அரசியலை துறந்தோடிய எம் சமூகத்தில், புலி-புலியெதிர்ப்பு என்று மூளைச்சலவை செய்யப்பட்ட சிந்தனைக்குள் ஒரு இனவழிப்பு அழகாக நியாயப்படுத்தப்படுகின்றது. இதுவொரு இனவழிப்பல்ல, அரசு-புலி என்ற தரகுமுதலாளித்துவ வர்க்கத்தின் சொந்த அழிவு யுத்தம் என்று எம்மை அரசியல் ரீதியாக திருத்த முனைகின்றனர். வெட்கக்கேடானதும், மானம் கெட்ட அரசியலாகும்.

இதில் வேடிக்கை என்னவென்றால் இதைக் கண்டுகொள்ளக் கூடாது. இந்த அழிவை  மௌனமாக அங்கீகரிக்க வேண்டும் என்கின்றனர். சிங்களப் பேரினவாதத்தின் தமிழினம் மீதான  ஒடுக்குமுறையின் தொடர்ச்சியில் ஒரு அங்கம் தான் இது என்பதை, மறுக்கின்றனர். எல்லா புலியெதிர்ப்பு அரசியலும் போல், தமிழ் மக்களின் அரசியல் பிரச்சனையை விடுதலைப் புலிகளின் அழிவின் ஊடாக பார்க்கின்றனர்.

 

விடுதலைப்புலிகள் அழிந்தால் நாட்டின் பிரச்சனைகள் எல்லாம் தீர்ந்துவிடும் என்கின்றனர். இதற்காக அவர்கள் வைக்கும் காரணங்கள் வேறுபட்ட போதும், விடுதலைப்புலிகளின் அரசியல் அழிவை தம் சொந்த அரசியல் முன்னெடுப்புகள் ஊடாக முன்னெடுக்கவில்லை. இன்று பேரினவாதம் தன் இனவழிப்பின் ஒரு அங்கமாக, அதற்கு தடையாக இருந்த புலிகளை அழிக்கின்றனர். இப்படி தம் சொந்த அரசியல் நெருக்கடியில் சிக்கிய புலிகளிடம், ஆயுதத்தை கையளிக்கவும் சரணடையவும் கோருகின்ற அரசியல் முன்வைக்கப்படுகின்றது. இதன் மறுபக்கத்தில் புலிகளே இந்தத் ஒரு துரோகத்துக்கான அரசியல் பேரங்களை ஏகாதிபத்தியங்கள் ஊடாக நடத்துகின்றனர்.

 

மொத்தத்தில் ஒரு துரோக அரசியல் முன்மொழிவே, பொதுவான தமிழ் அரசியலாக இன்று மாறி நிற்கின்றது. புலியெதிர்ப்பு அரசியலும், துரோகக் குழுக்களின் அரசியலும், தம்மைப் போல் அரசுடன் புலியையும் சேரும்படி கோருகின்றது. மறுதளத்தில் சரணடை, ஆயுதத்தைக் கையளி என்கின்றது. புலிகளோ ஒரு அரசியல் பேரத்தின் ஊடாக அதை செய்யத் தீவிரமாக முனைகின்றனர்.

 

பேரினவாதம் தான் விரும்பும் வண்ணம், தமிழ் அரசியல் போக்குகள் அனைத்தும் அரசியல் துரோகத்தின் ஊடாக  முன்மொழிகின்றது. இந்த விவாதத்தின் புலி மற்றும் புலியெதிர்ப்பு அரசியல் அடிப்படை வெளிப்படையானது. சரணடை, ஆயுதத்தை கையளி என்ற துரோகக் கோசம், இடதுசாரிய அரசியல் முலாம் பூசி இன்று வெளிவருகின்றது.

 

1. மனித அவலத்தையும், போராட விரும்பாத அப்பாவிகளையும் சார்ந்து இந்த அரசியல் துரோகம் கோரப்படுகின்றது.

 

2. புலிகள் முதலாம் எதிரி அல்லது புலி-அரசு இரண்டுமே தமிழ் மக்களின் முதலாம் எதிரி என்கின்றனர்.

 

3. புலிகள் அரசைப் போன்று தரகு நிலப்பிரபுத்துவ வர்க்கம், எனவே தமிழ்மக்களின் முதலாம் எதிரி என்கின்றனர்.

