Language Selection

செங்கொடியின் சிறகுகள்
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

அண்மையில் குழும அஞ்சலாக மேலதிக விபரம் ஏதும் இல்லாமல் மின்னஞ்சலொன்று வந்தது, அதில் முன்னர் பதிக்கப்பட்ட ஒரு கட்டுரையிலிருந்து “பூமி தட்டை என்று பொருள் படும்படியான வசனங்களும் குரானில் இருக்கின்றன” என்று குறிப்பிட்டிருந்த ஒரு வரியை மட்டும் எடுத்துக்கொண்டு அதற்கு பதில் கூறும் வகையில்

 எழுதப்பட்டிருந்தது. யாருக்கு அனுப்பபட்ட அஞ்சல் அது என்ற விபரம் அதில் இல்லாவிட்டலும் அதன் வாக்கிய அமைப்புகளினாலும் கடைசியாக உள்ள “உங்களின் மற்ற கேள்விகளுக்கு அன்பர்கள் பதிலளிப்பார்கள்” என்பதையை வைத்து அது செங்கொடிக்காக வந்த அஞ்சல் தான் என முடிவு செய்ததால் இந்த இடுகை அவசியமாகிறது. முதலில் அந்த அஞ்சல்…….. 

 

*************************************************************

‘பூமியை உங்களுக்கு ஒரு விரிப்பாக ஆக்கித் தந்திருக்கிறேன்’ என்கிறது குர்ஆனின் வசனம். இந்த வசனம் பூமி தட்டையானது என்பதற்கு சான்றாக இருக்கிறது.. மேற்படி குர்ஆனின் வசனம், பூமி உருண்டையானது என்று நிரூபிக்கப்பட்ட நவீன அறிவியல் உண்மைக்கு முரணாக அமைந்துள்ளது இல்லையா?.பதில்:

 1. பூமி ஓர் விரிப்பாக படைக்கப்பட்டிருக்கிறது.

 மேற்படி கேள்வி அருள்மறை குர்ஆனின் 71வது அத்தியாயம் ஸுரத்துன் நூஹ்வின் 19வது வசனத்தை அடிப்பைடயாக கொண்டது. மேற்படி அருள்மறை வசனம் கீழ்க்கண்டவாறு கூறுகிறது:’அன்றியும்இ அல்லாஹ், உங்களுக்காக பூமியை விரிப்பாக ஆக்கினான்.’ மேற்படி வசனம் அத்தோடு முடிந்து விடவவில்லை. அதனை அடுத்த வசனத்தில் முந்தைய வசனத்திற்கான காரணத்தையும் சொல்கிறது. ‘அதில் நீங்கள் செல்வதற்காக விசாலமான பாதைகளையும் அமைத்தான்’.(அல்குர்ஆன் 71:20) மேற்படி வசனத்தில் உள்ள செய்தியை மற்றொரு வசனத்தின் மூலமாகவும் அருள்மறை குர்ஆன் சுட்டிக் காட்டுகிறது. குர்ஆனின் 20வது அத்தியாயம் ஸுரத்துத் தாஹாவின் 53வது வசனம் கீழக்கண்டவாறு குறிப்பிடுகிறது. ‘(அவனே) உங்களுக்காக இப்பூமியை ஒரு விரிப்பாக அமைத்தான். இன்னும் அதில் உங்களுக்குப் பாதைகளை இலேசாக்கினான்…..’(அல்குர்ஆன் 20:23)


      

