இல்லை புலிக்கு எதிரானதாக கருதுகின்றவர்கள் தான், அரசியல் ரீதியாக திசை விலகுகின்றனர். புலியுடனான எமது போராட்டம், எதிரிக்கு எதிரான எமது போராட்டத்தை நடத்தும் அரசியல் உரிமைக்கான ஒன்றுதான். அது வர்க்க அடிப்படையில், அரசியல் ரீதியானது. நாம் எமது சொந்த வர்க்க தேசிய போராட்டத்தை நடத்தவிடாமல், புலிகள் எமக்கு தடைகளை ஏற்படுத்தினர், ஏற்படுத்துகின்றனர்.

 

இதற்குள் தான் எமது போராட்டமும், அரசியல் நிலைப்பாடுகளும் உள்ளடங்குகின்றது. இலங்கை மக்களின் பிரதான எதிரி அரசே ஒழிய, புலிகளல்ல. ஆனால் புலியல்லாத தரப்பில் எத்தனை பேர் இதை ஏற்றுக்கொள்கின்றனர்!? என்பது, இன்று அடிப்படையான அரசியல் கேள்வியாகியுள்ளது.

 

தமிழ்மக்களை விடுதலைப் புலிகள் கட்டிப்போட்டு நடத்திய அரசியலால், அதுவே தமிழ் மக்களின் பிரச்சனையாக பொதுவாகப் பார்க்கப்பட்டது. புலிகளுக்கு வெளியில் மாற்று அரசியல் தளம், அரசியல் ரீதியாக புலிகளால் முடக்கப்பட்ட நிலையில், அதற்கு எதிராக போராடியவர்கள் புலிகளை தமது முதன்மையான இலக்காக கொண்டது தவறல்ல. ஆனால் மக்கள் அப்படி இருக்கவில்லை என்பதை கருத்தில் எடுக்காத அரசியல் அணுகுமுறை, அரசியல் வரட்டுவாதத்துக்கு இயல்பாக கொண்டு வந்தது. அத்துடன் இதில் ஏற்படும் எந்த அரசியல் விலகல், புலியெதிர்ப்பாக மாறி அரசு ஆதரவு நிலையாக மாறுகின்றது.

 

நாம் முன்பு ஒரு கட்டுரையில் குறிப்பிட்டது இங்கு மீளவும் சுட்டிக்காட்டுவது அவசியம்.  புலிகள் தாம் அல்லாத அனைத்தையும் அழித்த போது கோரிய ஜனநாயகம், அரசுக்கு எதிராக போராடுவதற்கே. ஆனால் அது அரசுடன் சேர்ந்து புலியை ஒழிப்பதற்காக அல்ல. ஏன் இன்று அரசுடன் சேர்ந்து, ஆயுதத்தை கீழே வை, சரணடை என்று கோருவதற்காகவுமல்ல. நாங்கள் ஆயுதத்தை கீழே வை, சரணடை என்று கோருவதாக இருந்தால், அரசுக்கு எதிரான   போராட்டத்தை நாங்கள் கையேற்க வேண்டும். அதற்காக எம்மிடம் ஆயுதத்தை தரும்படி கோர வேண்டும். இதுவல்லாத ஆயுதத்தை கீழே வை, சரணடை என்று கோருவதற்கு எந்த தார்மீக அரசியல் அடிப்படையும் கிடையாது. அரசிடம் ஆயுதத்தைக் கொடுக்கக் கோருவது, சரணைடையக் கோருவது என்பது, அரசுடன் சேர்ந்து நிற்கும் துரோகிகளின் அதே அரசியல் நிலைக்கு சரிவதாகும்.

 

மக்கள் இதில் சிக்கி அழிவது முதன்மையான அரசியல் பிரச்சனையாக மாறி நிற்பது என்பது உண்மை. இதற்கு நாம் கோரக் கூடியது மிகத்தெளிவானது. மக்களை விடுவி, மக்களை கொல்வதை நிறுத்து, யுத்தத்தை நிறுத்து என்பதுதான். இதற்கு பதில் சரணடை, ஆயுதத்தை கீழே வை என்பது, பேரினவாத அரசின் கோரிக்கை. நீண்ட நெடும் காலமாக, இதைத்தான் அது கோருகின்றது. அதே கோரிக்கையுடன் நாம் இணைவது என்பது, எம் அரசியலை தொடர்ச்சியாக நிலைமைகள் மேல் கற்கத் தவறிவிட்டோம் என்பது தான் அர்த்தம்.

 

உண்மையில் விடுதலைப்புலிகள் கடந்த 20 வருடமாக இந்த விடையத்தை தன் பாசிச வழியில் தீர்மானித்ததன் விளைவு, இன்று நெருக்கடியில் முற்றி தன்சொந்த வர்க்கத்தை இன்று தனக்கு எதிராக நிறுத்தி வருகின்றது. தான் தன் நலன் என்ற அந்த வர்க்கத்தின் குணாம்சம், இயல்பாக தனிநபரை முன்னிலைப்படுத்தி செல்வது என்பது அதன் அரசியலின் நீட்சியாகும்.

 

இந்த வர்க்கம் அனைத்து ஒடுக்கப்பட்ட தமிழ் மக்களை தனக்குள் கட்டிப் போட்டது. அது செய்ததெல்லாம், தன் வர்க்கமல்லாத மற்றைய வர்க்கங்களை தனக்காகவும் மற்றைய வர்க்கத்துக்காவும் போராடவிடாது தடுத்ததுதான்.

 

இந்த நிலையில் நாம் போராடியது, ஒடுக்கப்பட்ட வர்க்கம் போராடும் தன் அரசியல் உரிமையை வென்று எடுக்கத்தான். அதாவது எதிரியை எதிர்த்து போராடும் உரிமைக்காக அல்லாமல், புலியை அழிக்கும் போராட்டத்தையல்ல. அரசுக்கு எதிராக போராடும் எமது அரசியல் உரிமைக்கான போராட்டம், புலி அழித்தால் மட்டும் அது சரியானதாக இருந்தது. மற்றும்படி புலியை அழிக்கும் மக்களல்லாத எந்த வடிவத்தையும் எதிர்த்துப் போராட வேண்டியிருந்தது. அதற்காக அது புலியை ஆதரித்தது என்று யாரும் கருதினால், அது புலியெதிர்ப்பு அரசியல் மட்டுமின்றி அரசு சார்பு நிலையுமாகும்.

 

இன்று மக்கள் புலியை அழிக்காமல், எமது எதிரியே புலியை அழிக்கின்றான். எனவே அதை ஆதரிக்கும் தடுமாற்றம், திசைவிலகல் அனைத்தும் முரண் அரசியலாகின்றது. இந்த நிலையில் எமது போராட்டம் எதிரிக்கு எதிராக, புலியின் அழிவின் வெற்றிடத்தை நிரப்பும் வண்ணம் கூர்மையாகவும் தனித்துவமாகவும் நடத்தப்பட வேண்டும். இதற்கு மாறாக சரணடைவை கோருவது, ஆயுதத்தைக் கீழே வை என்பது, அரசுக்கு எதிரான போராட்டத்தை நடத்துவதற்கு பதில் அரசுக்கு சார்பான அரசியலாக மாறிவிடுகின்றது.

 

பி.இரயாகரன்
20.04.2009