அனைத்து ஒடுக்கப்பட்ட மக்கள் சார்பாகவும், நாம் முன் செல்ல வேண்டும். அரசு மற்றும் புலியுடன் இருக்க கூடிய அனைத்து விதமான அரசியல் உறவுகளுக்கும், அதை பிரதிநிதித்துவம் செய்யும் நபர்களுடனான அரசியல் உறவுகளுக்கும் முதலில் முடிவு கட்டவேண்டும்.

 

அவர்கள் மேல் விமர்சனம், அம்பலப்படுத்தல், மக்களின் எதிரிகளை அடையாளம் காட்டுதல் மூலம், எம் அரசியல் தனித்துவத்துடன் நாம் முன்செல்லவேண்டும். ஒரு சமுதாயப் புரட்சிக்காக, எதிர்ப்புரட்சி சக்திகளை தனிமைப்படுத்தி, நாம் தனித்துவமாக செயல்படவேண்டும்.  

 

ஓடுக்கப்பட்ட வர்க்கங்களின் நலனையும், தமிழ்மக்களின் நலனையும், இன்று நாம் மட்டும ;தான் பிரதிநிதித்துவம் செய்கின்றோம்;. இதற்கு நாம் உண்மையாகவும் நேர்மையாகவும் இருக்க, தனித்து போராட வேண்டியுள்ளது. அதாவது அரசு சார்பு 'ஜனநாயகம்" மற்றும் புலி சார்பு 'தேசியம்" பேசும் சக்திகளுக்கு வெளியில், நாம் தனித்து தனித்தன்மையுடன் போராட வேண்டும். எம்மருகில் அக்கம் பக்கமாக இயங்கும் இவ்விரண்டுமே, எதிர்ப்புரட்சிக் கூறுகளாகிவிட்டது. தேசியம், ஜனநாயகம் என்பது மக்களின் அடிப்படையான அரசியல் கோரிக்கையை தவறாக கையாண்டு, தனக்கேற்ற எதிர்ப்புரட்சி கூறாகியுள்ளது. இதில் இருந்து முறித்துக்கொண்டு, இதை நாம் எம்வழியில்  முன்னெடுத்துச் செல்ல வேண்டிய தார்மீகப் பொறுப்பு எம்மிடம் மட்டுமே இன்று எஞ்சி உள்ளது.

 

நாம் எந்த சமரசப் பாதைக்கும், சீர்திருத்த பாதைக்கும் செல்லமுடியாது. இதை முன்னிறுத்தாமல் இன்று அரசியல் பேசுவது என்பது, பச்சையான சந்தர்ப்பவாதமாகும்.

 

கருத்து முரண்பாடுகள் என்பது, அனைத்துக்குமான சுதந்திரமல்ல. அரச பாசிசத்தையும், புலிப் பாசிசத்தையும் நியாயப்படுத்துவற்கு சுதந்திரம் என்பது அயோக்கியத்தனம். இதை கருத்து முரண்பாடு என்பது, இதற்கு சுதந்திரம் என்பதும், மக்களுக்கு எதிரான திட்டமிட்ட சதி அரசியலாகும்.

 

இதை நாம் தேசியத்தின் பெயரில், ஜனநாயகத்தின் பெயரில், கருத்துச் சுதந்திரத்தின் பெயரில், இதை அங்கீகரிக்க முடியாது. இதை மறுத்து போராடுவது உடனடியான அரசியல் பணியில் ஒரு அம்சமாகும். தேசியம், ஜனநாயகம், இவ்விரண்டையும் நாங்கள் எங்கள் வர்க்க அரசியல் வழியில், நாமே தனித்து முன்னிறுத்தி போராட வேண்டியுள்ளது. இது இன்றைய வரலாற்றுக்கு பொருத்தமானதும், சமூகத்தின் தேவையும் கூட. இனியும் நாங்கள் தனிநபர்கள் அல்ல.

 

தேசியத்தின் பெயரில் புலிகள் நடத்திய மக்கள் விரோத யுத்தமும், ஜனநாயகத்தின் பெயரில் பேரினவாதிகள் நடத்திய இனவழிப்பு யுத்தமும், பரந்துபட்ட மக்கள் முன் அம்பலப்பட்டு அவை தனிமைப்பட்டு வருகின்றது. எங்கும் அரசியல் ரீதியான கேள்வி, விழிப்புணர்வு நோக்கிய தேடுதல் இயல்பாகவே அதிகரித்துள்ளது. ஆனால் மெதுவாக, உறுதியாக இது நடக்கின்றது. நாம் ஒடுக்கப்பட்ட வர்க்கத்தை முன்னிறுத்தி, ஒடுக்கப்படும் இனத்தை சார்ந்து, துல்லியமாக பயணிக்க வேண்டிய தனித்துவமான தேவை, முன்னெப்போதுமில்லாத வகையில் இன்று எழுந்துள்ளது.

