Thu07092020

Last update12:49:40 pm

Font Size

Profile

Menu Style

Cpanel
Back இரயாகரன் - சமர் பார்ப்பனிய பூனூலாகிப் போன தமிழீழம்

பார்ப்பனிய பூனூலாகிப் போன தமிழீழம்

  • PDF

பிரபாகரனின் தமிழீழம் இன்று பாப்பாத்தி ஜெயலலிதாவின் தமிழீழமாக மலர்கின்றது. அப்படி நம்புகின்ற, நம்ப வைக்கின்ற ஈழத் தமிழ் முட்டாள்கள். பெரும்பான்மை தமிழன் அரோகரா என்று கூறியபடி, அதற்கு பின்னால் எங்கே ஒடுகின்றோம் என்று தெரியாது ஓடுகின்றனர்.  பலதரம் தடுக்கி வீழ்ந்த இவர்கள், மீண்டும் மீண்டும் குருட்டு நம்பிக்கையுடன் எழுந்து ஒடுகின்றனர்.

 

பிரபாகரன் ஆகாய விமானம் வரை வேடிக்கை காட்டி இந்தா தமிழீழம் என்றவர். இன்று அவர் மீதான நம்பிக்கையை படிப்படியாக இழக்க, பார்ப்பனியம் வழிநடத்தும் அம்மா ஜெயலலிதாவின் கற்பனை தமிழீழத்தில் இன்று சரணடைகின்றனர்.

 

வலதுசாரிய புலியிசம் தன் அந்திமத்தில் கூட, தமிழினத்தை கனவுலகில் நிலைநிறுத்த முனைகின்றது. அதை இந்தியாவின் றோவின் பின், மீளவும் வடியவிடுகின்றது.  எந்த றோ இந்த தமிழீழத்தை வலதுசாரி பாசிசமாக வளர்த்து அழிக்க இதில் தலையிட்டு, பணமும் பயிற்சியும் வழங்கியதோ, அந்த றோவின் பின் மீண்டும் புலிகள். இப்படி றோ  மக்களை சார்ந்திருக்கக் கூடிய, அனைத்து சமூகக் கூறுகளையும் அழித்தொழித்தது. இன்றும் மக்கள் சொந்தமாக எதையும் அணுகக் கூடாது என்ற றோவின் அக்கறை, ஜெயலலிதா ஊடாக புலியிசத்துக்கு ஆப்பு வைத்துள்ளது. தமிழீழத்தை வைத்து சுரண்டித் தின்னும் புலியிசம், இந்த றோவின் சதியின் பின் அணிதிரளுகின்றது.    

 

இதே றோ தான், இன்று யுத்தம் மூலமும் புலியை அழித்தொழிக்கின்றது. ஜெயலலிதா ஊடாக வரும் அதே றோ தான், இன்று இரண்டையும் செய்கின்றது. தமிழ் மக்களின் அதிருப்தியை றோ அறுவடை செய்ய, அதை ஜெயலலிதாவினூடாக தன் பின்னால் ஈழத்தமிழனை திரட்டுகின்றது. இதில் வேடிக்கை என்னவென்றால், தமக்கு எதிரான இந்திய மற்றும் றோவின் தலையீட்டை எதிர்க்கும் புலித் தமிழிசம், இன்றும் நாளை ஜெயலலிதா ஊடாக கிடைக்கும் றோவின் தலையீட்டை ஆதரிக்கின்றது.

 

இதற்காக உலகெங்கும் உள்ள புலிப் பினாமி அமைப்புகள் தந்திகள் அறிக்கைகள் மூலம் வாழ்த்துகளை கூட தமிழீழப் பாப்பாத்திக்கு அனுப்பிவிட்டனர். புலியின் வெற்றிடத்தில் மீண்டும் றோ. எந்தப் பார்ப்பனியம் தமிழ் மக்களைக் கொல்வதை ஆதரித்து கொக்கரித்து, தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமையை மறுக்கின்றதோ, அது மீண்டும் ஈழத் தமிழ் மக்களின் நம்பிக்கையின் ஒளியாக புகுந்துள்ளது.

 

இப்படி புலிகளின் தலைவர் பிரபாகரன் இடத்தை பாப்பாத்தி ஜெயலலிதா அபகரித்துக் கொள்வது கண்கொள்ளாக் காட்சிதான்.  

  

புலியிசத்தின் தமிழீழம் எப்படி கற்பனையானதோ, அப்படித்தான் பார்ப்பனர்களின் தமிழீழமும். ஆனால் அன்னியனிடம் வெட்கம் கெட்டு சுயாதீனம் கெட்டு பிச்சை எடுக்கும் தமிழன், சுயமும் சுயஅறிவுமற்று, பகுத்தறிவின்றி  கால்களில் வீழ்கின்றனர். இதே தமிழர் ஏகாதிபத்திய மடிகளில் பால் குடிக்கவும் ஏங்குகின்றனர்.

