05262022வி
Last updateபு, 02 மார் 2022 7pm

இஸ்லாமிய மத அரசியலின் தோற்றம்

மத அடிப்படைவாதம் ஒரு மேலைத்தேய இறக்குமதி - 2 
இஸ்லாமிய அடிப்படைவாதம் எங்கேயும் ஒரே மாதிரியாக தோன்றவில்லை. இதன் வளர்ச்சியை இரண்டு கால கட்டமாக பிரிக்கலாம். 20 ம் நூற்றாண்டின் ஆரம்பப் பகுதி, மற்றும் இறுதிப்பகுதி என இரண்டு தலைமுறைகளை கண்டுள்ளது. முதலாவது தலைமுறையை சேர்ந்தவர்கள் பின்தங்கிய பாலைவன நாடான சவூதி அரேபியாவில்,  மேற்கத்திய செல்வாக்கிற்கு உட்பட்ட எகிப்திலும் தோன்றியது. இவ்விரு மதவாத இயக்கங்களும் வெவேறு தளங்களில் தோன்றியிருந்ததுடன், சில கொள்கை வேறுபாடுகளைக் கொண்டிருந்தன. சவூதி அரேபியாவில் "முஹமது பின் அப்துல் வஹாப்" இஸ்லாமிய புனித ஸ்தலங்கள் இருக்குமிடங்களுக்கு யாத்திரை சென்று வந்து, தனது கருத்துகளை நூலில் வடித்தார். அவரது ஆதரவாளர்கள் தம்மை "முவாஹிதூன்" என அழைத்துக் கொண்டனர். ஆனால் பிறர் அவர்களை "வஹாபிகள்"என அழைத்தனர்.
வகாபிகளைப் பொறுத்தவரை குர் ஆனில் எழுதி உள்ளவை மட்டுமே ஏற்றுக் கொள்ளத்தக்கன. புனிதர்களை வழிபடும் தர்க்காகளை ஏற்றுக் கொள்ளவில்லை.
மெதினாவில் இறைத்தூதர் முகமதுவின் கல்லறை ஒன்று இருந்தது. மக்கள் வழிபடுகிறார்கள் என்று, அதைக் கூட சேதமாக்கினார்கள். அரேபிய இனக்குழு ஒன்றின் தலைவரான முஹமது இபுன் சவுத் தலைமையில் வஹாபிகள் இராணுவ பலத்தை கட்டி அமைத்தனர். ஆரம்பத்தில் சிறிய ஆயுதக் குழுவாக இருந்து, பின்னர் படை பலத்தை பெருக்கி, ரியாத், மெதீனா போன்ற நகரங்களை கைப்பற்றி தமது ஆதிக்கத்தை நிலைநாட்டினார்கள். அது தான் சவூதி அரேபியா என்ற நவீன தேசம் தோன்றிய கதை. வஹாபி மதப்பிரிவின் தலைவனாக மட்டுமல்ல, அரசுத் தலைவனாகவும் மாறிய (அப்துல் அசீஸ் இபுன்) சவூத்தின் பெயர் அந்த புதிய நாட்டிற்கு சூட்டப்பட்டது. முதலாம் உலக யுத்தத்தின் முடிவில், அந்தப் பிராந்தியத்திற்கு வருகை தந்த இராணுவ பலம் மிக்க அந்நியர்களான பிரிட்டிஷாருடன் சில உடன்படிக்கைகள் போடப்பட்டன.
