துரோகம் செய்யாது புலிகள் போராடி மடிந்தால், புலிகள் மீளவும் புத்துயிர்ப்பு பெற முடியாது. துரோகம் செய்தால், அரசுடன் சேர்ந்த கூலிக்குழுவாக நீடிப்பார்கள். இதற்கு வெளியில் முன்புபோல் அவர்கள் இருக்க முடியாது. இங்கு புலிகள் போராடி மடிந்தாலும், புலிகள் உருவாக்கிய வர்க்கம் தொடர்ந்து இருக்கும்.  ஆனால் அதன் பிரதிநிதியாக புலிகள் இருக்க முடியாது.

 

ஏன்? புலியின் அழிவை நாம் அரசியல் ரீதியாக புரிந்துகொண்ட விதம் தான், இதை எம்மால் உறுதியாகவும் தீர்மானகரமாகவும் கூறமுடிகின்றது. புலியின் அழிவை முன் கூட்டியே நாம் சொல்ல முடிந்தது என்பது, புலியின் அழிவை புரிந்து கொண்ட அரசியல் அடித்தளத்தின் மூலம் தான். அதன் வர்க்க அடித்தளத்தை மட்டுமல்ல, அந்த வர்க்கத்தினுள் ஏற்பட்ட முரண்பாட்டையும் அடிப்படையாக கொண்டு, இந்த அழிவை பற்றி நாம் முன் கூட்டியே எம் கருத்தை முன்வைக்க முடிந்தது. 

 

புலி எப்படி அழிந்தனர் என்று பார்த்தால், மக்கள் தான் புலிகளை தோற்கடித்தனர். புலிகளுக்கும் மக்களுக்கும் இடையிலுள்ள முரண்பாடு தான், புலியை தோற்கடித்தது. சொந்த வர்க்கத்தின் அதிருப்தியையே அது சந்தித்தது. இதன் மேல் தான் இராணுவம் முதல் நவீன ஆயுதங்கள், இந்தியா, உலகம் என்று அனைத்தும் செயல்பட்டது. உண்மையில் புலிகள் தோற்க முதன்மைக் காரணமாக இருந்தது, புலிக்கும்–மக்களுக்கும் இடையிலான முரண்பாடுகள் தான்.

 

இந்த முரண்பாடு என்;பது, மக்களை புலியில் இருந்து ஒதுங்க வைத்தது. ஆனால் வலதுசாரி தேசிய பூர்சுவா வர்க்கத்தின் மாயையை அது கலைத்து விடவில்லை. இருந்தபோதும் புலிகள் தன் வர்க்கத்துக்கு அரசுடன் சேர்ந்து துரோகம் செய்யாத போதும், தன் தலைமையின் அழிவின் பின்பு நீடிக்க முடியாது. அது மக்களுக்குள் நீடிக்கும் வண்ணம், எந்த அரசியல் உறவும் அதனிடம் கிடையாது. இங்கு அரசியல் வெற்றிடமே உள்ளது. புலிகள் தம் அதிகாரத்தை நிறுவும் வண்ணம், அது மக்களுடனான அரசியல் உறவைக் கொண்டிருக்கவில்லை. மாறாக வலதுசாரிய வழிகளில், ஆயுதமுனையில் தான் அனைத்தையும் தீர்மானித்தனர். இதனால் எதிர்காலத்தில் எஞ்சக் கூடிய எந்த புலிகளும், குழுக்களாகவோ, உதிரிகளாகவோ மக்கள் மத்தியில் செயல்பட முடியாது. அதற்குரிய வலதுசாரிய தேசிய அரசியல் அடிப்படை எதுவும், இன்று அதனிடம் கிடையாது. இந்த நிலையில், புலிகளை மக்கள் தமக்குள் ஏற்றுக்கொள்ளும் நிலையில், அதை அனுமதிக்கும் வண்ணம் புலிகளிடம் எதுவுமில்லை. மக்களி;ன் இந்த நிலையென்பது, மக்கள் தம் வலதுசாரி கண்ணோட்டத்தை கைவிட்டார்கள் என்பதல்ல. புலிக்கும் மக்களுக்குமான முரண்பாட்டின் அடிப்படையிலும், தமிழ்மக்களின் பிரதான எதிரியான அரசுக்கு இடையிலான பகைமுரண்பாட்டினாலும் இதை அனுமதிக்காது. மக்கள் பெற்ற அனுபவம், சிதைவு அதை இயல்பாகவே மறுதலிக்கும்.

