அரசு முதல் ஏகாதிபத்தியம் வரை இன்று எதை புலிகளிடம் கோருகின்றனரோ, அதே அரசியல் கோரிக்கையுடன் கூலிக் குழுக்களும், 'ஜனநாயகவாதிகளும்", 'நடுநிலைவாதிகளும்",  'இடதுசாரிகளும்" அனைவரும் இணைகின்றனர். புலியிடம் சரணடை, ஆயுதத்தை கீழே வைக்கி என்கின்றனர். இதற்கு மாற்றாக, இவர்கள் ஏதாவது கோரிக்கையை வைக்கின்றார்களா!?

 

இல்லை, இங்கு நாங்கள் மட்டும் இதற்கு மாற்றாக வைக்கின்றோம். கடந்தகாலத்தைப் போல் இன்றும், இதில் தனித்து ஒரு போராட்டத்தை தனித்துவமாக நடத்துகின்றோம்.  

    

புலிகளின் இன்றைய சுதந்திரமான இருப்புக்கான நாட்கள் எண்ணப்படுகின்றது. அவர்கள் முற்றாக போராடி அழிவதா, துரோகம் செய்து பிழைப்பதா என்பதோடு, ஏகாதிபத்திய தலையீடுகளுடன் முடிவுக்கு வரவுள்ளது.

 

இந்த அரசியல் நெருக்கடியில் புலியை விமர்சித்துக் கொண்டிருந்தவர்கள் அனைவரும், இன்று ஓரே அரசியல் முடிவுக்கு வருகின்றனர். சரணடை என்கின்றனர், ஆயுதத்தைக் கீழே போடு என்கின்றனர்.

 

இதை அன்று கூறத் தொடங்கியவர்கள் முதல் இன்று சொல்பவர்கள் வரை இறுதியல் ஒரே முடிவுக்கு வருகின்றனர். இந்த வகையில்

 

1. அன்று புலி இயக்கங்களை அழித்த போது, இந்திய-இலங்கை அரசுடன் சேர்ந்து தமிழ் மக்களுக்கு துரோகம் செய்த துரோகக் குழுக்களும் இதைச் சொன்னார்கள். 

 

2. 2001 இல் மீண்டும் அரசும்-புலியும் சமாதானம், அமைதி என்று தொடங்கிய போது, ஜனநாயகம் பேசியவர்கள் புலியெதிர்ப்பு நிலையெடுத்து அரசுடன் சேர்ந்து நின்று இதைச் சொன்னார்கள்.

 

3. 2009 இல் புலி சேடமிழுத்து தன் முடிவை நோக்கி நகர்கின்ற இன்றைய நிலையில் 'நடுநிலை", "இடதுசாரியம்" அரசியல் பேசியவர்கள், பேரினவாத பாசிச அரசின் அரசியல் நிலைக்குள் நின்று இதைக் கூறுகின்றனர். 

 

இப்படி புலியெதிர்ப்பின் அடிப்படையில், சரணடைவையும் ஆயுதக் களைவையும் முன்வைத்து அரசு சார்பு நிலையை எடுக்கின்றனர்.  

   

இதற்காக இவர்கள் வைக்கும் காரணங்கள் காலத்துக்கு காலம் வேறபட்ட போதும், அரசுக்கு சார்பான முடிவுகளை எடுக்கின்றனர். அதை நியாயப்படுத்த, புலிப் பாசிசத்தின் பின் ஓளித்து நின்று காரணங்களை மூடிமறைத்து வைக்கின்றனர். 

 

'ஊடகவியலாளன்" அரசியல் பேசமாட்டான் என்ற போர்வையில் ஓளித்து நின்றவர்கள் எல்லோரும், இன்று அரசின் பின் தெளிவாக நிற்கின்றனர். இதை நியாயப்படுத்த புலியை துணைக்கு வைத்துக் கொண்டு கூறுவதைப் பாருங்கள். 'இவ்வாறு இருக்கையில் புலிகளின் கையில் இருக்கும் ஆயுதம் தமிழ் மக்களுக்கோ தமிழ் மக்களின் போராட்டத்திற்கோ உதவப்போவதில்லை என்பது உறுதியாகிவிட்டது. இன்றைய நிலையில் அந்த ஆயுதங்களைக் கைவிடுவது பல்லாயிரக் கணக்கான அப்பாவி மக்களின் உயிரைக் காப்பாற்றும். நூற்றுக் கணக்காண போராளிகளை வீணாகப் பலிகொடுப்பதைத் தவிர்த்துக் கொள்ளலாம்." இப்படி வைப்பது முதலில் அரசியல். இது அரசியலற்ற 'ஊடகவியல்" அல்ல. இது மற்றவர் காதுக்கு பூச்சுற்றத்தான் உதவும். இந்த அடிப்படையை வைத்துத் தான், பல 'இடதுசாரி" வேடம் போட்டவர்கள் முதல் பலரும்; சரணடை என்கின்றனர், ஆயுதத்தைக் கீழே போடு என்கின்றனர்.