சவூதி அரேபியாவில் மையம் கொண்ட வஹாபிகள், பின்னர் பிற நாடுகளுக்கும் தமது மத அடிப்படைவாத புரட்சியை ஏற்றுமதி செய்ய விளைந்தனர். அளவு கடந்த எண்ணை வளம் அவர்களது கனவை நனவாக்கியது. ஜெத்தாவில் இருக்கும் இஸ்லாமியப் பல்கலைக்கழகம் உலகெங்கும் இருந்து வரும் முஸ்லிம் மாணவர்களுக்கு இலவச மதக்கல்வி அளித்தது. முஸ்லிம்கள் செறிவாக வாழும் நாடுகளில் வகாபிச சங்கம் அமைக்க ஊக்குவிக்கப்பட்டது. சவூதி அரசின் நிதி உதவியில் புதிய மசூதிகள் கட்டிக் கொடுக்கப்பட்டன. இவற்றை விட பிற நாடுகளின் இஸ்லாமிய தீவிரவாத அமைப்புகளுக்கு பெருமளவு நிதி உதவி வழங்கப்பட்டது. ஆப்கானிஸ்தானில் சோவியத் படைகளை எதிர்த்து போரிட்ட முஜாகிதீன் குழுக்கள், மற்றும் பின் லாடன் போன்றோரின் கூலிப்படைகள் என்பன குறிப்பிடத்தக்க உதாரணங்கள். சூடானில் திடீர் சதிப்புரட்சி மூலம் ஆட்சியை கைப்பற்றிய துரபியின் மத அடிப்படைவாத அரசிற்கும் சவூதி அரேபியா பக்க பலமாக இருந்தது.
அண்மையில் தான் சவூதி அரேபியா தனது நூறாவது பிறந்த நாளை கொண்டாடியது. இந்த நூறாண்டுகளில் அங்குள்ள மன்னனின் சர்வாதிகாரம் பற்றி, மத அடிப்படைவாத பிற்போக்குத்தனம் பற்றி, கருத்துச் சுதந்திரம் மறுக்கப்படுவது பற்றி, பெண்ணடக்குமுறை பற்றி, இதுவரை ஜனநாயகம் காக்கும் மேற்குலக நாடுகளாகட்டும், மனித உரிமை நிறுவனங்களாகட்டும் அதிகம் அலட்டிக் கொள்வதில்லை. அங்கே பிற மத தெய்வங்களின் படங்களை வைத்திருப்பது குற்றம். அது மட்டுமல்ல பிற இஸ்லாமிய மதப் பிரிவுகளும் தடை செய்யப்பட்டுள்ளன. பெண்கள் முகத்தை திரையிட்டு மூடி, கருநிற அங்கி அணிந்தே வெளியில் செல்ல வேண்டும். பெண்களுக்கு வாகனமோட்டும் உரிமை இல்லை. (ஈரானில் கூட இந்த அளவு கட்டுப்பாட்டுகள் கிடையாது.)
சவூதி வகாபிசத்திற்கு மாறாக எகிப்தில் தோன்றிய "முஸ்லிம் சகோதரத்துவ இயக்கம்" மத அடிப்படைவாதத்திற்கு புதிய கோட்பாட்டு விளக்கம் அளித்தது. இஸ்லாமிய மத வரலாற்றில் முதன்முதலாக அனைத்து பிரிவுகளையும் ஒன்றிணைத்து, முஸ்லிம் என்ற ஒற்றை (அரசியல்) அடையாளத்தின் கீழ் கொண்டுவருவதை தனது இலட்சியமாக கொண்டுள்ளது. இன்று பல இஸ்லாமிய மத அடிப்படைவாதிகள் கனவு காணும் "அகண்ட இஸ்லாமிய இராச்சியத்திற்கு" அடிக்கோள் நாட்டியது. சவூதி வஹாபிகள் ஒரு மதத்தின் உட்பிரிவாக இயங்குவதுடன், தமது பாதையே சரியானது என்று மாற்றுப் பிரிவினர் மீது ஆதிக்கத்தை நிலைநாட்ட எத்தனிக்கின்றனர். முஸ்லிம் சகோதரத்துவம் ஆரம்பத்தில் இருந்தே அரசியல் கட்சியாக தான் உருவெடுத்தது.
