03212023செ
Last updateபு, 02 மார் 2022 7pm

மாறும் அரசியல் சூழலை உள்வாங்கி எதிர்வினையாற்றுவதே, எமது உடனடியான அரசியல் இலக்காகும்

கடந்தகாலத்தில் கடுமையாகப் புலிகளை விமர்சித்து வந்த நாம், இன்று அதை அரசுக்கு எதிராக செய்யத் தொடங்கியுள்ளோம். இந்த அரசியல்  நிலைப்பாடு என்பது, உடனடியான அரசியல் இலக்கை இனம் கண்டு கையாளப்படுகின்றது. இந்த வகையில் எமது விமர்சன முறைக்கான அரசியல் அடிப்படை மிகவும் துல்லியமானதும், தெளிவானதுமாகும்.

 

சமூகத்தை எந்தப் போக்கு ஆதிக்கம் வகித்துக் கொண்டிருந்ததோ, அதற்கு எதிரான போராட்டத்தை மையப்படுத்தி நடத்தினோம், நடத்தி வருகின்றோம்.

 

கடந்தகாலத்தில் புலிகள் தமிழ்மக்களை தம் வலதுசாரிய பாசிசப் பிடிக்குள் கட்டிவைத்திருந்தனர். இந்த நிலையில் மக்கள் முன் அவர்களை அரசியல் ரீதியாக அம்பலப்படுத்திப் போராடினோhம். இது அன்றைய அரசியல் சூழலுக்கு ஏற்ப, மிகச் சரியாக இருந்தது. இன்று புலி வாழ்வா சாவா என்ற நிலையில் சேடமிழுக்கின்ற நிலையில், மிகவும் பலவீனப்பட்டு அதுவாகவே சிதைந்து கொண்டு இருக்கின்றது. இந்த அரசியல் வெற்றிடத்தை புரட்சிகர கருத்துகள் நிரப்பவில்லை. மாறாக எதிர்ப்புரட்சி இதில் மேலோங்கி வருகின்றது. இந்த நிலையில் அரசுக்கு எதிரான ஈவிரக்கமற்ற விமர்சனத்தை நாம் தொடங்கியுள்ளோம். அதன் எடுபிடிகளை நோக்கி எம் போராட்டம் குவிகின்றது. 

 

எமது இந்த அரசியல் நிலை மாறி வரும் அரசியல் சூழலை கருத்தில் கொண்டது. மக்களை சரியான கருத்தின் பக்கத்துக்கு வழிநடத்த முனைவதாகும். இது புலி பற்றிய அல்லது அரசு பற்றிய எமது முந்தைய இன்றைய நிலையில், எந்த அரசியல் மாற்றத்தையும் அடிப்படையாகக் கொண்டதல்ல.

 

பலர் அங்குமிங்குமாக தம் நிலையில் நின்று எம்மை பார்க்கின்றனர். பலர் குழம்புகின்றனர்.  சிலர் நாங்கள் முன்னரேயே இந்த நிலையில் (புலியை எதிர்க்காது அரசையே எதிர்க்கவேண்டும்) என்ற நிலை நின்றே கூறினோம் என்று கூறுவது எல்லாம், அரசியல் சந்தர்ப்பவாதமாகும். இங்கு நாங்கள் அரசியல் ரீதியாக மாறவில்லை. மாறாக அரசியல் சூழல் மாறிவிட்டது. மாறிவரும் சூழலில், நாம் தீவிரமாக எதிர்வினையாற்றுகின்றோம்.

 

இந்த அரசியல் சூழலை ஒட்டிய புதிய நிலையை உட்கிரகிக்க முடியாதவர்களின், எம்மைப் பற்றி தவறான மதிப்பீடுகள்;, அவர்கள் அரசியல் பார்வைகள் மீண்டும் மீண்டும் அதே பாணியில் செல்லது தவறானதே.  

 

நாங்கள் மாறவில்லை, மாறாக அரசியல் சூழல் மாறிவிட்டது. ஒரு பிரச்சாரம், விமர்சனம் அனைத்தும், மக்களை எந்த அரசியல் பிற்போக்கு கூறை மையப்படுத்தி படுகுழியில் நிறுத்துகின்றதோ, அதை முறியடிக்கும் வண்ணம் கூர்மையானது. இன்று எம்மைச் சுற்றி மற்றொரு எதிர்ப்புரட்சி மேலோங்கி வருகின்றது. இந்த அடிப்படையில் நாம் கையாளும் விமர்சனமுறை என்பது, மாறுகின்ற அரசியல் சூழலை வேகமாக உள்வாங்கி அதன் மேல் தாக்குதலைத் தொடுத்தலாகும். 

 

எங்கள் அரசியல் நிலையில் எந்த மாற்றமும் கிடையாது. அரசியல் சூழல் எமக்கு வெளியில் மாறுகின்றது. அதற்கமைய நாம் எதிர்வினையாற்றுகின்றோம். இதை உள்வாங்க முடியாதவர்கள், எம்மைப்பற்றி தவறாக அரசியல் விளக்கம் கொடுக்க முனைகின்றனர். 

      

பி.இரயாகரன்;
22.04.2009


பி.இரயாகரன் - சமர்