பூமியின் மேல் பகுதி முப்பது மைல்களுக்கும் குறைவான தடிமனைக் கொண்டது. மூவாயிரத்து எழுநூற்றம்பைது மைல்கள் ‘ஆரம’; (பூமியின் மையப் பகுதிக்கும் மேல் பறப்புக்கும் உள்ள தூரம் – Radius) கொண்ட பூமியின் அடிப்பகுதியோட ஒப்பிடும்போது – முப்பது மைல் தடிமன் என்பது மிகவும் மெல்லியதுதான். பூமியின் அடிப்பகுதியானது வெப்பமான -திரவநிலையில் உள்ளது. பூமியில் மேல் பகுதியில் வாழக்கூடிய எந்தவிதமான உயிரினமும் – பூமியின் அடிப்பகுதியில் வாழ முடியாத அளவுக்கு வெப்ப நிலை அதிகமாக இருக்கும். ஆனால் பூமியின் மேல் பகுதி உயிரினங்கள் வாழக்கூடிய நல்ல கெட்டியான நிலையில் இருக்கிறது. பூமியை விரிப்பாக்கி அதில் நாம் பயணம் செய்யக் கூடிய அளவுக்கு பாதைகளை அமைத்து தந்திருக்கிறோம் என்று அருள்மறை குர்ஆன் சரியாகத்தான் சொல்கிறது.

 2. விரிப்புகளை சமமான தரை மாத்திரம் இல்லாமல் – மற்ற இடங்களிலும் பரப்பலாம். 

பூமி தட்டையானது என்று சொல்லும் அருள்மறை குர்ஆனின் வசனம் ஒன்று கூட கிடையாது. அருள்மறை குர்ஆனின் வசனம் – பூமியின் மேற்பகுதியை ஒரு விரிப்புடன் ஒப்பிடுகிறது. சில பேர் விரிப்புக்கள் சமமான தரையில் மாத்திரம்தான் விரிக்கலாம் என்று எண்ணிக் கொண்டிருக்கிறார்கள். விரிப்புக்களை பெரிய பூமி போன்ற கோளத்தின் மீதும் விரிக்கலாம் அல்லது பரப்பலாம். ஒரு பெரிய பூமி உருண்டையின் மாதிரி ஒன்றை எடுத்து – ஒரு விரிப்பை அதன் மீது பரப்பிப் பார்த்தால் – மேற்படி கருத்து உண்மை என்பதை அறிந்து கொள்ளலாம். பொதுவாக விரிப்புகள் – நடந்து செல்வதற்கு வசதியாகத்தான் விரிக்கப்படுகின்றன. அருள்மறை குர்ஆன் ஒரு விரிப்பை பூமியின் மேல் பகுதிக்கு உதாரணமாக காட்டுகிறது.. பூமியின் மேல் பகுதியில் உள்ள விரிப்புப் போன்ற பகுதி இல்லை எனில் பூமியின் அடிப்பகுதியில் உள்ள வெப்பத்தின் காரணமாக பூமியின் மேல் பகுதியில் உள்ள எந்த உயிரினமும் உயிர் வாழ முடியாமல் போயிருக்கும். இவ்வாறு அருள்மறை குர்ஆனின் மேற்படி கூற்று அறிவு ரீதியானதோடு, அருள்மறை குர்ஆன் இவ்வுலகிற்கு வந்து பல நூற்றாண்டுகளுக்குப் பிறகு புவியியல் வல்லுனர்களால் கண்டு பிடிக்கப்பட்ட அறிவியல் உண்மையைப் பற்றியும் குறிப்பிடுகிறது குர்ஆனின் மேற்படி வசனம்.

 3. பூமி விரிக்கப்பட்டிருக்கிறது:

