நாலு தரப்பு முரண்பாடு, புலியை அழிப்பதன் பெயரால் தமிழரை எப்படி கொல்லுவது என்பதில்; ஏற்பட்டுள்ளது. இதன் மூலம் இலங்கையில் குடும்ப ஆட்சியை பாசிச சர்வாதிகாரமாக நிறுவ, பாசிட்டுகள் உலக 'நாகரிக" ஒழுங்கின் மூக்கணாம் கயிற்றை அறுத்துக்கொண்டு மூசுகின்றனர். பல தரப்பு முரண்பாட்டுக்கு ஊடாக தமிழரைக் கொன்று, அதை இலங்கைக்கான ஜனநாயகமாக காட்ட முனைகின்றது.

 

இதுவே யுத்த நெருக்கடியாக மாறி நிற்கின்றது. இது ஏற்படுத்தும் மனித அவலத்தை வைத்து, ஏகாதிபத்தியங்கள் முதல் இந்தியா வரை தத்தம் அரசியல் பொருளாதார நலனை இலங்கையில் நிறுவ, தன் முனைப்பு கொண்டு தமக்குள் ஓடிப்பிடித்து விளையாடுகின்றனர். இந்த எல்லையில் இந்த யுத்தத்துக்கு யார் அதிகம் தமிழனை கொல்ல உதவுதன் மூலம், இலங்கை அரசை தம் பக்கம் தக்கவைக்க முடியும் என்பதில் சீனா -  இந்தியா முரண்பாடு கூர்மையாகியுள்ளது.

 

மறுபக்கத்தில் இந்த யுத்தத்தை ஆதரித்து நிற்கும் இந்தியா – சீனா நிலையை தனிமைப்படுத்தி, தன்னை நிலை நிறுத்த மேற்கு முனைப்பாக உள்ளது. அதற்கு இந்த யுத்தம் ஏற்படுத்தும் மனித அவலத்தைக் காட்டி, காய் நகர்த்துகின்றது. இந்தியா தன் பிடியை தக்கவைக்க யுத்தத்துக்கு உதவும் அதேநேரம், மேற்கு மனித அவலம் மூலம் ஏற்படுத்தும் தலையீட்டை தடுக்க, அதையும் தான் கவனித்துக் கொள்வதாக பாசாங்கு செய்கின்றது. இப்படித் தமிழர் புலியின் பெயரால் பேரினவாத பாசிட்டுகள் இனவழிப்பாக கொல்வது என்பது, உலகமயமாக்கலின் உள்ளான முரண்பட்ட பிரிவுகளின் அரசியல் விளையாட்டுக்குள் சிக்கிவிட்டது.

 

இப்படி இலங்கையில் பேரினவாதிகள் தம் பாசிசத்தை நிறுவ நடத்தும் யுத்தமும், அது ஏற்படுத்தும் மனித அவலமும், இலங்கை அரசை இதன் மூலம் தம் பக்கத்துக்கு கொண்டு வரும் முரண்பாடுகளும் தீவிரமாகியுள்ளது.

 

இதற்குள் இலங்கை அரச பாசிட்டுகள் தன் முனைப்புடன், இதைப் பயன்படுத்தி பாசிசத்தை குடும்ப ஆட்சியாக நிறுவுகின்றனர். திமிராகவே பாசிசம் இந்த முரண்பாட்டை எடுத்தெறிந்து  கையாள்வதன் மூலம், தம் பாசிசத்தை தமிழனுக்கு எதிராக திமிருடன் கையாண்டு தம்மை பலப்படுத்துகின்றனர். 

 

இன்று தொடங்கியுள்ள பாசிசம் எதிர்காலத்தில் மேலும் குறுகி, குடும்பத்தின் சர்வாதிகார பாசிசமாக மாறி வர முயல்கின்றது. இப்படி இலங்கை இரத்த களறிக்குள் செல்வது என்பது, வெளிப்படையான அரசியலாக மாறிவருகின்றது. இந்தியா, சீனா, மேற்கு மற்றும் ருசியா முரண்பாடுகளும், மேற்குடன் முரண்படும் ஈரான் லிபியா.. போன்ற முரண்பாட்டையும் கையாண்டு, பேரினவாதம் தன் பாசிச ஆட்சியை தக்கவைக்க முனைகின்றது.

