புலிகள் சந்திக்கின்ற அரசியல் நெருக்கடி என்பது, இன்று இரண்டு வழிகளில் மட்டும்தான் தீர்க்கப்பட முடியும்.

 

1. துரோகத்தை செய்யும் ஒரு சரணடைவு


2. இறுதிவரை போராடி மடிவது.

 

இதற்கு வெளியில் புலிகள் தம் சொந்த வழியில் மீள்வது என்பது, இன்றைய இராணுவ சுற்றிவளைப்பில் சாத்தியமற்ற ஓன்றாக மாறிவிட்டது. இதை அவர்களே கைவிட்டுவிட்டனர்.

 

இந்த நிலையில் புலிகள் இறுதிவரை போராடி மடி என்று, நாம் மட்டுமே கோரியிருக்கின்றோம். ஏன் புலி கூட இதை முன்வைக்கவில்லை. மாறாக அவர்கள் துரோகத்துக்கே தொடர்ச்சியாக  முனைகின்றனர். இந்த நிலையில் நாம் மட்டும்தான், இப்படி மடிந்தவர்களுக்கு தலை சாய்த்திருக்கின்றோம். புலிகள் கூட இதுவரை அஞ்சலி செலுத்தவில்லை. துரோகத்துக்கு பதில், அவர்கள் தம் தியாகத்தையே அரசியல் ரீதியாக இன்னமும் ஜீரணிக்க முடியவில்லை. 

 

எமது இந்த நிலையை புலிக்கு ஆதரவானது என்றும், புலி என்றும் கூறுகின்ற அரசியல் குருட்டுத்தனத்ததைக் கொண்டு, அரசியலை நீக்கம் செய்ய முனைகின்றனர். இதற்குப் பதில் இந்த அரசியல் குருடர்கள் என்ன சொல்லுகின்றனர். புலியை சரணடையக் கோருகின்றனர். நாம் இதை அரசு ஆதரவு, ஏகாதிபத்திய ஆதரவு, புலியெதிர்ப்பு கருத்து என்று, அவர்கள் பாணியிலேயே சொல்லமுடியும். நாம் எடுத்த எடுப்பில் அப்படி சொல்ல முற்படவில்லை. இதை வீம்புடன் கூடிய, துரோக அரசியல் என்கின்றோம். துரோகத்தினை வழிகாட்டும், சொந்த அரசியல் பிறழ்ச்சியாகும்.

 

இதற்கு அவர்கள் வைக்கும் காரணமோ, யுத்தத்தில் சிக்கியுள்ள மக்கள் மற்றும் புலிகளின் கீழ்மட்ட போராளிகளைக் காப்பாற்றுதல் ஆகும். இப்படி தன் துரோக அரசியல் முன்மொழிவுக்கு, கணக்கு காட்ட முனைகின்றனர். இதை மூடிமறைக்க இலங்கைப் புரட்சிக்கு நாம் எதிரானவர்கள் என்று இட்டுக்கட்ட முனைகின்றனர்.

 

இங்கு நாம் ஒரு உண்மையைப் புரிந்துகொள்ள வேண்டும். இங்கு இவை விவாத எல்லைக்குள் மட்டும், இந்த அரசியல் பேசும் பொருளாகின்றது. இந்த வகையில் துரோகம் அரசியல் முன்மொழிவாக உள்ளது. அது போல் தான் இறுதிவரை போராடி மடிவதும் அரசியல் முன்மொழிவாக உள்ளது. இதை புலிகள் ஏற்றுக் கொண்டு செயல்படும் எல்லைக்குள், இவை நடைமுறைக்குரியதல்ல.

 

இதற்கு வெளியில் இங்கு மக்களின் மரணமும், போராட விரும்பாதவர்களின் மரணமும் தொடருகின்றது. இந்த இடத்தில் மனிதாபிமான அரசியல், ஒரு பேசக் கூடிய பொருளல்ல. உண்மையில் இங்கு அரசியல் ரீதியான பார்வை, அதை ஓட்டிய அரசியல் கல்வியும் தான், நடைமுறையில் எதார்த்தமாகவுள்ளது. இங்கு துரோக அரசியலையும், தியாக அரசியலையும் கற்று, உரசிப் பார்க்கும் அரசியல் அடிப்படையே இங்கு முதன்மை பெற்று நிற்கின்றது. இதற்குள் மனிதாபிமான அரசியலை புகுத்துவது, தம் துரோகத்தை பூசி மெழுகத்தான்.   

