பேன் தொல்லைக்கு நல்ல சிகிச்சை

'பறபற'வென தலையைச் சொறிந்து கொண்டு வந்தாள் அந்தப் 'குட்டித் தேவதை'. வயது பத்து இருக்கும்.
கூட்டிக் கொண்டு வந்த தாயின் முகத்தில் கோபமும் எரிச்சலும் பொரிந்தன.
'இவளின்ரை தலையிலை பேன் மண்டிப் போய்க் கிடக்கு. மருந்து, ஷாம்பு என்று எதுக்கும் ஒழியுதில்லை' எனச் சினந்தாள்.
உண்மைதான் பள்ளி செல்லும் குழந்தைகளை அதிகமாகப் பாதிக்கும் ஒரு பிரச்சனைதான் பேன் தொல்லை. அமெரிக்காவில் மட்டும் வருடாந்தம் 6 முதல் 12 மில்லியன் குழந்தைகள் பேன் தொல்லையால் பாதிப்புக்கு உள்ளாகிறார்களாம்.
இதனை ஒரு நோய் என்று கூற முடியாவிட்டாலும் கூட பிள்ளைகளை உடல் ரீதியாகவும், மனரீதியாகவும் துன்பத்தில் ஆழ்த்துகிறது. பெற்றோர்களும் ஆயாசத்திற்கு ஆளாகிறார்கள். மருந்துகளுக்குப் பேன்கள் பழக்கப்பட்டு விடுவதாலும், பாடசாலைச் சூழலில் மீண்டும் மீண்டும் தொற்றுவதாலும் அது என்றுமே தீராத பிரச்சனையாகத்தான் இருக்கிறது.
லின்டேன், மலத்தியோன் போன்ற வழமையான மருந்துகளை அந்த அம்மாவும் உபயோகித்துக் களைத்துவிட்டாள். இவை இரசாயன மருந்துகள் என்பதால் பக்க விளைவுகள் ஏற்படுமே என்ற எண்ணம் அவளை ஒத்த பெற்றோர்களை மேலும் பயமுறுத்துகிறது.
முன்பு நீங்கள் எல்லோரும் பாவித்திருக்கக் கூடிய பேன் சீப்பு பக்கவிளைவு அற்றது மாத்திரமல்ல பேன்களையும் ஈர்களையும் ஒழிப்பதில் வல்லதும் கூட. ஆயினும் ஒவ்வொரு தடவையும் சில மணி நேரமாகப் பல நாட்களுக்குத் தொடர்ந்து நேரம் இதற்கென ஒதுக்க வேண்டும். இன்றைய அவசர சூழலில் அவ்வாறு மினக் கூடியளவு நேரமோ பொறுமையோ பெற்றோர்களுக்குக் கிடையாது.
இப்பொழுது ஒரு நல்ல செய்தி! சுடுகாற்றை அழுத்தத்துடன் பிரயோகிப்பதன் மூலம் பேன்களையும், ஈர்களையும் கொல்ல முடியுமாம். இது ஒரு மருத்துவ ஆய்வின் முடிவு. சுடுகாற்றை அழுத்தத்துடன் பிரயோகிப்பதற்கு முடி உலர்த்திகளைப் (Hair dryer) பயன்படுத்தினார்கள்.
இதற்கென விஷேடமாக வடிவமைக்கப்பட்ட (Louse buster) பேன் ஒழிப்பு உலர்த்தி, மற்றும் வழமையாக உபயோகப்படுத்தும் கைகளில் பிடிக்கும் (hand held blow dryer) உலர்த்தி, பொனட் (Bonnet) வகை உலர்த்தி, பொது இடங்களில் சுவரில் நிறுவப்படும் உலர்த்தி ஆகியவற்றை ஆய்வின் போது பயன்படுத்தினார்கள். உட்டா பல்களைக் கழகத்தின் (University of Utah) உயிரியல் துறையில் செய்யப்பட்ட ஆய்வு இது.
பேன் ஒழிப்புச் சிகிச்சைக்காக கிட்டத்தட்ட 30 நிமிடங்களுக்கு சுடுகாற்றை அழுத்தத்துடன் பிரயோகிக்கப்பட்டது.
