இலங்கையில் இன்று தமிழினம் எதையும் பேச முடியாது, எழுத முடியாது, எந்த உரிமையையும் கோரமுடியாது. புல்லுருவிகளும், எட்டப்பர்களும், பதவி வேட்டைக்காரர்களுக்கு மட்டும், பேசும் உரிமையும், கருத்துச் சொல்லும் உரிமையும் உண்டு.
இதுவே இன்று தமிழரின் உரிமையாகிவிட்டது. முன்பு புலிகளுக்கு மட்டுமே, புலிப் புராணம் பாடும் உரிமை இருந்தது. இன்று பேரினவாதப் புரணம் மட்டும் தான் பாடமுடியும். தமிழ் மக்களின் கதி இது. இன்று இலங்கை முழுக்க பேரினவாத பாசிசத்தின் கீழ், தமிழினம் அடங்கியொடுங்கி இருக்கும் வண்ணம், பாசிசம் மேலெழுந்து நிற்கின்றது. யாரும் இங்கு மக்களின் உரிமைபற்றி பேசமுடியாது.
ஆனால் இந்த விடையம், அரசியல் விழிப்புணர்வு இன்றி காணப்படுகின்றது. தமிழ் ஊடகவியல் புலியாக இருப்பதாலும், புலிப் பாசிசத்தை பெரும்பான்மை நியாயப்படுத்துவதாலும், புலிகள் மீதான விமர்சனமும் கவனமும் குவிவது இயற்கை. இதை முறியடிக்கும் கருத்து மையப்படுகின்றது. மறுதளத்தில் அரசுடன் நிற்கும் புலியெதிர்ப்பு கும்பலின் பிரச்சாரம், அரசின் பாசிசத்தை பாதுகாக்கும் வண்ணம் விரிவாக நிகழ்ந்து வருகின்றது. இதை முறியடிக்கும் வண்ணம், இதை அம்பலம் செய்வது, இன்று அவசரமான அவசியமான அரசியல் பணியாக எம்முன்னுள்ளது.
இந்த நிலையில் தான் இலங்கையில் இனவழிப்பும், இனச்சுத்திகரிப்பும், இனக் களையெடுப்பும் நடப்பது, அரசியல் ரீதியாக முதன்மை பெற்றுவிடவில்லை. அவை திரிக்கப்பட்டு இருட்டடிப்பு செய்யப்படுகின்றது. புலிகளின் பாசிச அரசியல் தான், இதை இனம் காணவிடாது தடுக்;கின்றது. புலிகள் தம்மை பாதுகாக்க நடத்தும் பலி அரசியலும், புலியை பாதுகாக்க நடத்தும் குறுகிய மக்கள் விராதப் போராட்டங்களும், இன்று ஒரு இனத்தின் மேலான பேரினவாத அழித்தொழிப்பு திரிக்கப்பட்டு அது முக்கியமற்ற ஒன்றாக காட்டப்பட்டு, அவை நியாயப்படுத்தப்படுகின்றது. உலகமே இந்த இனவழிப்பின் பின் நிற்கும் வண்ணம், புலிகளின் பாசிசம் தோகை விரித்தாடுகின்றது.
ஏதோ இனவழிப்புக்கும், இனச் சுத்திகரிப்புக்கும், இனக்களையெடுப்புக்கும் காரணம் புலிகள் தான், என்று காட்டுகின்ற விபச்சார அரசியல் மேலோங்கி வருகின்றது. நடைமுறை சார்ந்த விளைவுகளும், உண்மைகளும், தமிழ் மக்களை அரசு தான் கொன்று போடுகின்றது என்பதைக் காட்டுகின்றது. இப்படியிருக்க அரசின் குற்றத்தை நியாயமானதாக காட்டுகின்றதும், மனிதத்தன்மை கொண்ட ஒன்றாக காட்டுகின்ற அரசியலை, புலியின் பெயரில் அனைவரும் அரங்கேற்றுகின்றனர்.
இன்று தமிழ் மக்களை கொல்வது என்பது பணயக்கைதிகளை மீட்கும் அரசின் ஒரு நடவடிக்கையாகவும், இது தவிர்க்க முடியாத செயலாகவும் கூட காட்டப்படுகின்றது. அரசு குற்றவாளியல்ல, புலி மட்டுமே தான் என்று காட்டுகின்ற மனிதவிரோத அரசியல் அரங்கேறுகின்றது. புலிகளின் குற்றங்கள் ஒருபுறம், அதை மிஞ்சியதே அரசின் குற்றங்கள். புலிகள் குற்றங்கள் தெரிவு செய்யப்பட்ட நபர்கள் மீதானது. அரசின் குற்றங்களோ தமிழினத்தின் மேலானது. புலிகளின் மக்கள் விரோத அரசியல் ஒரு பகுதி மக்கள் மேலானது. அரசின் மக்கள் விரோத அரசியல் மொத்த தமிழினத்தின் மேலானது.
