Language Selection

புலியின் தோல்வி போல் தான், புலம்பெயர் போராட்டங்களும் தோற்கின்றது. இரண்டுக்கும், ஒரே அரசியல் காரணம்தான். இளம்தோழர் ஒருவர் எம்மிடம் இதையொட்டி சில கேள்விகளை எழுப்பியுள்ளார். அதில் அவர்

 

"பேரினவாத ஒடுக்குமுறையின் உச்சக்கட்டம் தலைவிரித்தாடும் ஈழப்பிரச்சினையில் அவ்வொடுக்குமுறைக்குள்ளாகும் இனமொன்றின் தேசிய உணர்வென்பது, அதன் தேசியப்போராட்டம் என்பது இயல்பாகவே முற்போக்கான அம்சங்களைக் கொண்டிருக்கும் என்பதுதான்.

புலிக்கொடி, தலைவர் வழிபாடு, அப்படங்களையும் கொடிகளையும் வருகிற மக்களின் கையில் திணிக்கும் சிறு கும்பல் போன்றவற்றை விலக்கிப்பார்த்தால், அச்சமின்றியும், கண்ணீரோடும், எதிர்ப்புணர்வோடும் கோபத்தோடும் திரளும் இலட்சக்கணக்கான மக்களின் எதிர்ப்புணர்வென்பது அவ்வளவு இலகுவாக கண்டும் காணாமல் விடப்படக்கூடியதல்ல என்பதுதான்.

புலிகளின் துரோக அரசியலையோ, மக்களுக்கெதிரான அரசியலையோ அறிந்திராத, புதிய புலம்பெயர் தலைமுறை நண்பர்களுடன் தொலை பேசியதில் தம்மை ஒடுக்குமுகமாக, தமது இயக்கமொன்றைத் தடை செய்து, தமது இயக்கத்தின் சின்னங்களை தூக்குவதை தடை செய்த அதிகாரங்களுக்கெதிராக இலட்சக்கணக்கில் திரண்டு தமக்கு தடுக்கப்பட்ட சின்னங்களை உயரத்தூக்குவதில் இருக்கும் எதிர்ப்புணர்வு வெளிப்பட்டது.

ஒரே புலிக்கொடி ஓரிடத்தில் ஒடுக்கும் சின்னமாகவும் இன்னோரிடத்தில் ஒடுக்குமுறையைத் தகர்க்கும் சின்னமாகவும் இருக்கிறது.

பாராளுமன்றங்களை முற்றுகையிட்டும், வீதிகளைத் தடுத்தும் உலக அதிகாரங்களையே எதிர்த்து நின்று கேள்விகேட்கும் நிலைக்கு எம் இளம் சமுதாயம் வந்திருக்கும்போது, ஈராக், பாலஸ்தீனம் போன்ற உலகத்தில் கணிசமானோரின் ஆதரவு பெற்ற சமூகங்களின் போராட்டங்களையும் மிஞ்சி, மிகச்சிறுபான்மை இனமொன்றின் எதிர்ப்புணர்வு கொப்பளிக்கும்போது, அது நாம் எதிர்க்கும் அதிகார பீடங்களைத்தான் கேள்விக்குட்படுத்தும்போது, நாம் இங்கே என்ன முடிவை எடுக்க வேண்டும் என்பது எனக்கு பயங்கர குழப்பத்தை உருவாக்குகிறது.

இந்தப் போராட்டங்கள் தமிழ் மக்களைத் திரட்டுவதில் வெற்றியடைந்துவிட்டது. அடுத்து, முற்போக்கான தோழமைச் சக்திகளைத் திரட்டும் நிலைக்கு வளர வேண்டும். அதனைச் செய்யக்கூடிய சரியான அரசியல் நிலைப்பாடுடையவர்கள் அதனைச் செய்வதன் மூலம், குறுந்தேசியக் கோரிக்கைகளுக்குள் முடங்க முடியாத நிர்ப்பந்தத்தினை புலிச்சார்புப் போராட்டங்களுக்கு ஏற்படுத்த வேண்டும்.

பாலஸ்தீன அமைப்புக்கள் தொடக்கம் தொழிற்சங்கங்கள் வரையான அமைப்புக்களின் ஆதரவைத்திரட்டும் நிலையில், தமது கோரிக்கைகளையும் குறுகியதாக வைக்க முடியாத நிர்ப்பந்தம் இந்தப்போராட்டங்களுக்கு ஏற்பட்டுவிடும்.