 

மார்க்சிய லெனினிய மாவோ சிந்தனையின் அடிப்படையில் வர்க்கப் போராட்டத்தையும், வர்க்க சர்வாதிகாரத்தையும், வர்க்கங்கள் ஒழிக்கப்படுவதற்கான திசைவழியில் நாம் பயணிக்க வேண்டும். நாம் கற்றுக் கொள்ளவும் கற்றுக் கொடுக்கவுமான போராட்டத்தை, குறிப்பாக நடத்த வேண்டியுள்ளது.

 

'தேசியம்", 'ஜனநாயகம்", 'சுதந்திரம்" என்ற பெயரால், ஒரு மக்கள் விரோத யுத்தம் நடத்தப்பட்டுள்ளது. மக்கள் வாழ்வை நசுக்கி, அவர்களை கொள்ளை அடிக்க முடிந்திருக்கின்றது. தேசிய 'விடுதலை"யின் பெயரால், ஜனநாயகம் என்னும் 'சுதந்திர"த்தின் பெயரால், மனித உழைப்பு சுரண்டப்பட்டிருக்கின்றது. மக்களை இதற்காக கொன்றும் குவித்துமுள்ளனர்.

 

யுத்தமற்ற சூழலில் இந்த போக்குகள் தணிந்தாலும், மக்கள் சுதந்திரத்தையும் ஜனநாயகத்தையும் ஒருநாளும் அனுபவிக்க முடியாது. மக்கள் சுரண்டப்படுவதும், சமூக ஒடுக்குமுறைகளுக்கு உள்ளாவதும் தொடரவே செய்யும்.

 

இதை நியாயப்படுத்த கருத்துச்சுதந்திரம் என்பதும், இதைப் பாதுகாக்கும் சமூக அமைப்புகளுடன் இருக்கின்ற நபர்களுடன், அரசியல் உரையாடல் என்பது, எதிர்ப்புரட்சிக்கு உதவும் சந்தர்ப்பவாத அரசியலாகும். விமர்சனம், அனைத்து கருத்துக்கும் சுதந்திரம், வாசகர் கருத்துக்கு சுதந்திரம் என்ற பெயரால், புலம்பெயர் புலியல்லாத அரசியல் தளம் மக்களுக்கு எதிராக பயணித்து வந்துள்ளது. இன்று அதுவே பலரை பெரும்பான்மையை அரசுக்கு பின்னால் இட்டுச் சென்றுள்ளது. சிலரை புலிக்கு பின்னால் இட்டுச் சென்றுவிட்டது. இடையில் எந்த மாற்று அரசியல் வழியையும் முன்வைக்காது நிற்பவர்கள் அனைவரும், இயல்பாக புலியெதிர்ப்புடன் அரசுக்கு சார்பாக உள்ளனர். இப்படிப்பட்ட நிலையில், எமது அரசியல் பணி தனித்துவமானது. அதையும் நாம் தனித்தே செய்ய வேண்டியுள்ளது. 

 

மக்களுக்கு அறிவூட்டக் கூடிய, அவர்களை வழிநடத்தக் கூடிய, அவர்கள் முன் உண்மையாக இருக்கக் கூடிய, அரசியல் நேர்மையும் முன்முயற்சியும் இன்று உடனடித் தேவையாக உள்ளது. இதற்கமைய புலியல்லாத தளத்தில் அனைவரும் ஒன்று என்ற கருத்துக்கு, நாங்கள் முன்முயற்சி எடுத்து முடிவுகட்ட வேண்டும். அவர்களையும் நாம் இழுத்துக் கொண்ட செல்லமுடியாது. அதேபோல் அவர்கள் பின் நாம் செல்லமுடியாது. அரசு அல்லது புலி அல்லது அரசியல் வேஷம் போடும் யாரையும் நாம் எம் பின்னால் இழுத்துக்கொண்டு வரமுடியாது. அதுபோல் அவர்கள் பின் இழுபடவும் முடியாது. எமது தனித்துவத்துடன், மக்களை சார்ந்து நிற்றல், இன்று அவசியமானது.

 

இதுவே எம்மைச்சுற்றிய மையமானதும், முதன்மையானதும், அரசியல்ரீதியானதும், செயல்தந்திர ரீதியான உடனடியான அரசியல் பணியாகும். இதற்கு எம்மை நாம், பழையவற்றில் இருந்து முற்றாக முறித்துக் கொள்ளல் அவசியம். இதன் மூலம் தான், நாம் எமக்கு நேர்மையாக இருக்கமுடியும், மக்களுக்கு உண்மையாக இருக்க முடியும்.

 

இதில் இருந்து நாம் செய்ய வேண்டியவை என்ன? எது செய்யப்பட வேண்டும்? என்பதை சிந்திக்க முடியும். இதன் மேல் உங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகின்றது.                    

பி.இரயாகரன்
07.05.2009