உடனடி இட்லி, திடீர் சட்னி போல திடீர் உண்ணாவிரதம் இந்திய அரசியல் வட்டங்களை பரபரப்படையச்செய்தது. அல்லது, பரபரப்படைந்ததாக காட்டப்பட்டது. முதல்வர் கலைஞர் அதிகாலையில் அண்ணா சமாதியில் போய் அமர்ந்து கொண்டு “நான் இலங்கை தமிழர்களுக்காக உண்ணாவிரதமிருக்கிறேன். அவர்களுக்காக
உயிரைக்கொடுக்கிறேன்”. என்றெல்லாம் வசனம் பேசியதும், சோனியா காந்தி, மன்மோகன் போன்றோர் தொலைபேசியில் தொடர்பு கொண்டு உண்ணாவிரதத்தை கைவிட வேண்டினர். தூதர்களை அனுப்பிவைத்தனர். தேர்தல்கால நெருக்கடியின் நிர்ப்பந்தத்தாலும், தேவையாலும் ஒரு மாற்று ஏற்பாடாக தற்காலிக போர் நிறுத்தத்திற்கு இந்திய அரசு இலங்கையிடம் அழுத்தம் கொடுக்க, வான் வழித்தாக்குதல், கனரக ஆயுதங்கள் பயன்படுத்த மாட்டோம் என இலங்கையிடமிருந்து அறிவிப்பு வெளியாகி, அதன் காரணமாக ஏழுமணி நேரமாக நீண்ட உண்ணாவிரதப்போராட்டம் முடிவுக்கு வந்தது. அல்லது, ராஜபக்சே கூட்டவிருக்கும் அமைச்சரவைக்கூட்டத்தில் இது போன்று வான்வழித்தாக்குதல், கனரக ஆயுதப்பயன்பாடு போன்றவைகளை நிறுத்திவைக்கவிருக்கிறார்கள் என்று உளவுத்துரை மூலம் கிடைத்த தகவலைக் கொண்டு, தமிழகத்தில் எதிர்க்கூட்டணியினர் பிரச்சாரம் செய்து வரும் ஈழத்திற்காக ஒன்றும் செய்யவில்லை என்பதை வாயடைக்கச்செய்யும் விதத்தில் பயன்படுத்திக்கொண்டார். எம்பிக்களின் விலகல் எச்சரிக்கை, மனிதச்சங்கிலிப் போராட்டம், ஈழத்தமிழர்களுக்கான இயக்கம், பேரணி பொதுக்கூட்டம், வேலை நிறுத்தம் ஆகியவற்றைப்போல் உண்ணாவிரதமும் இந்திய இலங்கை அரசுகளின் நிலையில் மாற்றத்தை ஏற்படுத்தாது என்று கருணாநிதிக்கு தெரியும். எதிர்க்கூட்டணியினரின் ஈழம் குறித்த பரப்புரைகளால் ஆளும் கூட்டணிக்கு ஏற்பட்ட நிர்ப்பந்தம் நமக்குத்தெரியும். இவைகளை மீறி இது நாடகமா? அக்கரையா? என்பது கேள்விக்கே இடமில்லாத ஒன்று.
ஆனால் இதை நாடகம் என்று யார் சொல்வது?
போர் நடக்கும் பகுதியில் அந்தப்போரினால் பொதுமக்கள் சாவது இயற்கையான ஒன்று நேற்றுவரை ஆதரித்துக் கொண்டிருந்துவிட்டு இன்று தமிழ் மக்கள் இறப்பைத்தடுக்க தனி ஈழமே ஒரேவழி என்று மேடைதோறும் முழங்கி, அதிமுக 40 தொகுதிகளிலும் வென்றால் இலங்கைக்கு இந்திய ராணுவத்தை அனுப்பி தனி ஈழம் அமைத்துக்கொடுப்போம் என்று, ஆளுக்கு ஒரு கூறு கத்தரிக்காய் கொடுப்போம் என்பதுபோல கூறுகிறாரே அந்த ஜெயலலிதாவா, இதை நாடகம் என்பது?