இவ்வாறக இந்தப்போராட்டத்தை வழிநடத்துவதாயின் கண்ணெதிரே திரளும் மாபெரும் மக்கள் சக்தியைச் சரியாகக் கணிக்கத்தவறியோ, கண்டும் காணாமலோ இருப்பது தவறாகிவிடும்.

மக்கள் உண்மையான கோபத்தோடு ஓரணியில் திரளும் சந்தர்ப்பங்கள் வரலாற்றில் எல்லா நேரங்களிலும் வாய்த்துவிடுவதில்லை. அவ்வாறு மக்களின் கோபம் திரட்சி கொள்ளும்போது அதனை முற்போக்கு சக்திகள் ஆதரித்துப் பொறுப்பெடுத்து, பங்குபற்றாத நிலை ஏற்படுமாயின், பிற்போக்கு சக்திகளின் கைகளுக்கு அந்தக் கோபம் கைமாறும் அபாயம்தான் வரலாறு நெடுகிலும் நடந்து வருவதாகப்படுகிறது.

பன்னாட்டு அதிகாரபீடங்கள் புலிக்கொடியைத் தடை செய்ததற்கான காரணங்கள் மக்கள் சார்பானதல்ல. மக்களை ஒடுக்கும் அவர்களின் முறைகளில் ஒன்றாகவே அது செய்யப்பட்டது. எந்த வகையிலும் அந்தப் புலிக் கொடியோடு சம்பந்தப்பட்ட இனத்தின் நலன்களுக்கு அந்தத்தடை சார்பானதல்ல, மாறாக அந்த இனத்தை ஒடுக்கும் வழிகளுக்கு துணைபோவதாகவே தடைகள் இருக்கின்றன. அப்படி இருக்க அந்த இனம் இலட்சக்கணக்கில் திரண்டு அதே தடைசெய்யப்பட்ட கொடியை உயரத்தூக்கும் போது அதை எப்படி புரிந்துகொள்வது?

நீங்கள் எழுதியதைப் போல, புலிகள் கடைசிவரைப் போராண்டு மாய்ந்த பிறகு, (அவ்வாறு தான் புலிகள் மாயப்போகிறார்கள். சரணடையும் வாய்ப்புக்கள் எதுவும் தென்படவில்லை)  அந்த மாய்வு ஒரு வீரப்பண்பாக, அடங்கா எதிர்ப்பின் தொன்மமாக மக்கள் மனதில் நிலைக்கும். அவ்வாறாயின் அந்த அடங்கா எதிர்ப்பின் சின்னமாக புலிக்கொடிதானே மக்கள் மனதில் நிறையும்?

அவ்வாறு புலிகள் கடைசி வரை போராடி மாய்ந்த பிறகு அந்தப்புலிக் கொடியின் அர்த்தம் என்ன? இவ்வாறு பல குழப்பங்களை எனக்குள். இக்கட்டுரைக்கான உங்கள் பதில்களை தமிழரங்கத்தில் எதிர்பார்க்கிறேன்."

 

இளம் தோழர் ஒருவர் தன் தேடுதலூடாக, பல கேள்விகளை எம்மிடம் விட்டுச்செல்லுகின்றார். மிகச் சரியான அரசியல் வழிகாட்டலுக்குரிய தன் சொந்த நுட்பத்துடன், அவர் எம்மையும் அதை அணுகக் கோருகின்றார்.

 

புலம்பெயர் சமூகத்தில் நடக்கும் வழமையான புலிப் போராட்டத்தில் இருந்து, இப்போராட்டம்  மாறுபட்டது என்பதை, உட்கிரகிக்க எம்மில் பலர் தவறிவிடுகின்றனர். அரசியல் சூழல் மாறியதால் ஏற்படும் இடைவெளியில், ஒரு பிற்போக்கான வலதுசாரிய ஆதிக்க பிரிவு வீழ்ச்சி கண்டு வருகின்றது. மற்றொரு பிற்போக்கான வலதுசாரிய எதிர்ப்புரட்சி கும்பல் முன்னிலைக்கு உயர முனைகின்றது. இந்த இடைவெளியில் பரந்துபட்ட மக்களின் உணர்வு, இந்த இரண்டு பிற்போக்குகளுக்கும் எதிரான அடிப்படையில்தான் எழுகின்றது. இதை நாம் சரியாக உட்கிரகிக்க வேண்டியுள்ளது. இருந்த போதும், இந்தப் போராட்டங்கள் மக்கள் மக்களுக்காக நடத்தும் வண்ணம் அரசியல் ரீதியாக உருத்திரட்சி அடைய முடியவில்லை. வீழ்ச்சி கண்டு வரும் பிற்போக்கு வலதுசாரிய பாசிசம், தன் முன்னைய பலத்தின் அடிப்படையைக் கொண்டு, அதை தனக்கு ஏற்ப வடிகாலாக்கியது.