 

இப்படி இதற்குள் பல்வேறு அரசியற் சொற்கள், சொல்லாடல்கள் ஊடாக சரணடைவதும், ஆயுதத்தை கையளிப்பதும் தான் சரி என்கின்றனர். இதை யாரிடம் கையளிக்கும்படி கோருகின்றனர் எனின், இலங்கை அரசிடம். முதலில் இப்படி இலங்கை அரசிடம் ஆயுதத்தை கையளி, சரணடை என்று கூறும் அரசியல் என்ன? இப்படி பாட்டாளி வர்க்கம் தன் எதிரியைப் பார்த்து, மற்றொரு எதிரியிடம் கொடு என்றும், சரணடை என்றும் கோரமுடியுமா!? இது ஒரு வெட்கக்கேடான மானக்கேடான அரசியல்.

 

தமிழ் மக்களின் எதிரி யார்? முதலாம் இரண்டாம் எதிரி யார்? அரசியலை துறந்தோடும் சமூகத்தில், இதை நாம் அரிவரிப் பாடத்தில் இருந்து மீள தொடங்க வேண்டியுள்ளது.

 

தமிழ்மக்கள் இன்று இரட்டைச் சுமைகளை சந்திக்கின்றனர்.

 

1. சுரண்டும் வர்க்கமான தரகு நிலப்பிரபுத்துவ வர்க்கம். இது பேரினவாதமாக இருந்தாலும் சரி, புலிகளாக இருந்தாலும் சரி, இரண்டில் ஒன்றைத் தமிழ்மக்கள் எதிர்கொண்டனர், கொள்கின்றனர்.

 

2.தமிழினத்தின் மேலான பேரினவாதத்தின் இனவொடுக்குமுறை. இதை தமிழ் மக்களின் அனைத்து வர்க்கமும் எதிர்கொள்கின்றனர்.

 

இப்படி இரண்டு ஒடுக்குமுறைகளை தமிழ்மக்கள் ஒரே நேரத்தில் எதிர்கொண்டனர், கொள்கின்றனர். இந்த இரட்டை ஒடுக்குமுறை சிங்கள மக்களுக்கு கிடையாது.

 

இந்த வகையில் தமிழ் மக்கள் அரசிடமிருந்து இரட்டை ஒடுக்குமுறையையும், புலிகளிடமிருந்து ஒரு ஒடுக்குமுறையையும் எதிர் கொண்டனர். இப்படி அரசு முதலாம் எதிரியாக இருக்க, புலிகள் இரண்டாவது எதிரியாக மக்கள் எதிர் கொள்கின்றனர். சுரண்டும் வர்க்க அமைப்பில், ஆளும் வர்க்கமான அரசு எப்போதும் மக்களின் முதலாவது எதிரிதான். இதற்கு சமமாக மற்றொன்றை நிறுத்த முடியாது. அப்படி நிறுத்துவது அரசியல் திரிபின் முதற்படி.

 

இன்று இலங்கையில் நிலவும் முதன்மை முரண்பாடு தேசிய இன முரண்பாடுதான். இதை அடிப்படையாக கொண்ட பேரினவாதம் தான், தமிழ்மக்களின் முதல் எதிரியாக உள்ளது. அதேநேரம் சிங்கள மக்களின் முதல் எதிரி அரசாகவே உள்ளது. அரசு தான் இலங்கையில் வாழும் அனைவருக்கும் முதல் எதிரி. அரசு ஒழியாமல் இரண்டாம் எதிரி முதன்மை எதிரியாக மாறமுடியாது. இந்த வகையில் மக்களை அடக்கியொடுக்கும் அரசு மக்களின் முதல் எதிரியாக இருப்பது, அரசியல் ரீதியாக தெளிவாக எமக்கு உணர்த்துகின்றது.

 

இதில் எங்கே திரிபு ஏற்படுகின்றது? இரண்டாம் எதிரியை முதலாம் எதிரியாக காட்ட முனையும் அரசியல் புள்ளி எங்கே உருவாகின்றது? புலிகளின் ஆளுமைக்கு உட்பட்ட மக்கள், பேரினவாதத்தின் நேரடி ஒடுக்குமுறையை சந்திக்காத மக்கள், புலிகளுடனான அவர்களின் முரண்பாடு தான், இந்த அரசியல் திரிபின் மையமாகின்றது.

