வவுனியா வதைமுகாமில் அப்பாவித் தமிழ்மக்களை அடைத்து வைத்து இனச்சுத்திகரிப்பு செய்யும் அதேநேரம், தமிழினத்தையே நலமடிக்கின்றனர். அரசுடன் சேர்ந்து இயங்கும் தமிழ் துரோகக் குழுக்களின் கண்காணிப்பின் கீழ், இவற்றை பேரினவாத அரசு அரங்கேற்றுகின்றது.
இவையெல்லாம் பேரினவாதம் திட்டமிட்டு தமிழ்மக்களை வதைக்க, வதைக்கும் முகாமாக மாற்றியுள்ளது. புலிகளிடம் இருந்து மக்களை மீட்க 'மனிதாபிமான" யுத்தம் என்ற பெயரில், ஆயிரக்கணக்கில் படுகொலைகளை தமிழ் மக்கள் மேல் அரங்கேற்றியது இந்த பாசிச அரசு. இந்த படுகொலையில் இருந்து தப்பி வந்த மக்களை 'மீட்பு" என்ற பெயரில் இன்று பிடித்துவைத்;துள்ள கொலைகாரர்கள், அந்த அப்பாவி மக்களையே பலாத்காரமாக சிறைவைத்துள்ளது. மக்களுக்கே இந்தக் கதை என்றால், சரணைடைந்த புலிகள் மற்றும் பிடிபட்ட புலிகளுக்கு என்ன நடக்கும் என்பதை நாம் சொல்லித் தெரிய வேண்டியதில்லை. சரணடைபவர்கள் வதைக்கப்பட்டு, சிதைக்கப்படுகின்றார்கள். இதைவிட அவர்கள் மரணம் மேன்மையானதாக இருந்திருக்கும்.
புலியல்லாத அப்பாவி மக்களையே பேரினவாதம் அடைத்து வைத்துள்ளது. இங்கு பலருக்கு ஒரு நேர உணவு கூட கிடையாது. வலிமை குறைந்தவர்கள், கையேந்த விரும்பாதவர்கள் மெல்ல சாவதுதான், இந்த வதைமுகாமின் பாசிச நியதி. இங்கு குறைந்தது நாள்தோறும் ஐவர் உண்ண உணவின்றி மரணம். இதை வவுனியா நீதிமன்றம், முதியவர்களை கொல்லும் வதைமுகாமில் இருந்து முதியவர்களை விடுவிக்க கோரிய தன் தீர்ப்பொன்றில் சுட்டிக்காட்டியுள்ளது. இங்கு மருத்துவ வசதி கிடையாது. இங்கு மனிதம் தினம் தினம் செத்துப் பிழைக்கின்றது.
இங்குள்ள மக்கள்; யுத்தம் மூலம் படுகொலை செய்யப்பட்ட நிலையில், யுத்த சூழலில் வாழவிரும்பாது அங்கிருந்து தப்பிவந்தவர்கள். அதை புலிகளின் கொடுமையில் இருந்து மக்கள் தப்பி வந்ததாக பேரினவாதம் பிரச்சாரம் செய்தது. அதே மக்கள் இன்று இந்த வதை முகாமலில் இருந்து தப்பிச் செல்லத்தான் விரும்புகின்றனர். இதனால் தான் அவர்களைச் சுற்றி முட்கம்பி போட்டு, காவலுக்கு இராணுவத்தை நிறுத்தினர். இதை மீறியும் சிலர் தப்பிச் சென்றனர். இதை அடுத்து மேலும் ஒரு வளையம் முட்கப்பி வேலி அமைக்கப்பட்டுவிட்டது. காவல் அதிகரிக்கப்பட்டுள்ளது. தப்பியவர்களை சரணடையும்படி மிரட்டுகின்ற, பகிரங்கமான பாசிச அறிவித்தல். தப்பிவந்த மக்களை 'மீட்பாக" காட்டியவர்கள், மீண்டும் தப்பிச்செல்லும் அப்பாவி மக்களையே பயங்கரவாதியாக சித்தரிக்கின்றது. இப்படி 'மீட்பு" நாடகம்.
இப்படி பல பத்தாயிரம் மக்களை அடைத்து வைத்துள்ள இடம், மிகச்சிறிய குறுகிய பிரதேசம். இதை விட 'மீட்ட" பிரதேசத்தில் இந்த மக்கள் இருந்த போது, அதிகளவு வசதிகளுடன் தான் வாழ்ந்தனர். அங்கு பட்டினி மரணங்கள் நிகழவில்லை. இங்கு முதியவர்கள் பட்டினியில் சாக விடப்பட்டுள்ளனர். இதை பேரினவாத மந்திரியோ இதை முதியவர்களின் இயற்கை மரணம் என்று, நவீனமாக பாசிச விளக்கம் தருகின்றான். முதியவர்களின் மரணச்சான்றிதழ் வழங்கிய நீதிமன்றம், இதை 'பட்டினி மரணம்" என்று தெளிவாக குறிப்பிட்டதுடன், முதியவரை உடன் அங்கிருந்து விடுவிக்கும்படி தீர்ப்புக் கூறுகின்றது.