 

எஞ்சக் கூடிய புலிகளின் குழுக்கள், சொந்த அதிகார முரண்பாட்டில் சிக்கி சிதையும். அதேநேரம் அரசியல் இல்லாத லும்பன் புலி, இயல்பில் சமூக விரோதக் கும்பலாக மாறி சிதைந்து அழியும்.

 

இதற்கு வெளியில் எந்தக் குழுவும் பலம் பொருந்திய வலதுசாரிய அரசியலை கொண்டு இயங்க முடியாத வகையில், பாரிய முரண்பாடு கொண்ட ஒரு சமூகமாக எம்மினம் மாறும். இதற்கு வெளியில் தான், இந்த முரண்பட்ட குழுக்களை கையாள்வதன் மூலம் தான், அரசு செயல்படமுடியும். அரசு இந்த வெற்றிடத்தை நிரப்பமுடியாது. ஏனெனின் புலிகள் அதை வெற்றிடமாகவே விட்டுவிட்டு, தமிழ் மக்களை அனாதையாக்கிவிட்டு மரணிக்கின்றனர். அரசுடன் புலிகள் செய்யக் கூடிய ஒரு துரோகம் மட்டும் தான், அரசு தமிழ் மக்களை வெல்ல உதவும்.

                
              
புலியல்லாத சூழல் மீதான அரசியல் எதிர்காலம்

 

1. அரசு சந்திக்கும் நெருக்கடி


2. தமிழ் சமூகம் சந்திக்கும் நெருக்கடி

 

இந்த ஆய்வு, புலி தன் வலதுசாரி கண்ணோட்டத்துக்கு அரசுடன் சேர்ந்து துரோகம் இழைக்காத ஒரு அரசியல் நிலையில் மட்டும் தான் பொருந்தும். புலி இருந்தால், அது தன் துரோகத்தை (இன்றைய சூழ்நிலையில், புலியின் இருப்பு துரோகத்துக்கு வெளியில் இல்லை.) தமிழ்மக்களின் விடுதலையாக தான் பெற்றுத் தந்த தீர்வாக காட்டும்.


அரசு சந்திக்கும் நெருக்கடி
 
1948 இல் இது தான் இலங்கையின் சுதந்திரம் என்று பிரிட்டிஸ் ஏகாதிபத்தியம் வழங்கிய சுதந்திரம் போன்ற ஒன்றை, இலங்கை அரசு புலிக்கு வழங்கவில்லை. இலங்கை அரசு புலியிடம் ஒரு துரோகத்தை ஏற்க வைத்தால் மட்டும் தான், தமிழ் மக்களை வெல்லமுடியும். புலிகள் இப்படி ஒன்றுக்கு இணங்கிச் சென்றால், அதுவே துரோகமாக இருக்கும்.

 

மக்களை காப்பாற்றுவது என்ற பெயராலும், ஆயுதத்தால் இனி எதுவும் செய்ய முடியாது என்று கூறியும், இந்த துரோகத்தை அரசியலாக முன்னிறுத்துவது கூட துரோக அரசியலாகும்.  மக்களை காப்பாற்றுவதன் பெயரால், அரசுடன் கூடிச் செய்யும் துரோகம் தான் சரியென்ற கருத்து, மக்கள் விரோதிகளால் பல தளத்தில் வைக்கப்படுகின்றது. இதை மூடிமறைக்கவே, புதிதாக எந்தத் துரோகமும் புலிகள் செய்ய அதனிடம் செய்ததை விட துரோகம் வேறேதும் கிடையாது என்கின்றனர். ஆயுதத்தால் எதையும் இனி செய்ய முடியாது என்கின்றனர்.  இப்படி இவர்கள் கூறிக்கொண்டு, புலிகள் அரசுடன் சேர்ந்து தமிழ்மக்களை புதிய வடிவில் ஓடுக்குவதை, மக்களை காப்பாற்றுவது என்ற பெயரில் மீள வைக்கின்றனர்.  