அதிமுகவுடன் கூட்டணி கட்டியிருந்த நிலையில் தான் ராணுவம் மக்களை கொல்வதை இயற்கை என்று வகைப்படுத்தினார் ஜெயலலிதா. அப்போதெல்லாம் துடிக்காத மீசை, அவர் தொகுதி எண்ணிக்கையை குறைத்தபோது முருங்கிக்கொண்டு துடித்ததே அந்த வைக்கோவா இதை நாடகம் என்பது?
நாடகம் தான் என தெரிந்திருந்தும் தன் மகனின் அமைச்சர் பதவி பறிபோகலாம் என்றதும் எம்பிக்கள் பதவி விலகலிலிருந்து பின்வாங்கிவிட்டு இன்று கருணாநிதி துரோகம் செய்துவிட்டர் என்று அறிக்கை விடுவதை மட்டுமே ஈழத்திற்கான செயலாய் செய்துவரும் ஐயா ராமதாசா இதை நாடகம் என்பது?
அன்று புலிகளின் முற்றுகையில் ராணுவம் தவித்துக்கொண்டிருந்த போது முற்றுகையை விலக்கிக்கொள்ளாவிட்டால் இந்திய போர்விமானங்கள் வரும் என்று எச்சரித்ததை மறந்துவிட்டு இன்று நாங்கள் ஆட்சிக்கு வந்தால் ஈழம் அமைய உதவுவோம் என்று கூறும் பாஜகவா இதை நாடகம் என்பது?
ராஜீவ் காந்தியை போற்றி பாடுவதற்காகவே தனிக்கட்சி நடத்திய, மதவாத பூச்சாண்டி காட்டியே காங்கிரசுக்கு கூஜா தூக்கிக்கொண்டிருந்துவிட்டு இன்று ஈழப்பாசத்தால் உணர்ச்சி மேலிடும் கம்மூனுஸ்டுகளா இதை நாடகம் என்பது?
ஆளும் கூட்டணியிலுள்ள காங்கிரசும் திருமாவும் போர் நிறுத்தம் என்று மேடை போட்டுத்தெரித்தாலும், ஈழத்தில் மக்கள் இன்னும் செத்துக்கொண்டிருப்பது நிஜம். ஓட்டு கிடைக்குமோ கிடைக்காதோ என்று ஐயப்பட்டுக்கொண்டிருந்த நிலையில் ஏழே மணிநேரத்தில் மொத்த ஓட்டுக்களையும் சரித்துக்கொண்டுவிட்டாரே கலைஞர் ராஜதந்திரி தான் என்று அகமகிழ்கிறார்களே அது நிஜம்.
ஈழத்தில் தமிழர்கள் மீது கொத்துக்குண்டுகளையும், கிளஸ்டர் குண்டுகளையும் வீசி கொத்துக்கொத்தாக கொன்று குவித்துக்கொண்டிருக்கும் சிங்கள இன அழிப்பு நடவடிக்கை தமிழகத்தின் அனைத்து ஓட்டுக்கட்சிகளுக்கும் ஓட்டு வாங்கப்பயன்படும் துருப்புச்சீட்டு என்பதில் எள்ளளவும் ஐயமில்லை. நடுவண் அரசில் அமைச்சர்களை கொண்டிருந்த, தொடர்புகளை கொண்டிருந்த தமிழகத்தின் அனைத்துக்கட்சிகளுக்கும் இந்தியா இலங்கையில் ஏன் போரை நடத்துகிறது? போர் நடத்துவதன் பலன் என்ன? என்பது தெரியும். மே 13ன் பிறகு அனைத்து சவடால்களும் மறக்கடிக்கப்பட்டு இந்திய அதிகாரவர்க்கத்தின் நலனே மேலோங்கியிருக்கும் என்பதிலும் ஐயமேதுமில்லை.