 

புலியிசம் முன்னிறுத்திய தமிழீழத்தை அடைய முடியாது என்பதை நன்கு புரிந்துகொண்ட பார்ப்பனியம், இன்று தமிழீழத்தை சுயநல அரசியல் மூலம் முன்தள்ளுகின்றது. ஈழத்தமிழனோ, தாயே உன்னடி சரணம், அம்மா உன் பாதங்கள் வீழ்ந்தோம் சரணம், என்று கூறிக் கொண்டு கால்களில் வீழ்கின்றனர். தமிழீழம் இப்படி நாதியற்ற, அனாதையாக, அவனவன் தன் அரசியல் விபச்சாரத்துக்கு ஏற்ப புணருகின்றனர்.

 

பிரபானிசமே புலியிசமாக, அது தமிழீழ மக்களை ஒடுக்கியும் பிளந்தது. இதன் மூலம் சுரண்டி வாழும் அரசியல் கூறாகியது. இப்படி மாபியாக் கும்பலின் தமிழீழம், பரந்துபட்ட மக்களின் மேலான, பேரினவாத ஒடுக்குமுறைக்கு மாற்றாக முன்னிறுத்தப்பட்டது. இது எம் மக்களை என்ன செய்தது!?

 

சுயநிர்ணயத்ததை மறுதலித்து, தமிழீழத்தை முன்னிறுத்தியது. ஒரு நாட்டின் சொந்த இறைமைக்கான பொருளாதார கூறை மறுத்து, அன்னிய சக்திகளின் தேவையைப் பூர்த்தி செய்யும் தமிழீழத்தை முன்னிறுத்தியது.

 

இப்படி சுயநிர்ணயம் என்பதை பொருளாதார துறையில் மறுத்தவர்கள், அன்னிய உதவியில் சுயநிர்ணயத்தையே இழந்தனர். சொந்த மக்களையே தமக்கு எதிரியாக நிறுத்தினர். சமூகத்தினுள் வன்மமும், பகையும் கொண்ட மனித உறவுகளை திணித்தனர். இந்த தமிழீழம் கணவன் மனைவி உறவுகளைக் கூட பிளந்து பிரிக்கும் அளவுக்கு, வன்மமும் வக்கிரமும் கொண்டதாக இருந்தது. 

 

தாயை மகன் உளவு பார்க்க, அண்ணணை தம்பி கொல்ல.. என்று எத்தனை பிளவுகளும், வக்கிரங்களும் நடந்தேறின. இப்படி குடும்பத்தினுள் கூட இந்த புலியிசம், பதம் பார்த்தது. இப்படி மனித அவலத்தின் மொத்தத்தையும் குத்தகைக்கு எடுத்த தமிழீழம், தன் மக்களையே கொன்று குவித்தது. பிளவுகளையும், பிரிவுகளையும் கொண்டு, தமிழினத்தை சுக்கு நூறாக்கியது. இப்படி தமிழீழம் என்பது, தனக்கு எதிராக தன்னை அணிதிரட்டிக்கொண்டது.

 

தமிழீழம் பெற வேண்டும் என்றால், இலங்கையில் ஒன்றுபட்ட ஜக்கியத்துக்காக உறுதியாக போராடியிருக்க வேண்டும். இதன் மூலம் பிரிவினையைத் தவிர வேறு வழியில்ல என்பதை, சிங்கள மக்களின் ஒரு பகுதி ஏற்கும் வண்ணம் போராடியிருக்க வேண்டும். அதேபோல் அயல்நாட்டு மக்கள், உலக மக்கள, எம் போராட்டத்தின் நியாயத்தை ஏற்று குரல் கொடுத்து போராடியிருக்க வேண்டும். இதை அனைத்தையும் நாம் நிராகரித்தோம். எம் சொந்த மக்களை எமக்கு எதிரியாக நிறுத்தினோம். இவை அனைத்தையும் புலியிசத்தின் வலதுசாரிய பாசிசம் தான், நிலை நாட்டியது.

 

இன்று அது தன் சொந்த வலதுசாரிய பாடையில் ஏறி அமர்ந்தபடி சேடமிழுக்கின்றது. சங்கூதும் நாளுக்காகவே, அனைத்து முயற்சியையும் அது செய்கின்றது. அதேநேரம் ஜெயலலிதா ஊடாக, மீண்டும் தமிழீழத்தைக் காட்டுகின்றது.

 

இப்படி அடுத்த சுற்றுப் பிழைப்புக்கு புலியிசம் தன்னை தயார்ப்படுத்துகின்றது. பார்ப்பனியம் தமிழகத்தில் பிழைத்துக்கொள்ள, பாப்பாத்தி ஜெயலலிதா ஊடாக வேஷம் போட்டு ஆட, புலியிசம் ஈழத் தமிழனை ஏமாற்றி பிழைக்க அம்மா சரணம் தாயே என்ற கும்பிடு போடுகின்றனர்.

 

மாபியா புலியிசம் தான் பிழைத்துக்கொள்ள, பெரியார் முதல் பார்ப்பனியம் வரை தன் விபச்சாரத்துக்கு ஏற்ப வித்தை காட்டுகின்றது. தமிழ்மக்களோ பேரினவாத கொடுமையில் சிக்கி சிதைகின்றனர். இதை புலியிசம் தொட்டுக்கொள்ள பயன்படுத்தும் அதேநேரம், பார்ப்பனியத்தின் பூனூலாகவே தமிழீழத்தை மாற்றியுள்ளனர்.

 

பி.இரயாகரன்
05.05.2009

    

Last Updated on Wednesday, 06 May 2009 15:17