 

இருந்தும் புலம்பெயர் மண்ணில் தொடர்ச்சியானதும், விட்டுக்கொடுக்காத ஒரு போராட்டம் தொடருகின்றது. இதன் அடிப்படைக் காரணம்  என்ன?

 

1. பேரினவாதம் பாசிசம் இனவழிப்பாக, தமிழினப் படுகொலையாக மாறியுள்ளது. இப்படி தலைவிரித்தாடுகின்ற இன்றைய இனவழிப்பை தடுத்து நிறுத்தவே, இன்று பெரும்பான்மை மக்கள் வீதியில் போராடுகின்றனர்.

 

2. மறுபக்கத்தில் இதைப் பயன்படுத்தி புலிப்பாசிசம் தப்பிப் பிழைக்க முனைகின்றது. இந்த எல்லைக்குள் இந்தப் போராட்டத்தை பயன்படுத்துகின்றது. அதற்குரிய பாசிச விதைகளை நடுகின்றது. மனித படுகொலைகளை பேரினவாதம் நடத்த உதவுகின்றது. அதை வைத்து தப்பிப் பிழைக்கும் ஒரு அரசியல் பிரச்சாரத்தைச் செய்கின்றது.

 

இந்த எல்லைக்குள் தான், இப் போராட்டங்கள் நடக்கின்றது. தமிழ்மக்கள் மேலான இந்த இனப்படுகொலையை தடுத்து நிறுத்தும் போராட்டத்துக்கு, தலைமை தாங்கும் மாற்று சக்திகள் எதுவும் இன்று கிடையாது. இப்படி மாற்றுத் தலைமை என்று கூறியவர்களின் பெரும்பான்மை, இன்று அரசுடன் கரைந்து விட்டனர். சிறுபான்மையினர் புலிகளுடன் கரைந்துவிட்டனர். எஞ்சியிருப்பதோ ஒரு சில குரல்கள் மட்டும்தான். இதில் உள்ளவர்கள் கூட, அரசுடன் கரைந்துபோன பாசிசக் கும்பலுடன் தான் அரசியல் லூட்டி அடிக்கின்றனர்.

 

இவர்கள் கூட மாறிய சூழலை உள்வாங்கி, தம்மை தனித்துவமாக வெளிப்படுத்த முனையவில்லை. கருத்தியல் ரீதியாக அரசு சார்பு பிரிவுடனான முரண்பாடு, நடைமுறை மற்றும் செயல் தளத்தில் பிரியவில்லை. அவர்களின் கருத்து முரண்பாடு, நட்பு முரண்பாடாகவே அவர்களுக்குள் நீடிக்கின்றது. கும்பலில் கோவிந்தாவாக, இன்னமும் அவர்களுடன் கூட்டுக்கலவி அரசியல் செய்கின்றனர். அவர்கள் அரசியல் இருப்பு, படுபிற்போக்கான அரசியல் தளத்தில் ஒன்றாக கும்மியடிப்பதுதான். மக்களுடன் எங்கே எப்படி நிற்கமுடியும்.

 

இன்றைய நிலையில் தீவிர வலதுசாரிகளும், தீவிர இடதுசாரிகளும் ஒன்றாக இன்னமும் கூடி குலாவுகின்றனர். இணையங்கள் முதல் கூட்டங்கள் வரை இதுதான் நிலைமை. இப்படித்தான் இன்று இடதுசாரியம் சோடை போய்க் கொண்டு இருக்கின்றது. உண்மையில் அரசு சார்பு வலதுசாரியத்திடம் எந்த மக்கள் சார்பு கருத்தும் கிடையாது. இது தன்னை நியாயபடுத்த முடியாது. ஆனால் இந்த இடதுசாரியம் மேல் அது அமர்ந்து இருந்து பயணிக்கின்றது. கருத்தியல் ரீதியாக முரண்படும் இடதுசாரியம், வலதுசாரியத்துடன் ஒன்றாக நடத்துகின்ற அரசியல் கூத்துத்தான், வலதுசாரியம் தன்னை கருத்தியல் தளத்தில் தக்கவைக்க முடிகின்றது.