கடந்த 30 வருடத்தில் ஒரு இலட்சம் தமிழ் மக்களை கொன்றது இந்த அரசு தான். 1970-1971 இல் 50000 க்கு மேற்பட்ட சிங்களை மக்களை கொன்றது இந்த அரசு தான். 1989-1990 இல் குறைந்தது 30000 சிங்கள மக்களை கொன்று குவித்தது இந்த அரசு தான்.
கொலைகார அரசு இயந்திரம், தன் சொந்த மக்களையே தொடர்ச்சியாக கொன்று வந்துள்ளது. உலகிலேயே இவ்வளவு குறுகிய காலத்தில், மூன்று வெவ்வேறு காலகட்டத்தில் கொலைகளை செய்து குவித்த அரசு இது. இதற்காக யாரும் தண்டிக்கப்படவில்லை. இந்தளவுக்கு மோசமாக தன் சொந்த மக்களை கொன்று குவித்த அரசின் பின், நியாயமுள்ளதாக பீற்றுகின்ற அரசியல் வக்கிரங்கள். இன்று புலிகள் என்ற பாசிச அமைப்பின் நடத்தைகளைக் காட்டிக்கொண்டு, அரசு செய்த, செய்கின்ற படுகொலைகளை நியாயப்படுத்துகின்ற அரசியலை இன்று இவர்கள் அரங்கேற்றுகின்றனர்.
நீங்கள் கூறுவது போல், புலிகள் மக்களை தம் மண் அரணாக பயன்படுத்துவதாகவே வைத்துக் கொள்வோhம். அதைச் செய்ய அரசு விரும்பவில்லை என்றால், எப்படி இவ்வளவு மக்கள் இறந்தார்கள். மக்கள் விரோதப் புலிகள் மக்களை கொல்ல விரும்புகின்றனர் என்றால், எப்படி அரசு மக்களைக் கொல்ல முடியும்!? அதை எப்படி நீங்கள் நியாயப்படுத்த முடியும்!? எங்கே உங்கள் கண்டனங்களும், அரசுக்கு எதிரான போராட்டங்களும்!?
புதுகுடியிருப்பு வீழ்ந்து புலிகள் மக்கள் பாதுகாப்பாக தங்கியிருந்த பிரதேசத்தினுள் புக முன், எப்படி மக்களை புலிகள் மண் அரணாக நிறுத்தினர்!? கொல்லப்பட்ட மக்கள் புதுக்குடியிருப்பிலா கொல்லப்பட்டனர்!? சண்டை நடந்த யுத்த முனையிலா கொல்லப்பட்டனர்!? எந்த நாய்க்கு அப்படித்தான் என்று, சொல்ல துணிவுண்டு? ஆனால் திரித்துப் புரட்டியும், குழைத்தும் இதைத்தான் அரச நாய்கள் எல்லாம் சொல்லுகின்றன.
மக்கள் அரசு அறிவித்த பாதுகாப்பு வலையத்தில் இருந்தனர். அங்கு தான் மக்கள் கொல்லப்பட்டனர். ஆனால் சண்டை நடந்ததோ, அதற்கு வெளியில். இப்படி இருக்க, அப்பாவி மக்கள் கொல்லப்பட்டனர். இது எப்படி சாத்தியமானது? அரசு புலியின் பெயரால் இங்கு ஒரு திட்டமிட்ட இனவழிப்பை செய்கின்றது. ஆனால் ஏதோ அதை புலிகள் செய்வது போல் அனைவரும் காட்டமுனைகின்றனர். இன்றும் சண்டை பாதுகாப்பு பிரதேச எல்லையோரங்களில் தான் நடக்கின்றது. ஆனால் மக்கள் நடுவில் கொல்லப்படுகின்றனர். எப்படி சாத்தியம்?
புலிகள் தாம் தப்பிப் பிழைக்க மக்களை அரணாக வைத்துள்ளனர் என்ற உண்மை என்பது, இன்னும் படுகொலையாக இந்த எல்லைக்குள் அரங்கேறவில்லை. அரசும், அரச நாய்களும் திரித்து சொல்வது போல், யுத்தம் நடந்த பிரதேசத்தில் வைத்து மக்கள் கொல்லப்படவில்லை. மக்கள் புதுக்குடியிருப்பில் கொல்லப்படவில்லை. மக்களை புலிகள் மண் கேடயமாக பயன்படுத்தியதை உறுதி செய்யும் வண்ணம், மக்களின் பிணத்தை யுத்த முனையில் இன்னமும் அரசு எடுக்கவில்லை. புலிகள் தான் இன்னமும் சண்டை செய்கின்றனர். அப்படியிருக்க மக்கள் எங்கே?, எப்படி?, ஏன்? கொல்லப்படுகின்றனர். காயமடைகின்றனர்.