 

மீண்டும் இது புலியெதிர்ப்பு அரசியலின், புதிய அத்தியாயம். அரசுக்கு சார்பாக முடிவு எடுக்கின்ற, புதுக் கும்பல். இது தன் அரசு சார்பு நிலையை நியாயப்படுத்த உடனே 'அப்பாவி மக்களின் உயிரைக் காப்பாற்றும். நூற்றுக்கணக்கான போராளிகளை வீணாகப் பலிகொடுப்பதைத் தவிர்த்துக் கொள்ளலாம்." என்கின்றது. இங்கு இந்த நிலையை உருவாக்கிக் கொல்லும் பேரினவாத பாசிச அரசுக்கு எதிராக போராடுவதற்கு பதில், புலிக்கு எதிராகவும் அரசுக்கு சார்பாகவும் நிற்கின்றனர். இன்று அப்பாவி மக்களையும், நூற்றுக் கணக்கான போராளிகளையும் கொல்வது அரசு. அரச பாசிசம் தன் பேரினவாத வன்முறை மூலம் இனவழிப்பை நடத்துகின்றது. இப்படியிருக்க, இந்தக் கொலைகார அரசுக்கு சார்பாக சரணடை என்கின்றனர், ஆயுதத்தை கீழே போடு என்கின்றனர்.
 
இதற்கு மாறாக மக்களைச் சார்ந்து நிற்க நாம் கோரினோம்.  இந்த மனித அவலம் மீது, நாம் தெளிவாக சில அரசியல் கருதுகோள்களை முன்வைத்து வந்தோம்.

 

1. அரசிடம் யுத்தத்தை நிறுத்து என்றோம்!

 

2. புலியிடம் மக்களையும், போராட விரும்பாதவர்களையும் விடுவி என்றோம்.!

 

3. சர்வதேச ரீதியாக போராடிய புலியிடமும், புலியிடமும் பொதுமக்களை சர்வதேச சமூகம் பொறுப்பெடுக்கும் வண்ணம் கோரிக்கை முன் வை என்றோம்! அதாவது சர்வதேச சமூகத்தை பொறுப்பெடுக்கக் கோரினோம்!

 

4. புலிகளின் பலி அரசியலை கைவிட்டு, முற்றுகையை உடைத்து வெளியேறு என்றோம்.!

 

5. புலியிடம் கடந்தகால நிகழ்கால தவறுகளுக்கு மக்களிடம் மன்னிப்புக்கோர் என்றோம்!

 

6. சரணடைவுக்கு பதில் போராடி மடி என்றோம்!

 

7. இது ஒரு இனவழிப்பு என்றோம்!

 

8. இலங்கை அரசு புலியை மிஞ்சிய ஒரு பாசிச அரசு என்றோம்!

 

இப்படி மக்களைச் சார்ந்து நிற்கும் வண்ணம், எமது கோரிக்கைகள் தெளிவானது, துல்லியமானது.

 

தமிழ் மக்களின் அரசியல் நலனை, அவர்கள் மேலான மனித அவலத்துக்குள் மூடிமறைத்து மறுப்பதற்கு எதிராக இந்த கோசங்கள் வழிகாட்டியது. அதே நேரம் இந்த மனித அவலத்துக்கு எதிராகவும், எந்த அரசியல் பிசகுமின்றி  வைக்கப்பட்ட அரசியல் கோசங்கள் இவை. இந்தளவுக்கு தெளிவாக, யாரும் இதை தாண்டி எதையும் அரசியல் ரீதியாக  முன்வைத்தது பற்றி எமக்குத் தெரியாது. இந்த விடையத்தைச் சுற்றியே, நாள் ஒன்றுக்கு குறைந்தது ஒரு கட்டுரை தன்னும் இதைப்பற்றி விரிவாக ஆராய்ந்துள்ளது.