தமிழக ஓட்டுக்கட்சிகள் மட்டுமா ஈழப்பிரச்சனையை தமக்கு சாதகமாகப் பயன்பபடுத்துகின்றன? அனைத்து இந்திய தரகு முதலாளிகளும் இலங்கையில் முதலீடு செய்துள்ளனர். அந்த முதலீட்டுக்கு பங்கம் வந்துவிடக்கூடாது, அவர்களின் கொள்ளை லாபம் உறுதி செய்யப்படவேண்டும். அதற்காகத்தானே இந்தியா இலங்கைக்கு தளவாடங்கள் முதல் அனைத்து உதவிகளையும் தடங்கலில்லாமல் செய்கிறது. இந்தியப்பெருங்கடலில் ஆதிக்கம் பெற நினைக்கும் சீனாவின் எண்ணத்தை தடுத்து தானே பிராந்திய சக்தியாகவேண்டும் என்பதால் தானே இந்தியா போரை நடத்துகிறது. இதில் ஈழப்பிரச்சனையின் பங்களிப்பென்ன?
இங்கிலாந்து, பிரான்ஸ், சுவிஸ் உட்பட ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் ஈழப்பிரச்சனையில் அக்கரை காட்டுகின்றன. தங்களின் வெளியுறவு அமைச்சர்களை அனுப்பிவைக்கின்றன. ஏன்? அங்கே புலம்பெயர்ந்து தங்கியிருக்கும் ஈழத்தமிழர்களின் தொடர்போராட்டத்தின் தாக்கத்தினாலா? அண்மையில் இலங்கையின் மறுகட்டுமானத்திற்கு இந்தியா எல்லா உதவிகளையும் செய்யும் என்று பிரணாப் முகர்ஜி அறிவித்ததைப்போலவே ஐரொப்பிய ஒன்றியமும் அறிவித்திருந்தது. அதாவது ஈராக் போரின் பின்னாலான மறு கட்டுமானத்தில் அமெரிக்கா தலைமைப்பங்கு வகித்தது. இந்தியாவுக்கும் அதில் ஒப்பந்தங்கள் கிடைத்தன. அதேபோல் இலங்கையின் மறுகட்டுமானத்தில் இந்தியா தலைமைப்பங்கு வகிக்கும் ஐரோப்பிய ஒன்றியத்திற்கும் ஒதுக்கப்படும்.
அமெரிக்காவின் வெளியுறவு அமைச்சர் ஹிலாரி கிளின்டன் ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாக பறந்து பறந்து அறிக்கை விடுகிறார். இலங்கைக்கான அமெரிக்கத்தூதர் ஆலோசனைக்கூட்டம் நடத்துகிறார். இலங்கைக்கு பொருளாதாரத்தடை விதிப்பது தொடர்பாக வாஷிங்டனின் மனிதவள அமைப்பு ஒபாமாவிடம் வலியுறுத்தியதாக தகவல் வருகிறது. இவைகளெல்லாம் ஈழத்தமிழரின் மீதான மனிதநேயமா? அல்லது சீனாவின் ஆதிக்கத்தை தடுக்கும் நோக்கமா?