 

இதை கூட புரிந்து கொள்ள முடியாதவர்கள், பேரினவாதம் பற்றிய அழகான இடது சிந்தனை அhத்தமற்றது. இவர்கள் ஒரே கருத்து தளத்தில் இயங்கி, வலதுசாரியத்தின் இருப்புக்கு உதவி செய்கின்றனர். இப்படி தீவிர இடதுசாரியம் வலதுசாரியத்தை முறித்துக்கொண்டு அரசியல் செய்ய மறுக்கின்ற அரசியல் சூழலில், அவர்களின் தனிப்பட்ட அரசியல் நேர்மையும் சுயவிமர்சனமும் என்பது நினைத்துப் பார்க்க முடியாத ஒன்று.

 

மண்ணில் சரி, புலம்பெயர் சமூகத்தின் முன் சரி, தன்னை நிறுவ முனையும் வலதுசாரியத்துக்கு எதிரான அரசியல் நிலை என்பது இன்றும் மையமானது, அடிப்படையானது. இப்படியிருக்க பேரினவாத சக்திகளுடன் கொண்டுள்ள கூட்டுக் கலவியை கைவிடாதவர்கள், எப்படி அரசுக்கு எதிரான மக்களை அணுகமுடியும்!? இந்த இடத்தில் தீவிர இடதுசாரியம் பேசுபவர்களை விட, மக்கள், எதிரியை அடையாளம் கண்டு போராடுகின்றனர். கருத்தில் அரசுக்கு எதிராக இடதுசாரியம் பேசும் நபர்களோ, அரசுசார்பு கும்பலுடன் கைகோர்த்து நிற்கின்றனர். பாருங்கள் எம் மக்களின் அவலமான வரலாற்றின் பின்னணியை.

 

இப்படி அரசியல் ரீதியாக விழிப்புறும் சமூகம் சுயமாக பின்பற்ற முடியாத வண்ணம், அரசு சார்பு குழுவுடன் தான் அதற்கு எதிரான எதிர்வினையும் கூடிப் பயணிக்கின்றது. இந்த அரசியல் வெற்றிடம் இன்று எதார்த்தமாகி நிற்கின்றது. 

 

இதனால் இன்று வீதியில் இறங்கி நிற்கும் பெரும்பான்மை மக்களை, சரியாக வழிநடத்திச் செல்ல முடியாத நிலை உள்ளது. அதை புலி தன் பாசிச பிடிக்குள் வழிநடத்துகின்றது. ஆனால் இந்த வீழ்ச்சியின் பின், இரண்டு வர்க்கங்களுக்கு இடையிலான ஒரு இழுபறிக்கூடாகவே நடைபெற்றது,

 

1.புலிகளின் தீவிர வலதுசாரிய பாசிசப் பெருச்சாளிகள், தம் அதிகாரத்தை தக்கவைக்க முனைந்தது.

 

2. குட்டிபூர்சுவா உணர்வுகளை அடிப்படையாகக் கொண்ட, பெரும்பான்மை மக்கள்  ஆரம்பம் முதலே இந்தப் போராட்டத்தை வலதுசாரிய பெருச்சாளிகளால் தொடர முடியவில்லை. போராட்டத்தினை நடத்தியது, குட்டிபூர்சுவா வர்க்கம்தான். இந்தப் போராட்டத்தின் கடந்தகால வரலாறு எதுவும் தெரியாதவர்கள், மனித இனப்படுகொலையை கண்டு கொதித்துப் போனவர்கள் தான், இதற்கு எதிரான உணர்வுடன் வீதியில் இறங்கினர். மனித அவலம் தான், அவர்களின் கண்ணுக்கு தெரிந்த ஒரேபொருள். இவர்கள் இந்த போராட்டத்தில் புலிகளை மட்டும்தான் பார்த்தார்கள். வேறு எதையும் அவர்கள் பார்க்கவும், தெரிந்து கொள்ளவும் சமூகத்தில் எதுவுமில்லை. இதற்கு எதிரான தளத்தில் பேரினவாத அரச எடுபிடிகள்தான், புலம் பெயர் மண்ணில் தீவிரமாக செயல்பட்டனர். இடதுசாரிகள் என்று சொல்லக் கூடிய கருத்து முரண்பாடு உடையவர்கள் கூட, அரச எடுபிடிகளுடன் கூடி விவாதித்துக் கொண்டிருந்தனர். அதே நிலைதான் இன்றும். வீதிக்கு போராடச் சென்ற மக்கள், புலிக்கு பின் செல்வதைத் தவிர வேறு மார்க்கம் எதுவும் கிடையாது. இந்த நியாயமான மனித உணர்வை, புலிப் பாசிசம் தனக்கு ஏற்ப பயன்படுத்திக் கொண்டது.