 

இப்படியிருக்க அரசு சார்பு நிலையெடுப்பவர்கள், மனித அவலத்தைக் காட்டி, புலியிடம் ஆயுதத்தை கீழே வை, சரணடை என்கின்றனர். திடீரென இன்று புதிதாக சிலர் இதைக் கோருகின்றனர். வேடிக்கை என்னவென்றால், 'நடுநிலைவாதிகளும்",  'இடதுசாரிகளும்" இன்று அரசும், ஏகாதிபத்தியமும் கோருவதை, அப்படியே மீளவைக்கின்றனர். புலியெதிர்ப்பும் இதைத்தான் கோருகின்றது.

 

புலிகள் தம்மைப் பாதுகாக்க உருவாக்கிய பலி அரசியலை, அவர்களுக்கு எதிராக இந்த அரசு சார்பு புதிய கும்பல் இன்று கையாளுகின்றனர். இதில் உள்ள சூக்குமம் என்னவென்றால், யார் பலியை நடத்துகின்றனரோ, அதற்கு சார்பாக அதனுடன் சேர்ந்து நின்று இதை முன்வைக்கின்றனர். இந்த அரசு சார்பு நிலையை விமர்சிக்கும் போது, புலி முத்திரை குத்தியும், மனித அவலம் பற்றிய அக்கறையற்ற புலிப் பாசிச அரசியல் நமது என்கின்றனர்.

 

தமிழ் மக்களை கொல்பவன் அரசு. கொல்லுவிப்பவன் தான் புலி. ஆனால் கொல்லுவிப்பவனை நோக்கி கூச்சல் போட்டு சரணடையக் கோரும் 'நடுநிலை மற்றும் இடதுசாரிய" வேடதாரிகள், கொல்பவனுக்கு அடங்கி இருப்பதன் மூலம் தான் 'அப்பாவி மக்களின் உயிரைக் காப்பாற்றும். நூற்றுக் கணக்காண போராளிகளை வீணாகப் பலிகொடுப்பதைத் தவிர்த்துக் கொள்ளலாம்." என்று விளக்கம் தருகின்றனர். தம் அரசு சார்பு நிலையை தக்கவைக்க 'புரட்சி" பற்றியும், 'எதிர்கால"த்தில் மக்கள் அதற்காக போராடுவார்கள் என்று கயிறு திரிக்க முனைகின்றனர். நிகழ்காலத்தில் பேரினவாத பாசிச அரசின் கோரிக்கைக்கு உட்பட்ட துரோக அரசியலை முன்தள்ளியபடி, எதிர்காலத்தில் மக்கள் நலன் அரசியலை தாம் கொண்டுள்ளதாக காட்ட முனைகின்றனர்.    

 

தமிழ் மக்களை கொல்பவனுக்கு அடங்கக் கோரும் தமது சொந்த துரோக அரசியல் நிலையை தக்கவைக்க, அவன் உருவாக்கியுள்ள மக்களின் அவலத்தைக் காட்டுகின்றனர். புலிகளின் பாசிசம் தமிழ் மக்கள் மேல் அக்கறையற்ற மனிதவிரோதத் தன்மையை சாதகமாகக் கொண்டு, கொலைகார அரசின் பாசிசத்தை 'நெகிழ்ச்சியான மென்மை" தமிழ் மக்களின் பாதுகாப்புக்குரிய ஒன்றாக இட்டுக்கட்ட முனைகின்றனர்.

 

அரசிடம் சரணடை, ஆயுதத்தை கீழே போடு என்ற கோசத்துக்கு பதிலாக, மக்கள் நலன் சார்ந்த வேறு கோரிக்கைகள் இன்று இல்லையா!? யுத்தத்தை நிறுத்து, மக்களை விடுவி, மக்களை சர்வதேச சமூகம் பொறுப்பெடு என்ற கோசம் எவையும், மக்கள் சார்ந்தவையாக இவர்கள் முன் இருப்பதில்லை. இலங்கை முதல் ஏகாதிபத்தியம் வரை புலிக்கு எதிராக எந்தக் கோசத்தை முன்னிறுத்துகின்றதோ, அதுதான் மக்கள் நலன் சார்ந்த கோரிக்கையாக இவர்கள் முன்னுள்ளது. இதுவே இவர்களின் அரசியலாக இன்று மாறி நிற்கின்றது.      

        

பி.இரயாகரன்
18.04.2009