ஈழத்தின் மீதான இந்திய மேலாதிக்கப் போருக்கு பதிலடி கொடுப்போம்! தேர்தலைப் புறக்கணிப்போம்! என்ற தலைப்பில் மே 01 அன்று தஞ்சையில் மக்கள் கலை இலக்கியக் கழகம் மற்றும் அதன் தோழமை அமைப்புகளான புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி, புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி, விவசாயிகள் விடுதலை முன்னணி, பெண்கள் விடுதலை முன்னணி ஆகியவை இணைந்து மேதினப் பேரணி மற்றும் பொதுக்கூட்டத்தை வீச்சாக நடத்தின.

 

தஞ்சை திருவள்ளுவர் திடலில் காலை எட்டு மணிக்கு புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியின் மாநிலத் தலைவர் தோழர் அ.முகுந்தன் அவர்களால் கொடியேற்றம் நடைபெற்றது. அதன்பிறகு 9 மணிக்கு ஓவியக் கண்காட்சியை தோழர் துரை. சண்முகம் துவங்கி வைத்தார். தோழர் முகிலன் வரைந்த அந்த ஓவியங்களில் ஈழம் பற்றிய ஓட்டுச் சீட்டு அரசியல்வாதிகளின் சந்தர்ப்பவாதமும், தேர்தல் கூட்டணி என்பதற்கு கொள்கை ஒற்றுமை கிடையாது என்பதை நிறுவும் அப்போலி ஜனநாயக தாசர்களின் வாக்குமூலமும் ஓவியங்களில் சிறப்பாக வெளிப்பட்டு இருந்தது.

 

பேருந்துகள் மற்றும் புகைவண்டிகளின் வழியாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலுமிருந்து தோழர்கள் வந்த வண்ணமிருந்தனர். மாலை 4 மணிக்கு சரியாக புகைவண்டி நிலையத்திலிருந்து கூட்டம் நடக்கவிருந்த திருவள்ளுவர் திடல் வரை ஒரு மாபெரும் பேரணி நடைபெற்றது. கம்பம் பகுதி விவசாயிகள் விடுதலை முன்னணியைச் சேர்ந்த தோழர் மோகன் தலைமையில் நடந்த இப்பேரணியில் ஈழப்பிரச்சினையில் கருணாநிதி மற்றும் ஜெயலலிதா போன்றோர் போடும் வேடங்களை அம்பலப்படுத்தியும், ஈழத்திற்கு எதிராக சிங்கள இனவெறி அரசை மேலாதிக்க நலனுக்காக ஆதரிக்கும் இந்திய தரகு முதலாளிகளை முறியடிக்க அறைகூவல் விடுத்தும், பணநாயகத்தை விடுத்து மானத்தோடு இருக்க வலியுறுத்தியும் முழக்கமிட்டவாறு பேரணி நடைபெற்றது.

ஓட்டுப் பொறுக்கிகளின் அப்பட்டமான சந்தர்ப்பவாத அரசியலை அதன் கூச்சத்தைக் கேட்டுச் சலித்த தஞ்சையின் வீதிகளில் எதிரொலித்த புரட்சிகர அரசியலின் நம்பிக்கையூட்டும் எழுச்சியான முழங்கங்களை மக்கள் ஆர்வத்துடன் கவனித்தனர். சுமார் பத்தாயிரம் பேர் கலந்து கொண்ட இப்பேரணியில் குழந்தைகளும், பெண்களும் குறிப்பிடத்தக்க அளவில் கலந்து கொண்டனர்.

ஈழத்தின் அவலநிலையை எடுத்துக்காட்டும் காட்சிப்படிமத்தை புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணியின் தோழர்கள் சிறப்பாக ஊர்வலத்தில் நடத்திச் சென்றது பார்வையாளர்களைக் கவர்ந்தது. தேர்தல் புறக்கணிப்பு, ஈழப்போரில் இந்திய அரசின் தலையீட்டை எதிர்ப்பது, தனியார்மய தாராளமய உலகமயமாக்கல் எதிர்ப்பு போன்ற முழக்கங்களுடன் கூடிய பதாகைகளையும், அனைத்து தோழமை அமைப்புகளும் தத்தமது கொடிகளுடன் ஊர்வலத்தில் வந்தது பார்வையாளர்களைக் கவரும் வண்ணம் இருந்தது.

ஊர்வலம் மாலை 6 மணிக்கு திருவள்ளுவர் திடலை வந்தடைந்தவுடன் பொதுக்கூட்டம் புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணியின் மாநில ஒருங்கிணைப்பாளர் தோழர் பரமானந்தம் தலைமையில் தியாகிகளுக்கான வீரவணக்கத்துடன் துவங்கியது.

புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியின் பொதுச் செயலாளர் தோழர் சுப. தங்கராசு சிறப்புரை ஆற்றினார். ஈழப்பிரச்சினைக்கு அப்பாற்பட்டு இந்தியாவின் ஜனநாயகம் என்பது எப்படி பெரும்பான்மை மக்களை ஒடுக்கும் போலி ஜனநாயகமாக இருக்கின்றது, தேர்ந்தெடுக்கும் மக்கள் பிரதிநிதிகளுக்கு சட்டத்தை இயற்றும் அதிகாரத்தைத் தவிர அமல்படுத்தும் அதிகாரமில்லை, உண்மையான அதிகாரம் கொண்ட மக்கள் சர்வாதிகார மன்றங்களைக் கட்டி புரட்சிகர அதிகாரத்தை மக்கள் கைப்பற்றுவதுதான் இதற்கு தீர்வு, நக்சல்பாரிகளின் தலைமையில் புதிய ஜனநாயகப் புரட்சிக்கு உழைக்கும் மக்கள் அணிதிரள வேண்டுமெனவும் தோழர் தனது உரையில் குறிப்பிட்டார்.

மக்கள் கலை இலக்கியக் கழகத்தின் மாநில இணைச் செயலாளர் தோழர் காளியப்பன் சிறப்புரை ஆற்றினார். இந்திய அரசும், இந்திய ஆளும் வர்க்கங்களும் ஈழத்திற்கு எப்போதும் எதிரிதான் என்பதை ஈழத்தின் போராளிக் குழுக்களும், தமிழ்நாட்டில் உள்ள ஈழ ஆதரவு இயக்கங்களும் புரிந்து கொள்ளாமல், இந்தியாவை நண்பனென்று ஆதரிப்பதையும் அதன் விளைவே இன்றைக்கு நடைபெறும் இனப்படுகொலை உச்சத்தை அடைந்திருப்பதாகவும் தோழர் குறிப்பிட்டார். இந்திய தரகு முதலாளிகளுக்கு ஒன்றுபட்ட இலங்கையின் சந்தை தேவைப்படுவதால் அவர்களின் நலனைக் காப்பதற்காக இந்திய அரசு நேற்றும், இன்றும், நாளையும் சிங்கள பேரினவாதத்திற்கு ஆதரவாகத்தான் இருக்கும் என்பதையும் விளக்கினார்.

அடுத்து இன்றைய ஈழத்தின் மீதான இனப்படுகொலைக்கு நேரடியாக உதவும் காங்கிரசு அரசிற்கு பாடம் கற்பிப்பதற்காக ஈழ ஆதரவுக் குழுக்கள் அ.தி.மு.க மற்றும் பா.ஜ.கவை ஆதரிப்பதன் அபாயத்தை தோழர் புரியவைத்தார். கருணாநிதி நாளைக்கே ஈழம் கிடைக்குமென்றால் தனது பாரளுமன்ற உறுப்பினர்கள் ராஜினாமா செய்யத் தயாராக இருப்பதாகவும் அது இல்லாத பட்சத்தில் ராஜினாமா செய்வதால் பலனில்லை எனவும் கூறுகிறார். ஜெயலலிதாவோ தனக்கு தமழிக மக்கள் நாற்பது தொகுதிகளையும் தந்தால் புதிய மத்திய அரசின் மூலமாக ஈழத்தை வாங்கித் தருவாதக கூறுகிறார். இதிலிருந்து இருவரும் தமது பதவி ஆதாயத்திற்காக ஈழத்தின் பிணங்களை வைத்து நாடகமாடுவதை தோழர் உணர்த்தினார்.

தோழர் காளியப்பனின் உரைக்குப் பிறகு ம.க.இ.கவின் மையக் கலைக்குழு உணர்ச்சிகரமாக நடத்திய கலைநிகழ்ச்சி நடைபெற்றது. ஈழத்தின் அவலத்தை துல்லியமாக எடுத்தியம்பும் இசைச்சித்திரம் பார்வையாளர்களைப் பெரிதும் கவர்ந்தது.

பெண்கள் விடுதலை முன்னணியின் தோழர் நிர்மலா நன்றியுரை நிகழ்த்தினார். பாட்டாளிவர்க்க சர்வதேசிய கீதத்துடன் கூட்டம் இரவு 10 மணிக்கு நிறைவு பெற்றது. மிச்சமிருக்கும் நாட்களில் தமிழகம் முழுவதும் தேர்தல் புறக்கணிப்பு பிரச்சாரத்தை இன்னும் வீச்சாக கொண்டு செல்லும் உறுதியுடன் தோழர்களும், ஆதரவாளர்களும் கலைந்து செல்ல மே தின நிகழ்ச்சிகள் தஞ்சையில் முடிவடைந்தது.

படங்களை பெரியதாக பார்க்க அதன் மேல் சொடுக்கவும்