 அதேபோன்று அருள்மறை குர்ஆனின் பல வசனங்கள் பூமி விரிக்கப்பட்டிருக்கிறது என்பதைப் பற்றி குறிப்பிடுகின்றன.’இன்னும், பூமியை – நாம் அதனை விரித்தோம்: எனவே, இவ்வாறு விரிப்பவர்களில் நாம் மேம்பாடுடையோம்.’ என்று அருள்மறை குர்ஆனின் 51வது அத்தியாயம் ஸுரத்துத் தாரியாத்தின் 48வது வசனம் குறிப்பிடுகின்றது. அதுபோன்று அருள்மறை குர்ஆனின் 78வது அத்தியாயம் ஸுரத்துந் நபாவின் 6 மற்றும்7வது வசனம் கீழக்கண்டவாறு குறிப்பிடுகின்றது: ‘நாம் இப்பூமியை விரிப்பாக ஆக்கவில்லையா?. இன்னும் மலைகளை முளைகளாக ஆக்கவில்லையா?’. பூமி தட்டையானது என்று நாம் சிறிதேனும் பொருள் கொள்ளும் வகையில் அருள்மறை குர்ஆனின் எந்த வசனமும் குறிப்பிடவில்லை. அருள்மறை குறிப்பிடுவதெல்லாம் பூமி விசாலமானது என்றுதான். அருள்மறை குர்ஆன் பூமி விசாலமானது என்று குறிப்பிடக் காரணம் என்ன? என்று அருள்மறை குர்ஆனின் அத்தியாயம்29 ஸுரத்துல் அன்கபூத்தின் 56வது வசனம் நமக்குத் தெளிவாகத் தெரிவிக்கின்றது. ‘ஈமான் கொண்ட என் அடியார்களே!. நிச்சயமாக என் பூமி விசாலமானது: ஆகையால் நீங்கள் என்னையே வணங்குங்கள்..’ சுற்றுப்புற – சூழலின் காரணமாகத்தான் என்னால் நல்லது செய்ய முடியவில்லை, நான் குற்றங்களையேச் செய்து வந்தேன் என்று மேற்படி வசனத்தை தெரிந்த எவரும் மன்னித்துக் கொள்ளச் சொல்ல முடியாது.

 4. பூமி ஜியோஸ்பெரிகல் (GEOSPHERICAL) வடிவிலானது:

 அருள்மறை குர்ஆனின் 79வது அத்தியாயம் ஸுரத்துந் நாஜியாத்தின் 30வது வசனம் கீழ்கண்டவாறு கூறுகின்றது.. ‘இதன் பின்னர் அவனே பூமியை விரித்தான மேற்படி வசனத்தில் ‘தஹாஹா’ என்னும் அரபி வார்த்தை பயன் படுத்தப்பட்டுள்ளது.’தஹாஹா’ என்னும் அரபி வார்த்தைக்கு முட்டை வடிவம் என்றும் விரித்தல் என்றும் இரண்டு அர்த்தங்கள் உண்டு. ‘தஹாஹா’ என்னும் அரபி வார்த்தை ‘துஹ்யா’ என்னும் அரபி மூல வார்த்தையிலிருந்து பெறப்பட்டது. மேற்படி ‘துஹ்யா’ என்னும் அரபி வார்த்தைக்கு ஜியோஸ்பெரிகல் (GEOSPHERICAL)  வடிவிலிருக்கும் நெருப்புக் கோழியின் முட்டை என்று பொருள். 

பூமியும் ஜியோஸ்பெரிகல் (GEOSPHERICAL)  வடிவில்தான் உள்ளது.

 இவ்வாறு பூமி ஜியோஸ்பெரிகல் (GEOSPHERICAL) வடிவில் உள்ளது என்கிற நவீன அறிவியல் உண்மையும், அருள்மறை குர்ஆன் கூறும் வசனங்களும் ஒத்தக் கருத்தை உடையதுதான். -டாக்டர் ஜாகிர் நாய்க்

                      இனிய நன்பருக்கு பூமி விரிப்பாக்க பட்டிருக்கிறது என்றவுடன் பூமி என்பது உருண்டையானது அல்ல என்ற உங்கள் கண்ணொட்டம் வியப்பாக இருக்கிறது, இதில் இருந்து நீங்கள் முழுமையாக குரானை படிக்கவில்லை என்று தெரிகிறது(மன்னிக்கவும்) 

Holi Qran 18: 92   93 Holy Quran 18: 94 

இந்த‌ ஸுராக்க‌ள் பூமியின் ம‌றுப‌குதி அதாவ‌து இன்றைய‌ வ‌ட‌ தென் அமேரிக்காவை ப‌ற்றிய‌வை இவ‌ற்றை ந‌ன்றாக‌ ப‌டிக்கும் போது குரானில் பூமியான‌து உருண்டையான‌து என்று புல‌ப்ப‌டும். இது விஞ்ஞான‌ யூக‌ங்க‌ள் தோன்றுவ‌த‌ற்கு முன்பு எழுத‌ப‌ட்ட‌து.