 

இங்கு அந்த மக்கள் புலிகளுடன் சந்திக்கும் முரண்பாடு முதன்மையானதாக அமைகின்றது. இந்த வகையில் தான் புலிகள் இன்று பலி கொடுக்கும் மக்கள், கட்டாயப்படுத்தி யுத்தமுனையில் பலிகொடுக்கும் மக்களின் குழந்தைகள் இப்படி பற்பல. புலியின் வலதுசாரிய பாசிசத்துக்கு இரையான இரையாகும் மக்கள். இந்த மக்கள் சந்திக்கும் முரண்பாடு, புலிகளுடனானது தான். இதனால் இது இலங்கையில் முதன்மை முரண்பாடாக மாறிவிடுமா? புலிகள் முதலாம் எதிரியின் நிலைக்கு உயர்ந்து விடுவார்களா? இல்லை.

 

இது மட்டுமல்ல, இது போன்று இரண்டாம் மூன்றாம் முரண்பாடுகள் கூட உள்ளது. இவை எவையும் முதலாம் முரண்பாட்டுக்கு உட்பட்டவை.

 

அரச அதிகாரத்தை பெறாத புலிகள், அதை அடைய போராடும் புலிகளினுடனான முரண்பாடு, தற்காலிகமானது. இன்று புலிகள் இந்த மக்களை இழந்து, தம் பிரதேசத்தை இழந்து நிற்கின்றனர். மக்கள் புலிகளின் பிடியில் இருந்து இடம் மாறி, பேரினவாதத்தின் ஒடுக்குமுறையை மீள எதிர்கொள்கின்றனர். இன்று புலிகள் ஒரு பகுதி மக்களை தம்முடன் கட்டாயப்படுத்தி வைத்திருக்கின்ற நிலைதான் உள்ளது. இந்த நிலையில் அந்த மக்கள் எதிர் கொள்வது, உயிர்வாழ்வதற்கான இரட்டை ஒடுக்குமுறையை.

 

1. அரசு வகை தொகையின்றி கொல்லுகின்றது. 

 

2. புலி இதில் இருந்து தப்பிச் செல்பவரை கொல்லுகின்றது, தம் யுத்தத்துக்கு தேவையான ஆட்களை இங்கிருந்து பிடித்துச் செல்கின்றது.

 

இதை விட உணவு, மருத்துவம், உளவியல் என்ற பல்வேறு பிரச்சனைகளை இந்த மக்கள் எதிர்கொள்கின்றனர். இவை அனைத்தும் தமிழ் மக்களின் உரிமையை மறுக்கும் பேரினவாத யுத்தத்தின் நேரடி விளைவு. யுத்தத்தை நிறுத்தினால், தமிழ் மக்களின் ஜனநாயக உரிமைகளை வழங்கினால், இந்தப் பிரச்சனை எழாது.

 

தமிழ் மக்களின் முதலாம் எதிரியின், இனவொடுக்குமுறையின் விளைவுதான் இது. இங்கு புலிகள் என்ற பாசிச அமைப்பு தன் வர்க்க கண்ணோட்டத்தில் இதை அணுகுகின்றது. அதற்கு மக்கள் நலன் இருப்பதில்லை. 1980 களில் மாற்று இயக்க படுகொலைகள் முதல் இயக்க அழிப்புகள் வரை இந்த அடிப்படையில் தான் நடந்தேறியது. அன்றில் இருந்து அது இன்று வரை அரசியல் ரீதியாக மாறுபடவில்லை. வர்க்கத்தின் உறுதிப்பாடு இறுகி, ஒரு நிறுவனமாகியது. அதன் அடிப்படையில் அதன் குற்றங்கள், நுட்பமாகி மனித விரோத நிறுவனமாகியது.

 

இதற்கு மேல் இதை கட்டியமைக்க பேரினவாத அரசுடனான முரண்பாடு உதவியது.  பேரினவாதம் தான், புலியின் குற்றத்தை சரிசெய்யவும், சமூகத்தின் சொந்த எதிர்வினையை தடுக்கவும், ஒரு நெம்புகோலாக புலிக்கு உதவியது. இந்த வகையில் கூட, புலியின் இருப்புக்கு உதவியது அரசுதான். தமிழ் மக்களின் முதன்மை எதிரியைக் காட்டித்தான், புலி தமிழ் மக்களை ஒடுக்க முடிந்தது. பெருமளவிலான இளைஞர்களை, யுவதிகளையும், தம் பின்னால் விடுதலைப் போராட்டத்தின் பெயரில் வைத்திருக்கவும் திரட்டவும் முடிந்தது. ஊசலாடக் கூடிய குட்டிபூர்சுவா வர்க்கம், முதலாம் எதிரிக்கு எதிராக புலிகளுடன் நின்றது என்பது புலியை முதலாம் எதிரியாக கருதியல்ல.