"ஹசன் அல் பன்னா" என்ற முன்னை நாள் பாடசாலை ஆசிரியர் 1928 ல், முஸ்லிம் சகோதரத்துவம் (யட ஐமாறயn யட ஆரளடiஅரn) என்ற கட்சியை தொடங்கினார். ஆரம்பித்த காலத்தில் இருந்தே அவர்களது அரசியல் அபிலாஷைகள் தெரிந்தன. இந்தியாவில் இந்துத்வாவாதிகள் சிறுபான்மை முஸ்லிம்களுக்கு எதிராக கலவரங்களை உண்டாக்கியது போல, எகிப்தில் கிறிஸ்தவ சிறுபான்மையினருக்கு எதிரான கலவரங்களை முஸ்லிம் சகோதரத்துவ கட்சி தூண்டி விட்டது. கட்சியின் ஸ்தாபகர் ஹசன் அல் பன்னா, ஒரு கலவரத்தின் பொது மர்மமான முறையில் கொல்லப்பட்டார். ஆனால் அதற்குப் பிறகும் பெரும்பான்மை முஸ்லிம்கள் மத்தியில் கட்சியின் செல்வாக்கு வளர்ந்தது. யூத எதிர்ப்பு அரசியலில் மட்டுமல்ல, கொள்கை அடிப்படையில் நாசிஸத்துடன் ஒரே பாதையில் பயணம் செய்கின்றனர்.
எகிப்தில் பிரிட்டிஷாரின் வெளியேற்றத்தின் பின்னர் ஏற்பட்ட சதிப்புரட்சி மூலம், ஆட்சிக்கு வந்த நாசர் தலைமையிலான இராணுவ அதிகாரிகள் சோஷலிச பொருளாதாரக் கொள்கைகளை முன்னெடுத்தனர். முஸ்லிம் சகோதரத்துவம் நாசரின் ஆட்சியை கவிழ்க்க சதிப்புரட்சி செய்து தோல்வி கண்டது. ஆயிரக்கணக்கான உறுப்பினர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கபட்டதால், கட்சி குறிப்பிட்ட காலத்திற்கு இயங்கவில்லை. தலைவர் பன்னாவின் மரணத்தின் பின்னர் கட்சி இரண்டாக உடைந்தது.
1. "ஜிகாத் அல் இஸ்லாமி": இது பாலஸ்தீனத்திலும் இயங்கி வருகின்றது.
2. "தக்பீர் வா ஹிஜ்ரா": சிறையில் இருந்த உறுப்பினர்களில் இருந்து தோன்றியது.
முஸ்லிம் சகோதரர்களால் கவரப்பட்ட ஈரானின் ஆயத்துல்லா கொமைனி, இஸ்லாமியப்புரட்சியை வெற்றிகரமாக தலைமை தாங்கி உலகின் கவனத்தை ஈர்த்தார். ஈரானை ஷா மன்னன் ஆண்ட காலத்தில் மத நிறுவனங்கள் நன்றாக பராமரிக்கப்பட்டன. ஆனால் இறுதிக்காலத்தில் ஷா வழங்கி வந்த நிதியை நிறுத்தியதால், மதத் தலைவர்கள் அரசனுக்கு எதிராக கிளர்ந்தெழுந்தனர். மக்களை அணி திரட்டி, புரட்சி நடத்தி, தாமே ஆட்சியை கைப்பற்றினர். மத அடிப்படைவாத ஆட்சி எப்படி இருக்கும் என்பதற்கு தற்கால ஈரான் ஒரு உதாரணம். ஆரம்பத்தில் பல எதிர்பார்ப்புகளுடன் இஸ்லாமியப் புரட்சியை வரவேற்ற பொது மக்கள், காலப்போக்கில் மாயையில் இருந்து விடுபட்டனர். இரு தசாப்தங்களாக இஸ்லாமியப் போர்வையின் கீழ், முதலாளித்துவ பொருளாதாரக் கட்டமைப்பு, ஏழை-பணக்காரன் வேற்றுமையை அதிகரித்துள்ளது. பல்வேறு சமூகப் பிரச்சினைகளுக்கு மதம் ஒரு தீர்வல்ல என உணர்ந்துள்ளனர்.

கட்டுரையாளர்களின் ஆக்கங்கள்