ஒவ்வொருவரின் தலை முடியையும் பத்து முதல் இருபது பகுதிகளாளகப் பிரித்து ஒவ்வொரு பகுதிக்கும் அந்த முப்பது நிமிடங்களைச் சமமாகப் பிரித்து சிகிச்சை அளித்தார்கள். எந்த வித உலர்த்தியையும் பயன்படுத்திய போதும் 90 முதல் 98 சதவிகிதமான ஈர்கள் செத்தொழிந்தன. அதாவது ஈர்கள் ஒரு முறை சிகிச்சையிலேயே கிட்டத்தட்ட முற்றாக ஒழிகின்றன. இது மிகவும் குறிப்பிடத்தக்கது. ஏனெனில் இதுவரை உபயோகிக்கப்பட்டு வந்த எந்த மருந்துமே ஈர்களை ஒழிப்பதில் இத்தகைய சிறப்பான பலனைக் கொடுத்ததில்லை.
பேன்களைப் பொறுத்த வரையில் லவுஸ் பஸ்டர் உலர்த்தி 90 சதவிகிதமானவற்றைக் கொன்றது. ஏனைய உலர்த்திகள் மாறுபட்ட அளவுகளில் குறைவாகவே பேன்களைக் ஒழித்தன.
பொனட் (Bonnet) வகை உலர்த்தி 10 சதவிகிதமான பேன்களை மட்டுமே ஒழித்தன. கைகளில் பிடிக்கும் (hand held blow dryer) உலர்த்திகள் 22 முதல் 30 சதவிகிதமான பேன்களை அழித்தன. சுவரில் நிறுவப்படும் உலர்த்திகள் அதிலிருந்து வரும் அதிகளவு காற்றுக் காரணமாக 62 சதவிகிதமான பேன்களை ஒழித்தன. லவுஸ் பஸ்டரிலும் இரண்டு வகைகள் உபயோகிக்கப்பட்டன.
தலைமுடியைப் பிரிப்பதற்கான அகண்ட பல்லுள்ள சீப்புப் போன்ற பகுதியை உள்ளடக்கிய சிறப்பு லவுஸ் பஸ்டர் 80 சதவிகிதமான பேன்களையும், அது இல்லாத லவுஸ் பஸ்டர் 76 சதவிகிதமான பேன்களையும் ஒழித்தன. லவுஸ் பஸ்டரில் உள்ள பல்லுள்ள சீப்புப் போன்ற பகுதி தலைமுடியின் அடிப்பாகம் வரை காற்றுப் போக வசதியளித்து கூடியளவு பலனைக் கொடுக்கிறது.
மேற் கூறிய விதமாக 80 சதவிகிதமான பேன்கள் ஒழிந்த போது மிகுதிப் பேன்கள் மலடாவதாலோ அன்றி அழுத்தத்தாலோ இனப்பெருக்கம் செய்ய முடியாமல் முற்றாக அழிந்தன. ஆய்வின் போது ஒரு தடவை சிகிச்சை அளித்தபோதே பேன்கள் அழிந்தன. ஆயினும் பூச்சு மருந்துகளையும், ஷப்புகளையும் சிகிச்சை முறையாகப பயன்படுத்தும் போது 1முதல் 2 வார இடைவெளியில் மீண்டும் ஒரு முறை திரும்பவும் செய்ய வேண்டும்.
இரசாயன மருந்துகள் இல்லாததும், ஈர்கள் பெருமளவு ஒழிவதும், ஒரு முறை மட்டுமே சிகிச்சை அளித்தாலும் குணமடைவதும், மருந்துகளுக்குப் பேன்கள் பழக்கப்பட்டு சிகிச்சை பலனளிக்காது விடுவது போலல்லாது எப்பொழும் பலனளிப்பதும் இச்சிகிச்சை முறையின் சிறப்புகள் எனலாம். பக்க விளைவுகள் எதுவும் இல்லாத சிகிச்சை முறை என்பதால் தயக்கமின்றிப் பயன்படுத்தலாம்.
லவுஸ் பஸ்டர் உலர்த்தி கட்டுரை எழுதிய நேரத்தில் விற்பனைக்கு வரவில்லை. இப்பாழுது வந்துவிட்டதோ தெரியவில்லை. வரும்போது அதன் விலை உத்தேசமாக 100 அமெரிக்க டொலருக்கு அதிகமாக இருக்கும். எனவே இலங்கை இந்தியா போன்ற நாடுகளில் உள்ளவர்களுக்கு வீட்டுப் பாவனைக்கு என வாங்கக் கட்டுப்படியாகாது. எனவே வைத்தியசாலை, பாடசாலை போன்றவற்றில் நிறுவி பொது மக்கள் பாவனைக்கு விட வேண்டியிருக்கும். எனவே இப்போதைக்கு நீங்கள் வழமையான முடி உலர்த்தியைப் பயன்படுத்தலாம். 90 சதவிகித ஈர்கள் ஒழியும் தானே.