இலங்கையின் சுற்றுச்சூழல் அமைச்சர் சம்பக்க ரணவக்க, ”இலங்கைப்பிரச்சனையில் அமெரிக்க மூக்கை நுழைத்தால் வியட்நாமில் கற்ற பாடத்தை மீண்டும் புகட்டுவோம்” என்று காட்டமாக அறிவித்திருக்கிறார். இலங்கைக்கு ஏது இத்தனை துணிவு? இங்குதான் சீனாவின் பங்கு வருகிறது. பாக்கிஸ்தான், பங்களாதேஷ், மியான்மர் போன்ற நாடுகளில் துறைமுகங்களை சீனா அமைத்துவருவதைப்போலவே இலங்கையிலும் அம்பாந்தோட்டை துறைமுகத்தை அமைத்துவருகிறது. சிங்கள அரசு நடத்தும் போரை முழுமையாக ஆதரிப்பதுடன், இலங்கை குறித்து ஐநா நடத்தவிருந்த விவாதக்கூட்டத்தையும் தன்னுடைய ‘வீட்டோ பவரி’னால் தடுத்து நிறுத்தியிருக்கிறது. ஜியான் 7 ரக தாக்குதல் விமானங்களையும், ஜே ஒய் 11 ரக முப்பரிமாண ரேடார்களையும் வழங்கியிருக்கிறது. ஏன் இலங்கை சிங்கள அரசை சீனா இப்படி ஆதரிக்க வேண்டும்? ஈழத்தமிழர் பிரச்சனை சீனாவை எந்தவிதத்தில் பாதிக்கிறது? இந்தியாவின் பிராந்திய ஆதிக்கத்தை தடுத்து நிறுத்துவதன் மூலம் அமெரிக்காவை முடக்குவது. அடுத்த உலக வல்லரசாக தன்னை முன்னிருத்துவது. இவற்றின் ஒரு பாகம் தான் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த இலங்கைக்கான ஆதரவு.
இலங்கையில் நடைபெற்றுவரும் தமிழ் இன அழிப்பு நடவடிக்கையை ஆதரித்தும் எதிர்த்துமாய் இலங்கையில் தலையீடு செய்யும் எந்த ஒரு நாட்டிற்கும் ஈழ மக்களின் வாழ்வியல் குறித்த சிந்தனையோ, சிங்கள பேரினவாதத்தின் அடக்குமுறையின் விளைவுகளோ, தமிழினத்தின் உரிமைகளோ முக்கியமானவைகள் அல்ல. தங்களின் மேலாதிக்க எண்ணங்களுக்கு எந்தவிதத்தில் இந்தப்பிரச்சனை பயன்படும் என்ற சிந்தனையை தவிர வேறு எந்த நோக்கங்களும் இல்லை.
மீண்டும் தமிழகத்திற்கு வருவோம். தமிழக மக்கள் ஏன் தமிழ் இன அழிப்பை எதிர்த்து குரல் கொடுக்கிறார்கள்? சொந்த இனம் எனும் உணர்வாலும், கொடூரமாக கொல்லப்படுகிறார்கள் எனும் மனிதாபிமான உணர்ச்சியாலும் தான். மாறாக இலங்கையில் அவர்களுக்குள்ள உரிமை குறித்தோ, அவர்களின் சுய நிர்ணய உரிமை குறித்த மதிப்பீட்டினாலோ அல்ல. இலங்கை செய்துவரும் அதே செயலை இந்தியா காஷ்மீரிலும், வடகிழக்கு மாநிலங்களிலும் செய்து வருவது குறித்து அவர்களின் கருத்தென்ன?
புலிகளின் வரலாறு எப்படிப்பட்டது? தங்களைத்தவிர வேறு யாரும் தமிழர்களுக்காக குரல் கொடுக்கக்கூடாது எனும் அடக்குமுறை சிங்கள அடக்குமுறையிலிருந்து எந்த விதத்தில் வேறுபட்டது? மக்களின் போராட்டங்களை புலிகள் ஏன் அங்கீகரிக்க மறுக்கிறார்கள்?
ஈழத்தமிழர்களே! உங்களிடம் இன்னும் என்ன மீதமிருக்கிறது இழப்பதற்கு? உயிரைத்தவிர. புலிகளோடு முடிந்துவிடுவதல்லவே ஈழத்தமிழர்களின் அடையாளம். போரில் போகும் உயிர் போராட்டத்தில் போனால் தவறா?
உங்களின் அழுகை எந்தப்புள்ளியில் முடிந்து போகிறதோ, அந்தப்புள்ளியிலிருந்து தொடங்கும் ஈழத்தின் மலர்ச்சி.