம்யூனிஸ்ட் செலவு செயவதற்கான அவசியமே இல்லையே?

உலகெங்கும் உள்ள கம்யூனிஸ்ட் கட்சியில் முழநேர ஊழியர்களாக பணியாற்றும் தோழர்கள் தமது அடிப்படைத் தேவைகளுக்கு கட்சியை சார்ந்து எளிமையான வாழ்க்கையை அமைத்துக் கொள்வார்கள். ஒருவேளை ஒருவர் சற்று வசதியான குடும்பத்திலிருந்து வந்து கட்சியில் முழுநேர ஊழியராக சேருகிறார்.பின்னர் அவரது குடும்ப சொத்து பிரிக்கப்பட்டு அவருக்குரிய பங்கு வந்தால் அதை அவர் கட்சிக்கு கொடுத்து விடுவதுதான் உலகமெங்கும் உள்ள மரபு. ஆனால் இந்தியாவில் புரட்சியை புதைத்துவிட்டு சந்தர்ப்பவாதத்தில் தொழில் நடத்தும் போலிக் கம்யூனிஸ்டுகள் தங்கள் அடையாளங்களைக்கூட பாட்டாளி வர்க்கமாக வைத்திருப்பதற்கு தயாரில்லை.

 

தா.பாண்டியன்

 

அதனால்தான் வலதின் மாநிலச் செயலாளரே தனது குடும்ப நிலங்களை வைத்திருப்பதும், பல இலட்சம் மதிப்பில் வீடு இருப்பதையும் அதையே கூச்ச நாச்சமின்றி வேட்பு மனுவில் தாக்கல் செய்திருப்பதும் இங்கே சகஜமாகப் பார்க்கப்படுகிறது. அம்மா கட்சியில் சேர்ந்து ஊழலால் திடீர் பணக்காரர்களான கழிசடைகளுக்கும், தொழிற் சங்கத்தை வைத்தே கல்லாக் கட்டி முதலாளிகளான இந்தப் போலி கம்யூனிஸ்டுகளுக்கும் என்ன வேறுபாடு?