கொல்லப்பட்ட மக்கள் பற்றி சர்வதேச அரசுகள் முதல் அரச நாய்கள் வரை சொல்வது பொய். புலியின் பாசிசத்தையும், அதன் தவறான போராட்டங்களையும் அடிப்படையாக கொண்டு, இவை இட்டுக் கட்டப்படுகின்றது. தமிழ் மக்கள் யுத்தம் நடைபெறாத, யுத்த சூனிய பிரதேசத்தில் கொல்லப்படுகின்றனர் என்பதே உண்மை.
இந்த வகையில் இந்த இனவழிப்பு என்பது அரசின் திட்டமிட்ட ஒரு செயல். தமிழ் மக்களை கொல்ல வேண்டும் என்பது, பேரினவாத அரசின் மையமான அரசியல் உத்தி. கடந்த காலத்தில் இதையே பேரினவாதம் தொடர்ச்சியாக செய்துவந்தது. அவர்கள் இன்று மட்டுமல்ல, நீண்ட நெடுநாட்களாக தமிழ் மக்களை கொன்று வருகின்றனர். தமிழ் மக்களின் உரிமையை கடந்த 60 வருடமாக வழங்க மறுத்து, அதையும் ஒடுக்கி வருகின்றது. இதை செய்ய, இதை நியாயப்படுத்த காலத்துக்கு காலம் அது ஒரு காரணத்தைக் கூறியது, கூறிவருகின்றது.
இன்று புலியைக் காட்டி அதைச் செய்கின்றது. புலிகளின் பாசிசமும் அதன் கையாலாகாத்தனமும் அம்பலமாக, அதை காட்டி தமிழினத்தை இனவழிப்புக்கு உள்ளாக்குகின்றனர். கடந்த 60 ஆண்டுகளாக தொடரும் பேரினவாத நிகழ்ச்சி நிரலில் ஒரு அங்கம் தான், இந்த இனவழிப்பு.
மக்கள் குடியிருப்பு மேல் குண்டு போட்டு அப்பாவி மக்களை அவர்களின் சொந்த வாழ்விடங்களிலிருந்து துரத்தியவர்கள், இந்தப் பேரினவாத அரசு தான். இப்படி துரத்தியவர்களை ஒரு பாதுகாப்பான சூனியப் பிரதேசத்திற்கு இட்டுச் சென்றவர்கள், அங்கு வைத்து அவர்களை படுகொலை செய்கின்றனர். இதனால் தப்பிப் பிழைக்க வழியின்றி சிதறியோடும் மக்கள், புலிப் பாசிசத்தின் பிடியைத் தாண்டி, உயிருடன் ஓடி வருகின்றனர். இப்படி தப்பிப் பிழைத்தவர்களை, அவர்களின் சொந்த வாழ்விடங்களுக்கு செல்ல அனுமதிக்கவில்லை.
மாறாக இனச் சுத்திகரிப்புக்காக திறந்தவெளி சிறைக் கூடங்களில் தள்ளுகின்றனர். அங்கு தமிழனாக தம்மை வெளிப்படுத்த முடியாத வண்ணம், ஒரு இனச் சுத்திகரிப்புக்கு உள்ளாகி நலமடிக்கப்படுகின்றனர்.
இங்கு நடக்கும் இனக் களையெடுப்புக்கூடாக, ஒரு இனம் வடிகட்டப்படுகின்றது. எந்த தமிழனும் சுயாதீனமாக இனி இந்த மண்ணில் தன் உரிமைக்காக பேசக் கூடாது என்பது, இன்று பேரினவாதம் கடைப்பிடிக்கும் பொதுவான பாசிச விதி. இது வெறுமனே அகதி முகாமில் மட்டுமல்ல, மொத்த இலங்கையிலும் நடைமுறையில் உள்ளது. தமிழர்களை பதிவுக்குள்ளாக்கும் பாசிச இராணுவ இயந்திரம், தனி மனிதர்களைக் கூட நுட்பமாக கண்காணித்து இனக் களையெடுப்பை நடத்துகின்றது.
புலிகளின் பாசிசமும், அதன் மொத்த தவறுகளும், தமிழினத்தை இன்று பேரினவாதத்தின் இரும்புப் பிடிக்குள் கொண்டு வந்து சேர்த்துள்ளது. எந்த தனிமனிதனும் கூட, தன் சுதந்திரமான கருத்தை, பேச்சுரிமையை இதற்கு எதிராக பயன்படுத்த முடியாத வகையில் பாசிசம், இன்று இலங்கையில் அரங்கேறி நிற்கின்றது. புலியின் அழிவு ஊடாக இதைத்தான் இன்று மக்கள் பெற்றுள்ளனர். இன்று இனவழிப்பு, இனச் சுத்திகரிப்பு, இனக் களையெடுப்பு என்பது தமிழனின் உரிமைக்கு எதிரான பேரினவாத பாசிசத்தின் நெம்புகோலாக மாறி உள்ளது.
பி.இராயகரன்
20.04.2009