 

புலியுடன் ஒரு நட்பு முரண்பாடாகவே அந்த மக்கள் வாழ்ந்தனர், விலகியும் சென்றனர். இதை உருவாக்கிக் கொடுத்தது பேரினவாத இனவொடுக்குமுறைதான். பேரினவாதம் இலங்கையில் நிலவும் வரை, அது முதன்மை முரண்பாடாக நீடிக்கும் வரை, அரசு தான் தமிழ் மக்களின் முதலாம் எதிரி. இந்த எல்லையில் தான் புலிப் பாசிசம் கொடிகட்டிப் பறக்கின்றது. புலிப்பாசிசம் எந்தளவுக்கு அநாகரிகமாகவும் கொடூரமாகவும் நடந்தாலும், அது பேரினவாத பாசிசத்தின் மேல் தான் செழிக்கின்றது.

 

புலியை இதில் இருந்து அகற்ற, முதலாம் எதிரியின் கடுமையான எதிரியாக பாட்டாளி வர்க்கம் இருக்கவேண்டும். அந்த அடிப்படையில் போராடுவதன் ஊடாகத்தான், புலிகள் எந்த பேரினவாதத்தைக் கொண்டு தம்மை தக்கவைக்கின்றனரோ, அதை அவர்களுக்கு இல்லாததாக்க முடியும். புலிகளிடம் நாம் விடுக்கும் வேண்டுகோள்கள், தவறுகளை திருத்தக் கோருவது எல்லாம், அரசியல் ரீதியாக அதில் தியாக உணர்வு கொண்ட தேசிய அணிகளை சிந்திக்க வைத்து வென்று எடுக்கும் அரசியல் அணுகுமுறைகள். மக்கள் நலனை முதன்மைப்படுத்திய அரசியல் மூலம், சமூகத்தை சிந்திக்க வைக்கும் அணுகுமுறை. இதுவல்லாது, இலங்கை அரசு புலியை அழிப்பதை நாம் ஆதரிக்கமுடியாது. ஆயுதத்தை கைவிட்டு சரணடையக் கோரவும் முடியாது. இது இன்றைய வடிவத்துக்கு மாறாக, புதிய வடிவத்தில் தமிழ் மக்களை மீண்டும் சுரண்டவும் ஒடுக்கவும் புலிகளை கோருவதாகும்.

 

இதை மேலும் புரிந்து கொள்ள எமக்கு வந்த பின்னோட்டம் ஒன்றை பார்ப்போம்.

 

'நீங்கள் தான் புலிகளை தமிழ்மக்களின் நண்பனாக பார்க்கிறீர்கள். எமக்கு இலங்கை அரசும்; புலிகளும் எதிரிகளே! இந்த எதிரிகள் தமக்குள் மோதிக்கொள்வது மகிழ்ச்சியே! இவர்கள் தமக்குள் முடிவில்லாத யுத்தத்தை நடத்திக்கொண்டிருப்பது தமிழ்மக்களுக்கு நல்லதல்ல. அது ஒரு முடிவுக்கு வரவேண்டும். அது புலிகள் வென்று தமிழீழம் அமைத்தால் என்ன? இலங்கை அரசு தனது கொடியை நிலைநிறுத்தினால் என்ன? மக்களின் குறைந்தளவு அழிவோடு இது சாத்தியப்படுமானால் விருப்பத்திற்குரியது. இதில் வெல்லக்கூடிய நிலையில் அரசு முன்னேறி முடிவு நிலையை எட்டியிருப்பது நல்ல அறிகுறி. இதை நாம் விரும்பும்போது அரசை வரவேற்கிறோம் என்று அர்த்தம் அல்ல. உங்கள் கருத்தில் தான் தெளிவில்லை. புலிகள் தமிழ்மக்களின் எதிரியல்ல என்றே தொடர்வீர்களானால் உங்கள் புலிகள் மீதான விமர்சனங்களெல்லாம் வீண். நீங்களும் புலியுள் கரைந்துவிடுங்கள். மக்களின் எதிரிகளை இனங்கண்டுகொள்ள வசதியாகிவிடும்"

என்கின்றது.

