01272023வெ
Last updateபு, 02 மார் 2022 7pm

கிழக்கின் 'உதயமாக" உருவான 'விடிவெள்ளிகளும்", தினுஷிகாவின் படுகொலையும்

மீண்டும் மீண்டும் தொடரும் கடத்தல்கள், படுகொலைகள், பாலியல் வன்முறைகள். கிழக்கின் 'உதயம்" பெற்றெடுத்த 'விடிவெள்ளிகள்" மற்றொரு குழந்தை தினுஷிகாவின் படுகொலையாக அதை அரங்கேற்றி காட்டியுள்ளது.

 

அண்மையில் சிறுமி வர்ஷாவின் படுகொலையும், அதைத் தொடாந்து கைதான 'விடிவெள்ளிகள்" மூலம், இதன் பின்னணி உண்மை வெளிவராமல் தடுக்க அடுத்தடுத்து போட்டுத் தள்ளிய மாண்புமிகுக்கள் கொண்ட 'உதயம்" தான் கிழக்கில் இன்று உதித்துள்ளது.

 

இப்படி மாண்புமிகு கருணா முதல் பிள்ளையான் வரையான சமூக விரோதிகளுக்கு கிடைக்கும் சமூக அங்கீகாரம், பேரினவாத அரசை எப்படி குனிந்து நக்குவது என்பதில் தான் அடங்கியுள்ளது. இதன் மூலம் அரசியல் பரம்பரையினர் குற்றங்களை, தம் வெள்ளை வேட்டிக்கு பின்னால் மூடிமறைக்க முடிகின்றது. பேரினவாத பாசிசம் இப்படி சமூக விரோத தமிழ் பாசிட்டுகளின் தயவில்தான், தமிழ் மக்களை இன்று அடக்கியாள முடிகின்றது.

 

இப்படி மாண்புமிகுவாக உயர்ந்துள்ள இவர்கள், கடைந்தெடுத்த சமூக விரோதிகள். கொலை, கொள்ளை, கப்பல், ஆட்கடத்தல், பாலியல் வன்முறை என்று, இவர்கள் தாம் சுற்றிய இந்த அரசியல் வாழ்வின் பின் புரையோடிள்ள வக்கிரங்களுக்குள் தான், தினுஷிகா என்ற குழந்தையின் மரணம் மீண்டும் நிகழ்ந்துள்ளது. இதற்கு வெளியில் அல்ல.

 

கிழக்கின் 'உதயத்தை" பேரினவாதிகள் பிரகடனம் செய்த பின், அரசின் எடுபிடிகளை கிழக்கின் 'விடிவெள்ளிகளாக" பிரகடனம் செய்த பின், அங்கு ஒரு இருண்ட உலகத்தைத்தான் வெளி உலகம் தரிசிக்க முடிகின்றது. அனைத்தையும் அரச பாசிட்டுகள் மூடிமறைத்துள்ள நிலையில், சுதந்திரமாக அங்கு என்ன நடக்கின்றது என்பது வெளிவர முடியாத அவலநிலை.

 

அங்கு கப்பம், கடத்தல், படுகொலை, பாலியல் வன்முறை எல்லாம் சர்வ சாதாரணமான விடையமாகிப் போனது. பெண்கள் பாலியல் ரீதியாக வன்முறைக்குள்ளாவது, அங்கு 'விடிவெள்ளிகளின்" பொழுது போக்குக்கான விடையம்.

 

இந்த பாலியல் வக்கிரத்துக்கு உடன்பட மறுப்பவர்களை புலியாக முத்திரை குத்தி விடுகின்றனர். பின் அவர்களுக்கு எதையும் செய்யமுடியும் என்ற பாசிசத்தை கையில் வைத்துக்கொண்டு, பெண்களை குதறுகின்றனர். இப்படி அரசியலோ, அங்கு சமூக விரோதிகளின் கூடாரமாகவே இயங்குகின்றது. 

 

கிழக்கின் 'உதயம்" என்று கூறிக்கொண்டு, புலம்பெயர் மண்ணில் இருந்த ஓடோடிச் சென்ற அரச எடுபிடிகள் முதல் பொலிசாரின் துணையுடன் சாட்சி சொல்லும் அரச எடுபிடியான ராஜேஸ்வரி வரை, கடைந்தெடுத்த சமூக விரோதிகளுக்கு, தூணாகவும் துணையாகவும் நிற்கின்றனர். இவர்கள் தான் இந்த சமூக விரோதிகளை கிழக்கின் 'விடிவெள்ளி"கள் என்று மகுடம் சூட்டியவர்கள். 

 

இவர்களின் துணையுடன் அங்கு பெண்கள் சிதைக்கப்படுகின்றனர். குழந்தைகள் கொல்லப்படுகின்றனர். அங்கு இவர்கள் விமானம் ஏறிச் சென்று நக்க, கடத்தப்பட்ட குழந்தைகளின் மூலம் கிடைக்கும் கப்பப் பணம் உதவுகின்றது. சொத்துகள், சுகங்கள் அனைத்தும் தினுஷிகா, வர்ஷா போன்ற குழந்தைகளின் கடத்தல் பின் கிடைக்கும் கப்பங்கள் மூலம் தான் கிடைக்கின்றது. இப்படி கடத்தல்கள், படுகொலைகள், பாலியல் வன்முறைகள் தான் கிழக்கின் 'உதயம்".

 

இதற்கு எதிரான பொது மக்களின் எதிர்ப்பும் கண்டனமும் எழும் போது, மாண்புமிகுக்கள் முதல் புலம்பெயர் அரச எடுபிடிகள் வரை மூக்கால் சிந்துவது நிகழ்கின்றது. அதேநேரம் நடக்கும் கைதுகள் மூலம், தாம் பின்னணி அம்பலமாகாது இருக்க அவர்களையே போட்டுத்தள்ளுகின்றனர். இப்படி பொலிஸ், நீதிமன்றம் எல்லாம் இதை மூடிமறைகின்றது. இதற்கு அரசு உதவுகின்றது.

 

இப்படி சமூக விரோதிகள் பேரினவாதத்தின் தயவில் அரசியல் வாதிகளாக கொலுவேற்று இருக்கின்றனர். அங்கு குழந்தைகள், பெண்கள் முதல் அனைத்து மக்களும் அச்சத்துடன், பீதிக்குள் மூழ்கடிக்கப்பட்ட நிலையில் கிழக்கின் 'உதய"மாகி நிற்கின்றது. இதைத்தான் வடக்கின் 'வசந்தமாக" பேரினவாதிகள் அறிமுகப்படுத்தவுள்ளனர்.

 

பி.இரயாகரன்
05.04.2009