 

மனிதாபிமான அரசியல் மூலம் அரசியல் துரோகத்தைக் கோருவதும், இதை அம்பலப்படுத்தும் எம்மை இதற்காகத் திரிப்பதும் நிகழ்கின்றது. இறுதிவரை போராடி மடி என்ற கோசம், மக்களின் மரணத்தையும் போராட விரும்பாதவர்களின் மரணத்தையும் கணக்கில் எடுக்கவில்லை என்கின்றது. உண்மையில் நாங்கள் மக்கள் மற்றும் போராடவிரும்பாதவர்கள் பற்றி எடுத்த அக்கறையளவுக்கு, யாரும் அரசியலை அரசியல் ரீதியாக முன்வைக்கவில்லை.

 

மிக முக்கியமாக நாம் இந்த நெருக்கடியில் இருந்து மக்கள் மீளவும், புலிகள் மீளவும் முற்றுகையை உடைத்து வெளியேறக்கோரினோம். இராணுவம் கைப்பற்றிய பிரதேசத்துக்கு முற்றுகையை உடைத்து வெளியேறிச் செல்லுமாறு கோரினோம். இப்படி நடைமுறைச் சாத்தியமான வகையில் மக்களை பாதுகாக்கவும், ஒரு இறுக்கமான இராணுவ முற்றுகைக்குள் சிக்கி அழிவதை தவிர்க்கவும் கோரினோம். இது மட்டும்தான், இன்றைய இரண்டு வழிகளுக்கும் மாற்றாக புலிகளுக்கு இருந்த ஒரே மாற்று வழி. இதை செய்ய மறுத்த புலிகளின் இராணுவக் கண்ணோட்டத்தையும் விமர்சித்தோம்.

 

முற்றுகையை உடைத்து வெளியேறி இருந்தால், புலிகள் இவ்வளவு  வேகமாக அழிந்திருக்க முடியாது. பின்புலத்தில் தேவையான ஆயுதங்களை, இலகுவாக இராணுவத்திடம் பெற்று இருக்கமுடியும். நீண்டகால நோக்கில் தப்பி பிழைக்கவும், சுயவிமர்சனத்தை செய்ய வேண்டிய அவசியத்தையும் முன்வைத்தோம். மக்கள் இல்லாத பிரதேசத்தில் வாழும் போது, மக்களை பற்றிச் சிந்திக்கவும் தம்மை சுயவிமர்சனத்துக்கு உள்ளாக்க  இது தூண்டுதலாக கூட இருந்து இருக்கும். (எம்மை தொடர்ச்சியாக படிக்கின்றவர்களுக்கு இந்தக் கோரிக்கைகள் எல்லாம் வைக்கப்பட்டது தெரியும்.)

 

புலிகள் அதைச் செய்யவில்லை. நாம் இங்கு மக்களை காப்பாற்றவும், போராட விரும்பாதவர்களை விடுவிக்கவும் கோரினோம்;. போராட விரும்பாதவர்கள் என்று, இதை இந்தளவு நுட்பமாக, யாரும் வைத்தது கிடையாது. இதுதான் பாட்டாளி வர்க்க அடிப்படையிலான அரசியல் கண்ணோட்டமாக இருந்தது. இதற்கு மாறாக யாரும் எதையும் வைக்கமுடியாது.

 

இன்று இரண்டில் ஒன்று என்ற எல்லைக்கு புலிகள் வந்துள்ளனர். இந்த இடத்தில் துரோகத்துக்கு பதில், போராடி மடி என்ற கோசமே மிகச் சரியானது. துரோகத்தை செய் என்ற கோசம், கேடுகெட்ட இழிவான அரசியலாகும். வேடிக்கை எனன்வென்றால் இந்த துரோகத்தைத்தான் புலியெதிர்ப்பும், அரசும், ஏகாதிபத்தியமும் கோருகின்றது. புலிகள் கூட தாம் விரும்பிய வடிவில், இந்தத் துரோகத்தை செய்யத்தான் விரும்புகின்றனர். துரோகத்தை செய்வதில் அவர்களிடையேயான முரண்பாடு, அவர்கள் தாம் விரும்பும் வடிவத்தில் தானே ஒழிய வெளியில் அல்ல. துரோகத்தைச் செய்து புலியை பாதுகாக்கும், அடிப்படையில் தான் போராட்டங்களையும், போராட்ட கோசங்களையும் புலிகள் வைக்கின்றனர்.