ஆயினும் இந்த ஆய்வைச் செய்த வைத்தியர் வழமையான முடி உலர்த்திகளைப் பயன்படுத்த வேண்டாம் என்கிறார். அவர் சொல்லும் காரணமானது 'தலையிலுள்ள பேன்களும் ஈர்களும் முடி உலர்த்தியின் சூட்டினால் இறப்பதில்லை, மாறாக அது வீசும் காற்றினால் உலர்வதினாலேயே இறக்கின்றன. லவுஸ் பஸ்டர் வெளியேற்றும் காற்று வழமையான முடி உலர்த்திகள் வெளியேற்றும் காற்றை விடக் குளிர்மையானது, அத்துடன் இரு மடங்கு காற்றையும் வெளியேற்றுகிறது'. எனவே லவுஸ் பஸ்டர் பாதுகாப்பானதும் கூடிய பயன் அளிக்கக் கூடியதும் எனப் புரிகிறது.
'வழமையான முடி உலர்த்திகளைப் பயன்படுத்தி கூடிய சூட்டைப் பெறறோர் கொடுத்தால் குழந்தைகளின் முடியும், தலையின் சருமமும் எரிந்து விடக் கூடிய ஆபத்து இருக்கிறது' எனவும் எச்சரிக்கிறார்.. எனவே அவதானம் தேவை.
'இது என்ன புதினமே? நாங்கள் முந்தி முழுகினால் சாம்பிராணிப் புகை போடுறனாங்கள் தானே. அதைப் போலதானே உங்கடை புதுப் கண்டு பிடிப்பும்' என்றார் கூட வந்த அம்மம்மா.
இருக்கலாம்.
ஆயினும் சுடுகாற்றை அழுத்தத்துடன் பிரயோகிப்பதையே மேற் கூறிய ஆய்வு கடைப்பிடித்தது. சாம்பிராணிப் புகையில் சுடுகாற்று இருக்கிறது, புகையும் மணமும் இருக்கிறன. ஆனால் சாம்பிராணிப் புகைக் காற்றில் அழுத்தம் இல்லையே. எனவே இன்னுமொரு ஆய்வைச் செய்தால்தான் அம்மம்மாவின் கூற்று சரியா பிழையா என்பதை உறுதிப்படுத்த முடியும்.
பேன் பற்றி சில தகவல்கள்
எள்ளின் அளவே உள்ள பேன் ஒரு ஒட்டுண்ணியாகும். இதில் பழுப்பு நிறப் பேனகளும், கருமையான பேன்களும் அடங்கும். இவை உயிர் வாழ்வதற்காக ஒரு சிறு துளி இரத்தத்தையே மனிதனிலிருந்து உறிஞ்ச வேண்டியிருக்கும். இவை பெரும்பாலும் தலையின் பிடறிப் பகுதி, மற்றும் காதோரங்களிலும் உள்ள முடியில் முட்டை(ஈர்) இடும்.
தலையோடு தலை முட்டும் நெருக்கமான உறவுகளின் போது இலகுவில் ஒருவரிலிருந்து மற்றவருக்குத் தொற்றும்.ஆயினும் சீப்பு, பிரஸ், தொப்பி, ஹெட்போன், தலையணை போன்றவற்றலும் பரவலாம், பேன்கள் பறக்கவோ தத்தவோ முடியாதவை. ஊர்ந்தே செல்பவை. எனவே ஒருவருக்கு அருகில் இருப்பதால் தொற்ற மாட்டாது. ஒரு பேன் தொற்றியவுடன் வெளிப்படையாக எந்த அறிகுறியும் தெரியமாட்டாது. பேன் பெருகிக் கடிக்கும் போது ஏற்படும் அரிப்பு சினமூட்டும். ஈர் அதிகரிக்கும்போது முடி ஓரங்களில் பொடுகு படிந்ததுபோல அருவருப்பூட்டும்.
எம்.கே.முருகானந்தன்.