மேலும் விரிப்பு என்ப‌து குரானில் க‌ளைத்து உள்ள‌ ம‌னித‌ர் ஓய்வெடுக்க‌ தேர்தெடுக்கும் ஒரு வ‌ழியைத்தான் கூறுகிற‌து. முழு பூமியை விரிப்பாக‌ கூற‌வில்லை 

ந‌ன்றி

உங்க‌ளின் ம‌ற்ற‌ கேள்விக‌ளுக்கு அன்ப‌ர்க‌ள் ப‌தில் அளிப்பார்க‌ள்.

*************************************************************

             பூமி ஒரு விரிப்பாக படைக்கப்பட்டிருக்கிறது. அதை பாயைப்போல் சுருட்டிவிடும் வல்லமை எமக்கு உண்டு என்பனபோன்ற வசனங்களை சுட்டிக்காட்டி இதில் பூமி தட்டை என்பது போன்று பொருள் வருகிறது எனக் கேட்கப்பட்டிருந்தது. விரிப்பு என்றால் அவை சமதளத்தில் மட்டுமல்ல கோளத்தின் மீதும் பரப்பலாம் எனவே விரிப்பு என்ற உவமையின் மூலம் பூமி தட்டை என்பதை அல்ல உருண்டை என்பதையே மறைமுகமாக உணர்த்துகிறது. என்பது தான் அந்த அஞ்சலின் சாரம். 

              குரானில் பூமியின் வடிவம் குறித்து அனேக இடங்களில் குறிப்பிடப்படுகிறது. அனேக இடங்களில் குறிப்பிடப்பட்டாலும் இரண்டு விதங்களில் தான் பூமியை குறிப்பிடுகிறது. ௧) விரிப்பாக படைத்திருக்கிறோம். ௨) ஒரு நாள் சுருட்டப்படும்.  இது தவிர அஞ்சலில் குறிப்பிடப்படுவது போல் பூமி தட்டையானது என்று எந்த இடத்திலும் நேரடியாக குறிப்பிடப்படவில்லை அதேநேரம் பூமி உருண்டையானது எனவும் குறிப்பிடப்படவில்லை. இருப்பதெல்லாம் மேற்குறிப்பிட்ட இரண்டு தான். விரிப்பு என்பதன் பொருளை பூமிக்கு எப்படி பொருத்துகின்றனர். பூமி அதன் புவியியல் அமைப்பில் மூன்று அடுக்குகளை கொண்டிருக்கிறது ௧) இன்னர் கோர் எனப்படும் உட்கரு ௨) அவுட்டர் கோர் எனப்படும் வெளிக்கரு ௩) மேண்டில் எனப்படும் மேலோடு. இதில் உட்கரு திடப்பொருளாகவும், வெளிக்கரு எரிமலைக்குளம்பாக திரவப்பொருளாகவும் இருக்கிறது. மேலோடு நாம் காணும் கடல், மலை, நிலம் என்று மேற்பரப்பாகவும் இருக்கிறது. இந்த மேலோட்டைதான் உயிரினங்கள் வாழ்வதற்கு ஏற்ற விரிப்பாக ஆக்கியிருப்பதாக பொருள் சொல்கிறார்கள். பூமியின் மேலோட்டை குரான் விரிப்பாக குறிப்பிடுவதாகவே கொள்வோம். எந்த வடிவத்தில் அந்த விரிப்பு விரிக்கப்பட்டிருக்கிறது? சமதளத்திலா? அல்லது உருண்டை வடிவத்திலா? என்ற கேள்விக்கு குரானில் விடை இருக்கிறதா? பூமி உருண்டையாக இருப்பதனால் அதன் மேலும் விரிப்பை பரப்ப முடியும் என்ற முடிவுக்கு வரமுடிகிறது. பூமி உருண்டையா தட்டையா என்று தெரியாது எனக்கொண்டால் குரானிய வசனங்களின் படி உருண்டை தான் என எப்படி உறுதிப்படுத்துவது? 