 

எமக்கு இலங்கை அரசும்; புலிகளும் எதிரிகளே! இந்த எதிரிகள் தமக்குள் மோதிக்கொள்வது மகிழ்ச்சியே!" என்கின்றது. இது இந்த யுத்தத்தை அரசு-புலி யுத்தமாக வரையறுக்கின்றது. இதை இனவழிப்பு யுத்தமாக பார்க்கவில்லை. இப்படி இந்த அரசியல் ஊடாக பேரினவாத யுத்தத்துக்கு உதவுகின்றனர். இலங்கை அரசையும் அதன் யுத்தத்தையும்  பேரினவாதமாக பார்க்காத அரசியல் கண்ணோட்டம், இந்த யுத்தத்தை வேறு ஒன்றாக திரிக்கின்றது. பேரினவாதம் நடத்திய நீண்ட தமிழ் விரோத யுத்தத்தின் தொடர்ச்சியில் தான், புலிகளுடனான யுத்தம் நடக்கின்றது. இதில் புலிகள் இடையில் வந்தவர்கள். இங்கு இதில் மகிழ்ச்சி கொள்வது என்பது, அடிப்படையில் இனவாதத்துக்கு துணை போவது தான். தமிழ்மக்கள் இதை எப்படி பார்க்கின்றனர், அணுகுகின்றனர், உணருகின்றனர். இதை வரட்டுத்தனமாக நீங்கள் கருதுவது போல் அல்ல. இதை இனவழிப்பு யுத்தமாகத்தான் அவர்கள் பார்க்கின்றனர். இன்று கொல்லப்படும் ஒவ்வொரு மக்களும், பேரினவாத அடிப்படையிலான ஒரு இனப்படுகொலையில் தான் மரணிக்கின்றனர். கடந்த முப்பது வருடத்தில் இப்படி ஒரு இலட்சம் மக்களை கொன்றவர்கள். இந்த யுத்தமும் அதற்கு உட்பட்டதுதான்.

 

இங்கு புலிகளுடன் நின்று போராடும் சக்திகள் யார்? அவர்கள் தரகு முதலாளிகளல்ல. குட்டிபூர்சுவா வர்க்கம். இது புலிகள் போராட்டத்தை தேசிய விடுதலைப் போராட்டமாக கருதி அதற்குள் போராடுகின்றனர். அரசை எதிரியாக பார்த்து போராடுகின்றனர். இது அவர்கள் தவறல்ல. அவர்கள் தியாகங்கள் அரசியல் ரீதியானவை, தனித்துவமானவை. எதிரிக்கு எதிராக அங்கு உள்ள அரசியல் அடிப்படை இதற்குள் தான் உள்ளது. இந்த இடத்தில் 'புலிகளை தமிழ்மக்களின் நண்பனாக பார்க்கிறீர்கள்" என்று எம்மை பார்த்து கூறுவது, எதிரியை மக்கள் எப்படி பார்க்கின்றனர் என்பதை கேலி செய்வதாகும். நாம் புலியை வர்க்க அடிப்படையில் அணுகுவதும், அரசு நடத்தும் யுத்தத்தை இனவழிப்பாக நாம் பார்ப்பதும், புலியை நண்பனாக பார்ப்பதாக உங்களுக்குபட்டால் அது உங்கள் அரசியலில் உள்ள கோளாறாகும்.

 

'புலிகள் தமிழ்மக்களின் எதிரியல்ல என்றே தொடர்வீர்களானால் உங்கள் புலிகள் மீதான விமர்சனங்களெல்லாம் வீண். நீங்களும் புலியுள் கரைந்துவிடுங்கள். மக்களின் எதிரிகளை இனங்கண்டுகொள்ள வசதியாகிவிடும்" நாங்கள் என்றும் தனியே புலியெதிர்ப்பு விமர்சனங்களை மட்டும் செய்தவர்களல்ல. இது புலிகளை 'தமிழ்மக்களின் எதிரியல்ல" என்று நாம் கூறியதாக வரையறுக்க போதுமானது என்றால், உங்கள் அரசியல் அளவுகோலை பத்திரப்படுத்தி வைத்துக் கொள்ளுங்கள். யார் புலியில் கரைவது, அரசுடன் கரைவது என்பதை வரலாறு சொல்லும். அங்கு அவற்றை இனம் கண்டுகொள்ள, முதலில் நீங்கள் சொந்தப் பெயரில் வாருங்கள்.

 

முடிவாக இன்று நடப்பது இனவழிப்பு யுத்தம். இதை மறுப்பவர்களையும், திரிப்பவர்களையும்  முதலில் நாம் இனம் காண்போம். நடப்பது இனவழிப்பு யுத்தமல்ல என்று கூறி, தமிழ் மக்களை கொல்ல உதவும் இந்த அரசியல் நிலையை புரிந்து கொள்வதுதான், எதிர்காலத் தலைமுறையின் உடனடியான அரசியல் கல்வியாகும்.

 

பி.இரயாகரன்
21.04.2009