 

ஆனாலும் இந்த போராட்டத்தில் உணர்வுபூர்வமான குட்டிபூர்சுவா வர்க்கத்தின் உணர்வுக்கும், புலிப் பாசிச பெருச்சாளிகளின் வலதுசாரியத்துக்கும் இடையில் இழுபறியான முரண்பாடுகளுடன் போராட்டம் தொடங்கியது முதல் இன்றுவரை நகருகின்றது. எந்த கொடியை பிடிப்பது என்பது முதல், எந்த கோசத்தை வைப்பது என்பதுவரை, ஒரு சீரான போராட்டம் தொடர்ச்சியாக நடக்கவில்லை. அவை மாறிக் கொண்டு இருந்தது. இழுபறியான இடைவெளியையும், முரண்பாடான இரண்டு வர்க்கத்திற்கும் இடையில் போராட்டம் இழுபட்டது.

 

இந்த வரலாற்றுச் சூழலில் ஒரு புரட்சிகரமான சக்தி இதில் தலையிட்டு, வழிகாட்ட முடியாது இருந்தது.

 

ஏன் இந்த நிலைமை?

 

மேலே நாம் பார்த்த விடையத்துக்கு அப்பால், மண்ணில் புரட்சிகர அரசியல் ரீதியான முயற்சியின்மை ஒரு முக்கிய காரணமாகும். மறுபக்கத்தில் புலிக்கு வெளியில் புலம்பெயர் நாட்டில் இருந்தவர்கள் புலி-அரசு என்று அணி பிரிந்து சென்ற நிலையில், உதிரியாக தனித்து நின்றவர்கள் அரச பிரிவுடன் சேர்ந்து இதைப் பற்றி வம்பளந்து கொண்டிருக்கின்றனர்.

 

நாம் செய்யக் கூடியது, எம் கருத்தை விரிந்த தளத்துக்கு எடுத்துச் செல்வதுதான். மக்கள் சார்ந்த கோசங்களை வைத்து, கருத்தை வெளிப்படையாக வைப்பதற்கு அப்பால், இதில் நேரடியாக தலையிட முடியாது இருந்தது. புலிப்பாசிசம் தான் அல்லாத அனைத்தையும் கண்காணித்தது. இதை மீறி கோசத்தை கொண்டு செல்வது, உள்ளே அரசியல் பிரச்சாரம் செய்வது, வழி காட்ட முனைவது வெளிப்படையான வன்முறைக்கு அது இட்டுச்செல்லுமளவுக்கு நிலைமைகள். இந்த போராட்டம் நடக்கும் இடம், புலிப் பாசிசத்தின் வன்முறையுடன் கூடிய வரையறையைத் தாண்டி இருக்கவில்லை. எந்தக் கோசமுமின்றி உணர்வுபூர்வமாக சென்றவர்கள், வன்முறையில் இருந்து தப்பித்தான் வந்தார்கள்.

 

மறுபக்கத்தில் இந்த குட்டிபூர்சுவா உணர்வுகளை பிரதிபலித்து, புலிக்குள் இருந்த இடதுசாரிய புலிப் பிரமுகர்கள் அவர்களுக்கு உதவ முன்வந்தார்கள். அவர்கள் ஊடகங்களின் முன்னால் வன்முறை, புலிக்கொடி, என்ன கோசங்களை வைப்பது தொடர்பாக நெறிப்படுத்த முனைந்தனர். ஆனால் புலிப் பாசிசப் பெருச்சாளிகள் இதற்கு எந்த இடத்தையும் வழங்காது, உதிரி கும்பல் துணையுடன் தமது போராட்டமாக காட்டிக்கொண்டு மனித அழிவுக்கு உதவினர்.

 

உள்ளே அவர்கள் மத்தியில் இயல்பாக எழுந்த நியாயமான கோரிக்கைகளைக் கூட, புலி அனுமதிக்கவில்லை. இதில் உணர்வுபூர்வமான குட்டி பூர்சுவா இளைஞர்கள் யுவதிகளின்  நியாயமான கோரிக்கைகள், மக்களுக்காக தனித்துவமாக மாற முடியாத வண்ணம் புலி அதை சிதைத்தது. தன் சொந்த அழிவு போல், இந்த போராட்டத்தையும் அழித்தது.