             அடுத்து சுருட்டப்படுவதற்கு வருவோம். பூமியை ஏன் சுருட்டவேண்டும்? ஏனென்றால் அது குரானிய கோட்பாட்டின் அடிப்படையான விசயம். அதாவது , பிரபஞ்சத்தில் உள்ள எல்லாம் மனிதன் உட்பட கடவுளால் படைக்கப்பட்டது. அவைகளெல்லாம் ஓர் நாள் அழிக்கப்படும் என்பது மதத்தின் அடிப்படை. அந்த அடிப்படையில் அழிக்கப்படும் நிகழ்ச்சியை பற்றிக்கூறும் போது மனிதன் காணும் எல்லாம் எப்படி அழியும் என்பதாக‌ ஒரு விளக்கம். பூமி விரிப்பு, வேளை வந்ததும் சுருட்டப்படும். ஆனால் இந்த விரிப்பும் சுருட்டலும் பூமியோடு மட்டும் நிற்கவில்லை. வேறு சிலவற்றையும் இறைவன்(!) சுருட்டுகிறான். 81:1 சூரியன் சுருட்டப்படும் போது. 21:104 வானத்தை நாம் சுருட்டும் நாளில். இந்த இரண்டு வசனங்களிலும் சூரியனும் வானமும் சுருட்டப்படுகிறது. பூமியின் மேற்பகுதி கடினமாக இருக்கிறது ஆகவே அது விரிப்பு, பின்னர் அது சுருட்டப்படும் என்பதை வாதத்திற்காக சரி என்று கொள்வோம். சூரியன் எப்படி சுருட்டப்படும்? அங்கு எந்த தரையும் கிடையாது அது எரிந்து கொண்டிருக்கும் ஹீலியம் வாயுவால் ஆனது. அதை எப்படி சுருட்டுவது? சூரியனாவது பரவாயில்லை, வாயுவானாலும் பொருளாக இருக்கிறது. வானம் என்று ஒன்றே கிடையாது. அது ஒரு உருவகம் தான், வானம் என்று எந்தப்பொருளும் இல்லை. ஒன்றுமே இல்லாத வெளியை எப்படி சுருட்டுவது? இதில் இன்னொரு வேடிக்கை என்னவென்றால் பெரிய பொருட்களெல்லாம் சுருட்டப்படுகிறது சிரிய பொருட்களெல்லாம் உதிர்ந்து விடுகிறது. பூமி வானம் சூரியன் எல்லாம் பெரிய பொருள் எனவே சுருட்டப்படுகிறது. உதிர்ந்து விடும் சிரிய பொருள் எது தெரியுமா? நட்சத்திரங்கள். 81:1,2 சூரியன் சுருட்டப்படும் போது. நட்சத்திரங்கள் உதிரும் போது. இதைத்தான் இவர்கள் படைத்தவனுக்கு தெரியாத விஞ்ஞானமா? என வியக்கிறார்கள். பார்வைக்கு புள்ளியாக தெரிவதால் அவை உதிர்ந்துவிடும் ஆனால் சூரியனும் ஒரு நட்சத்திரம். சூரியனை விட நூற்றுக்கணக்கான மடங்கு பெரிய நட்சத்திரங்களெல்லாம் புள்ளியாக தெரியும் சாத்தியம் உண்டு என்பது தான் அறிவியல். 

