தொண்டமானுக்கும் ஜ.தே.க கும்பலுக்கும் பல வருடங்களாகத் தொடர்ந்து வந்த காதல் இன்று கேள்விக்குறியாகி உள்ளது. இதைத் தொடர்ந்து தொண்டமான் எதிர்கட்சிகளுடன் கூடிக்குலாவத் தொடங்கியுள்ளார். தொண்டைமானின் இன்றைய நிலையை சுட்டிக்காட்டி பலர் தொண்டமான் மக்களின் நண்பன் என்று கருத்துப்பட கட்டுரைகள் வரைகின்றனர்.

 

தொண்டமான் மலையக மக்களின் ஏகப்பிரதியாக கடந்தகாலத்தில் இருந்தும் மலையக மக்களின் வாக்குகளை கொண்டு தனது பிழைப்பை சிறப்பாக நடத்தினார். மலையக அற்ப உரிமைகளைக் கூட காட்டிக் கொடுத்து மேலும் அடிமையாக்கினார். இலங்கை வரலாற்றில் தொண்டமானின் துரோகத்தனத்தை போல் வேறு எந்தத் தலைவரும் செய்ததில்லை.

 

மலையக மக்களின் பிரஜாஉரிமை சரி, இலங்கையின் அடிப்படை சம்பளத்தை மலையக மக்களுக்கு வழங்குவதாயினும் சரி எந்தப் பிரச்சனையிலும் அரசாங்கத்தில் இருந்தபடி காட்டிக் கொடுத்து மலையக, மக்களை ஏமாற்றிப் படுகுழியில் தள்ளிய ஒரு துரோகி. அண்மைக்காலமாக ஜ.தே.க வுடன் சேர்ந்து மலையகத்தை தனியார்க்கு விற்க உலக வங்கியிலும், ஏகாதிபத்தியத்தின் கைக்கூலியாக செயற்பட்ட ஒரு தரகுமுதலாளி. சிறிய லயன்களில் சில நூறு ஆண்டுகளாக வாழ்கின்ற மலையக மக்களைச் சுரண்ட, பச்சைக்கொடி காட்டி அவர்களை ஏமாற்றி தனது வங்கிக்கணக்கை எப்போதும் நிரப்பிய ஒரு பச்சைத்துரோகி.

 

இன்று ஜ-தே-கயுடன் கசந்து போக தொண்டமானுக்கு மக்கள் மீது பற்று ஏற்பட்டு விடவில்லை. மாறாக

 

1) ஜ-தே-க யில் இனவாதிகளின் ஆதிக்கமும் அதனால் மலையக மக்கள் முன் தொண்டமான் அம்பலப்படப்போவதும்.

 

2)காமினி திசநாயக்காவை மீண்டும் ஜ-தே-கயில் இணைக்கக் கோரும் தொண்டமான், இந்தியாவை இவ் வேண்டுகோளுடன் கைக்கூலித்தனத்தை நிறைவேற்ற முனைகிறார்.

 

3)மலையக மக்கள் மத்தியில் எழுந்துவரும் புதிய எழுச்சிகள் இது போன்ற காரணங்கள் தொண்டமானின் எதிர்கால அரசியல் வாழ்வை தீர்மானிப்பதாக உள்ளது.

 

மலையகமக்கள் இன்று விழிப்புற்று வரும் நிலையில் அனாதை வாழ்வு உருவாவதைத் தடுக்க, அதை கருத்தில் கொண்டு மக்களை மீண்டும் ஏமாற்ற ஒரு குத்துக்கரணத்தை அடித்துள்ளார். அவ்வளவே. தொண்டமான் எந்த புதிய கூட்டை செய்தாலும் அது மக்கள் விரோத அடிப்படையில் அமைந்ததே. சுதந்திரக் கட்சி சரி. காமினியின் கட்சி சரி இனவாதத்துடன் கூடியதே.

 

இவர்களுடன் இணையும் தொண்டமான் இனவாதத்தின் மீதே தனது பிழைப்பை நடத்துவார். கடந்த பல வருடங்களில் இனவாதம் தலைவிரித்தாடியபோது தொண்டமான் அதன் கைக்கூலியாக இருந்து மக்களை ஏமாற்றி பிழைப்பை நடத்தியவர். ஜ-தே-க,ஸ்ரீ-ல-சு-க என எந்தக் கட்சியுடன் இணைந்தாலும் அங்கு எதுவும் நடந்து விடாது. மாறாக மீண்டும் மலையக மக்கள் ஏமாற்றப்படுவர். இனவாதம் அங்கு மேலோங்கியிருக்கும்.