 

இந்த நிலையில் இன்று இவர்கள் முன் இயல்பில் பல கேள்விகள் எழுந்துள்ளது. அதற்கு அவர்கள் அரசியல் ரீதியாக விடை காண வேண்டியுள்ளது.

 

1. இந்தப் போராட்டம் தோற்றது ஏன்? நாங்கள் என்ன செய்தோம்?

 

2. எமது போராட்டத்தில் பிற சமூகங்கள் ஏன் பங்குபற்றவில்லை. தன் பிற சமூக பாடசாலை நண்பர்கள் கூட ஏன் தம்முடன் இல்லை.

 

3. இந்த மனிதப் படுகொலைக்கு பின்னால், புலிகளின் அரசியல் எந்த வகையில் உதவியது.

 

4. அமைதியான போராட்டம், புரட்சிகர போராட்டமாக முன்னேறும் போது, எமது அரசியல் கோசம் ஏன் புரட்சிகரமாக முன்னேறவில்லை? அதை எது, எப்படித் தடுத்தது?

 

5.ஏகாதிபத்தியங்களின் அரசியல் பாத்திரம் என்ன?

 

இப்படி எம் சமூகத்தின் முன் பல கேள்விகள். அதற்கு விடைகாண உதவுவது, உடனடியாக  எம்முன்னுள்ள அரசியல் பணியாக உள்ளது. புலிப் பாசிசம் எம்மினத்தின் அழிவுக்கு ஆற்றிய பங்கும், மறுபக்கத்தில் புலியின் ஊடாக தேசிய விடுதலையை பார்த்த சமூகமும் தான் எம்முன் எஞ்சிக் கிடக்கின்றது.

 

புலிகளின் பின் நிலவிய பாசிசம் முதல் அதன் பிற்போக்கான அரசியல் நடவடிக்கைகளை  முழுமையாக சரியாக இனம் காட்டி அம்பலப்படுத்த வேண்டியுள்ளது. மறுதளத்தில் இதன் பின் நிலவிய சரியான தேசிய கூறுகளை நாம் வெல்ல வேண்டியுள்ளது. அதாவது தேசியத்தின் பிற்போக்கு கூறை தோலுரித்து, முற்போக்கு கூறை உள்வாங்க வேண்டும். இப்படி இனம் காட்டி, இனம் கண்டு போராடுவதன் மூலம்தான், தமிழ் மக்களை சரியாக அரசியல் ரீதியாக விழிப்புற வைக்கமுடியும். இது நீண்ட, கடினமான ஆனால் அவசியமான பணி. மண்ணில் இது தன் சொந்த அரசியல் வித்துக்களை பதிக்க வேண்டும். இது தான் முதன்மையானது.

 

எதிரி இன்று அம்பலமாகி தனித்து நிற்கின்றான். தன்னையும், தனது பாசிசத்தையும் நியாயப்படுத்த, மக்களை ஒடுக்க தனக்கு ஒரு (புலி) எதிரியின்றி தனித்து நிற்கின்றான். இந்த நிலையில் பேரினவாத பாசிசத்தை நியாயப்படுத்தும் பொறுக்கிக் கும்பலை, அதற்கு உதவும் அனைத்தையும் அம்பலப்படுத்த வேண்டும். கருத்தால் மட்டுமல்ல, நடைமுறையாலும் அதை செய்ய வேண்டும்;. அரசியல் ரீதியான வரையறையின்றி, அரச எடுபிடிகள் ஒன்று கலக்கும் வண்ணம் கூட்டப்படும் அரசியல் கூட்டங்கள், கருத்துத் தளங்கள், அதில் வரும் கருத்துகள் அனைத்தும், இன்று பேரினவாதத்துக்கு ஏதோ ஒரு வகையில் உதவுவது தான். அதை இனம்காட்டி, புறக்கணித்து தனிமைப்படுத்தி போராடவேண்டும்.

 

இன்று நடந்தது புலிகளின் தோல்வி மட்டுமல்ல, பேரினவாதத்தின் தோல்வியும் கூடத்தான். அதை புரிந்து கொண்டால், வெல்வதற்கு ஒரு பரந்த உலகம் உண்டு. 

 

பி.இரயாகரன்
24.04.2009