 

அது முரண்பாட்டுக்குள் கையாளும் 'நாகரிகமான" ராஜதந்திர மொழியைக் கூட இன்று கைவிட்டு, திமிராகவே உலகத்தின் ஒரு பக்கத்துக்கு பதிலளிக்கின்றது. அதிகாரம் தலை கால் தெரியாது முற்றி, பாசிசம் கொப்பளிக்க அது எழுந்து நிற்கின்றது. மேற்குடனான முரண்பாட்டை வெளிப்படையாக தாக்குமளவுக்கு, பாசிசம் இன்று திமிராகவே பதிலளிக்கின்றது.  

 

மறுபக்கத்தில் புலிகள் இந்த முரண்பாட்டை தமக்கு சார்பாக கையாள எடுக்கும் முயற்சிகள், அவர்களின் சிறுபிள்ளைத்தமான சொந்த நடத்தையால் வெற்றி பெறுதற்கு மாறாக தோல்வியைத் தழுவுகின்றது. புலியின் சொந்த நடவடிக்கை அவர்களை பாதுகாப்பதற்கு எதிராக மாறி, அவர்களின் அழிவை அனைவரும் ஏற்றுக்கொள்ளும் வண்ணம் பரிணமிக்கின்றது. முரண்பட்ட எந்தத்தரப்பும் புலிகளின் செயலை நியாயப்படுத்த முடியாத வண்ணம், இன்றைய  சர்வதேச ஒழுங்குவிதி நிர்ப்பந்திக்கின்றது. இதனால் தமக்குள் முரண்படும் எல்லாத் தரப்பும், புலியை பாதுகாப்பதை மறுக்;கின்றது. இது தான் பேரினவாதம் தன் பாசிசத்தை இலகுவாக நிறுவும் மையக் கருவாக உள்ளது.

 

இலங்கையின் எதிர்காலம் மிகவும் ஆபத்தான பாசிசமாக உருவாகி, அது மேலும் இறுகி வருகின்றது. எதிர்க்கட்சிகள் கூட அடக்கியொடுக்கப்பட்டு அல்லது விலைக்கு வாங்கப்பட்டு அழிக்கப்படும் நிலைக்கு, ராஜபக்சவின் சர்வாதிகார குடும்ப ஆட்சி நிறுவப்பட்டு வருகின்றது.

 

ஏகாதிபத்திய முரண்பாடுகள் இதற்குள் பயணிக்கின்றது. தம் செல்வாக்கை உருவாக்க, எதிர்காலத்தில் திட்டமிட்ட படுகொலைகள் அரங்கேறலாம். தம் சொந்த முரண்;பாட்டினூடாக    தம் நலனை அடைய, ஆயுதமேந்திய புதிய குழுக்கள் கூட மீள உருவாக்கப்படலாம். உள்நாட்டின் முரண்பாடும், ஏற்பட்ட வரும் குடும்ப பாசிசமும் இதற்கான விளைநிலமாக உள்ளது. இவர்களின் அரசியல் காய் நகர்த்தலுக்கு ஏற்ப, அன்னிய சக்திகளின்  தலையீடுகள் அதிகரித்து வருகின்றது. இதற்குள் குடும்ப சர்வாதிகாரம், தன் பாசிசத்தை உருவேற்றி ஆடுவதால், குத்துவெட்டுகள், ஆட்சி கவிழ்ப்புகள், புதிய யுத்தங்கள் என்று எதிர்காலத்தில், அதிகரித்த அளவில் மோதல்கள் இலங்கையில் காணப்படும். இதற்குள் தான் மக்கள், தம்மை ஒருங்கமைத்து தம்மைப் பாதுகாக்க போராட வேண்டியுள்ளது.

 

பி.இரயாகரன்
28.04.2009