           பொதுவாக குரான் வசனங்கள் குறித்து விளக்கமளிப்பவர்கள் எந்த தலைப்பில் பேசுகிறார்களோ அல்லது எழுதுகிறார்களோ அதற்கு ஏற்றார்ப்போல் குரான் வசனங்களுக்கு பொருள் கூறிக்கொள்வார்கள். இதிலும் அதேமுறையில் பொருள் கூறியிருக்கிறார்கள். குரான் 20:53ம் வசனத்திற்கு உங்களுக்காக இப்பூமியை ஒரு விரிப்பாக அமைத்தான் என்று பொருள் கொண்டிருக்கிறார்கள். ஆனால் ஜெய்னுலாப்தீன் தமிழாக்கத்தில் தொட்டிலாக அமைத்தான் என்று இருக்கிறது. எங்கெல்லாம் கேள்விகள் எழுப்பப்படுகிறதோ அங்கெல்லாம் அந்த வசனத்தில் பயன் படுத்தப்படும் அரபு வார்த்தைக்கு இரண்டு மூன்று பொருள்கள் வந்து சேர்ந்து விடுவது வியப்பு தான். போகட்டும். 

            குரான் 79:30ம் வசனத்திற்கு எந்த மொழி பெயர்ப்பில் அல்லது யாருடைய மொழிபெயர்ப்பில் நெருப்புக்கோழி முட்டை என்று பொருள் கொடுத்திருக்கிறார்கள்? எல்லாக்குராணிய மொழிபெயர்ப்பிலும் “இதன் பின்னர் அவனே பூமியை விரித்தான்” என்று தான் 79:30 வசனத்திற்கு பொருள் தந்திருக்கிறார்களேயன்றி நெருப்புக்கோழியின் முட்டை என்று எந்த மொழி பெயர்ப்பிலும் இல்லை. நெருப்புக்கோழியை குறிப்பதற்குஅரபு மொழியில் ‘நாஆம்’ என்ற சொல் இருக்கிறது. முட்டை என்பதற்கு பொதுவான சொல் ‘பேத்’ என்பது. உலகின் எந்த மொழியிலும் ஒரு உயிரினத்தின் முட்டையை குறிக்க தனிச்சொல் இருப்பதாக தெரியவில்லை. குட்டியை குறிப்பதற்கு தனிச்சொல் இருக்கிறது ஆனால் முட்டையை குறிப்பதற்கு இதனுடைய முட்டை (கோழியின் முட்டை வாத்தின் முட்டை) என்று தான் பயன் படுத்துகிறார்கள். எந்த மொழியில் முட்டையை குறிப்பதற்கு தனிச்சொல் இருக்கிறது? அல்லது நெருப்புக்கோழி முட்டைக்கு மட்டும் தனிச்சொல் வந்தது எப்படி என்று அஞ்சல் எழுதியவர்கள் விளக்குவார்கள் என எதிர்பார்க்கிறேன். 

            குரான் வசனங்கள் 18:92,93,94 வட தென் அமெரிக்காவை குறிப்பதாக எப்படி உணர்ந்து கொண்டார்கள் எனப்ப்புரியவில்லை. 

92) ஒரு வழியில் சென்றார். 

93) இரண்டு மலைகளுக்கு இடையே உள்ள பகுதியை அவர் அடைந்த போது, அதற்க்கப்பால் எந்த பேச்சையும் புரிந்து கொள்ளாத ஒரு சமுதாயத்தைக்கண்டார்.