 

துரோகத்துக்கான சந்தர்ப்பமின்றிய வகையில், அரசியல் நிகழ்ச்சிகள் உள்ளது. இங்கு புலிகளின் தலைமையின் தியாகத்தை, புலிகளால் கூட ஜிரணிக்க முடிவதில்லை.  இப்படி தம் தலைவர்களின் தியாகத்தைக் கூட, அவர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. அவர்கள் இன்று அனாதையாக்கப்பட்ட நிலையில், நாம் மட்டும் அவர்களுக்கு தலைசாய்த்த தனி நிகழ்வு இந்த துரோக வரலாற்றில் தனித்துவமானது, அரசியல் ரீதியானதுமாகும்.

 

இதைப் புலிகளை தியாகமாக, வீரவணக்கமாக நாம் கருதுவதாக எமக்கு இட்டுக் கட்டுவது, அரசியலை கைவிட்டு மானசீகமான உணர்ச்சியை எம்மீது அள்ளிக்கொட்டுவதாகும்.  அனைவரும் துரோகத்தையே கோரிய போதும், அவர்கள் அதை நிராகரித்து மரணித்த நிகழ்வுக்காகத் தாம், நாம் தலைசாய்த்தோம்;. இது எம் வர்க்க அரசியலை கைவிடுவதற்காகவல்ல. இது புலியின் அரசியலை நியாயப்படுத்துவதற்காக அல்ல. துரோகத்தை முன்வைத்து அவர்கள் தெருநாய்கள் போல் அனாதையாக்கப்பட்டுள்ள நிலையில், நாம் மட்டும் தலைசாய்த்தது என்பது, அவர்கள் துரோகத்தை செய்ய மறுத்த அந்த நிகழ்வுக்காகத்தான்.

 

இதைத் திரித்து புலிக்கும், புலி அரசியலுக்கும், புலித்தேசியத்துக்கும் பின்னால் நாம் நிற்பதாக காட்டுவது, இதற்காக நாம் முனைவதாக கூறுவது எல்லாம், இதற்குள்; ஒரு முரண்பாடு இருப்பதாக காட்டி அதற்குள் தவழும் இருப்பு அரசியல். புலிகள் மட்டுமல்ல, புலி அரசியல் கூட இலங்கையில் நீடிக்க முடியாது என்பதை, நாம் முன்னைய எமது கட்டுரைகளில் சொல்லிவந்துள்ளோம். இந்த நிலையில் இதை முன்னெடுக்கத்தான் இன்றைய போக்கு என்பது வெறும் உளறல். எமது அரசியலை விமர்சிக்க முடியாது, துரோகத்தை தீர்வாக முன்தள்ளும் அரசியல், எப்படித்தான் எம் முகத்துக்கு நேராக எதிர் கொண்டு விவாதிக்க முடியும். ஆகவே தான் முதுகுக்கு பின்னால் நின்று, கல்லெறிய முனைகின்றது.

 

அழுது புலம்புகின்ற அரசியல் மூலம், துரோகத்ததை கோருகின்றனர். புலிகள் மனித இழப்பைக்காட்டி தப்பிப்பிழைக்க முனைவது எவ்வாறோ அவ்வாறே, அதே மனித இழப்பைக் காட்டி, அரசியல் துரோகத்தைச் செய்யக் கோருகின்றனர். இந்த இழப்பை ஏற்படுத்தும் அரசிடம் யுத்தத்தை நிறுத்து என்று சொல்வதற்கு பதில், புலியிடம் துரோகத்தை செய்யக் கோருகின்றது. இதுவே துரோக அரசியலின் முரண்பாடு அல்லவா. அரசுக்கு எதிரான போராட்டம் மெதுவாக நீர்த்து போகும் வகையில், புலிக்கு எதிரான புலியெதிர்ப்புக்கு அடிப்படையாக இந்த அரசியல் பரிணமிக்கின்றது.

 

பி.இரயாகரன்

15.04.2009