சமர் ஆசிரியர் குழுவினருக்கு! தோழமையுடன் எழுதிக்கொள்வது. உங்கள் (திகதியிடப்படாத) கடிதமும், அத்துடன் இணைந்த தேசிய விடுதலைப் போராட்டமும் தேசிய சக்திகளும் எனும் (ஏ4 அளவுப் பேப்பரில்)18 பக்கக் கட்டுரை ஒன்றும் கிடைக்கப் பெற்றோம். மேற்படி உங்களது கட்டுரையில் விவாதத்துக்குரிய அல்லது கருத்தாடலுக்குரிய பண்புகள் மீறப்பட்டுளளமையினால் எமது பத்திரிகையில் பிரசுரிப்பதில்லை என்ற ஒருமித்த முடிவுக்கு நாம் வந்துள்ளோம்.
(அதேவேளை உங்களது கருத்து ஒத்த மாறனின் (விவாதப்பண்புகள் பலப்பட்டுள்ளமையைக் காணலாம்) கட்டுரை ஒன்றை மனிதம் இதழில் பிரசுரிக்க முடிவு செய்துள்ளமையைச் சுட்டிக்காட்ட விரும்புகிறோம்) மேலும் கருத்தாடல் என்பது சரியான கருத்துக்களைக் கண்டறிவதற்கும், கருத்துப்பரிமாற்றங்களைச் சுரண்டுவதற்கும், கருத்துப்பரிமாறறங்களைச் செய்துகொள்வதற்கும் உதவவேண்டிய ஒன்று.
இதன் விளைவாய் (தூய்மையான) சுயவிமர்சனத்தை மேற்கொள்வார் மத்தியில், பிழையான கருத்துக்களில் இருந்துவிடுபட்டு சரியான கருத்துக்களை உள்வாங்கிக் கொள்ளும் நிகழ்வுகள் இயல்பாக இடம் பெறுவதும் சாத்தியம். மாறாக மேதாவித் தனங்களை வெளிப்படுத்துவதற்கோ, மார்க்சிசத்தில் வல்லவர் யார் என்பதை நிரூபிப்பதற்கோ, விரும்பாத அல்லது எதிர்மறைக் கருத்துடையவர்களைத் திட்டித்தீர்ப்பதற்கோ கருத்தாடலைப் பயன்படுத்தக் கூடாது. இன்னும் உங்களுடைய விவாதங்களோ, அல்லது கருத்தாடலிலோ இவற்றுக்குரிய பண்புகள் பேணப்படுவதாகத் தெரியவில்லை.
அவ்வகையில் நாம் உங்களுடனான விவாதத்தொடரை இத்துடன் முடித்துக்கொள்கிறோம். விவாதப்பண்புகளை பேணுகின்ற முறைமையினை நீங்கள் வெளிப்படுத்தும் பட்சத்தில் உங்களுடனான விவாதத்தை தொடர்வது பற்றி மீள் பரிசீலனை செய்வோம்.
இவ்வண்ணம்
வி-லோகதாஸ்
(மனிதம் ஆசிரியர்-குழு சார்பாக)
பி-கு உங்கள் வேண்டுதலுக்கிணஙக உங்கள கட்டுரையை இத்துடன் திருப்பி அனுப்பியுள்ளேன்.
வி-லோகதாஸ்
14-06-1993 திகதியிடப்பட்ட மனிதத்தின் மேற்குறிப்பிட்ட கடிதமும், அத்தோடு எமது கட்டுரையும் பிரசுரிக்க முடியாது எனக்கூறி பதிவுத்தபால் மூலம் அனுப்பியிருந்தமை மீளப்பெற்றோம்.
கடந்தகாலங்களிலிருந்து மனிதத்தின் திரிபுவாதக் கருத்துக்களை நாம் அம்பலப்படுத்தி வருவதிலும், கருத்துக்களின் பிற்போக்கு, முற்போக்கு, திரிபு என்னும் மையத்திற்கப்பாற்பட்டு, எம்மீதுள்ள ஆத்திரத்தின் வெளிப்பாடாகவே போலியான காரணம் காட்டி நிராகரித்துள்ளனர் என்னும் அடிப்படையில் மேற்குறிப்பிட்ட கடிதத்தை விமர்சிக்க முற்படுகின்றோம்.
நாம் நமது கடிதத்திற்கு திகதியிடாத விடயம் தவறானது தான் என்பதை ஒத்துக்கொள்கிறோம். இது எமது கவனக்குறையால் ஏற்பட்ட ஒன்றாகும். தொடர்ந்து நிராகரிப்புக்குரிய காரணத்தை கவனிப்போம். விவாதத்துக்குரிய அல்லது கருத்தாடலுக்குரிய பண்புகள் மீறப்பட்டுள்ளமையால் பிரசுரிக்கமுடியாது என்று கூறியுள்ளனர். நாம் எச்சந்தர்ப்பத்திலும், அல்லது எந்தவொரு கட்டுரையிலும் மனிதர்களுக்குள்ள பொதுவான பண்பைப்பேணும் தார்மீகப்பொறுப்பைக் கடைப்பிடிப்பவர்களே, ஆனால் புரட்சிகர வர்கக அரசியல் (பாட்டாளிவர்க்க) பண்பு என்பது வர்க்கம் சார்ந்ததாகும்.