 94) துல்கர்னைனே! ய‌ஃஜூஜ், மஃஜூஜ் என்போர் பூமியில் குழப்பம் விளைவிக்கின்றனர். எங்களுக்கும் அவர்களுக்குமிடையே ஒரு தடுப்பை ஏற்படுத்திட உமக்கு நாங்கள் வரி தரட்டுமா? என்று அவர்கள் கேட்டனர். மேற்கண்ட மூன்று வசனங்களில் அது அமெரிக்க கண்டங்களை குறிக்கிறது என்பதை எப்படி கண்டுகொண்டார்கள் என்பதை விளக்கினால் நாமும் விளங்கிக்கொள்ளலாம். மேலும் “இவற்றை நன்றாக படிக்கும் போது பூமி உருண்டை என்பது புலப்படும்” என்றும் எழுதியிருக்கிறார்கள். எப்படி என்று பார்ப்போம். துல்கர்னைன் என்ற ஒருவரை பற்றிய சம்பவத்தை 15 வசனங்களில் விவரிக்கிறது குரான். அதாவது துல்கர்னைன் என்பவர் ஒரு வழியில் செல்கிறார், அப்போது சேறு நிறைந்த தண்ணீரில் சூரியன் மறைவதை காண்கிறார். பின்னர் சூரியன் உதிக்கும் திசையை அடைந்தார். இதை வைத்துக்கொண்டு தான் பூமி உருண்டை என்று குரான் கூறுவதாக சத்தியம் செய்கிறார்கள். எப்படி என்றால், ஒருவர் மேற்குத்திசையில் சென்றால் சூரியன் மறைவதி காணலாம், தொடர்ந்து செல்லும் போது சூரியன் உதிப்பதையும் காணலாம் (காண்கிறார்).  பூமி உருண்டையாக இருப்பதால் தானே இது சாத்தியம் எனவே இது பூமி உருண்டை என்பதை குறிக்கும் வசனங்கள் என்கிறார்கள் ஆனால் அவர்கள் வசதியாக ஒரு வசனத்தை விட்டுவிட்டு நேர் கோட்டில் செல்வதுபோல் தோற்றம் காட்ட முனைகிறார்கள். இந்த சம்பவம் குரானில் 18:83 ம் வசனத்திலிருந்து 97ம் வசனம் வரை வருகிறது இதில் 

85வது வசனம் அவர் ஒரு வழியில் சென்றார். 

89வது வசனம் பின்னர் ஒரு வழியில் சென்றார். 

இந்த இரண்டு வசனங்களும் தெளிவாக உணர்த்துவது அவர் முதலில் ஒரு வழியிலும் பின்னர் வேறொரு வழியிலும் சென்றார் என்பதைத்தான். இது எப்படி பூமி உருண்டை என்று கூறுவதாகும். 

உபரியாக சில தகவல்கள்:  ௧)வரலாற்றில் அலெக்ஸாண்டர் என்ற மன்னரை பற்றி படித்திருப்பீர்கள் அவருக்கு துல்கர்னைன் என்று இன்னொரு பெயரும் உண்டு. அவர் அட்லாண்டிக் கடலைக்கடந்து அமெரிக்கா சென்றதாக வரலாற்றில் இல்லை. மாறாக இந்தியா வரை வந்துவிட்டு திரும்பும் வழியில் மாசிடோனியாவில் மரணித்தார். 

௨) பூமி உருண்டை என‌ முத‌லில் கூறிய‌வ‌ர் ஃபைலோலாஸ், ஆண்டு கிமு 450ல்.  

௩) கிமு இர‌ண்டாம் நூற்றாண்டில் வாழ்ந்த‌ எரோட்ட‌ஸ்த‌னிஸ் என்ப‌வ‌ர் பூமியின் சுற்ற‌ள‌வை தோராய‌மாக‌ க‌ண‌க்கிட்டு 25000 மைல் என்று கூறினார். இன்றைய‌ துல்லிய‌மான‌ க‌ண‌க்கீடு 24902.4 மைல். 

              முடிவாக, இது போன்ற தீர்மானமாக ஒன்றை அறிவிக்கவேண்டிய இடங்களிலெல்லாம் குரான் ஏன் குழ‌ப்புகிறது. பூமி உருண்டையானது என்றோ இல்லை தட்டையானது என்றோ நேரடியாக அறிவிப்பதில் என்ன சிக்கல்?