இந்த வதைமுகாமில் மனிதத்தன்மையுடன் உதவினால், ஏன் உதவுகின்றனர் என்றவாறாய், ஓட்டுக் குழுக்களின் கண்காணிப்பு. அவர்கள் காணாமல் போகின்றனர். மனிதத்தன்மையுடன் உதவ விரும்பினால், அரசுடன் சேர்ந்தியங்கும் குழுக்களின் வதைக்கு அஞ்சி நிற்கும் அவலம். இப்படி வலிமை குறைந்தவர்களை கண் முன்னால்; மரணிக்கவிடும், மனித அவலம்;. குழந்தைகள் உணவுக்கான நெரிசலில் மரணிக்கின்றனர். பேரினவாத பாசிட்டுகளின் 'மனிதாபிமானம்;" இப்படி வக்கிரம் கொண்டது.
வெளியில் இருந்து பொது மக்கள் உதவ வந்தால், அவர்கள் ஏன் உதவுகின்றனர் என்ற கண்காணிப்பு. மனிதம் என்பது இன்று பயங்கரவாதமாக பார்க்கப்படும் அவலம். இதற்குள் அரச கைக்கூலிகளாக உள்ள ஓட்டுக் குழுக்கள், வியாபாரத்தை தொடங்கியுள்ளனர். அந்த மக்கள் தம் தேவையை பணத்தைக் கொண்டு பூர்த்திசெய்ய முனைகின்ற இடத்தில், வியாபாரத்தையும் இந்த ஓட்டுக்குழுக்கள் தொடங்கியுள்ளது.
அரச கைக்கூலிகளாக உள்ள ஒட்டுக்குழு மட்டும் தான், இந்த மக்களை அணுக முடியும் என்ற நிலை. இந்த நிலையில் தமிழ்மக்கள் மெதுவாக சாகின்றனர். மனிதம், மனிதனாக உணர்வுப+ர்வமாக உணர்வது, பேரினவாத பாசிட்டுகளின் கண்ணுக்கு புலியாக காட்ட போதுமான காரணமாகிவிடுகின்றது. இப்படி பாசிசம் குரூரமாகவே மனிதத்தை கண்காணிக்கின்றது. மக்கள் கதைப்பது கண்காணிக்கப்படுகின்றது. உள்ளே உளவாளிகளும், பெருச்சாளிகளும், சல்லடை போட்டே மக்களை அரிக்கின்றனர்.
இங்கு பலாத்காரமாக அடைத்து வைக்கப்பட்டுள்ளவர்கள் முன், ஒலிபெருக்கி மூலம் கூலிக் குழுக்கள் மிரட்டலை விடுகின்றனர். யாராவது புலிகள் இருந்தால், உங்கள் குழந்தைகள் ஒரு நாள் புலியில் இருந்தாலும் அறிவிக்கும்படி மிரட்டப்படுகின்றனர். இப்படி அந்த அப்பாவி மக்களை உளவியல் ரீதியாக, பேரினவாத பாசிட்டுகளின் கட்டளைக்கு எற்ப அரச சார்பு குழுக்கள் கொல்லுகின்றனர். இப்படி மிரட்டி பிடிப்பவர்களை கண்காணாத இடத்துக்கு இழுத்துச் செல்லுகின்றனர்.
பாசிட்டுகள் கொட்டமடிக்கும் இந்த வதைமுகாமிற்குள், வெளியார் யாரும் செல்ல முடியாது. மக்களால் தெரிவு செய்யப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட செல்லமுடியாது. சிங்கள நாடாளுமன்ற உறுப்பினர்கள் முதல் எதிர்க்கட்சி கூட அங்கு செல்ல முடியாத நிலை. பாசிசம் தான், நாட்டின் ஓரேயொரு சமூக சட்ட ஒழுங்கு. அவ்வளவுக்கு கொடுமைகள் நிறைந்த, குற்றங்களின் மையமாக இந்த வதைமுகாம்;கள் இன்று உள்ளது. குற்றவாளிகள், கொலைகாரர்களின் கீழ், மக்கள் சிறைவைக்கப்பட்டுள்ளனர்.
பி.இரயாகரன்
04.05.2009