இங்கே நாம் விவாதித்த விடயம் (மனிதம்-சமர்) நேரெதிர் முரணுள்ள இரண்டு கருத்துக்களாகும். இவ்விரண்டு கருத்தும் வௌ;வேறு இரண்டு வர்க்கங்களின் நலன் சார்ந்ததே. மனிதத்தின் பார்வையில் பண்பு என்பது என்ன? எந்த அடிப்படையில் பண்பை வரையறுத்துள்ளீர்கள். மனிதம் பின்பற்றும் குட்டிப்பூர்சுவா பண்பை பாட்டாளி வர்க்கம் ஏற்றதல்ல. பூர்சுவாக்களின் பண்பான முகம் முறியாத, முதுகுக்குப் பின் கதைத்தல், தேனொழுக பேசி நடித்தல் போன்றவைகளை பாட்டாளிவர்க்கம் நிராகரிக்கின்றது. அனைத்தையும் கறாராகக் கையாள விரும்புகின்றது. எமது கருத்தையொத்த மாறனின் கட்டுரையை பிரசுரிப்பதாகவும், அதில் விவாதப்பண்பு பேணப்பட்டுள்ளதாகவும் கூறிப்பிட்டுள்ளனர். மனிதம் 22 இல் வெளியான மாறனின் கட்டுரை தொடர்பான சில விமர்சனம் எமக்குண்டு.
விமர்சனத்துக்குரியவை என நாம் கருதும் விடயங்களில், மனிதத்துக்கு உடன்பாடு இருந்தமையால் மாத்திரமே இதை பிரசுரித்தனர். ஆனால் மனிதத்தின் சந்தர்ப்;பவாத அரசியலை படம்பிடித்துக் காட்டும் மாறனின் சுயவிமர்சனம் இதை தொடர்ந்து பிரசுரமாகின்றது. மாறனின் கட்டுரைக்கும், எமது கட்டுரைக்குமிடையில் உள்ள, அடிப்படையில் மானிடத்தை இம்சிக்கும் எமது பண்பு பேணாமையை குறிப்பாகவும் சிறப்பாகவும் சுட்டிக்காட்டத்தவறியது ஏன்.? மேதாவித்தனங்களை வெளிப்படுத்தற்கோ மார்க்சிசத்தில் வல்லவர் யார் என்பதை நிருபிப்பதற்கோ, அல்லது எதிர்மறைக் கருத்தை உடையவர்களை திட்டித்தீர்பதற்கோ, கருத்தாடல் பயன்படுத்தப்படக் கூடாது. எனக் குறிப்பிடும் மனிதம், எதிர்மறைக்கருத்துக்களை விவாதிப்பதை தவிர்த்து உயர்ந்த நிலையில் இருந்து பிரச்சனையை அணுகுவதை தங்களை அறியாமலேயே வெகுசிறப்பாகவே செய்துள்ளனர். எம்முடனான விவாதத்தை முடித்துக்கொள்வதாக கூறிய கூற்றை நடைமுறை யதார்த்தத்தோடு ஒப்பிடுவோமேயானால் அப்பட்டமான வர்க்கபேதங்கள் கொண்ட கருத்து வெளிப்பாட்டை நாம் காணலாம்.
எவ்வித அதிகாரமும் அற்று, ஜரோப்பிய நாடுகளில் தஞ்சம் அடைந்து பல தமிழ் அரசியல் நோக்கம் கொண்டோரால் பல சஞ்சிகைகள் வெளியிடப்படுவதும் பல அரசியல் கருத்துக்கள் விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப்பட்டதற்கும் ஒவ்வொர் குழுவினரிடம் ஒவ்வொரு நோக்கங்கள் கூட இருந்திருக்க முடியும். ஆனால் கருத்தை கருத்தால் வெல்ல சில சஞ்சிகைகளும் நபர்களும் காரசாரமான விவாதத்தில் ஈடுபட்டது, ஒவ்வோர் குழுவின் வர்க்கநலன் சார்ந்ததாக இருந்திருக்கமுடியும். (சமர் உட்பட) ஏனெனில் அந்த அளவுக்கு விவாதத்துக்குரிய உரையின் அவசியத்தை ஈழ அரசியல் எமக்கு தெளிவுபடுத்தி வந்ததே காரணம்.
ஆனால் விவாதத்திலிருந்து எம்மை ஒதுக்கிவிட்டதாகிய அறிவிப்பை நோக்குமிடத்து இவர்களிடம் அரசியல் அதிகாரம் இருப்பின், கடந்தகால புளட், நிகழ்கால புலிகள், இந்திய அமைதிப்படை காலத்து இந்திய அடிவருடிகள் ஆகியோரின் ஞாபகம் ஒரு கணம் மனத்திரைக்கு வந்து மறைகின்றது. எம்மை மேதாவிகள் எனக் கண்டுபிடித்த மேதாவிகளுக்கு நாம் இதன் ஊடாக கூறுவது யாதெனில் நாம் கருத்துகள் மீதொரு கருத்தை வைத்திருக்கின்றோம். நாம் யாரையும் ஒதுக்குவதையோ, ஓரங்கட்டுவதையோ நோக்கமாகக் கொள்ளவில்லை.
விவாத அரங்கிலிருந்து சமரை யாரும் ஒதுக்கிவிடமுடியாது. சமர் அனைத்துப் பிரச்சனை மீதும் அனைத்துக்கருத்தின் மீதும் தொடர்ந்து கருத்து கூறும். திரிபுவாதத்தை எதிர்க்கும். வேடதாரிகளை அம்பலப்படுத்தும். பாட்டாளி வர்க்கப் போராட்டத்தை உயர்த்தி தொடர்ந்து போராடும். இந்நிலையிலிருந்து ஒதுங்கமுடியாது நாம் நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளோம்.
சமர் ஆசிரியர் குழு-