 

இன்று புலியின் அரசியல் நெருக்கடியைப் பயன்படுத்தி, அதை புலிக்கு திணிக்க முனைகிறது. இந்த நிலையில் தான், புலித்தலைமை பரந்துபட்ட மக்கள் முன் தனது வலதுசாரி நிலைக்கு அரசுடன் சேர்ந்து துரோகம் செய்யாது, தம் மரணங்கள் மூலம் பதிலளிக்கின்றனர். அவர்கள் இதைச் செய்யும் போது கூட பாசிட்டுகளாக, தன் சொந்த மக்களை பலியிட்டுக் கொண்டு, போராட விரும்பாத அப்பாவிகளை முன்னிறுத்தி தான் செய்கின்றது. இது தான் வலதுசாரி புலி அரசியல். 

 

புலிகள் தம் பாசிச வழிகளில் நின்றபடியே தம் வலதுசாரி நிலைக்கு துரோகமிழைக்காது போராடி மரணித்தால், தமிழ் மக்களின் பிரதான எதிரியான அரசு தமிழ் மக்களிடம் தோற்றுவிடும். ஏனென்றால் அரசு தமிழ் மக்களை ஆட்டிப்படைக்கும் புலியை அழிக்கலாம், அரசியல் ரீதியாக தமிழ்மக்களை வெல்ல முடியாது. புலியில் இருந்து அரசு புலித் துரோகியைப் பெறத் தவறினால், சிங்கள அரசு தமிழ்மக்களை வெல்ல முடியாது. இலங்கை அரசு மட்டுமல்ல, புலம்பெயர் தமிழர் கூட, ஏகாதிபத்திய அரசுக்கு எதிரான வலதுசாரிய உணர்வுடன் தான் விடப்படுவார்கள். இப்படி வலதுசாரிய தமிழ் மக்களை புலிகள் அரசியல் அனாதைகளாகத் தான் விட்டுச் செல்வார்கள்.

 

அரசு தன் புலியெதிர்ப்பு கூலிக்கும்பலை வைத்து, என்ன தான் மனிதாபிமானம் என்று பிச்சை போட்டாலும், அரசியல் ரீதியாக அவர்களை வெல்லமுடியாது. தமிழ் மக்களின் அரசியல் உரிமைகளை அது வழங்கப் போவதில்லை. நாய்க்கு எலும்பைத்தான் போடுவார்கள். தனக்கு ஏற்ற கைக்கூலிகளை உருவாக்க, தீர்வுப்பொறி என்று அவியலைப் போடுவார்கள். இங்கு தமிழ் மக்களை வெல்ல, அவர்களுக்கு அரசியல் உரிமையை வழங்கப்போவதில்லை.

 

தொடர்ச்சியான இந்த அரசியல் நெருக்கடி என்பது, எம் மக்கள் தம் வலதுசாரிய மக்கள் விரோத அரசியலை கேள்விக்கு உள்ளாக்க உதவும். அது புரட்சிகர சூழலுக்குள் இட்டுச் செல்வதற்கு சாதகமானது.

 

தமிழ் சமூகம் சந்திக்கும் நெருக்கடி

 

புலி இல்லாத இந்த நிலை என்பது, அரசியல் விழிப்புணர்ச்சிக்குரிய பொதுச் சூழலை விரிவாக உருவாக்கும். புலிக்கு மாற்றாக எந்த வலதுசாரிய அரசியலும், புலியின் இடத்தை எடுத்த எடுப்பில்  நிரப்ப முடியாது. புலிகள் துரோகமிழைத்தால் மட்டும் தான் இது சாத்தியம்.

 

புலிகள் துரோகமிழைக்காத சூழல், புரட்சிகரமான சூழலுக்குரிய ஒன்றாகவே அமையும். தமிழ் மக்கள் மட்டுமின்றி, சிங்கள மக்கள் மத்தியிலும் அது பரிணமிக்கும். ஓன்றுபட்ட புரட்சி என்பது, தன் புரட்சிகர அரசியலை சுயநிர்ணய உரிமையை அடிப்படையில் அமைந்த ஓன்றாகத்தான் அமையும்.

 

ஆனால் அது பல கட்டத்தை கடந்து செல்ல வேண்டியிருக்கும்.  தமிழ் சமூகம் தம் உரிமைகைள வெல்ல முடியாத, நீண்ட இடைவெளி கொண்ட காலத்தில் அரசியல் அனாதைகளாகவே நீடிப்பார்கள். இதில் இருந்து தான் மக்கள் தமக்காக தம் போராட்டத்தை தொடங்க வேண்டியிருக்கின்றது. 

 

பி.இரயாகரன்
17.04.2009